இது இவரது இரண்டாம் நூல், முதல் நூலான தொலைந்து போன நடை வண்டிகள், ஒரு காலத்தில் செல்வாக்கு மிக்கதாய் இருந்த நடைவண்டி, நடக்க முடியாத குழந்தைகளைக்கூட நடக்க வைத்து விடும், அந்த வண்டியைப் பிடித்தெழுந்து நடக்காத குழந்தைகளே இல்லை என்றிருந்தது அந்தக் காலம். எல்லோரும் மறந்து போன அந்தக் காலத்தையும், அந்த நடைவண்டியும். கவிஞர் தள்ளிக் கொண்டு வந்து, கவிதையால் அந்தக் காலத்தையே காட்சிப்படுத்தியிருப்பார்.
இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘நிலம் தின்னும் அதிகாலை’ கவிதை தொகுப்பை கொண்டு வந்திருக்கிறார். இதிலும் பல கவிதைகள் மறந்து போன கடந்த காலத்தையே காட்டுகிறது. கவிஞர் மு. செல்லா. அவர்கள் கப்பலில் உள்ள பின் விளக்கைப் போல கடந்த காலங்களையே விரும்பிப் பார்க்கிறார், நினைவூட்டுகிறார். நம்மையும் அதில் லைக்க வைக்கிறார்.

யாரிடம் கொடுத்தேன்
என்பது தெரியாமலே
களவு போயின
என் இனிய நாட்கள்
கணக்கன் தோட்டத்து
உப்பு நீரில் குளித்தால்
மேனி கறுக்குமென்ற
அம்மாவின் அதட்டல் கேட்டு
வியாபாரி தோட்டத்து
நன்நீர் கிணறு அலற
குதியாலமிட்ட நாள்கள்
…………………………..
கவட்டை கொம்பொடிய
நுங்கு மட்டை வண்டியுருட்டி
என் சோட்டுக்காரனிடம்
தோற்றும்-ஜெயித்தும்
சிலிர்த்த நாள்கள்
…………………………
என நம்மை அந்தக் காலத்திற்கே அழைத்துச் சென்று, நுங்கு மட்டையில் வண்டி உருட்டச் செய்தும்,வேலி தாண்டி மாங்காய் பறித்தும்,புளியங்காய் அடிக்கச் செய்தும் பால்ய நினைவுகளில் மிதக்கச் செய்கிறார்.
கவிஞர் மு செல்லா அவர்களின் கவிதைகளில் ஒரு அமைதி நிலவும் அது மனதை மயிலிறகாய் வருடும், கவிஞரைப் போன்றே மென்மை அவர் எழுத்திலும் மிளிர்கிறது. குத்து, வெட்டு,முட்டு போன்ற முரட்டு வார்த்தைளை அவர் கவிதையில் பார்க்க முடியாது. ஆர்ப்பாட்டமோ, பேரிரைச்சலோ இல்லாதது கவிஞர் மு செல்லா அவர்களின் கவிதைகள், உதாரணமாக ஒரு கவிதை. கடினமாய் சொல்ல வேண்டியதை,
நகரத்துத் தெருக் கோடியில்
எட்டுக்கு எட்டு அறை ஒன்றில்
தேசம் கட்டமைக்கப்படுகிறது
நகரத்து தெருக்கோடியில் எட்டுக் எட்டு அறையில் என்ன தேசம் கட்ட கட்டமைப்புப்படுகிறது. என்ற யோசனையை எழச் செய்கிறது. ஆனால், அடுத்த அடியில் தெளிவாய் புரிகிறது.
குவாட்டர் பாட்டிலும்
கோழிப் பிரியாணிமாய்
……………………………..
என்று நகரத்து இளைஞர்கள் நாசமாவதைத்தான் நயமாக எடுத்துரைக்கிறார்.
தலைக்குத் தலை
தொகை பேசி
கடித்துக் குதறப்படுகிறது
ஜனநாயகத்தின் குரல்வளை
கண்ணும் கருத்தும் மூடிக்கொள்ள
ஊடகங்களின் ஒப்பாரியால்
ஒளிர்கிறது ஊடகங்களின் முகம்
ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒரு தூண் என்று சொல்லப்படுகின்ற ஊடகங்கள், பணத்துக்காகவோ சாதிக்காகவோ, மதத்துக்காகவோ தங்களின் முகங்களில் கரி பூசிக் கொள்வதை மென்மையான சொற்களைக் கொண்டு நயமாக எடுத்துரைக்கிறது. மேலே சொன்ன ‘புதை சோறு’ என்கிற தலைப்பிலான கவிதை.
உச்சி முதல் பாதம் வரை உழவன் படும் வேதனையை, ‘கொல்லும் ஒரு சொல்’ என்ற கவிதை இப்படிச் சொல்கிறது,
பண்ணரிவாள் பதம் போக
கள்ளிப்பால் பட்ட இடம்
சிகிச்சை இன்றி கன்றிவிட
செருப்பின்றி
வெந்து போன விரல் இடுக்கில்
வெடிப்பு விழ
முன்னே பயிர்களுக்கு
மருந்து அடிக்க பணமில்லா
நினைப்பு வந்து பயமுறுத்த
ஆன மட்டும் தோண்டிப் பார்த்தும்
நீரில்லா கிணறு பார்த்து
தலை சுற்றி நின்றவனுக்கு
போக்குக் காட்டி
புழுதிகிளம்பப் பறக்கின்றன
விதவிதமான
தேர்தல் கால வண்டி வாகனங்கள்
……………….
எல்லாம் குடித்துவிட்டு பேசுகிறவனின் சொல்,
குடிக்க கஞ்சி இல்லாதவனின் காதில் இப்படி வந்து விழுகிறது,
“விவசாயிகளே என் நாட்டின் முதுகெலும்பு” என்று
குறி சொல்லும் கோடாங்கியைப் பற்றி ஒரு கவிதை. கோடாங்கி தன் வயிற்றுப் பிரச்சனையவே தீர்த்துக் கொள்ள முடியவில்லை ஆனால், கடவுளுக்கே கட்டளையிடுகிறான்,
உடுக்கையின் உக்கிரத்தில்
முண்டாசின் இறுக்கத்தில்
மீசையின் முருக்கலில்
ஆங்கார வெறுப்பில்
தலை உலுக்கிய கட்டு கூந்தலில்
வராத பேய் வந்த அமர்ந்தது
………………….
வயிற்று பேய்க்கு
வழி சொல்ல மாட்டாதவன்
……
மானுடத்தின் வழியே
கடவுளுக்கு கட்டளை இடுகிறான்
கள்ள மவுனத்தில்
கடவுள் சிரிக்கிறார்
……………….
கள்ள மவுனத்தில் கடவுள் சிரிக்கிறார் என்கிற சொல்லினுள் ஏராளமான பொருள் பொதிந்துள்ளது. கடவுள் ஏன் சிரிக்கிறார் என்பதை அவரவர் கற்பனைக்கு தகுந்தவாறு பொருள் எடுத்துக் கொள்ளலாம்.
நீர்நிலைகள் நீரின்றி வறண்டு கிடக்கிறது. நீரிருந்த காலத்தில் அது கொண்ட பெருமையும், மகிழ்ச்சியும், எல்லாம் காணாமல் போய் அது தனிமையில் கிடப்பதையும் கவிதையில் வடிக்கிறார் கவிஞர்.
நீரின் குழுமையும் அது கொண்ட தனிமையும் நம் இதயத்தில் பரவுகிறது,
நீர்சிலுப்பும் குருவிகளின்றி
சிறகுளர்த்தும் காக்கைகள் இன்றி
கவிழ்ந்து நீர் கவ்வும் கரிசான்களின்
பாய்ச்சலின்றி
மேழி கழுவுதலின்றி
மாடுழப்பும் தாம்புகலின்றி
முழங்கால் சேறு துடைத்தேறும்
மாதரின் நகையுமின்றி
கால்ச்சட்டை கழலுமுன்
பாய்ந்து நீரில் விழம்
நட்புமின்றி
காய்ந்தே கிடந்தது நதியின் தடம்
காக்கைகளும், கரிச்சான் குஞ்சுகளும், முழங்கால் அலம்பும் மாதரும்…. இவை அனைத்தும் கண்ணில் காட்சிகளாய் சித்திரங்களாய் விரிகின்றன. இவைகள் அனைத்தையும் இழந்த குளம் சோகமாய் கிடப்பதும் நம் கண்ணில் தெரிகிறது. குளம் தானே என்றில்லாமல் மனதில் ஒரு சோகத்தை வாசிக்கிறது.
இத்தொகுப்பில் உள்ள எல்லா கவிதைகளையும் சிலாகித்து சொல்லத்தான் எனக்கும் ஆசை. விறிவஞ்சி இத்தோடு நிறைவு செய்கிறேன். நூலின் வடிவமைப்பு அச்சாக்கம் சிறப்பாக உள்ளது.
கவிஞர் மு செல்லா அவர்களையும் அவர்தன் கவிதைகளையும் காலம் கைவிடாது அவரை கக்கத்தில் வைத்துக் கொள்ளும்.
மேலும் எழுதி புகழ் பெற கவிஞர் அவர்களுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்கள்.
நூலின் தகவல்கள்
நூல் : நிலம் தின்னும் அதிகாலை
ஆசிரியர் : மு. சொல்லா
விலை : ₹. 130
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
நூல் அறிமுகம் எழுதியவர் :
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

