நினைவில் ஒளிரும் ஜிமிக்கிக் கம்மல் (Ninaivil Olirum Jimikki Kammal) – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
புத்தகம்: நினைவில் ஒளிரும் ஜிமிக்கிக் கம்மல்
ஆசிரியர்: சீனு ராமசாமி
பிரிவு: கவிதைத் தொகுப்பு
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
சிறப்பான வடிவமைப்பு. ஓவியர் ரவி பேலட்டின் சிறப்பான அட்டைப் பட ஓவியம். கவிஞர் லஷ்மி மணிவண்ணன் அவர்களின் ஆழமான அணிந்துரை. கவிஞர் இயக்குநர் குட்டி ரேவதி அவர்களின் சிறப்பான அணிந்துரை.
இது கவிஞரின் ஆறாவது கவிதைத் தொகுப்பு. மொத்தம் 136 கவிதைகள். கவிதைகள், குறுங்கவிதைகள் மற்றும் சிறு கூற்றுக் கவிதைகள் அடங்கிய தொகுப்பு. கவிதைத் தொகுப்பின் தலைப்பே கவிதைகள் பற்றிச் சொல்லி விடுகிறது.பால்யகால நினைவுகளும், வாழ்ந்த வாழ்வும் வந்து போகின்றன.
அழகான படிமங்கள் தொகுப்பெங்கும் காணக்கிடைக்கிறது. கூடல்நகர் கவிஞரின் பெரும்பாலான கவிதைகளில் வருகிறது. சூரிய மகள் கவிதையில்
கிழவன் காறித்துப்பினாலும், சூரியன் தனது மகளைக்
கைவிடுவதில்லை:
ஓடுகாலி என்று உமிழ்ந்தான்
ஊர்க் கிழவன்
…
கிழக்குச் சூரியன் தன் மகளை வாழ்த்தும்
விதமாக கருப்பண்ணசாமியின்
வீச்சரிவாள் மீது ஒளி வீசிக்கொண்டிருந்தது
உரியவர் அறியார் கவிதை வாழ்க்கையின் தத்துவம்:
கைவிட்ட
பலூன் மேலே போவதைத் தவிர
வழியில்லை.
அது பலூனுக்குத்
தெரியாது
கையில் இருக்கும் வரை.
அவள் மகன் கவிதை தாய்மையின் நெகிழ்வு:
திடுக்கிட்டு
தொங்கிய தலையை
தன் நிலை மறந்திருந்த தாய் நினைவு மீண்டு
ஓடி வந்து தாங்கித் தூக்கி நிறுத்தினாள்
மூத்தவன் கவிதை பாரம் சுமந்த வலி:
நான் சொல்வதைச்
சிறிது நேரம்
நீங்கள்
தாங்கிப் பிடிக்க
இயலுமா?
…
குடும்பத்தில்
மூத்தவன் என்பதால்
பின்னால் பிறந்த சிறு பிள்ளைகளை
வழியெல்லாம் சுமந்த இடுப்பு
இப்பவும் வலிக்கிறது
பங்குப் பாகம் கவிதை ஒரு பெரியாம்பளையின் வலி:
அறுத்த தையல் தழும்பின்
வயிற்றைத் தடவும்போது
தென்படுகிறது
தகப்பனுக்கு வரப்பின் கோடு
தொகுப்பிலிருக்கும் மிகச் சிறந்த கவிதைகளைப் பட்டியலிட்டால், பசி கவிதைக்கு
முதலிடம். இன்றும் யாரேனும் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். மனசு பதை
பதைக்கிறது:
என் பசியைக் கொண்டு வந்தேன்
ஒரு ரயிலில் அந்த நாளை
மறக்க முடியாது
ஒவ்வொரு ரயிலிலும்
யாரோ ஒருவரின் பசி வருகிறது
தொகுப்பின் மற்றுமொரு சிறந்த கவிதை அலமாரி. எல்லோர் வீட்டிலும்
துக்கத்திற்கென்று நிச்சயமாக ஒரு அலமாரி இருக்கும்.
துக்கத்தின் பயிர் செழிப்புடன்
வளர்கிறது
….
துக்கம் நீர் நிரம்பிய மண்பாண்டம்
அது எப்பொழுதும் உடையவே
காத்திருக்கிறது.
அசோக மரத்தின் தனிமை காதலின் தனிமையைப் பேசுகிறது:
இந்த அசோக மரத்தின்
கீழ் நிற்கிறேன்
கடைசியாக வரும் பேருந்திலும்
நீ வரப்போவதில்லை
என்பதை அறிந்தும்.
குறுங்கவிதைகளில் பல கவிதைகள் சிறப்பாக வந்துள்ளது.
ஆசி என்னும் குறுங்கவிதை:
யானை ஆசிர்வதிக்கத்
துதிக்கை
யானையை ஆசிர்வதிக்கக்
கோபுரத்தின் நிழல்.
பிள்ளை என்ற குறுங்கவிதையில் அம்மாவின் பாசம்,அது அஃறிணையாக இருந்தாலும்:
கிணற்றில் விழுந்தக்
கன்றைத்
தூக்கச் சொல்லி
அம்மாக்களை
கூப்பிடுகிறது பசு
திரு விளக்கு கவிதை தன்னம்பிக்கை:
விளக்கெனில்
என்றேனும்
ஏற்றப்படும்.
திகைக்க
ஒன்றுமில்லை எதையும்
அணைக்க முடியாது.
தொகுப்பின் மற்றுமொரு சிறந்த கவிதை அணிலாட்டம். பல பரிமாணங்களைத் தரும்
கவிதை. இக்கணம் மட்டுமே உண்மை. பழைய கிளையிலேயே எப்போதும் உட்கார்ந்து
இருக்க முடியாது.
ஒரு கிளையில் இருந்து
மறு கிளைக்குத் தாவும் அணில்
விட்டுவிட்டு வந்து கிளை ஆடுவதை
ஒரு கணம் பார்க்கிறது
ஆடப்போகும் இக்கிளையை
இறுகப் பற்றி மறு கிளைக்குத் தாவுகிறது.
வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது. எனது தாத்தாவை ஞாபகப் படுத்தியது. தம்பி
முதுகலைப் படிப்பிற்காக உயிரை வைத்திருந்தார். நாங்கள் ஒரு நல்ல நிலையில் இருக்கும்
போது, யாருமே இல்லை. இதுதான் வாழ்க்கை:
பசியில் இருந்த
தாத்தா
நான்
பொங்கிய உணவு
தட்டுக்கு வரும் நேரத்தில்
எங்கோ
போய் விட்டார் சாமி.
மற்றொரு அழகான குறுங் கவிதை. பல பரிமாணங்களைத் தரும் கவிதை:
கடல் நிறைய
மீன்கள் இருந்தும்
ஒரு மீனை மட்டும்
எடுத்துக்கொண்டு
பறந்து போய்விட்டது பறவை.
இறுதியாக, சிறப்பான நெகிழ்வான ஒரு குறுங்கவிதை:
குழம்பு வைக்கக் காசில்லாத
நாட்களில்
உண்ண முகம்சுழித்த என்னிடம்
நாமும் நல்லாயிருப்போம்டா
என்ற சொற்களை சோற்றில் ஊற்றி
ஊட்டி வளர்த்தாள்
என் தாய்.
இப்படி எழுதும் ஒரு கவிஞனிடம், நல்ல படைப்புகள் வராமல் எப்படி இருக்கும்?
சிறப்பான வாசிப்பு அனுபவம்.
எழுதியவர் :
கண்ணன் விஸ்வகாந்தி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.