***********************************************
. காற்று
. ———————
அவனுக்கு நிறமில்லை
உருவமும் இல்லை
இருந்தும்….
உலர்ந்த சருகுகளின் மேல்
அவன் பாதம் பதிக்கும் சத்தம்
நிசப்தத்தத்தின் ரகசியம்
அவனின் மௌன ராகம்
பூக்களின் காதுகளில்
என்ன ரகசியம் சொன்னதோ
வெட்கத்தால் நாணி
தலை குனிந்து சிரிக்கின்றன
உயிர்களின் உயிர் நாடி நீ
பிரபஞ்சம் சூழல்வது உன்னால்தான்
கிளைகளின் நடனத்தில்
உன் அசைவைக் காண்கிறேன்
நாதஸ்வர ஓசையில்
நாதமழையாய் வருகின்றாய்
புல்லாங்குழலின் துளைகளில்
மெல்லிய இசைக் காற்றாய்– நீ
வெறும் இடப்பெயர்ச்சி அல்ல
பூமியின் நிம்மதிப் பெருமூச்சு
உன்னோடு சுமந்து வருகிறாய்
மண்ணின் வாசத்தை
மழையின் சாரத்தை
பூக்களின் நறுமணத்தை
பிரிந்த காதலின் நினைவுகளை
முன்பெல்லாம்
மரங்களின் நிழலில் குடியிருந்தாய்
இப்போது மின்விசிறியிலும்
குளிர்சாதனப் பெட்டியிலும்
சிறைக் கைதியாய் நீ…..
***********************************************
. வறுமை
. ———————
வறுமை
வெறும் கந்தல் துணியின்
அடையாளம் அல்ல
நிறைவேறாத ஆசைகளின்
நீண்ட மௌனம்
பசி இப்போது தெருக்களில்
கையேந்துவதில்லை
கௌரவ முகமூடி அணிந்து
நடுத்தர வர்க்கத்தின்
படுக்கை அறைகளில்
விழித்திருக்கிறது…
பிள்ளைகளின் மழலைப் பேச்சில்
மறைந்து போகிறது
அடுத்த மாத வீட்டு வாடகை பற்றிய
நீண்ட பெருமூச்சு….
வறுமை
யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியா
ஒரு ரகசிய கண்ணீர்
ஊரே உறங்கும் நள்ளிரவில்
பசி மட்டும் விழித்திருக்கிறது….
வயிற்றுக்கும் தொண்டைக்கும்
போர்பிரகடனம் செய்கிறது
இறந்த காலத்தின் நினைவுகளை விட
நாளை என்ன செய்யப் போகிறோம்
என்று நிகழ்காலப் பயமே
வறுமையின் ஆகப்பெரிய கொடூரம்
வறுமை என்பது பசியல்ல
அது மனிதனின்
சுயமரியாதையை
சுட்டெரிக்கும் தீ….
***********************************************
. விவசாயி
. ———————–
மழை பொழியும் என்று
காத்திருந்து விவசாயிக்கு
பொய் சொல்லும் காதலனாய்
மாறிப்போனது வானம்
காத்திருந்த கண்கள்
காய்ந்த நிலத்தின் பிளவுகளாய்
பச்சை காய்கறிகள் எல்லாம்
பூச்சிக்கொல்லி மருந்தின்
நெடிகளாய் மாறிப்போனது
விதைத்தவனுக்கு தெரியாது
தன் விளைச்சலின் விலை
நகரத்து ஏசிகள்
விலை நிர்ணயம் செய்கிறது
சந்தை என்னும்
கண்ணுக்குத் தெரியாத
சாத்தான் வடிவத்தில்….
சேற்றில் கால் வைப்பவன்
சோற்றில் கை வைக்க
தவமாய் தவமிருக்கிறான்
அவன் உழைப்பில் சிந்திய வியர்வை
நெல்மணிகளாய் மாறினாலும்
வட்டிக் கடைக்காரனின்
கணக்குப் புத்தகத்தில்
சிவப்பு மையகளாய் உறைகின்றன
கார்ப்பரேட்டின் கைகளில்
கரன்சியாய் உலா வருகின்றன
ரியல் எஸ்டேட் வடிவில்
தன் மண்ணிலேயே
அகதியாகிக் கொண்டிருக்கிறான்
விவசாயி…..
***********************************************
. நீர் மேலாண்மை
. ————————————–
மழைத்துளிகள்
கார்மேகம் பூமிக்கு எழுதும்
காதல் கடிதங்கள்– அதனை
வாசிக்கத் தெரியாமல்
கிழித்து எறிந்து விடுகிறோம்!
ஏரி என்பதும் : குளம் என்பதும்
வெறும் நிலப்பரப்பு அல்ல
பூமித்தாய் தன் மக்கள்
தாகம் தீர்க்க சேர்த்து வைத்த
நிரந்தர வைப்பு கணக்கு
கார்முகிலின் கொடை
வாசலில் வந்து நிற்கும் தேவதையாய்
அவளை மழை நீர் சேகரிப்பு என்ற
பாதுகாக்கும் மரியாதை
தெரியாதவராய் நாம்…
மூன்றாம் உலகப் போர்
தண்ணீருக்காக நடைபெறுமாம்
தன்னைத்தானே
தகனம் செய்து கொள்ளும் மனிதர்கள்
நீர் மேலாண்மை
ஏரி வெட்டுவது அல்ல
ஒவ்வொரு சொட்டு நீரையும்
மண்ணின் கருப்பைக்குள்
பத்திரமாக சேர்த்து வைக்கும்
நவீன அறம்….
மழைத்துளியை சேர்த்து வைத்தால்
நம் தலைமுறையின்
கண்ணீர் துளி துடைக்கப்படும்.
***********************************************
. புல்லாங்குழல்
. ———————————-
புல்லாங்குழல்
வெறுமையைப் பறைசாற்றும்
வெற்றிடக் கருவி
காற்றைக் குடித்துவிட்டு
கானத்தைப் பொழிகிறது
வெறும் மூங்கில் குச்சி தான்
யாரோ செய்த காயங்கள்
வலியின் வேதனை
ராகங்களில்…..
யாரோ ஒருவன்
தன் மூச்சுக்காற்றை
உன் துளைவழி ஓதுகின்றான்
இது வெறும் காற்றல்ல — அவன்
சொல்லத் துடிக்கும்
சொற்களின் ஈரம்
ஒரு மூலையில்
மனிதனின் உயிர் காற்று
மறுமுனையில்
இயற்கையின் புன்னகை
நடுவானில்
துளைகளைத் தாண்டி
தடுமாறி வெளியேறும் இசைச்சாரல்
யாரோ ஒருவனின் தனிமையை
மெல்ல மெல்ல நனைகிறது….
***********************************************
. திரைக்குப் பின்னால்
. ————————————————–
இருண்ட அறையில்
இமைக்காத ஆயிரம் கண்கள்
வெள்ளித்திரையில்
மின்னிடும் ஒளிக்கற்றைகள்
வெறும் பிம்பங்களின்
அணிவகுப்பல்ல
நிறைவேறாத பலரின் கனவுகளாய்
உறைந்து போன காலத்தை
மீண்டும் ஓட விடும் விந்தை இது
இறந்து போன கலைஞன்
இன்னும் திரையில் வலம் வருகிறான்
முதுமை அடைந்த நாயகி
இளம் கன்னியாய் சிரிக்கிறாள்
அழகு சாதனங்கள் பூசப்படாத
அழுக்கு முகங்கள் அங்கே உண்டு
நிழல் விழாத கோணத்திற்காக
நித்தம் வெயிலில் காயும் ஒளிப்பதிவாளன்
கிழிந்த உடைகளை அணிந்து
நாயகனை அழகூட்டும்
ஆடை வடிவமைப்பாளன்
நாயகன் வாங்கும் கைதட்டலில்
சண்டைப் பயிற்சியாளர்களின்
ஊனமுற்ற வலிகள்
யாரோ எழுதிய வரிகளுக்கு
யாரோ ஒருவன் வாங்கும் கைதட்டல்
திரையில் மின்னும் ஒற்றை முகம்
இவருக்குப் பின்னால்
எத்தனை ஆயிரம் இருண்ட முகங்கள்
இவர்கள் சிந்திய வியவைத்துளிகள்
வெள்ளித்திரையில்
மின்னிடும் வைரங்களாய்
திரைக்கு பின்னால் மின்னுகின்றன.
***********************************************
. இயற்கையின் கொடைகள்
. ———————————————-
யார் எழுதியது?
இந்த நீள் கவிதையை
இயற்கை எனும் தலைப்பில்
இலைகளின் நரம்புகளில்
ஓடிக்கொண்டிருக்கிறது
பூமியின் ரகசியம்!
பறவைகளின் சிறகசைப்பில்
அளக்க முடியாத வானத்தின் தூரம்
காற்றின் அசைவில்
நாம் அறிந்திடாத ஆயிரம் கதைகள்!
பூக்களின் புன்னகையில்
பிறந்திடும் புதியதோர் நம்பிக்கை!
வெற்றுவெளியல்ல வானம்
காலம் ஒளித்து வைத்திருக்கும்
ஆயிரம் புதிர்களின் தொகுப்பு!
தூரிகை இல்லாமல்
சூரியன் வரைந்த வானவில்
அறிவியலின் அற்புதம்
மலையின் மடியில் பிறந்து
மண்ணின் தாகம் தீர்க்கும் நதிகள்
பிரதிபலன் பாராத கொடை!
உருவம் இல்லா காற்று — ஆயினும்
உயிர்களின் விலாசமாய்
தவமாய் தவமிருக்கும்
தற்காப்பு ஆயுதமாய்!
கருங்கல் மலைகள்
இவைகள் மட்டுமா?
இயற்கையின் கொடைகளாய்
இன்னும் எத்தனை எத்தனை?
***********************************************
. நிலவே தூது செல்!
. —————————————-
நிலவே தூது சொல்!
உன் வட்ட வடிவ முகத்தினிலே
அவள் வாட்டமான முகம் கண்டேன்
சென்று வா! எனக்காக
அவள் உறங்கும் திசை நோக்கி
அவள் ஜன்னல் கம்பிகள் முன் நின்று
உன்னை நினைத்தே
ஒருவன் தேய்கிறான் என்று…
தேய்பிறையாய்— என்
கதையை நீ சொல்லாதே
உன் நினைவால்
ஒருவன் ஒளிர்கிறான்– என
முழு நிலவாய்
என் காதலைச் சொல்லிவிடு!
அவள் பெயர் சொல்லும் போது
தொண்டைக் குழியில்
ஒரு நதி வற்றிக்
காய்ந்து போவதைச் சொல்
பேச நினைத்த ஆயிரம் சொற்கள்
மௌனமாய்
உறைந்து போவதைச் சொல்
அவள் நெற்றியில் விழும்
உன் ஒளிக்கீற்று
என் விரல்களின் வருடல் என்றும்
அவள் கூந்தலில் படியும் உன் நிழல்
என் பாதுகாப்பின் அரணெனச் சொல்
என் பிரிவால் அவள் வடிக்கும்
கண்ணீர் மழைக்கு
மேகக்குடையாய் மாறித் தந்துவிடு
அவள் இதழ்களில் புன்னகை பூத்தால்
என் இருட்டு அறையில்
பிரதிபலிக்கின்றது
நிலவே நீ!
வெறும் ஒளியோடு வராதே
அவள் சொல்லத் துடித்த
ஏதாவது ஒரு ஒற்றை சொல்லை
உன் மௌனத்தில் சுமந்து வா…..
***********************************************
. முள்ளிவாய்க்கால்
. —————————————
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை
ஒரு இனத்தின் அடையாளம்
மண்ணோடு அழிந்து போனது
முள்ளிவாய்க்கால் காற்றின்
இருப்பதம் குறைந்து இருக்கிறது
ஆனால்…..
உப்புக்காற்றின் வாடையில் இன்னும்
குருதியின் கறை படிந்த வாசனை!
பதுங்கு குழிகள்
வெறும் பள்ளங்கள் அல்ல– அவை
நம்பிக்கைகள் புதைக்கப்பட்ட
மௌன சாட்சிகள்!
பிஞ்சுக் குழந்தைகளின்
சிதைந்த எலும்புகளில்
இன்னும் ஒட்டி இருக்கிறது
யுத்தம் விழுங்கிய மழலைக் கனவு
காணாமல் போனவர்கள்
எங்கே என்ற கேள்விக்கு
விடை சொல்லத் தெரியாமல்
கரைவர மனம் இல்லாத அலைகள்
ஆட்சி மாற்றம் வந்த போதும்
நீதிமன்றத்தின் கோப்புகளில்
தூங்கிக் கொண்டிருக்கும் -எம்
தமிழ் இனத்தின் கண்ணீர்!
முள் வேலிகளுக்கு பின்னால்
மூடிய விழிகளுடன்
திறக்கப்படாத கண்ணீர் தேசமாய்
முள்ளிவாய்க்கால்
***********************************************
📚 எழுதியவர் :
✍🏻 கு. மணி
த/பெ: குருசாமி
தெற்குப்புதுத்தெரு
சக்கம்பட்டி- 625512
ஆண்டிபட்டி வட்டம்
தேனி மாவட்டம்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

