“ஆவியாகும் தேனீர்” அ.சீனிவாசன் கவிதைகள்
******************************************
1. மனிதனின் இடம்
கிணறு இருந்த இடம்,
ஆறு இருந்த இடம்,
ஏரி இருந்த இடம்,
குட்டை இருந்த இடம்—
வயல் இருந்த இடம்,
தோட்டம் இருந்த இடம்,
காடு இருந்த இடம்,
மலை இருந்த இடம்—
பறவை இருந்த இடம்,
விலங்கு இருந்த இடம்,
மரம் இருந்த இடம்—
மனிதன் இல்லாத பூமியில்
இவை அனைத்தும்
புதிதாய் உருவாகின்றன.
விரைவில்—
மனிதன் இருந்த இடமும்
ஒரு புது இடமாகும்.
******************************************
2. நேர்த்திக்கடன்
என்னை
எவ்வளவு நேர்த்தியாய்
பாராதிருக்கிறாய்!
என்னிடம்
எவ்வளவு நேர்த்தியாய்
பேசாதிருக்கிறாய்!
என்னை
எவ்வளவு நேர்த்தியாய்
கேளாதிருக்கிறாய்!
என்னிடம்
எவ்வளவு நேர்த்தியாய்
உடன்படாதிருக்கிறாய்!
என்னை
எவ்வளவு நேர்த்தியாய்
விரும்பாதிருக்கிறாய்!
ஆனால்—
என்னை
அவ்வளவு நேர்த்தியாய்
மறவாதிருக்கிறாய்!
என்னை
அவ்வளவு நேர்த்தியாய்
பிரியாதிருக்கிறாய்!
நான் மட்டும்—
அவ்வளவு நேர்த்தியாய்
உன்னிடம்
பிரியமாயிருக்கிறேன்.
இதுவோர் நேர்த்திக்கடன்…
******************************************
3. தேனீர் குவளையின் வெறுமை
நெடுநேரமாய்
காலியாகாமல் நின்று,
ஆறிப்போன தேனீர்க் குவளையில்
ஒவ்வொரு துளியும்—
ஊடலாலும் கவலையாலும்
இன்னும் சுடச்சுட
நிரம்பியிருக்கிறது.
******************************************
4. குறையின் நிரப்பு
உன் அன்பின் குறையை
என் அன்பால் நிரப்புகிறேன்.
உன் ஆற்றலின் குறையை
என் ஆற்றலால் நிரப்புகிறேன்.
உன் பண்பின் குறையை
என் பண்பால் நிரப்புகிறேன்.
உன் பாராட்டின் குறையை
என் பாராட்டால் நிரப்புகிறேன்.
உன் எல்லாக் குறைகளையும்
நான் நிரப்புகிறேன்.
ஆனால்—
என் மனத்தின் ஆறுதலை
நானே நிரப்பிக் கொள்ள
சற்றே அசிங்கமாயிருக்கிறது,
சகியே!
******************************************
5. தொலைவதற்கு முன்
செய்வன திருந்தச் செய்!
தொலைவதற்குச் சற்று முன்—
நம்மைத் தேடும் கண்களில்
அனைத்தையும் தொலைத்து விடு.
பின்னர்…
சுகமாய் காணாமற் போகலாம்.
******************************************
6. மனிதத்தின் மறைவு
முதலில்—
மனிதம் மறைந்தது.
தேட வேண்டிய மனிதன்
தேடவில்லை.
இப்போது—
மனிதனும் மறையப் போகிறான்.
அவனைத் தேட
யாரும் இல்லை.
******************************************
7. அவசரம்
சகியே—
அவசர அவசரமாய் வருவாய்,
அவசர அவசரமாய்ப் பழகுவாய்,
இப்போது
அவசர அவசரமாய்ச்
சண்டை போட்டுச் செல்கிறாய்.
அதே அவசரத்தில்—
திரும்பி விடுவாய்… தானே?
******************************************
8. முன்னேற்றம்
பறவைக்கு முன்பே
நிழல் கூட அடைகிறது.
தாய்க்கு முன்பே
குரல் சேய் அடைகிறது.
******************************************
9. நிலைத்த நினைவு
உனக்காக நான் இருக்கிறேன் என்றால்,
எனக்காக மட்டும்—
நீயிரு.
***********************************************
📚 எழுதியவர் :
✍🏻 அ.சீனிவாசன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

