சீனு ராமசாமி எழுதிய நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல் - நூல் அறிமுகம் | Seenu Ramasamy - Ninaivil Olirum Jimikki Kammal - https://bookday.in/

நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல் – நூல் அறிமுகம்

நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல் – நூல் அறிமுகம்

அஞ்சினான் புகலிடம்

ஆடி பொறந்து ஆவணி வரட்டும்.
எம்புள்ள டாப்புல வந்துடுவான்!’
இது களவாணி படத்தில் அம்மா சரண்யா பேசும் வசனம். பிறகு,
இது ஒரு சொலவடையாகவே மாறிப்போனது.

அப்படியென்றால், ஆடி அவ்வளவு மோசமான மாதமா? இல்லை.
அது விதைக் காலம். உழுகுடிகளின் கைரேகைகளில் நீர்த்தாரைகள் ஓடிய பருவம். விதைகளை, ஆவணி இலைகளாக மாற்றியிருந்தது. மண்ணுக்கு மரகதப் பட்டாடையை போர்த்தியது அவணி.

ஆவணி ஒன்றாம் தேதி. என் மேசையில் ஒரு அவரைக் கொடி ஏறி படர்ந்திருந்தது. எங்கள் அம்மா ஊன்றிய விதைபோல அது அவ்வளவு செழித்திருந்தது. அதன் வேர்களோ என் இளம்பிராயத்து ஆடியில் இருந்தது.
அதன் பலன் நிகழ்கால ஆவணியில் கொத்து கொத்தாக வளத்தை வாரித் தந்திருந்தது.

ஆம். இந்த ஆவணி ஒன்றாம் தேதி அப்படி ஒரு பச்சையம் நிறைந்த கவிதைப் புத்தகத்தை வாசிக்க முடிந்தது.

‘காலையில் புத்தக மை வாசனை
எனக்கு மிகவும் பிடிக்கும்.’ என்கிறார்
உம்பர்டோ ஈக்கோ. இதைவிடவும் முன்னதாக ‘ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்’ எனகிற வாசகத்தை சொன்னவர்கள் தமிழில் இருந்தார்கள். நிலவுடமைச் சமூகம் வீழத் தொடங்கிய காலம், ஆயுதபூசையில் கலப்பைகளோடும் மண்வெட்டிகளோடும் உழுகுடிகள் தம் பிள்ளைகளின் புத்தகங்களையும் பூசையறையில் வைத்தார்கள்.

இதன் காரணமாகத்தான், உலகநாதரைப் பேசிய தந்தைக்குப் பிறந்த மகனால் உம்பர்டோ ஈக்கோவைப் பேச முடிகிறது.

சீனு ராமசாயின் ‘நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்’ என் சிறுவயதுத் தோட்டத்தில் அம்மா போட்டிருந்த அவரைப் பந்தர்போலவே காட்சி தருகிறது. கொப்பும் குலையுமாக,
பூவும் காயுமாக நன்மைகள் செழித்த கவிதை நூல்.

‘ஒரு காலத்தில் சுவர்கள் இருந்த இடத்தில் ஜன்னல்களை உருவாக்குவது எனது வேலை.’ மிஷல் ஃபூக்கோ சொன்னபடி ஆவணியின் காலைப் பொழுதொன்றில் என் சுவரில் ஒரு சன்னலை சீனு ராமசாமி உருவாக்கினார்.

சமீபகாலமாக அவரது நிலம் சிரபுஞ்சியாக இருக்கிறது.
மௌனா லோவா (உலகின் பெரிய எரிமலை) போல் அவர் இதயம் கொதிக்கிறது. அண்டார்டிகாபோல் அவரது சொற்களில் குளிர் உறைந்திருக்கின்றன .

எனது நிகழ்வொன்றின் அழைப்பிதழில் நண்பர்கள் அவரை திரைப்பட இயக்குநர் என அடையாளப்படுத்தி இருந்தார்கள். என்னைக் கவிஞர் என குறிப்பிடுங்கள் என்றார் சீனு ராமசாமி.

தமிழ் மரபில் கவிஞர்போல உயர்ந்த இடம் வேறொன்றில்லை.
கவி வாக்கு பலிக்குமென தமிழ் மன்னர்கள் நினைத்தனர். இது ஒரு வகையான myth . என்றபோதும், தமிழில் அறம் பாடுதல் என்றொரு வகைமை இருந்தது. பெண் கொலை புரிந்த நன்னனை புலவர்கள் புறக்கணித்தால் தீறாப் பழிக்கு ஆளானான் என புறநானூறு பாடுகிறது.

அறம் பாடுதல் சமண நம்பிக்கை. சமணர்கள், அபயதானம் அல்லது அஞ்சினான் புகலிடம் (இது குறித்து தனியே எழுத வேண்டும்) என்றொரு இடத்தைப் பேணினார்கள்.
பொருளாதார ரீதியில் நலிவடைந்தோர், பகை நாட்டால் பாதிக்கப்பட்டோர் மட்டுமல்ல, பிறவியை அறுக்க விரும்பியோரும் இங்கு புகலடைந்தனர்.

இதன் எல்லைக்குள் புகலடைந்தவர்களை மன்னனும் கொல்லக் கூடாது. அப்படி கொன்றால் சமணக் கவிகள்கூடி மன்னன் மீது அறம்பாடினார்கள்.

சீனு ராமசாமியின் இந்தத் தொகுப்பு ஓர் அஞ்சினான் புகலிடம்போல் இருக்கிறது. இதற்குள் இருந்த காலை, குஞ்சுகள் தாய்க்கோழியிடம் அனுபவிக்கும் கதகதப்பை உணரமுடிந்தது.

தென்தமிழகத்தின் சிறிய ஈரத்திலிருந்து இந்தப் பிள்ளை ஒரு கற்றாழைச் செடிபோல புதைபுதையாக வளர்கிறதே!
சீனு ராமசாமியை எண்ணும்போது பெருமிதம் மேலோங்குகிறது.

‘ என் பசியைக் கொண்டுவந்தேன்
ஒரு ரயிலில் அந்த நாளை
மறக்க முடியாது’ என்று எழுதுகிறார்.
இக் கவிதையின் மீது என் கண்ணீர்த் துளி விழுந்து, அதில் ஒரு மகுடத்தைப்போல பொருந்திப்போனது.

‘ஒவ்வொரு ரயிலிலும்
யாரோ ஒருவரின் பசி வருகிறது’ என்கிறார். ஓடைகளும், நதிகளும், கண்மாய்களும், ஊற்றுகளும் நிரம்பியதொரு நிலத்தில் ஒவ்வொரு ரயிலிலும் ஒருவரின் பசி ஏன் வருகிறது?

இப்புண்ணிய தேசத்தில்
ஒரு நாளைக்கு 10 மில்லியன் தோசை சுடுகிறார்கள். 3 பில்லியன் பரோட்டா சுடுகிறார்கள். 500 டன் பிரியாணி கிண்டுகிறார்கள். ஒவ்வொரு முக்கிலும் ஒரு மாரியாத்தாள் அருள்புரிகிறாள். ஆனாலும் பசியோடு ரயிலேறுபவர்கள் இருக்கிறார்கள்.

சீனு ராமசாயின் இதயம் ஓர் அஞ்சினான் புகலிடம். அங்கிருந்து கைவிடப்பட்டோருக்காக ஒரு குரல் அறம்பாடுகிறது.

இல்லாமை என்பது என்ன தெரியுமா? அது காற்றை நெருப்பாகக் காதலிப்பது என்கிறார் ரோலண்ட் பார்த்.

அது சிறிய சுடரை அணைக்கும், பெரியதை விசிறி நிலமெங்கும் பெருக்கும். இந்நிலத்தில் நெருப்பை விசிறி இரைக்கிறார் கவிஞர்.

ரோலண்ட் பார்த்துக்கு இருந்ததுபோல சீனுராமசாமிக்கும் விரல்களுக்குப் பதிலாக வார்த்தைகள், அல்லது வார்த்தைகளின் நுனியில் விரல்கள் இருக்கிறது. அவர் கவிஞர். மொழியை மற்றவர்களுக்காகத் தேய்கிறார். அவரது மொழி விடுதலை ஆசையில் இத்தொகுப்பெங்கும் நடுங்குவதை அவதானிக்க முடிகிறது.

அவரது இன்னொரு கவிதையை இங்கே பகிர ஆசைப்படுகிறேன்.

‘தீபங்களை ஏற்றியப் பிறகு
உன் சஞ்சலங்கள் சுடரொளியில்
தலை சாய்ந்து விட்டது
துன்பங்களின் மலர்கள்
பூத்த காலங்களை எண்ணி
கண்ணீர் உகுக்கும் மனமே
கிளிகளுக்கு புவனத்தில்
கனிகள் உண்டு
சிங்கங்களின் பசிக்கு
நீயில்லை பொறுப்பு.
இந்த செய்தி உன்னை சேர்ந்தால்
இவ்வேளைக்கு போதுமானது.’

இது ஓர் யுனிவர்சல் கவிதை.
பசியுள்ள மனிதருக்கு கவிதை ஓர் அயுதம் என்கிறார் பெட்ரோல்ட் பிரக்ட். சீனு ராமசாமியின் கலை உச்சமடைந்த படைப்புகளில் இக்கவிதையும் ஒன்று.
அளவற்ற ஆற்றைமை நெஞ்சில் பெருகுகிறது. கிளி/சிங்கம் ஒப்பீடு ,
உள்ளே தத்துவச் செறிவை வைத்திருக்கிறது. பசியெடுத்த சிங்கம் வேகமாக ஓடும் என்பார்கள். பசித்தவருக்கு உணவளிப்பவர்கள் துறவிகள். அவர்களுக்கு ஏன் உணவில்லை ? எனக் கேட்பவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். சீனு ராமசாமி இருவருமில்லை. பிறகு யார்? கவிஞர்.

சீனு ராமசாமி எழுதிய நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல் - நூல் அறிமுகம் | Seenu Ramasamy - Ninaivil Olirum Jimikki Kammal - https://bookday.in/

‘இவ்வுலகிற்கு ஒரு கவிஞரிடம் இருந்து
அதிக பட்சம் ஆறு ஏழு கவிதைகள் தான் தேவையாக இருக்கிறது,

 

அது எதுவென்று
அறிய முடியாது
தன் வாழ்வு முழுக்க
எழுதுகிறார் இன்னமும்
ஒரு கவிஞர் ஓய்வின்றி’

என்கிறார் சீனு ராமசாமி.

தீதும் நன்றும் பிறர்தர வாரா.
இந்த ஒரே வரிக்காக பூங்குன்றன் இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்து வாழ்கிறான்.

ஏதோ தமிழ்ச் சமூகம்தான் அவனைக் கொண்டாடுகிறது. என்பதில்லை. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ இந்த ஒற்றை வரியால் அவன் உலகின் கவனத்தை ஈர்த்தான். ஐநா அவனை முகப்பில் வைத்துக் கொண்டாடுகிறது.

குறைந்த சொற்களோடு இன்னும் உயிர்வாழ்கிற இன்னொரு தமிழ்க்கவி.
குப்பைக் கோழியார்.
அவனது பெயர்கூட அழிந்துவிட்டது.
தன் ஒரே கவிதைக்காக தமிழர்களின் ஞாபக அடுக்குகளில் 20 நூற்றாண்டுகள் கழிந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

இவ்வுலகில் மைக்ரோசாஃப்ட் அழியும். ஆண்ட்ராய்ட் தடுமாறும். சீனு ராமசாமி தருகிறாரே, இருளில் நடக்க கவிதையெனும் கைவிளக்கு.
அது எச்சூறைக்காற்றிலும் அணையாது.

சிறுகோட்டுப் பெரும் பழம் என காமத்தைச் சொல்வார்கள். உடல் என்கிற சிறிய மரம் தாங்கியிருக்கும் பெருங்கனி காமம்.
தன் கவிதைகளை சிறு கூற்றுக் கவிதைகள் என்கிறார் கவிஞர்.
பூட்டைத் திறக்க உதவுகிற
சாவிகூட சிறியதுதான்.

ஃபிரான்ஸிஸ் காஃப்கா சொல்வதுபோல, நம்முடைய அந்தரங்கக் கோட்டைக்குள், நமக்கே தெரியாமல் சில ரகசிய அறைகள் இருந்தன. சீனு ராமசாமியின் கவிதைகள் அவற்றைத் திறக்க உதவும் திறவுகோலாக இருக்கின்றன.

எழுதியவர் : 

கவிஞர் கரிகாலன்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *