அ.சீனிவாசன் கவிதைகள்
***********************************************
1.
என் இதயம்
எப்படியோ
உன்னிடமே
சிக்கிக்கொண்டது.
எவ்வளவு வேண்டுமானாலும்
எப்படி வேண்டுமானாலும்
அதனோடு விளையாடு —
நசுக்கு,
உதறு,
தூக்கி எறி.
பதிலுக்கு
உன் இதயம் முழுதும்
எனக்குத் தேவையில்லை.
கிரிக்கெட் கூட
நான்
ரசிப்பவன் மட்டுமே —
ஆடுபவன் அல்ல.
திரும்ப
என் இதயத்தை
தந்துவிடாதே.
இதயமில்லாதவனாய்
இருந்தால்தான்
உன்
அன்பின்மையை
என்னால்
தாங்க முடியும்.
***********************************************
2.
அந்த வானத்தைப் பார்
இந்தக் கடலைப் பார்
அந்தக் கடவுள் கார்மேகக் கண்ணனைப் பார்
என்று மெல்ல மழுப்பிக் கொண்டே
ஒரு பெரிய
டெய்ரி மில்க்
வாங்கி நீட்டி
எப்போதும் போல
சமாளித்துக் கொண்டிருக்கிறேன்
“ஏன்பா உனக்கு
ப்ளூ கலர் மட்டும்தான்
பிடிக்குதா?”
என்று வினவும்
என் மகளை!
உனக்கு
டெய்ரி மில்க் பிடிக்குமென்பதால்தான்
எனக்கு
நீலம் பிடிக்கிறது
எனும் உண்மை —
அந்த வானத்துக்கும்
இந்தக் கடலுக்கும்
அந்தக் கடவுள் கார்மேகக் கண்ணனுக்கும்
உனக்கும் எனக்கும் மட்டுமே
தெரிந்த ஒரு ரகசியமாய்
உயிரோடு
இருந்து போகட்டும்
அன்பே!
***********************************************
3.
தேர்வறை
நுழையும் சிறார்க்கெல்லாம்
ஒரே சாயல்.
தேர்வு முடிந்து
வெளிவரும் சிறார்க்கெல்லாம்
ஒரே சாயல்.
தேர்வு முடிவு
பார்த்த சிறார்க்கும்
ஒரே சாயல்
இருக்கலாமே…
***********************************************
4. அம்மா அப்பா அம்மா அப்பா
இருக்கின்ற அம்மாவையோ
இல்லாத அப்பாவையோ
தடங்கலின்றி தயக்கமின்றி
எத்தனை முறை வேண்டுமானாலும்
எவ்வளவு தூரத்திலிருந்தும்
வாய் நிறைய கூப்பிட்டுக் கொள்ள
ஓர் அற்புதமான நிகழ்வு
காய்ச்சல்.
***********************************************
5.
வேறெதுவும்
இருந்திடக்கூடாதென்ற பதட்டம் மகனுக்கு.
வேறெதுவும் தான்
சொல்லிடக்கூடாதென்ற
பதட்டம் தாய்க்கு.
‘ வேறெதுவும் இல்லதானம்மா’
‘ வேற ஒண்ணும் இல்லப்பா’
அலைபேசி இணைப்பின் துண்டிப்பிற்கு முன்பாக
ததும்பி வழியும் மவுனம்
கொஞ்சமாய் மனதை
ஆசுவாசப்படுத்தத் தான் செய்கிறது.
***********************************************
6. காதல்: ஒரு ராபின்ஹுட்
ஒரு காதல் என்ன செய்யும்?
பிணி கொண்டவனை
குணமாக்கும்;
பிணி தீர்க்கும் மருத்துவனை
நோயாளியாக்கும்!
ஆயுள் பிரம்மச்சாரியை
குடும்பஸ்தனாக்கும்;
அமைதி குடும்பஸ்தனை
பிரம்மச்சாரி ஆக்கும்.
அதுவொரு
தற்காப்புத் தடுப்பூசி!
மிதமான காதல்களின்
தாக்குதலைத் தடுத்து,
வலிமையான காதல்களிலிருந்து
சிறு தழும்புகளோடு
நம்மைத் தப்புவிக்கும்.
உள்ளவரிடமிருந்து
உறக்கத்தைப் பறித்து,
இல்லாதவர்க்கு
இறகுகளைப் பரிசளிக்கும்—
காதல்…
ஒரு கண்ணியமான ராபின்ஹுட்!
***********************************************
7.
துரை டாக்கீஸில்
பெஞ்ச் டிக்கெட்டில்
பாக்யராஜ் படம்.
குதிரை ரங்க ராட்டினத்தில்
பத்து நிமிடச் சுற்று;
நீலவண்ண குட்டி
வாடகை சைக்கிளில்
அரைமணி நேர சவாரி.
வெண்ணிலா — பெரிய கப்பு;
நக்புடியான் கடை
பெரிய ஜாமூன் ஒன்று;
சேட்டுக்கடை
பானிபூரி பார்சல் செட்.நான்கு வண்ண ரீபில்கள் கொண்ட
ஒற்றைப் பேனா;
பலூனில் செய்த
குரங்கு பொம்மை;
அக்காவுக்கு ஆசையாய்
பரிசளிக்க
இரட்டை வாத்து கிளிப்பு.
போதும் போதுமென்றளவிற்கு
குளிர்விக்கும்
பால்யத்தில்
அப்பா
கொடுத்த
ஒற்றை ஒரு ரூபாய்த்தாள்.
போதாது
போதாதென்று
சுடுகின்றன
சுயமாய்ச் சம்பாதிக்கும்
ஐநூறு ரூபாய்த் தாள்கள்.
***********************************************
8.
முற்றத்து நாற்காலியின்
நான்கு கால்களாய் – அந்த
முப்பாட்டன் காலத்து உறவுகள்!யாரையும் உரசாமல்…
யாரையும் ஒதுக்காமல்…
லாவகமாய் அமர்ந்து
சமநிலை செய்வார் அப்பா.
அவர் மறைந்த பிறகுதான் தெரிந்தது
நாற்காலி கால்கள் ஒவ்வொன்றும்
ஒவ்வொரு திசையில் இழுப்பது!
இப்போது…
சமநிலை செய்ய ஆளின்றி
சரிந்து கிடக்கிறது நாற்காலி.
நினைவுச்சின்னமாக்கிக்
கொண்டோம்
அப்பாவின் நாற்காலியோடு
அவரது உறவுகளையும்
***********************************************
9. தலை(வி) பத்திரம்!
சிக்னல்கள் உங்களைச்
சிறை பிடிப்பதில்லை…
உங்களோடு வரும் நிழலையும்
யாரும் தடுப்பதில்லை!
பாரதி கண்ட
புதுமைப் பெண்ணை மிஞ்சி,
அவன் கனவிலும் காணாத
சிகரங்களை நோக்கிச்
சிறகடிக்கிறீர்கள்!
இயல்பான சலுகைகளைச்
சுமந்து செல்லும் நீங்கள்,
இன்றியமையாப் பாதுகாப்பை மட்டும்
ஏனோ… கீழே விட்டுச் செல்கிறீர்கள்!
ஆண்களுக்கு வாய்க்காத
கூந்தல் வனப்பு உங்களது…
ஆண்முகங்களைத் தோற்கடிக்கும்
பேரழகு உங்களுடையது!
உமது கபாலம்
அழகாய் இருக்கலாம்…
ஆனால்,
விபத்துக்கள் ஒருபோதும்
அழகை அடையாளம் காண்பதில்லை!
ஆண்களின் கபாலத்தை விட
உங்களுடையது
அதிசயப் பலமானதுமல்ல!
தோழி…
உன் கவிதை முகம் காக்க,
கவசம் அணிந்து செல்!
தலை(வி) பத்திரம்!
📚 எழுதியவர் :
✍🏻 அ.சீனிவாசன்
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

