நூல் அறிமுகம்: நிர்மலின் நிலமும் பொழுதும் – விஜயன்

நூல் அறிமுகம்: நிர்மலின் நிலமும் பொழுதும் – விஜயன்



சமீபத்தில் கிண்டிலில் வெளிவந்த நண்பர் நிர்மல் எழுதிய நிலமும் பொழுதும் என்ற நூலை வாசித்தேன். இது ஒரு அற்புதமான நூல் என்பதை எனது மதிப்பீடாக எடுத்த எடுப்பிலேயே கூறிவிடுகிறேன். இதற்கு மூன்று காரணங்கள் உண்டு. 

முதலாவது நூலை எழுதும் நபர் அந்த நூலை எழுதுவதற்காக உழைத்திருக்க வேண்டும். நூலின் இறுதியில் இந்த நூலை எழுதுவதற்காக அவர் படித்த புத்தகங்கள், வாசித்த இணையதளக் கட்டுரைகள், சந்தித்து உரையாடிய வல்லுனர்கள் ஆகியவற்றை பட்டியலிட்டிருக்கிறார். கடுமையான உழைப்பு செலுத்தியிருப்பது புத்தகத்தை வாசித்தபோது உணர முடிந்தது. வேதியல் பட்டதாரியான நிர்மல், நிலவியல் விஞ்ஞானம் பற்றி அடிப்படை புத்தகங்களிலிருந்து துவங்கி அதன் வளர்ச்சியடைந்த நிலைவரை பொறுமையாக வாசித்து, கிரகித்து அவற்றை எளிமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். வாசிப்பதை எல்லாம் கிரகிக்க முடியாது. கிரகிப்பதை எல்லாம் வெளிப்படுத்த முடியாது. இவற்றை சிறப்பாக செய்பவர்களுக்கு அவர்கள் எடுத்துக் கொண்ட புலத்தின் மீது ஒரு காதல் இருக்கும். வாசிப்பு வளர வளர இக்காதல் அவருக்கு அப்புலத்தின் மீது ஒரு பிடிப்பை ஏற்படுத்திவிடும். அவர் படித்த பட்டமேற்படிப்பான சுற்றுச் சூழல் விஞ்ஞானம், நிலவியல் பற்றிய ஆழமான விஷயங்களை கையாளாவிட்டாலும் அது ஓரளவுக்கு உதவியிருக்கலாம். எனினும் இவருடைய ஆர்வமும் உழைப்பும் இல்லையேல் இது நடந்திருக்காது. நிர்மலின் உழைப்பும் அவரது ஆர்வமும் அவருக்கு நிலவியல் விஞ்ஞானம் மீது ஒரு Gripஐ ஏற்படுத்திவிட்டது. உழைப்பில்லாமல் உற்பத்திப் பொருள் கிடையாது. நிர்மலின் உழைப்பில்லாமல் நிலமும் பொழுதும் உருவாயிருக்காது. 

இரண்டாவதாக, எடுத்துக் கொண்ட தலைப்பைப் பற்றிய நோக்கு நிலையில் ஒரு அறிவியல் பார்வை எழுத்தாளருக்கு இருக்க வேண்டும். அறிவியல் பார்வை என்பது மூட நம்பிக்கை கட்டுக்கதைகளை எதிர்ப்பது என்பதோடு குறுக்கிவிட முடியாது. மூடநம்பிக்கைகள் கட்டுக்கதைகள் உள்ளிட்ட எல்லாவற்றையும் காரண காரியங்களோடு விளக்க முயல்வது. இந்த நூலில் பூமியின் தோற்றம் பற்றி பல்வேறு சமூகக்குழுக்களிடமும் பல்வேறு மத நூல்களிடமும் நிலவிவந்த நம்பிக்கைகளையும் கதைகளையும் சுட்டிக்காட்டி நூலை நகர்த்திச் செல்கிறார். இந்த சுவாரஸியமான கதைகளை வாசித்துவிட்டு, நிலவியல் விஞ்ஞானம் புவியின் வரலாற்றை எப்படிப் அடையாளம் கண்டது என்பதை வாசிக்கும் போது இந்த கதைகளின் மீதும் நம்பிக்கைகள் மீதும் நமக்கு வெறுப்பு ஏற்பட்டு ஒதுக்கி தள்ளாமல் நாம் அவற்றை அறிவியல் வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களில் ஒன்றாகவே நமக்கு பார்க்கத் தோன்றுகிறது.



மூன்றாவது, நூலின் அழகியல். அழகியலில் முக்கியமான அம்சம் எளிய வாசிப்பு நடை. புத்தகத்தை வாசிக்க எடுத்துக் கொண்ட வாசகனுக்கு அலுப்புத்தட்டாமல் அதன் கடைசிப்பக்கத்துக்கு அவனைக் இழுத்துச் செல்ல வேண்டும். இந்த அம்சத்தில் நிர்மலில் எழுத்துநடை வெற்றி பெற்றிருக்கிறது. அழகியலின் இரண்டாவது அம்சமாக விஷயங்களை தொகுத்துக்கூறும் கட்டமைப்பு. புவியின் வரலாற்றை கூறும் போது அதன் தொன்மை காலத்திலிருந்து சமீபகாலத்திற்கு வரும் கட்டமைப்பு முறை திட்டமிட்டு எழுதப்பட்டது என்கிறார். ஆம், இதுதான் வாசகனை கடைசிவரை வாசிக்க வைத்திருக்கிறது. முதலிலேயே சமீபகால வரலாற்றை கூறிவிட்டால் தொன்மைகால வரலாற்றை படிப்பவர்கள் குறைந்து போவார்கள். நீச்சல் கற்றுக்கொள்ளும் ஒரு சிறுவனை குளத்தின் கரைக்கருகில் உள்ள நீரில் குப்புற மிதக்கவிட்டு கற்றுக் கொடுக்கும் சிறுவன் அவனது இரு கைகளையும் அவன் வயிற்றில் தாங்கலாக வைத்துக் கொண்டு கையையும் காலையும் அசைக்கக் சொல்லி கொண்டே ஒரு கட்டத்தில் தாங்கும் கையை எடுத்துவிடுவான். சிறிது நேரத்தில் குளத்தில் அழமான பகுதிக்கு நீச்சலடித்துக் கொண்டே அவனையும் இழுத்துச் சென்றுவிடுவான். இது போலவே நம்பிக்கைகள், கதைகள் என்று என்று ஒரு கதைசொல்லியாக துவங்கி வாசகனை ஆழமான பகுதிக்குள் நிர்மல் இழுத்துச் சென்று விடுகிறார். இதுவரை அவர் வாசித்த திருக்குறள் உள்ளிட்ட இலக்கியங்களை மேற்கோள் காட்டி அவர் கூறும் விஷயத்தை வாசகனிடம் கொண்டு செல்லும் உத்தியை அழகியலின் அடுத்த அம்சமாக கூறமுடியும். 

இந்த மூன்று காரணங்களையும் தாண்டி இந்த நூலின் இன்னொரு முக்கியமான அம்சத்தையும் நான் காண்கிறேன். நான் படித்தேன் அறிவு பெற்றேன் என்று அறிவிப்பு செய்யும் ஏற்பாடாக இந்த நூல் அமையாமல், சமூக அக்கறையோடு தற்போது நாம் சந்திக்கும் பருவநிலை மாற்றம் புவிவெப்பமயமாக்கல் பிரச்சனைகளை புவியின் வரலாற்றோடு இணைத்து வாசகனை கற்றுக் கொள்வதற்கான முயற்சியை எடுத்திருக்கிறார். நாம் இதுவரை இயற்கையாக மெல்ல மெல்ல மாற்றமடைந்து வந்த இந்த பூமி, வாழுகின்ற காலமான Anthropocene காலகட்டத்தில் மனிதத் தலையீட்டால் வேகமாக மாற்றமடைந்து வருவது இன்னும் மேலதிக காலம் உயிரினங்கள் வாழும் தகுதிபடைத்த இந்த பூமியை அதன் எல்லைக்கு விரைவில் நகர்த்திச் செல்கிறது என்ற எச்சரிக்கையுடன் நூலை முடிக்கிறார்.



புத்தகத்தின் இதர அம்சங்களுக்குள் சென்றால், அது வாசகனை அசல் பிரதியை வாசிக்கும் ஆர்வத்திலிருந்து இந்த மதிப்பீட்டை வாசித்து முடித்ததோடு தடுத்துவிடும். ஒரு சில விஷயங்களை மட்டும் கூற விரும்புகிறேன். இந்த நம்பிக்கைகள் கதைகள் எல்லாம் வளர்ந்து வந்த விஞ்ஞான அணுகுமுறையால் தவறாகிப்போனது என்பதும், பல நூறாண்டுகள் ஆய்வுகளுக்குப் பின்பு உண்மைகள் பட்டவர்த்தனமாக வெளிப்பட்ட பின்பும் இன்னும் அவற்றை தூக்கிப்பிடிக்கும் போக்கை வருத்தத்துடன் எடுத்துக் கூறுகிறார். முறையாக நிலவியல் பற்றிய ஞானத்தை நமது கல்விமுறை உருவாக்க தவறுவதால் கல்விமுறைக்கு அப்பால் இயங்கும் சமூக நிறுவனமான மதநிறுவனங்கள் நிலவியல் உண்மைகளை மறுதலித்து பழைய நம்பிக்கைகைளே வேரூன்றச் செய்து வருகின்றன. மடிந்துபோன தொல்லுயிர்கள் பல கோடி ஆண்டுகள் பூமிக்குள் புதையுண்டு கிடப்பதால் அவை இறுகிப்போய் கல்லாகிவிடுகின்றன. அவற்றில் ஒன்று Ammonite என்ற கல். இந்தியாவில் இதுபோன்ற Ammonite கல்லை சாளகிராமம் என்று பெயரிட்டு வழிபடும் ஒரு CultISCON போன்ற மத அமைப்புகள் பரப்பி வருகின்றன. Ammonite எப்படி உருவாகின என்ற விஷயத்தை இந்த நூலில் காணலாம். நிலவியல் விஞ்ஞானத்தின் வளர்ச்சியானது ஐரோப்பாவில் இருண்டகாலம் (மத நம்பிக்கைகள் அறிவு வளர்ச்சிக்கு தடையாக இருந்த காலம்) முடிவுற்று மறுமலர்ச்சி காலம் (16 நூற்றாண்டிலிருந்து) துவங்கியபின்பு ஏற்பட்டது என்கிறார் நிர்மல். இந்த உண்மையானது நிலவியலுக்கு மட்டுமல்ல மற்றெல்லா அறிவியல் புலத்திற்கும் பொருந்தும். மதநிறுவனங்கள் ஏற்படுத்திய சிந்தனை அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அடைந்த பிறகுதான் சுயமான சிந்தனை வளர ஆரம்பித்தது. அதன் பிரம்மாண்டமான வளர்ச்சியை நாம் கடந்த ஐநூறு ஆண்டுகளில் காண்கிறோம். அத்துடன் இந்த மறுமலர்ச்சிகாலம் எப்படித்தோன்றியது ஏன் தோன்றியது என்பதை குறிப்பிடவில்லை. இது எடுத்துக்கொண்ட தலைப்பிற்கு அப்பாற்சென்றாலும் நிர்மல் இதைப்பற்றி கோடிட்டு காட்டியிருக்கலாம். உற்பத்தியமைப்புமுறையில் ஏற்பட்ட மாற்றங்களானது உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு தடையாயிருக்கிற அம்சங்களை தூக்கியெறிய முன்வரும் என்ற உண்மையே மறுமலர்ச்சிகால துவக்கத்தின் அடிப்படை என்பதும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற பிரஞ்சுப் புரட்சி இதரப் புரட்சிகளும் இதையே காட்டுகின்றன என்பதையும் கோடிட்டுக் காட்டியிருக்கலாம். ஒரு புத்தகம் எழுதும் போது வெவ்வேறு அத்தியாயங்களாகப் பிரித்து எழுதுவது என்பது தவிர்க்க முடியாதது அத்துடன் முந்திய அத்தியாயத்தில் கூறியதை தொடர்ச்சிக்காக paraphrase செய்வது அவசியமானது. இந்தப் புத்தகத்தில் இப்படிப்பட்ட paraphrase முந்தைய அத்தியாயத்தில் உள்ளதை அப்படியே Repeat செய்வது இருமுறை நிகழ்ந்திருக்கிறது. இதை வெளியீட்டுக்கு முன் Author அல்லாத இன்னொரு நபர் சரிபார்க்க வேண்டும். அதேபோல் பிழைதிருத்தம் செய்வதற்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

நிலவியல் பற்றிய எந்த புரிதலும் இல்லாதவர்கள் இந்த நூலை வாசித்தால் அவர்கள் எவ்வித சிரமத்திற்கும் ஆளாக மாட்டார்கள் மாறாக கடந்த நூற்றாண்டுகளில் நிலவியல் ஆய்வில் நடைபெற்ற முயற்சிகளைக் கண்டு பிரமித்துப் போவர். இதுவரை நாம் இந்த அம்சங்களை கற்க தவறிவிட்டோமே என்ற உணர்வுதான் ஏற்படும். தற்போது நாம் சந்தித்துவரும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் மீது ஒரு Balance viewpoint ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அத்துடன் சுயமான சிந்தனை வளர்ச்சியே பிரச்சனைகளை விருப்புவெறுப்பின்றி ஆய்வு செய்வதற்கு தூண்டும் என்பதும் இந்த அணுகுமுறையே உண்மையான தீர்வுக்கு வழிவகுக்கும் என்பதையும் புரிந்து கொள்ளமுடியும். இக்காரணங்களால் இப்புத்தகத்தை அனைவரும் வாகிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.

விஜயன்

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *