08-08-2024 அன்று திரைப்பட இயக்குனரும், கவிஞருமான சீனு ராமசாமி (Seenu Ramasamy) அவர்களின் கவிதைத் தொகுப்பான “நினைவில் ஒளிரும் ஜிமிக்கிக் கம்மல்”நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் நூலை வெளியிட, திரைக்கலைஞர் விஜய் சேதுபதி நூலை பெற்றுக்கொண்டார். கவிஞர் நந்தலாலா மற்றும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பாரதி புத்தகாலய பதிப்பாளர் க.நாகராஜன் வரவேற்புரை நிகழ்த்தி பேசியதாவது : “ பாரதி புத்தகாலயம் 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை 3000 புத்தகங்களை பதிப்பித்துள்ளோம். இளம் பருவத்தினர் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவே சிறார் புத்தகங்களை மிகுதியான அளவில் வெளியிடுகிறோம் ” என்று தெரிவித்தார்.
விழாவில் கவிஞர் நந்தலாலா திறனாய்வு செய்து ஆய்வுரையாற்றினார். அவர் கவிதையின் நுட்பங்கள் குறித்து பேசியதாவது : “ எளிய மனிதர்களைப் பற்றி இந்நூலின் கவிதைகள் பேசுகின்றன. இவை போன்ற நல்ல படைப்புகள் படித்தவுடன் மனதில் ஆழ பதியும். பல நூல்கள் கற்க வேண்டும். இதனால் கற்பவர்களின் ரசனை மேம்படும். ஒரு சிறந்த படைப்பென்பது காலத்தை கடந்து நிலைத்து நிற்க வேண்டும்.
இந்த கவிதை தொகுப்பு எக்காலத்திற்கும் பொதுவானதாய் இருக்கிறது. இந்நூலின் கவிதைகளை வாசிக்கும் தருணங்களில் காட்சித்தொகுப்பாய் அவை கண்முன் விரிகின்றன ‘’ என்று பேசினார்.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் நூல் வெளியிட்டு சிறப்புரையாற்றி பேசியதாவது : “ தங்கத்தை அளவிட குன்றிமணி தானியத்தை போல, சமூகத்தை அளவிட கவிதைகள் பயன்படுகின்றன. சீனு ராமசாமி தன்னை சுற்றிய வாழ்வை எழுதுகிறார். தன் கவிதைகள் மூலம் உலகை புதிதாய் காட்டுகிறார். இலக்கியம் மனதில் பரிவுணர்வை உண்டாக்குகிறது ‘’ என்று பேசினார்.
திரைக்கலைஞர் விஜய் சேதுபதி பேசுகையில் இவ்விழாவில் தன்னை மாணவரைப்போல் உணர்வதாகவும், விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்வுற்றதாகவும் பேசினார்.
இயக்குனர் சீனு ராமசாமி தனது ஏற்புரையில் பாரதி புத்தகாலய பதிப்பாளர் க.நாகராஜன் அவர்களுக்கும், பதிப்பக ஊழியர்களுக்கும் நன்றி கூறினார். இப்படைப்பை 1992 ஆம் ஆண்டு மதுரை திருப்பரங்குன்றம் தமுஎகச கலை இலக்கிய இரவுக்கு சமர்ப்பணம் செய்வதாக தெரிவித்தார். மேலும் அதனைத்தொடர்ர்ந்து பேசிய சீனு ராமசாமி, நலிந்த திரைக் கலைஞர்களுக்கு மட்டுமல்லாமல் நலிந்த பதிப்பாளருக்கும் அரசு மானியம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.