ஏர் மகாராசன் எழுதிய நிலத்தில் முளைத்த சொற்கள் - நூல் அறிமுகம் | Aer Maharasan - Nilathil Mulaitha Sorkal Book Review - https://bookday.in/

நிலத்தில் முளைத்த சொற்கள் – நூல் அறிமுகம்

நிலத்தில் முளைத்த சொற்கள் – நூல் அறிமுகம்

நூலின் தகவல்கள்: 

புத்தகம்: நிலத்தில் முளைத்த சொற்கள்
ஆசிரியர்: மகாராசன்
பிரிவு: கவிதைத் தொகுப்பு
பதிப்பகம்: யாப்பு வெளியீடு

நடிகர் ஓவியர் பொன்வண்ணன் அவர்களின் சிறப்பான முன்னட்டை ஓவியம். கந்தையா ரமணிதரனின் அழகான பின்னட்டை ஒளிப்படம். தொகுப்பெங்கும் பித்தனின் சிறப்பான கோட்டோவியங்கள். தளுகையிலும் கவிதை. மகாராசனின் பிற நூல்கள் பட்டியல் பிரமிக்க வைக்கிறது. அழகான தலைப்புகளுடன், கவிஞர் யுகபாரதியின் சிறப்பான அணிந்துரை(ஒளிரும் ஒத்தடச் சொற்கள்) மற்றும் முனைவர் அரங்க மல்லிகா(மொழியின் சுருக்குப் பையில் கனத்திருக்கும் நிலம்) அவர்களின் விரிவான மதிப்புரை.

நன்றியில் மகன் (அகரன் தமிழீழன்), மகள்(அங்கவை யாழிசை) ஆகியோரின் அற்புதமான தமிழ்ப் பெயர்கள். பெரும்பாலான கவிதைகள் நிலம் பற்றிய கவிதைகள், ஈழத்து நிலம் உட்பட.
படிம அழகு –
நீர்மையாய் வழிந்தோடும்
சொற்களால் நனைந்து நனைந்து
பசப்படித்தது நிலம்
வழிந்தோடும் சொற்கள், பசப்படிக்கும் நிலம். அருமையான கற்பனை.
நஞ்சையும் புஞ்சையும் கைவிட்டுப் போய், உழவர்கள் ஊர் விட்டுப் போன ஊரின், சிதிலமடைந்த கோவிலைப் பற்றிய கவிதை இப்படி முடிகிறது:
எழுதப்படாமலே போனது
எனதூர்த் தலபுராணம்
நிலமற்றுப் போவது, எவ்வளவு வேதனை.
தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளில் ஒன்று, அழகான கற்பனையில்:
துளைகள் ஏதுமின்றி
வேர்கள் இசைத்ததில்
கிளைகள் தலையாட்டி
பூக்களைத் தூவிச் சிரிக்கின்றன
காட்டுச் செடிகள்
மண்மீட்டிய வேர்களின் இசை
காடெல்லாம் மணத்துப் பரவியது.
மண்மீட்டிய இசை, காடெல்லாம் மணக்கிறது – எவ்வளவு அழகு.
மற்றுமொரு சிறந்த கற்பனை, கவிதையும் எழுதும் தாள்களும் பற்றிய ஒன்று:
மைத் தூவலின் அழுகைத் தேய்ப்பில்
கசிந்து வழிந்த சொற்கள்
……….

ஏர் மகாராசன் எழுதிய நிலத்தில் முளைத்த சொற்கள் - நூல் அறிமுகம் | Aer Maharasan - Nilathil Mulaitha Sorkal Book Review - https://bookday.in/

குவிந்து கிடக்கும்
ஒத்தடச் சொற்களால்
தணிந்து போகின்றன வலிகள்.
மீன்களைப் பற்றிய கவிதை, மீன்களை மட்டுமா பேசுகிறது? நிலத்தையும் மனிதர்களையும் அல்லவா பேசுகிறது.
பாலச்சந்திரன் பற்றிய கவிதை இப்படி வேதனையுடன் முடிகிறது:
பசித்த கண்கள்
பழி தீர்க்காமலே மூடிக்கொண்டன.
கைவிடப் பட்ட நிலம் தொகுப்பெங்கும் வருகிறது:
நாதியற்றுக் கிடந்தாள்
நிலத்தாள் மட்டும்.
மலைவாசஸ்தலங்களெல்லாம் ஆக்கிரமிப்பு செய்யப்பட, கோபத்தில் எரிக்கிறாள் வனத்தாய்:
காலில் விழுந்து மன்றாட
பிஞ்சுகளின் ஆத்மாக்களைத் தேடி
பித்துப்பிடித்து அலைகிறாள்
வனத்தாய்ச்சி.
நாமெல்லாம் வெட்கப்பட்டு தலை குனிய வேண்டிய ஒன்று.
நிலம் பற்றிய மற்றும் ஒரு அழகான படிமம்:
உழுகுடிப் பாதங்களின் கொப்புளங்கள்
நிலமெனும் ஆத்மாக்களின்
அழுகைத் துளிகள்.
காதலின் நினைவுகளிலும் நிலம் சார்ந்த படிமங்கள்:
மிச்சமிருந்த கனவின் எச்சங்கள்
நாயுருவி முள்ளாய் ஒட்டிக்கொண்டன.
தாய்மடிகள் இரண்டு இருந்த இனம் ஒன்று அழிந்த கதையொன்று நெடுங்கவிதையாய் விரிகிறது.
சம்சாரிகளின் வலியைச் சொல்லும் கவிதை:
சம்சாரிகளாய்ப் பிறந்ததின் வலி
சாவிலும் கொடிது.
மழையாலும், மழையின்றியும் எவ்வளவு நஷ்டம் வந்தாலும், நிலத்தை விட்டுப் பிரிய முடியாத சம்சாரித் தலைமுறையின் கதறல்:
ஆத்தாளோட தொப்பூள்க்கொடி
அறுத்தெறிஞ்ச நமக்கு
நிலத்தாளோட தொப்பூள்க் கொடியை
அறுத்தெறிய மனசில்லையே மக்கா;
அறுத்தெறியவும் முடியலையே மக்கா.
ஆறுகளை எப்படியெல்லாம் வர்ணிக்கிறார் கவிஞர்:
நீர்ச் சேலைத் துணிகள்
உமிழ்நீர்ச் சுரப்பிகள்
நீர்முலைத் தாய்ச்சிகள்
குடுகுடுப்பைக் காரனும் குடியானச்சியும் கவிதை ஒரு காவியம்.
கண்ணீர் கசிய, இறகுகளை உதிர்க்கும் மனப்பறவையை, மென்சிரிப்புடன் வேடிக்கை பார்க்கும் ஊழிப்பெருங்காலம் என்கிறார் ஒரு கவிதையில்.
கரிக்கும் எரிநெய்க்கும், நிலத்தை பாழ்படுத்தும் நவீன முறையை சாபமிடும் கவிஞன்:
வயலைப் பாழ்படுத்தி
பயிர்களைச் சாகடித்துதான்
விளக்கெரிய வேண்டுமெனில்,
வயிறு எரிந்து சாபமிடும்
உழவர்கள் தூற்றிய மண்ணில்
எல்லாம் எரிந்து சாம்பலாகி நாசமாய்ப் போகட்டும்.
கைக்கிளை, பெருந்திணையின் தவிப்பு இக்கவிதை:
வெறுமை மண்டியிருக்கும்
வாழ்நிலத்தில்
கூந்தல் கூடத் தவிக்கின்றன
கைக்கிளைப் பூக்கள்
பறவையின் வரவுக்காய்
கிளைக்காம்பில் காத்திருக்கின்றன
பெருந்திணைக் கனிகள்
நீர், நிலம், கடல் எல்லாவற்றையும் தாயாய்ப் பார்க்கிறது கவி மனம்: நீர்த்தாய்ச்சி, நிலத்தாய்ச்சி, கடல் தாய்ச்சி
விதைகள் முளைத்ததும் நிலத்தின் மகிழ்ச்சியை இவ்வாறு பாடுகிறார் கவிஞர்:
வாழ்தலின் பேரின்பத்தை
மணக்க மணக்கப் பாடியது
பூப்பெய்திய காடு
தாயின் ஞாபகம் ஊரின் ஞாபகத்தை இழுத்து வர, இன்று யாருமே இல்லாத சோகம்:
நினைக்கவும் நீயில்லை;
தலை தட்டவும் ஆத்தாளுமில்லை.
நம் கால்கள் பதிய நடந்த ஊருமில்லை.
அழகான கற்பனையில் மற்றும் ஒரு கவிதை:
ஆறுகளின் ஈர நாவுத் தழுவலில்
கருக்கொண்டன வயல்கள்.

காதல் கவிதைகளும் நிலத்தின் மண்மணத்தோடு:
நீயற்ற வெறுமையை
நத்தைக் கூடாய்ச் சுமந்து திரிகின்றது
எனது வெறும்பாடல்.
….
கக்கத்தில் சுமந்திருக்கும்
நிறைகுடத்து நீருக்குள்
முழுதாய் மூழ்கிடத் தவித்தது
மந்தையின் ஓரத்தில் கிடந்த
இளவட்டக்கல்.

வாடாமலும் கசங்காமலும்
நம்மிருவருக்கு மட்டுமே
மணத்துக் காட்டுகிறது
மறைகாலத்தின் களவும் பூ.

முழுநிலவு வெளிச்சத்தின்
யாமத்துப் பொழுதுகளில்
முளைத்த நினைவுகள்
பாதைகள் முழுக்க
பூத்திருக்கின்றன.
நிலத்தில் முளைத்த இந்த சொற்களில், வேர்களின் இசை ஒலிக்கிறது.
வேறுவேறு வார்த்தைகளில், திரும்பத் திரும்ப கவிதைகள், ஒரே பாடுபொருளாய் இருப்பதால் சற்றே சலிப்பைத் தருகிறது.
சில கவிதைகள் வெறும் காட்சி வர்ணனையாக நின்று விடுகிறது.
சிறப்பான வாசிப்பு அனுபவம்.

 

நூல் அறிமுகம் எழுதியவர் :

 

கண்ணன் விஸ்வகாந்தி



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 1 Comment

1 Comment

  1. செ.முத்தரசப்பன், வடுகபட்டி, தேனி .

    நிலத்தில் முளைத்த சொற்கள் கவிதைக் கனிகளாய் நூலெங்கும் பழுத்துக் கிடக்கின்றன.

    வாசிப்போர்க்குச் சில இடங்களில் இனிக்கிறது. சில இடங்களில் வலிக்கிறது , பயிர்த்தொழிலின் பாழாய்ப் போன நிலைமை பற்றி.

    செந்தமிழில் விளைந்த சொற்கள் செழுமை பெறட்டும்.உழவுக்கும் உழவனுக்கும் வந்தனை செய்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *