பெருமாள் முருகனின் நிலமும், நிழலும் கட்டுரைத் தொகுப்பு இப்போது தான் முடித்தேன். பொதுவாக, பிரபல எழுத்தாளர்கள் சினிமா பற்றி எழுதுவதைப் படிக்க எனக்கு பயமாக இருக்கும். சினிமா பற்றி பிரபல எழுத்தாளர்கள் எழுதுவதை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, நான் எத்தனை பெரிய ஆளாக இருந்தாலும், மிக சாதாரண ஆளாக, மக்களோடு மக்களாக சினிமா பார்த்து அதன் கேளிக்கையை, கொண்டாட்டத்தை ரசிப்பவன் என்பதாக காட்டிக் கொண்டு, ரஜினி சார், கமல் சார், மணிரத்னம் சார் மாதிரியான சார்களின் படம் பார்த்த அனுபவங்ளை எழுதும் ரகம்.
மற்றொன்று, முற்றிலும் அறிவுஜீவித்தனமான ரகம், இது தமிழ் சினிமா பற்றியது தானா என்று நமக்கு சந்தேகம் வருவது மாதிரி உளவியல், தத்துவம், மேலைநாடுகள், மரபு, தொன்மம், படிமம் என்று போட்டு அடித்துத் துவைத்து இரண்டு மணி நேர படத்திற்கு இருபதாயிரம் வார்த்தைகளில் கட்டுரை எழுதிக் கொல்வது. இருப்பினும், பெருமாள் முருகன் எளிமையான மனிதராயிற்றே, என்று தைரியமாக எடுத்தேன். அவரும் என்னை ஏமாற்றவில்லை.
காட்சிப்பிழை இதழுக்கு திரைப்படங்கள் பற்றி அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு 18 கட்டுரைகள். அரசனுக்கு ஏன் சட்டையில்லை? இடைவேளையே சுபம், என்றா பல்லக் காட்ற? மனிதக் கருவாடும் கரையோர நண்டுகளும் என்று வித்தியாசமான தலைப்புகள் கொண்ட அருமையான கட்டுரைகள். அவரது தந்தையார் திரையரங்கில் சோடா கடை வைத்திருந்த காரணத்தால் சிறுவயதிலேயே நிறைய படங்கள் பார்த்தவர். இப்போதும் பார்ப்பவர். அந்த அனுபவங்கள் மிக சுவையாக, எளிமையாகப் பகிரப்பட்ட கட்டுரைகள்.
சிறுவயதில் பார்த்த படம், அது தந்த உணர்வை இன்றைய அறிவு நிலையில் வைத்து எழுதி நம்மை ஏமாற்றாமல், அல்லது நாங்கல்லாம் அப்பவே அப்படி என்று மிரட்டாமல், பார்த்த அன்று அவருக்கு இருந்த மனநிலையைப் பதிவு செய்திருப்பது அருமை. அவருக்கு என் வயது தான் என்பதால், பல படங்கள் பற்றி(நான் அதிகம் படங்கள் பார்த்த்தில்லை என்றபோதும்) நான் உணர்ந்தது போலவே தான் அவரும் எழுதியிருக்கிறார். ஊர் திருவிழாவில் படம் போடும் கலாச்சாரம் வந்தது, டூரிங் தியேட்டர் அனுபவம், சற்றே பெரிய கிராமங்களின் தியேட்டர்கள், சென்னையின் தியேட்டர்கள், கல்லூரி விடுதியில் போடப்படும் படங்கள், உடன் படம் பார்க்க வந்த நண்பர்கள், அவர்களது ரசனை, கமெண்ட்கள், புராணப் படங்களின் ஃபார்முலா, (புராணப் படங்களில், ராஜா ராணி படங்களில் எல்லோரும் சட்டை அணிந்திருக்க ராஜா மட்டும் சட்டை அணியாமல் வருவது எதனால் என்று அவருடைய பிள்ளைகள் கேட்கிறார்கள்!) என்று பல பல கோணங்களில் சலிப்புத் தராத கட்டுரைகள்.
கை கொடுக்கும் கை படத்தைப் பற்றி வில்லன் திருந்தி வாழலாமா? என்றொரு அற்புதமான கட்டுரை. கை கொடுக்கம் கை மகேந்திரன் படம் என்பதே எனக்கு புதிய தகவலாக இருக்க, சின்னி ஜெயந்த் அதில்தான் அறிமுகமானார் என்பது இன்னொரு கூடுதல் தகவல்.
மக்களைப் பெற்ற மகராசியில் முதன்முதலில் வட்டார மொழி பேசப்பட்டது பற்றிய கட்டுரையும், கொங்குப் பகுதி பற்றி90களில் வர ஆரம்பித்த ஏராளமான படங்கள், அவை உண்மையாகவே கொங்குப் பகுதியை காண்பித்தனவா என்பது பற்றிய கட்டுரையும் முக்கியமானவை. அதே போலத்தான் ரோசாப்பூ ரவிக்கைக்காரி பற்றிய கட்டுரைகளும்.
நடுவில் பாட்டால் வாழும் படம் என்று ஒரு கட்டுரை. கட்டுரை காந்தி மற்றும் ஏழாவது மனிதன் ஆகிய திரைப்படங்களைப் பற்றியது என்றாலும். கட்டுரையின் முதல் பாதி திருக்குறள் அவரிடம் ஏற்படுத்திய பாதிப்பு பற்றிய அருமையான கட்டுரையாக இருக்கிறது. நான் மிக கவனமாக அந்த முதல் பாதியை திரும்பத் திரும்பப் படித்தேன்.
தங்க மீன்கள் படம் பற்றிய அவரது கட்டுரையும் மிக ஆழமானது. எழுத்தாளர்கள் ஒரு சிலர் எல்லோரும் கொண்டாடுவதைத் தாக்கி எழுதுவதையும், எல்லோரும் கடித்துக் குதறுவதை ஓஹோ என்று பாராட்டி எழுதுவதையும் வழக்கமாகக் கொண்டிருப்பார்கள் – கோவில்களில் சிலர் அப்பிரதட்சிணமாக சுற்றுவார்களே! அது போல -. தங்க மீன்கள் பற்றிய பெருமாள் முருகனின் கட்டுரை அந்த மாதிரியானதல்ல. மிக மிக நேர்மையான விமர்சனம்..
தொகுப்பில் எல்லாக் கட்டுரைகளுமே அந்தத் திரைப்படத்தைப் பார்த்த நாளன்று அவருடைய மனநிலை, உடன் இருந்தோர், அந்தக் காலகட்டத்தில் அவரது வாழ்க்கை முறை எல்லாம் சேர்ந்து அவரது மனதில் ஏற்படுத்திய உணர்வுகளின் பதிவுகளாகவே உள்ளன. அதனால் எந்தக் கட்டுரையிலும் தான் பெரிய அறிவாளி என்பதான showing off இன்றி நீங்களும், நானும் படத்தைப் பார்த்தால் என்ன நினைப்போமோ அது போல எந்தவித பாவனையும் பாசாங்கற்றும் எழுதியிருக்கிறார்.
ஒரு கட்டுரையை அவர் ”துயரத்திலிருந்து நம்மை விடுவிப்பது கலை. அது தற்காலிகமாக இருப்பினும் சரி”, என்று சொல்லி முடிக்கிறார். நான் பல சமயங்களில் சினிமா பற்றி கிட்டத்தட்ட அந்த மாதிரி தான் நினைத்துக் கொள்வேன்.
அதனால், எனக்கு அந்த வரி மிகவும் பிடித்திருக்கிறது…
நிலமும், நிழலும்
ஆசிரியர் – பெருமாள் முருகன்
காலச்சுவடு வெளியீடு.