இரா.பூபாலன் எழுதிய நின் நெஞ்சு நேர்பவள் - நூல் அறிமுகம் | Era.Boopalan Kavithai book Nin nenju nerpaval - book review - https://bookday.in/

நின் நெஞ்சு நேர்பவள் – நூல் அறிமுகம்

நின் நெஞ்சு நேர்பவள் – நூல் அறிமுகம்

 

நூலின் தகவல்கள் : 

நூல்: நின் நெஞ்சு நேர்பவள்
ஆசிரியர்: இரா.பூபாலன்
வெளியீடு: பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
பக்கங்கள்:72
விலை: ரூ 120

அறத்தாய்ச்சிகளின் கதிர்மணிகள்

தாயின் ஈரமான பசப்படிந்த அன்பின் சொற்கள் தொப்புள்கொடியாய் தொடர்கின்றன. வலிமைமிக்க பெண்ணின் மடியில் தாலாட்டு பாட்டுக்களைக் கேட்டு ரசனையோடு உறங்கும் பிஞ்சுக் குழந்தைகள் போன்று வாசகனை கவிதைகள் லயிக்க வைக்கின்றன. சந்தைகளில் கூவிக்கூவி விற்று விட்டு கூடைகளில் பொட்டலங்கள் பொட்டலங்களாக கட்டி வரும் தாய்மார்களின் வெள்ளந்தியான பாசத்தின் ஆதி எங்கே பிறந்ததென்று சிந்திக்க வைக்கின்றன. புளி வற்றினால் கரைத்துக் கொள்ளளலாம் புளியம்பிஞ்சு வற்றினால் எப்படி கரைக்கமுடியுமென்று தன் பிள்ளைகளின் பசியமர்த்தும் ஆதித்தாய்ச்சிகளின் மனம் இறைவனை விட மேலானது. கவிஞர் இரா பூபாலனின் அம்மாவைப் போலவே ஒவ்வொரு பெண்ணும் வலிமைமிக்க அறத்தாய்ச்சிகள்.

செந்துளியின் சிறுதுளி
அப்பாவின் பழைய லுங்கிகளை சதுர சதுரமாக வெட்டி
குளியலறை எரவானத்தில் பத்திரப்படுத்தியிருப்பாள் அம்மா பால்யத்தில் நான் அவற்றைக் கேள்விகளால்‌ துளைத்துப்பார்த்துவிட்டேன்
உனக்கு அது தேவை இல்லாததென்ற ஒரு பதிலில் கடந்துவிடும்
அம்மாவுக்கு ஐந்து நாட்கள்
விடுமுறைக் கணக்கில்லை
சோர்ந்து படுத்து ஒரு நாளும் பார்த்ததில்லை.
துணிகளில் படாமல் போன
செந்துளியின் சிறுதுளி தான் நானெனப் பின்னாளில் அறிந்துகொண்ட போது அம்மாவின் உடல்
வன தேவதையின் உடலெனப் பச்சையம் பூசியிருக்கிறது.

தன் அம்மாவை கேள்விகளால் துளைத்தெடுத்ததோடு
பெண்களின் மாதவிலக்கைப் பற்றி மானுடச் சமூகத்திற்கு தன் எழுத்துக்களின் மூலம் புலப்படுத்தியிருக்கிறார்.

தாய்மடி

அம்மாக்களின் புடவைகளைக் கட்டி வருகிற தோழிகள் அவ்வளவு அழகாயிருக்கிறார்கள். கொஞ்சம் கூடுதல் அன்பாகவும் நடந்து கொள்கிறார்கள். அந்த நாளெல்லாம் அம்மாவின் சமையல் அம்மாவின் மடி எனப் பேசித் தீர்க்கிறார்கள். அம்மாவின் வயதொத்த யாரோ ஒருத்திக்கும் இரங்குகிறார்கள். அவர்களின் சாலையெங்கும் நிறைந்திருக்கிறார்கள் அம்மாக்கள் அன்றைக்கு. தங்கள் தட்டிலிருந்து ஒரு கவளம் உணவையாவது யாருக்காவது ஊட்டிவிடுகிறார்கள். முந்தானையை சரி செய்யும் போதெல்லாம் அம்மாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு குழந்தையாகிறார்கள். அந்த இரவில் வேறு உடையை மாற்றாமல் அம்மாவை அணைத்துக்கொண்டே உறங்கியும் விடுகிறார்கள். அம்மாவின் முழுச்சித்திரத்தையே வரைந்து காட்டியிருக்கிறார் கவிஞர்.

தாயின் மடி என்பது பிரபஞ்சத்தைத் தாங்கி நிற்கும் கொடி வேர்கள். களக்கொத்துவைத் தூக்கிக் கொண்டு காடுகரைகளில் வேலை பார்த்து விட்டு வீடு திரும்பும் அம்மாக்களின் உடல்கள் முழுவதும் உப்புக்கள் படிந்திருக்கும்.தன் பிஞ்சுக் குழந்தைகள் அம்மாவைக் கண்டதும் ஓடி வந்து கட்டியணைத்து அம்மாவின் மடியில் கிடத்தியமரும் போது தெறிக்கும் பூவாசம் இவ்வுலகில் இல்லை என்று சொல்லலாம்.

மிச்சத்தை விரும்புபவள்

எந்த ஒன்றிலும்
மிச்சமாவதை
விரும்பத் துவங்குவாள்
தனக்கென எதுவும்
தயாரிக்காதவள்.

சாணிக்கூடை தூக்கிச் சுமந்தும் சம்சாரி வேலை செய்தும் குடும்பத்தைக் காப்பாற்றும் குடும்பச்சிகள் தனக்கென எதுவும் தயாரிக்காதவர்கள். பிள்ளைகள் குடித்துவிட்டு வைத்த கிண்ணத்தில் சோளக்கஞ்சியின் மிச்சத்தை விரும்பும் எனது தண்டட்டிப் பாட்டியின் பால்ய காலத்து நினைவுகளைத் தூண்டுகிறது.

தனியளின் நூறு கண்கள்

பதற்றத்தில் தீக்குச்சிகள்
தலை தொங்கிச் சரிகின்றன
மருள விழிக்கும் கண்களோடு யாரையோ வேண்டியபடி
உரசிய ஒரு தீக்குச்சியில் உயிர்பிடித்துக்கொண்ட ஒளி
வீட்டை வெளிச்சமாக்கி விடுகிறது இரண்டு ஜோடிக் கண்களை
உடலினுள் இழுத்துக் கொண்டவள்
புறக் கண்களை நிம்மதியாய் மூடுகிறாள்.

சிறகில்லாத மின்மினியாய் நீண்ட நெடிய இரவில் ஊர் சுற்றி வரும் ஒற்றை நிலா சிலசமயங்களில் கூரை வீடுகளின் கதவுகளைத் தட்டாமலே செல்கின்றன. அடுப்படியில் கொடி அடுப்பினருகே கட்டற்ற வெளியில் கங்குபிடிக்க காத்திருக்கும் சுள்ளிகள் நிரம்பிக் கிடக்கும் ஓரத்தில் ,ஒரு குச்சி உரசி வெளிச்சமாக்கி ,தனது துணைக்கு வெளிச்சத்தை காவல்காக்க வைத்து உறங்கும் கைம்பெண்களின் ஓர் இரவை நினைத்துப் பாரத்து ஒப்பிடுகையில் கவிஞரின் இந்தக் கவிதை பொருந்துகிறது.

கவிஞர் இரா.பூபாலன் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுக்களும்

 

 நூல் அறிமுகம் எழுதியவர் : 

அய்யனார் ஈடாடி

 



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *