நீலக் குறிப்பேடு.. இந்த நூல் ரஷ்ய புரட்சியின் நெருக்கு வட்டத்தில், மிகவும் பதற்றமான ஒரு காலகட்டத்தில் புரட்சியாளர் லெனின் அவர்களுடைய வாழ்வின் ஒரு சில நாட்களை அப்படியே காட்சிப்படுத்தும் விதமாக கசாகேவிச் என்பவரால் எழுதப்பட்டுள்ளது. இது ஒரு திகிலூட்டும் பயணக் கதையா? வரலாற்றுக் குறுநாவலா? புரட்சிக் குழுவின் வாழ்க்கையா? குடும்பச் சித்திரமா என வியப்பூட்டும் வகையில் இருக்கிறது.

வெளி நாடுகளில் வாழ்ந்து வந்த லெனின் பிப்ரவரி புரட்சிக்கு பிறகு ரஷ்யாவுக்கு வருகிறார். ஒரு பண்டிகை நாளன்று பெட்ரோகிராடு நகருக்கு ரயிலில் வருகின்ற தோழர் லெனின் இந்த நிலையில் நம்மை வரவேற்க அங்கு யார் இருப்பார்கள்.. தங்குவதற்கு என்ன செய்வது என்றெல்லாம் பல்வேறு சிந்தனைகளில் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவர் நினைத்தவற்றுக்கு மாறாக அங்கு ஏராளமான தோழர்கள் திரண்டு அவரை வரவேற்பது கண்டு பெருமகிழ்ச்சி அடைகிறார்..

அடுத்த சில நாட்களில் அவருக்கு உள்ள ஆபத்துகளால் தலைமறைவாக இருக்க வேண்டிய நெருக்கடி. பெட்ரோகிராடு அருகிலேயே ஒரு சிறு கிராமத்தில் எமல்யனோவ் என்கிற விவசாயத் தோழருடைய பாதுகாப்பில் இருக்க வழிகாட்டப் படுகிறது. தோட்டத்தில் வைக்கோல் சேகரிக்கும் பின்லாந்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளர் வேடத்தில் தங்கியிருக்கிறார். அவருடன் ஜினோவிவ் என்ற தோழரும் தங்குகிறார். அந்தத் தோட்ட வீட்டுக்கு ஒரு ஏரியைக் கடந்து தான் செல்ல வேண்டும். ஊரடங்கிய பிறகு மிகவும் ரகசியமாக படகு வலிக்கும் சத்தம் கூட யாரையும் கவனத்தை ஈர்த்துவிடக் கூடும் என்பதால் மிகவும் கவனமாகவே அந்த ஏரியைக் கடந்து செல்கிறார்கள். துப்பாக்கியுடன் யாரேனும் பதுங்கி இருக்கக்கூடும்.. லெனின் தாக்கப்படக் கூடும் என்பதால் இறங்கும் முன்பு மிகுந்த எச்சரிக்கையுடன் கரையை நோட்டம் விடுகிறார்கள்.. யாரும் இல்லை என்பது உத்தரவாதம் செய்த பிறகு தான் இறங்கி நடக்கிறார்கள்..

Emmanuil Kazakevich | www.yadvashem.org
Emmanuil Kazakevich | www.yadvashem.org

தோட்ட வீடு எந்த வசதியுமற்ற ஒரு குடிசை.. அங்கு தான் லெனின் தங்குகிறார். மிகப் பெரும் தலைவரை நமது பாதுகாப்பில் தோழர்கள் அனுப்பி இருக்கிறார்கள். அவரை நாம் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எமல்யனோவின் குடும்பம் மிகவும் பிரயத்தனப்படுகிறது. எமல்யனோவ், அவரது மனைவி, குழந்தைகள் என அனைவருமே ஆளுக்கொரு பணியைப் பகிர்ந்து கொண்டு ஒரு கட்டுக்கோப்பான இராணுவ படைப்பிரிவைப் போல செயல்படுகிறார்கள். அதே நேரம் இது பற்றி மற்றவர்கள் யாருக்கும் எதுவும் தெரிந்து விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறார்கள்.

லெனின் ஒவ்வொரு நாளும் பத்திரிகைகள் மட்டும் தவறாமல் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். அதன் மூலம் அன்றாட நிகழ்வுகளை ஆர்வமுடன் உற்று நோக்குகிறார். அதில் போல்ஸ்விக்குகளைப் பற்றியும் லெனின் குறித்தும் வெளிவரக் கூடிய அவதூறுகளை சிறு புன்னகையுடன் வாசிக்கிறார். சாதகமான பல பத்திரிகைகள் முடக்கப்படுவதைக் கண்டும் வேதனை அடைகிறார். அவதூறுகளுக்கு பதில்களை எழுதுகிறார். தோழர்களுக்கு வழிகாட்டக் கூடிய பல கட்டுரைகளையும் எழுதுகிறார். எழுதிக் கொண்டே இருக்கிறார். திடீர் திடீரென்று சிந்தனையில் ஆழ்ந்து விடுகிறார்ட்..

ஒரு முறை எமல்யனோவின் மனைவி கடைவீதிக்குச் சென்று பத்திரிகைகளை வாங்கி வருகிறார். அவருடைய உறவினர் ஒருவர் இவரைக் கண்டு உரையாடிக்கொண்டே வருகிறார். லெனின் பற்றி பல அவதூறுகளையும் அவர் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாகவும் கூறுகிறான். அவனை லாவகமாகக் கையாண்டு உரையாடலைத் துண்டித்துக் கொள்ள முயன்றாலுமே அவன் பேசிக் கொண்டே வீடு வரையிலும் வந்து விடுகிறான். ஆனாலும் கூட எந்த விதத்திலும் எதையும் உளறிவிடக் கூடாது என்று அவளும் திடீரென்று வீட்டுக்கு வந்த எமல்யனோவும் சாமர்த்தியமாக நடந்து கொள்வது அற்புதமான ஒரு சம்பவம்.

ஒரு வழியாக அவனை அனுப்பிவிட்டு பத்திரிகைகளை ஒரு கண்ணோட்டம் விடுவாள். லெனின் சுவிட்சர்லாந்தில் இருப்பதாகவும் ஜெர்மனிக்காரர்களுக்கு கைக்கூலியாக செயல்படுவதாகவும் அதற்கு கைமாறாக அவருக்கு ஏராளமான பணம் கைமாறியிருப்பதாகவும் அதை வைத்துக் கொண்டு அவர் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வதாகவும் ஆட்டக்காரியுடன் இருக்கிறார் என்றெல்லாம் எழுதப்பட்டிருப்பதைக் கண்டு அவர் மிகுந்த வருத்தப்படுவார். இவையெல்லாம் லெனின் கண்களில் பட்டால் அந்த மனிதர் எவ்வளவு துன்பப்படுவார் என்று நினைத்து அந்த தாள்களை மட்டும் தனியே எடுத்துக் கொண்டு மற்றவற்றை ஏரிக்கு அந்தப்பக்கம் இருக்கும் லெனினுக்கு கொடுத்து விடுவாள். இதைக் கொண்டு சேர்க்கும் பணி அவருடைய மூத்த மகனுக்கு உரியது.

Sapronov and the Russian Revolution | International Socialist Review

கோல்யா, தோழர் எமல்யனோவின் இளைய மகன். ஏரிக்கரைக்கு அந்தப் பக்கம், ஒரு புதருக்கு அருகில் இருந்து, புதிய நபர்கள் யாரேனும் லெனின் இருக்கும் குடியிருப்பை நோக்கி வருகிறார்களா என்று நோட்டம் பார்ப்பதும் அதை உடனே ஒலியெழுப்பி லெனின் உள்ளிட்ட தோழர்களுக்கு எச்சரிக்கை செய்வதும் அவனுடைய பணி. கோல்யா, தோழர் லெனினுடன் இருக்கும் வேளைகளில் அவருடைய பேச்சு, எழுத்து, விவாதங்களை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருவான்.

லெனினுடன் தங்கியிருக்கும் ஜினோவிவ் பெரும்பாலும் எதிர்மறையாகவே பேசும் நபர். லெனின் குருட்டுத் தைரியத்துடன் புரட்சிக்கு தயாராவதாகவும் அவருடைய நம்பி பயணிப்பவர்கள் கண்ணைக் கட்டிக்கொண்டு கடலில் குதிப்பதாகவும் பேசுவார். லெனின் அன்றாட செய்தித் தாள்கள் வருவதற்கு கொஞ்சம் தாமதமானாலும் மிகவும் பதற்றமடைவார். தனது கட்டுரைகளுக்காக மிகவும் சிந்திப்பார். கால நேரம் பாராமல் எழுதிக் கொண்டிருப்பார். இடையிடையே தன்னைப் பார்க்கவரும் தோழர்களிடமெல்லாம் தனது நீலக் குறிப்பேட்டை எப்படியாவது மறக்காமல் தன்னிடம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். இவற்றையெல்லாம் பார்க்கும் ஜினோவிவ் லெனின் தன்பால் கவனத்தை ஈர்க்கவே இப்படியெல்லாம் பாவனை செய்வதாக தனக்குத் தானே நினைத்துக் கொள்வார். அந்த கால கட்டத்தின் பல்வேறு விதமான சமூக நிலவரங்களை அவருடனான உரையாடல்கள் வெளிப்படுத்துவதாக நாம் உணரலாம்.. அவை லெனினை கொஞ்சம் தளர்வடையக் கூடச் செய்யும்.

இடையிடையே சில தோழர்கள் லெனினைப் பார்க்க வருவார்கள். அதில் ஒரு தோழர் சர்ஜோ. லெனின் வாழும் சூழலைக் கண்டு வாயடைத்துப் போவார். ஆமாம், அவர் வரும் போது நம்முடைய தோழர், புரட்சியாளர்களின் தலைவன் ஒரு மிகப்பெரிய வீட்டில் இருப்பார். அந்த வீட்டைச் சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய நூற்றுக்கணக்கான நம் தோழர்கள் பாதுகாப்புக்கு இருப்பார்கள் என்றெல்லாம் பல எதிர்பார்ப்புகளுடன் வருவார். ஆனால் லெனின் இருக்கும் சூழல் எந்தவிதத்திலும் கற்பனை செய்யமுடியாத, கனவிலும் நினைக்கமுடியாத ஒரு எளிய, சிறிய வைக்கோல் படுக்கை, ஈரப்பதமிக்க குடிசை, மழை பெய்தால் ஒழுகும் நிலை, கொசுக்களின் ரீங்காரம், கடி என மிக எளிய சூழலில் இருந்து கொண்டிருப்பார். ஒரு மேசை கூட இல்லாமல் எப்படி தோழர் என்பார் சர்ஜோ.. ஆனால் அதை பொருட்படுத்தாமல் சரி சொல்லுங்கள், மாநாட்டுப் பணிகள் எப்படி போகிறது என்று கேட்பார்.

ஒருநாள், எமல்யனோவின் பக்கத்து தோட்டக்காரர் லெனினை (அவர்தான் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த தொழிலாளியாக இருக்கிறாரெ) தனது தோட்டத்துக்கும் வேலைக்கு அனுப்பி உதவுமாறு கேட்பார். எமல்யனோவ் ஒருவழியாகச் சமாளித்து அனுப்புவார். லெனின் தொழிற்சாலை ஒன்றின் வேலையாளாக இருப்பதற்கேற்ப போலி அடையாள அட்டையெல்லாம் தயார் செய்து விடைபெறும் போது லெனின் தன்னைப் பக்கத்து தோட்டக்காரரிடம் வேலைக்கு அனுப்பாததுக்கு நகைச்சுவையாக நன்றி தெரிவிப்பார்.

Lenin & Cat | Jan Van Duppen | Flickr

மேலே குறிப்பிட்ட நீலக் குறிப்பேடு தான் பின்னாளில் மிகவும் பிரசித்தி பெற்ற அரசும் புரட்சியும் என்கிற நூலாக வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வேளை தான் சுட்டுக் கொல்லப்பட்டால் கூட இந்நூலை நம் தோழர்கள் அனைவரிடமும் கிடைக்கச் செய்து விட வேண்டும் என்று தோழர் காமனேவிடம் லெனின் கேட்டுக் கொண்டதாகவும் ஒரு கூடுதல் தகவல் உண்டு..

புரட்சியாளன் லெனினுடன் வாழ வேண்டுமா? நீலக்குறிப்பேடு நூலை வாசியுங்கள் – இதுதான் இந்நூலுக்கான முன்னுரையின் முதல் வாசகம்..

அவசியம் படியுங்கள். பாரதி புத்தகாலயம் வெளியீடு.

– தேனி சுந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *