ஒவ்வொரு இயக்கவாதிக்குள்ளும் ஒரு இலக்கியவாதி ஒளிந்து கிடக்கிறாள்/ன். ஒவ்வொரு இலக்கியவாதிக்குள்ளும் ஒரு இயக்கவாதி ஒளிந்து கிடக்கிறாள்/ன்.

அதை உணர்வதற்கான, உணர்ந்து வெளிக்கொணர்வதற்கான சாத்தியக்கூறுகள் தான், வாழ்க்கை உருட்டும் தாயக்கட்டைகளின் நிகழ்தகவிற்குள் சிக்கிக் கொள்கின்றன. வாழ்வியல் நிகழ்வுகளின் சுழல்களில் சிக்கி, தீர்க்கமாய் மேலெழுவதும், முங்கி முங்கி தலைகாட்டுவதும், மூச்சு முட்டி புதைந்து போவதுமாய் மாறுபடுகின்றன.

கரை புரண்டோடும் வெள்ளத்தில் அலைக்கழிக்கப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டாலும், எப்போதோ பற்றிக் கொண்ட மரக்கிளையினை, துடுப்பாக்கி எதிர்நீச்சல் போடும் மந்திர வித்தை, எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. கவிஞர் மலர்மகளுக்கு, அது வாய்க்கப் பெற்றிருக்கிறது.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாய் காய்ந்து போன நதியாய் நின்று விட்ட எழுத்துக்களை, புதைமணலில் இருந்து மீட்டெடுத்துள்ள அவரது ‘நினைவுகளின் சாயங்கள்’, வர்ணங்கள் குழைத்த வானவில்லாய் மிளிர்கிறது.

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் இயக்க மாநாடுகளில், கூட்டங்களில் எதிர்படும் இயக்கத் தோழர்கள், பரஸ்பரம் நலம் விசாரிப்பதற்கும் முன்னதாக, தோழர்.மலர்மகளிடம் முதலில் முன்வைக்கும் கேள்வி “தோழர்… கவிதை உண்டு தானே?”

நேர்த்தியான வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட கவிதைத் தோரணங்கள், இலக்கணச் சுத்தமான அவரது தமிழ் உச்சரிப்புடன், எங்கள் இயக்க மேடைகளை தொடர்ந்து அலங்கரித்துள்ளன. இத்தொகுப்பினை படிக்கும் போது கூட, அவரது கணீர் குரலும் எதிரொலித்துக் கொண்டே உடன் வருவது, சுவாரசியமான அனுபவம்.

கணையாழி உள்ளிட்ட இலக்கியப் பத்திரிக்கைகள், சிற்றிதழ்கள், கவியரங்கள் எனப் பயணித்த அவரது கவிதைகளின் முதல் தொகுப்பு, வங்கிப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற தினத்தில் வெளிவந்துள்ளது. பதின் பருவத்திலேயே கவிதை படைக்கத் துவங்கி இருந்தாலும், மனையுறை மகளிராய் உறைந்து, எழுத்தை தொடர வாய்ப்பற்று போனதில், 25 வயதில் வெளிவந்திருக்க வேண்டிய தொகுப்பு, தற்போது 60 வயதில் வெளிவந்துள்ளது.

பெண்ணெழுத்து எதிர்கொள்ளும் இந்த சமூகச் சிக்கல் குறித்து விவாதிப்பதற்கான வெளி, கனத்த மவுனத்தைப் போர்த்தியபடி இறுகிக் கிடக்கிறது. அதை தகர்க்க முயலும் சிறு சிறு உளிகள் கூட, தனிப்பட்ட வாழ்க்கை மீதான பெரும் ஈட்டிகளாக, சாதுர்யமாக திசை திருப்பி விடப்படுகின்றன.

Image

காலம் கைநீட்டும் திசைவெளியில் பயணித்து, தொலைந்து போகும் பெண்ணெழுத்தை, மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தினை வலியுறுத்தியபடியே துவங்குகிறது இத்தொகுப்பு. இதன் ஆகச் சிறந்த கவிதையான ‘உருள் பெருங் கவிதை’ முன்னெடுக்கும் கோரிக்கையும் இதுதான்.

கரைந்து போன கவிதைகளோடும்,

காலம் தொலைத்திட்ட அடையாளங்களோடும்…

வீதி விடங்கன் சக்கரமென

சுழலும் வாழ்க்கை அனுபவங்களை வடிக்கும் இக்கவிதை,

கணையாழியின் ஆண்டாள் விருதினை பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.

இயங்கு திறன் கொண்ட சொற்களும், இறுக்கமான கட்டுமானமுமாய் வடித்தெடுக்கப்பட்டுள்ள கவிதைகள் உரசிச் செல்லும் தளங்கள் பரந்து விரிந்தவை.

வாழ்தலின் கனங்களும், போலிகளின் நிஜங்களும், இலை உதிர் கூவலை எதிரொலிக்கும் ஒலிச்சிறகில் ஊடுருவி வந்த சொற்களும், மறு பதியனிட்ட மரத்தின் தோழமை காத்து, மானுட விடியலின் கனவுச் சுருள்களாய் விரிகின்றன.

‘எதிர்ப்படும்போதோ

எதேச்சையாய் கதவு

திறக்கப்படும் போதோ

நான் சிறிதளவு புன்னகையாவது

செலுத்தியிருக்கலாம்….’

நகரத்து அடுக்குமாடி குடியிருப்பின் முகம் தவிர்க்கும் கலாச்சாரத்தில் ஒன்ற இயலாத தவிப்பு, காளவாய்ச் சுண்ணாம்பு மறந்து வெளுத்துக் கிடக்கும் நகரத்து தெருக்களின் ஏடிஎம்களில் கந்தசாமி தாத்தாக்களும், மங்காத்தா கிழவிகளும் என்ன செய்து கொண்டிருப்பார்கள் எனும் பரிதவிப்பாய் இறுதி வரை பயணிக்கிறது.

எதார்த்தங்களின் முடிச்சுகளில் இருந்து, பீறிட்டுக் கிளம்பும் வார்த்தைகளின் பிரவாகமாய் பாய்ந்தோடுகின்றன கவிதைகள்.

பீரோவில் அடுக்கி வைத்த புடவை மடிப்புகளின் இடையிருந்தும் புறப்படுகிறது ஒரு கவிதை, அந்துருண்டைகளின் வாசம் மீறி, அம்மாவின் சுவாசம் சுமந்து.

நினைவுக் கிடங்குகளில் சேமித்துக் கிடக்கும் தானியங்களில் இருந்து நெகிழ்ச்சியுடன் வெளிப்படுகிறது அப்பாவின் ஆகச் சிறந்த அன்பின் மூச்சு.

Image

மரவட்டை தான் எத்தனை இதமாய் சுருண்டு கொள்கிறது, ஈரம் தோய்ந்த கவிதைகளின் குளுமைக்குள். ஒரு கவிதையில், அதிகாலை குளிரின் போர்வைக்குள் சோம்பலாய் தஞ்சம் புகும் அது, மற்றொன்றில் குயில் கூட்டிற்குள் அடங்கிச் சுருள, வேறொன்றில் அம்மாவின் ஆழப்பதிந்த நினைவுக் குளிராய் மெல்லத் தலைநீட்டுகிறது.

உயிர்ப் பொறையில் மறு பதியனிட்டு, நெய்து தீர வேண்டிய எதிர்காலம், ஆற்று மணலாய்ச் சொற்கள், ஆன்மாவின் சக்கை போன்ற வரிகளின் கிறக்கத்தில், சிறகடித்துப் பறக்கிறது வாசக நெஞ்சம்.

‘மனம் வண்ணத்துப் பூச்சியாய்

பறந்தாலும்

வாழ்க்கை என்னவோ

கூண்டிற்குள் கிளியாய்’.

பொதுவெளியில் இயங்கும் பெண்கள், வீட்டிற்குள் நுழைந்ததும் எதிர்கொள்ளும் உணர்வுச் சிக்கலை, ஏனோ சிக்கனமாய் முடித்துக் கொள்கிறார் கவிஞர். கூண்டில் அடைக்கப்பட்ட கிளியின் சிறகுகளோடு, சிந்தனைகளும் சேர்ந்தே வெட்டிச் சுருக்கப்படுவது போல். அடுத்தடுத்த தொகுப்புகளில் கவிஞர் இதை சமன் செய்து விட வேண்டும் என்பது நேயர் விருப்பம்.

‘மாறும் வானிலையெனத் தொடர்கிறது

நம் புரிதல்களின் பயணம்…

அதீதத் தருணங்களை எதிர்கொள்ள

அடங்குதலும் ஆர்ப்பரித்தலுமற்ற

ஆகச் சிறந்த நிலையொன்றை

என்னுள் பிரயாசையுடன்

கற்றுத் தருகின்றன

அதிகப் புரிதல்களோடு

நம் பிரியங்களின் புதிர்கள்…’

சட்டென்று மாறும் வானிலை இங்கு வேறுபட்ட முதிர்ந்த காதலோடு, பெருமழையாய் பொழிகிறது. அதன் ஆழமான புரிதலின் வெளிச்சத்தில், பிரியங்களின் புதிர்களுக்குள் நிரந்தரமாய் தொலைந்து போகாமல், தன் அடையாளத்தை மீட்டெடுத்து, உயிரோடச் செய்திருக்கிறார் கவிஞர் மலர்மகள்.

எஸ்.பிரேமலதா

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *