Nilgiri Wood Pigeon Name Telling Birds Series Article by V Kirubhanandhini. Book Day Website is Branch of Bharathi Puthakayalam.காலநிலை மாற்றத்தால் அழிந்துபோகும் பறவைகள் 

“ரெட் அலெர்ட்” – இயற்கை சீற்றத்தினால் ஏற்படும் புயல், மழை, வெள்ளம் போன்ற  பேரிடர் காலங்களில் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் செய்திகளில் எச்சரிக்கை செய்தியாக அறிவித்திருப்பதைக் கேட்டிருப்போம். சமீபத்தில் கொரானா நோய் தோற்று ஏற்பட்ட பொழுதும் பரவலாகவே கேட்டோம். ஆனால் கடந்த வாரம் உலக மொத்தமும் உள்ள “மனிதர்களுக்கும் ரெட் அலெர்ட்” என்று பருவநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழு (IPCC). எச்சரிக்கை விடுத்துள்ளது

ஆங்காங்கே ஏதோ ஒரு பேரிடரினால்  மனிதனின் பல உயிர்கள் பாதிப்புக்குள்ளாயின. ஆனால் தற்போது அனைத்து பேரிடர்களும் ஒரே நேரத்தில் நிகழப் போகிறது. வெப்ப அலைகள், அதிக மழை மற்றும் வறட்சி என மிகப் பரவலாகவும் தீவிரமாகவும் மாறும் என்று  ஐபிசிசியின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது. இதன் பாதிப்பை நீங்களே கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.

காரணம் என்ன..?

இத்தனை பேரிடர் நிகழ்வுக்கும் பூமியில் வெப்பம் அதிகரிப்பது தான் காரணம். சென்ற நூற்றாண்டில் புவியின் மேற்பரப்பு வெப்பநிலை 0.74 °C (1.33 °F) கூடியிருக்கிறது. இருபத்தொன்றாம் நூற்றாண்டில் புவி மேற்பரப்பு வெப்பநிலை மேலும் 1.1 தொடக்கம் 6.4 °C வரை (2.0 – 11.5 °F) கூடலாம் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. கூடிவரும் புவி வெப்பநிலையால் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டத்தை உயரச் செய்து  வளமிக்க நிலங்களையும், உயிரினங்களின் வாழ்வையும் தலைகீழாக மாற்றப்போகிறது.

அதில் தமிழ் நாட்டில் பல்லுயிர் வளம் மிக்க  மேற்குத் தொடர்ச்சி மலையையும் விட்டு வைக்கப் போவதில்லை என்கிறார்கள். மேற்குத்தொடர்ச்சிமலையில் சுமார் 5000 வகை பூக்கும் தாவரங்களும், 139 வகை பாலூட்டிகளும், 508 வகை பறவைகளும், 176 வகை இருவாழ்விகளும் உள்ளன. ஆனால் தற்போது இந்த எண்ணிக்கையிலிருந்து பல உயிரினங்கள் அழிந்துவிட்டன, இப்போதும் அழிந்து கொண்டே தான் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக நீலகிரி காட்டுப்புறாவைப் பார்ப்போம்.

ஏற்கானவே 13 வகை புறாக்கள் அழிந்தேவிட்டன,  சில வகை புறாக்கள் அருகி வரும் நிலையில் உள்ளன.  அதில் ஒன்று தான் நீலகிரி காட்டுப் புறா.

இதன் ஆங்கிலப்பெயர் : Nilgiri wood – Pigeon

அறிவியல் பெயர் : கொலம்பா எல்பிஸ்டோனி  (Columba elphinstonii)  (Sykes, 1833)

 Nilgiri Wood Pigeon Name Telling Birds Series Article by V Kirubhanandhini. Book Day Website is Branch of Bharathi Puthakayalam.
நீலகிரி காட்டுப் புறா – Nilgiri Wood Pigeon (படம்-https://ebird.org/species/niwpig1)

நீலகிரி காட்டுப் புறா (Nilgiri Wood Pigeon) என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் ஒருவகை புறா ஆகும். குறிப்பாக நீலகிரி மலையில் காணப்படுவதால் இதற்கு இப்படியொரு பெயர் வந்திருக்கலாம். இது பசுமை மாறாக் காடுகளில் உள்ள பழங்களைத் தேடி உண்டு வாழ்கிறது. அவ்வப்போது தரையில் உள்ள உதிர்ந்த பழங்களைப் பொறுக்கவும் சிறு நத்தைகளைப் பிடித்துத் தின்னவும் தரையில் இறங்குகிறது.

நாவல், நெல்லி, இடலை எண்ணெய் (Olive oil), அத்தி போன்ற மொத்தம் 19 வகையான தாவர இனங்களிலிருந்து பழங்கள், பூக்கள் இலை மொட்டுகள் ஆகியவற்றை உணவாக உட்கொள்கின்றன.

உணவுச்சங்கிலி

கால நிலை மாற்றத்தால் பூக்கும் தாவரங்களும், அதனைச் சார்ந்து வாழும் பூச்சிகளும், பறவைகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. ஒரு உயிரினத்தின் அழிவிற்கு உணவு தான் முக்கிய காரணம் என்று அனைவரும் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் அனைத்து உயிரினங்களையும் ஒன்றோடு ஒன்று இணைக்கும் உணவுச்சங்கிலி பற்றி முழுமையாகப் புரிந்து கொண்டிருக்கிறோமா என்று பார்த்தால்…இல்லை என்றே கூறத்தோன்றுகிறது. இப்படிப் புரிந்து கொள்ளாததின் விளைவு தான்  இன்றைக்கு நாம் இறுதிக் கட்டத்தை  நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.

தடைபடும் இனப்பெருக்கம்

Nilgiri Wood Pigeon Name Telling Birds Series Article by V Kirubhanandhini. Book Day Website is Branch of Bharathi Puthakayalam.
Nilgiri Wood Pigeon – Wikipedia

புறாக்கள் கால்சியம் சத்துக்கள் அதிகரித்து முட்டை ஓட்டிற்கு வலிமை சேர்க்கவும், அதன் குஞ்சுகளுக்கான புரதச் சத்து அதிகமுள்ள பூச்சிகளை ஊட்டவும்  மழைக் காலம் தொடங்குவதற்கு முன்னரே  இனப்பெருக்கம் செய்யும். மார்ச் முதல் ஜூலை வரை பசும் சோலைகளில் உள்ள மரங்களில் குச்சிகளால் தட்டுப்போலக் கூட்டமைந்து ஒரே ஒரு முட்டையிடும். ஆனால் அதுவும் காலநிலை மாற்றத்தாலும், பூக்கும் தாவரங்களின் இயல்பு நிலை பாதிக்கப்படுவதாலும் அவைகளின் இனப்பெருக்கமும் பாதிக்கப்பட்டு வருகிறது.  அடர்ந்த மரக்கிளைகள் இல்லாததால் அதன் கூடுகள் வெளிப்படையாகத் தெரிவதாலும், உணவுச்சங்கிலியின் அடுத்த நிலையில் உள்ள வேட்டையாடும் பறவைகளுக்கும், பாம்புகளுக்கும் அது  உணவாகிறது. வருடத்தில் ஒரு முறை ஒரே ஒரு முட்டையிடும் நிலையில் உள்ள இதன் எண்ணிக்கை  தற்போது 2500-9999 மட்டுமே உள்ளன.

வெப்பத்தினால் கால நிலை மாற்றம் ஏற்பட்டு மழைக்காலங்கள் மாறுகின்றன. இதனால் விவசாயத்தில் பயிர் சுழற்சி முறையை  மக்கள் மாற்றி வருகின்றனர். ரப்பர், எண்ணெய் பனை, தேநீர் மற்றும் காபி போன்ற பணப்பயிர்  செய்யப்படுவதால் இந்த நிலத்துக்கான மரங்கள் அழிக்கப்படுகின்றன.  மேற்குத் தொடர்ச்சியான மகாராஷ்டிரா, கோவா  மற்றும் கர்நாடக வனப்பகுதிகளில் சுரங்கத்தொழில் நடைபெறுவதால் அதிகளவில் மரங்கள் வெட்டப்படுகின்றன. அதனால் இப்பறவையின் வாழ்விடங்கள் அழிந்து, உணவுக்கும், இனப் பெருக்கத்திற்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பல ஆராய்ச்சி கட்டுரைகளில் 1961 முதல் 1997  வரை 67%  மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மரங்களை அழித்து விட்டோம் என்றும், இது நீலகிரி காட்டுப் புறாவிற்கு மிகப்பெரிய சிக்கல் எனவும்  ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கள ஆய்வுகள்

பருவநிலை மாற்றத்தால் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய 2010ல்   மாதவ் காட்கில் குழுவும், அதனைத் தொடர்ந்து  2012 ல் கஸ்தூரிரங்கன் குழுவும் அமைக்கப்பட்டு. இதன் மூலம் சில கட்டுப்பாடுகள் நடைமுறைப் படுத்தப்பட்டன. இருப்பினும் மேற்கூறிய பிரச்சனைகள் தொடர்வதால் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு அதிகரித்து பூமியின் வெப்பநிலையும் தற்போது அதிகரிக்கிறது. இன்று வரை மனிதர்களால் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மாறாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

நாமே நம் சொந்த நிலைகளைப் பற்றி சிறிதளவு கூட கண்டுகொள்ளாததின் விளைவு இன்று இந்த நிலைமையில் வந்து நிற்கிறோம். ஆனால் ஸ்காட்டிஷ் அரசியல்வாதி மற்றும் வரலாற்று ஆசிரியருமான  அவர்கள் ஹான் மவுண்ட்ஸ்டார்ட் எல்பின்ஸ்டோன் (6 அக்டோபர் 1779 – 20 நவம்பர் 1859) முழுவதுமாக தெரிந்து கொண்டு இந்திய வரலாற்றைப் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.  அவர் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்துடன் தொடர்புடையவர். பின்னர் அவர் பம்பாயின் (இப்போது மும்பை) ஆளுநரானார், அங்கு அவர் இந்திய மக்களுக்காகப் பல கல்வி நிறுவனங்களைத் திறந்தார்.

Nilgiri Wood Pigeon Name Telling Birds Series Article by V Kirubhanandhini. Book Day Website is Branch of Bharathi Puthakayalam.
Mountstuart Elphinstone (படம் – https://en.wikipedia.org/wiki/Mountstuart_Elphinstone)

வங்காளச் சிவில் அதிகார வர்க்கத்தில் 1795 இல்  வேலையை ஏற்றுப் பிறகு, 1804 இல் நாகபுரியிலும், 1811 இல் பூனாவிலும் சுதானிகராகா நியமிக்கப்பட்டார். மும்பையின் 1819 முதல் 1827 வரை  துணைநிலை ஆளுநர் (lieutenant governer) பதவியில் திறம்பட செயலாற்றினார். அக்காலத்தில் இவர் எல்பின்சுடன் சட்டத்தை (Elphinstone code) வகுத்தார். இவர் இந்தியாவில் அரசாங்கக் கல்வி வளர்ச்சியை நன்கு திட்டமிட்டு வளர்த்தார். இந்தியர் இவரைப் பாராட்டி, இவர் பெயரால்  ஒரு கல்லூரியை நிறுவினர். ஐரோப்பியர் இவரது உருவச்சிலையை மும்பையில் அமைத்தனர். 1829 இல் இவர் இங்கிலாந்து திரும்பினர். இவர் எழுதிய இந்திய வரலாறு சிறந்த ஆவண நூல்களாகக் கருதப்படுகிறது. இவர் பெயரால் ஆஸ்திரேலியா நாட்டில் ஒரு நகரம் உருவாக்கப்பட்டது. இலண்டனில் புனிதர் பவுல் தேவாலயத்தில் (St Paul’s Cathedral) ஒரு சிலை இவருக்கு வைத்துள்ளனர். இவருடைய வரலாற்று குறிப்புகளில் சில எறிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆதலால்  இப்பறவைக்கும் மரியாதை நிமித்தமாக Elphinstone என்று இவருடைய பெயரை வைத்துள்ளனர்.

Nilgiri Wood Pigeon Name Telling Birds Series Article by V Kirubhanandhini. Book Day Website is Branch of Bharathi Puthakayalam.மேலும் கால நிலை மாற்றம் பற்றி 15 வயதே ஆன க்ரெட்டா துன்பெர்க் என்ற ஸ்வீடன் நாட்டு பள்ளி மாணவி 2018 ஆம் ஆண்டு  ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாட்டில் பேசினார். அதற்காக இன்று வரை அவரை விமர்சித்து வருகின்றோம்.

இந்த கொடுமையான சூழலில் தான் மனிதர்களின் இயற்கைக்கு மாறான செயல்பாடுகளினால் 2010 ல் 0.8 டிகிரி செல்ஸியஸிலிருந்து  2019 ல்  1.3°C ஆகா அதிகரித்துள்ளது. 2021 முதல் 2041 வரை 1.5°C ஆகா உயரும் என தற்போதைய ஆறாவது அறிக்கையில் எச்சரிக்கின்றனர்.

இந்த எச்சரிக்கையை திடீரென்று சொல்லி விடவில்லை, பல வருடங்களாக அறிவுறுத்தி வந்தனர் ஆராய்ச்சியாளர்கள்.  இந்த புறாவை போன்றே அழிந்த, அழியும் நிலையில் உள்ள பறவைகளும், வலசைப் பறவைகளும் நமக்கு பிற்காலத்தில் வரும் மிகப்பெரிய ஆபத்துகளை முன் கூட்டியே அறிகுறிகளாக தெரியப்படுத்தின. நாம் தான் அதை உணர்ந்து செவிசாய்க்க மறுத்து விட்டோம்.  தற்போது மொத்த உலகமும் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாகவே ஆய்வாளர்கள் மீண்டும் எச்சரித்துள்ளனர். இனிமேலாவது புரிந்து செயல்படுவோமா?

இல்லை விரைந்து நம்மை இழப்போமா..?

காலநிலை மாற்றத்தால் கண்ணுக்குத் தெரியாத கோடிக்கணக்கான பல்லுயிர் வளமிக்க நுண்ணுயிர்களையும் இழந்து வருகிறோம்.

இயற்கையோடு இணைந்துவாழ போர்க்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசர அவசியம் என்பதை அனைவரும் உணர்ந்து நடப்பதே இதற்கு தீர்வாக அமையலாம்.

தரவுகள்

  1. Somasundaram, S., & Vijayan, L. (2010). Foraging ecology of the globally threatened Nilgiri Wood Pigeon (Columba elphinstonii) in the Western Ghats, India. Chin. Birds, 1, 9-21.
  2. CG, K., MN, R., & BN, S. (2016). Bird Diversity Across Different Vegetation Types in Kodagu, Central Western Ghats, India.

  3. Pramanik, M., Paudel, U., Mondal, B., Chakraborti, S., & Deb, P. (2018). Predicting climate change impacts on the distribution of the threatened Garcinia indica in the Western Ghats, India. Climate Risk Management, 19, 94-105.

  4. https://en.wikipedia.org/wiki/Mountstuart_Elphinstone

 

  • IPCC – The Intergovernmental Panel on Climate Change
  • பசுமைக்குடில் விளைவு – வளிமண்டலத்தில் உள்ள வெப்பக் கதிர் வீச்சைக் உறிஞ்சி, பின்வெளியேற்றும் போது ஏற்படும் விளைவே பைங்குடில் விளைவு.
  • பைங்குடில் வளிமங்கள்- நீராவி, காபனீரொக்சைட்டு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன், மற்றும் க்ளோரோ ஃப்ளூரோ கார்பன்கள் ஆகியவையாகும்.
  • ஓசோன் படலம் (Ozone layer) – ஒப்பீட்டளவில் உயர் செறிவுகளையுடைய ஓசோனைக் (O3) கொண்ட பூமியின் வளிமண்டலத்தில் உள்ள ஒரு படலம் ஆகும். இது சூரியனில் இருந்து வரும்உயிரியல் ரீதியாகத் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் (UV) கதிர்களை உட்கிரகிக்கிறது.

முனைவர். வெ. கிருபாநந்தினி
பறவைகள் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: [email protected]

முந்தைய தொடரை வாசிக்க: 

பெயர் சொல்லும் பறவைகள் – முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 2: ரிச்சார்டு நெட்டைக்காலி – முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 3: பச்சைக்கிளி – முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 4 (Green Cheeked Parakeet) – முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 5 – லோட்டன் தேன்சிட்டு (Loten’s Sunbird) | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 6 – செட்டிகதிர்க்குருவி | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 7 – Yellow-eyed Pigeon | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 8 – Jerdon’s Nghtjar (பக்கி) | முனைவர். வெ. கிருபாநந்தினி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *