சீனு ராமசாமி எழுதிய "நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்" | Indian filmmaker Seenu Ramasamy Book - Ninaivil Olirum Jimikki Kammal - https://bookday.in/

சீனு ராமசாமியின் “நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்” – நூல் அறிமுகம்

சீனு ராமசாமியின் “நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்”

நூலின் தகவல்கள் :

 

நூல் : நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்
ஆசிரியர் : சீனு ராமசாமி
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை : ரூ.160
நூலைப் பெற : thamizhbooks.com

ஒற்றையடிப்பாதை வழி நெடுஞ்சாலைக்கு வந்தவனின் நியூரான்கள் அலையடிக்கும் கடல்.

கழுவிக் கவிழ்த்திய பாத்திரங்கள்
காலத்தில் ஏராளம்
என்கிற கவிஞர்

காலம் ஏராளமானவற்றை மறதியின் புதைசேற்றில் அமிழ்த்திய பிறகும்
மேலெழுந்து வருகிற நினைவுகளைப் படிமங்களாக மிதக்க
விட்டிருக்கிற தொகுப்பு இது.

எல்லோருமே எத்தனையோ அனுபவங்களைக் கடந்துதான் வாழ்வின் பெரும்பயணம் போகிறோம் என்றாலும்

கவிஞர்கள் படைப்பாளிகள் அவற்றின் ரகசிய நீரூற்றுகளின் பேரெழுச்சியை உணர்ந்தவர்களாகப்
பிறருக்கும் உணர்த்துபவர்களாக இருக்கிறார்கள்.

காலம் கடந்தும் வாழும் புனைவெழுத்துகள் தங்கள் மாற்றுப் புனைவுகள் வழியே காலத்தைப் பந்தாடுகின்றன.

துயரங்கள் பெருகி நுரைக்கும் வாழ்விலும் மொழி அவர்களை வேறொரு உலகுக்கு அழைத்துச் செல்கிறது.
அது கற்பித வெளிதான் என்றாலும்
அற்புதவெளி.

காட்சிகள் கண்முன் எல்லோர்க்கும் தெரிந்தாலும் காணமுடிந்த கண்களில் அவை வேறுபொருள் தருகின்றன.

பெருவெள்ளம் நகரைச் சிதைக்கிறது.

எல்லாம் போகிறது
எல்லாமே ஒன்றாகிப் போகிறது
இவ்வுலகில் பசியோடு
ஒரு பிள்ளை இருப்பதைச் சொல்ல
பள்ளிக்கூட மதியஉணவுத் தட்டொன்று
மிதந்து
நகரின் மையத்தில் போகிறது

இதைப் பார்க்கவும்
இப்படிப் பார்க்கவும் வேறு விழிகள் தேவைப்படுகின்றன. இதற்குத்தான் ஒரு சமூகத்துக்கு அதன் மொழிக்குக் கவிஞர்கள் தேவைப்படுகிறார்கள்.

நன்றியின் இதயம்
வாலில் துடிக்கும் நாய்

என்கிறார் கவிஞர். உறைந்து நின்றுவிட்டேன் அதைப் படித்து.

உருகிய மெழுகுவத்தி
இருளில் கரைந்தபின்
கவ்வும் கையறு
இருள்நிலை

என்றொரு வரி வருகிறது. துல்லியம் கூடிய மொழியின் அழகு அது.

ஒவ்வொரு ரயிலிலும்
யாரோ ஒருவரின் பசி வருகிறது

அடைக்கலம் கோரும்
பார்வையுடன் தயக்கத்துடன்
ஏதோஒரு நிலையத்தின் முன்
நிற்கிறது

என்கிற காட்சிப்படிமம் வதைக்கிறது.

உணவுக்கடை காவலாளி
உச்சிவெயில் சாலையில்
கால்கடுக்க
கொடியசைத்து
நிற்கிறார்

நாம் பார்க்கும் காட்சிதான் இது.
பார்த்துக் கடக்கும் காட்சிதான் இது.
ஆனால் கடக்க முடியாத கவிஞர்

ஏன் என்று பார்க்கிறார். பார்த்ததை நம்மையும் பார்க்கச் சொல்லிக் காட்டுகிறார்.

குடும்பங்கள்
குழந்தைகள் உட்கார்ந்து சாப்பிட

இதைப் பார்க்கிற சொல்கிற கவிஞர்கள் தான் எனக்கு உவப்பானவர்கள்.அவ்வகையில் சீனு
ராமசாமி எனக்கு மிகமிக உவப்பான கவிஞர்களில் ஒருவர்.

ஆளற்ற பூங்காவின்
சிமெண்ட் இருக்கையில்
வெயில்
ஏன்
தனியாக அமர்ந்திருக்கிறது

எனக் கேட்கிற மனிதர்கள் அபூர்வமானவர்கள்.அழகானவர்கள். அருகிவருகிற ஜீவராசிகள். அதனாலேயே மிகப்பிடித்தவர்கள்.
எனக்கு …நமக்கு…கவிதை உலகுக்கு.

துயரங்களால் சூழப்பட்டிருக்கிறது வாழ்வு என்னும் ஞானம் காட்டுகிற வரிகள் வந்து சேர்ந்திருக்கிற இடமோ நம்பிக்கையின் ஒளி மலர்த்தும் மின்மினிக்காடு.

விளக்கெனில்
என்றேனும்
ஏற்றப்படும்

என்பதோடு நிற்காமல்

திகைக்க ஒன்றுமில்லை
எதையும்
அணைக்கமுடியாது

என்று தீர்க்கமாய்ச் சொல்கிற நம்பிக்கை.

இருப்பது ஒரு வாழ்வு
முடிவு இரண்டு

போர்க்களம்
எதிரியை உண்ணும் மேசை

வாள் கையில்
இருக்கிறது
உயிரோடு இரு
வீரனே

எனச் சொல்லும் நம்பிக்கை.
அது இத் தொகுப்பின் பலம்.

மனமே
கிளிகளுக்குப் புவனத்தில்
கனிகள் உண்டு

என்று மீண்டும்மீண்டும் சொல்லும்
மலைப்பிரசங்கத்தின் தொடர்ச்சி.

பால்யத்தின் நதிக்கரையில் ஊற்றெடுக்கும் படிமங்களின் ஊடே
நம்மை அழைத்துப்போகும் கவிஞர் தனது விழிகளின் வழியே காட்டும் உலகம் அடரிருளில் ஒளிகசியும் மினுக்கட்டாம் பூச்சிகளை..

கைவிடப்பட்டவர்கள் கைவிடப்பட்டவர்களோடு செம்புலப் பெயல்நீர் போலக் கலந்து காணும் பெருங்கனவை.

போலித்தனங்களும் பாசாங்குகளும் அசட்டு ஞானவிகசிப்புகளும் குவிந்துகிடக்கும் தமிழ்க்கவிதைப் பரப்பில் சற்றே நேர்மையாக வாழ்விலிருந்து பெருகும் இத்தகைய புனைவுகள்
மாறுதலாகவும் ஆறுதலாகவும் அமைந்திருக்கின்றன.

நூல் அறிமுகம் எழுதியவர் :

கவிஞர் கலிய மூர்த்தி



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *