சி.துரைக்கண்ணு Duraikannu Chinnaiyan  நிற்க அதற்குத் தக (Nirkka Atharkku Thaga)

எங்கள் கல்லூரி விடுதியின் உணவகத்தில் புதன் கிழமை காலை உப்புமாதான் (மோசமான உணவு என்று அர்த்தம் கிடையாது, கொங்கு மாவட்டத்தில் இதை விரும்பி சாப்பிடுவார்கள் என்று ச.தமிழ்செவன் ஒரு சாப்பாட்டு ராமனின்  நினைவலைகள் என்ற புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்) காலை சிற்றுண்டி. அதோடு கேசரியும் கிடைக்கும். நான் கேசரியை மட்டும் வாங்கி கொண்டு உப்புமாவைத் தவிர்த்துவிடுவேன். அங்குள்ள விடுதி காப்பாளர் இதை பார்க்கும் போது, உப்புமாவும் வாங்கிக்கப்பா என்று கேட்ப்பார், நான் ஒரு சிரிப்பை வெளிப்படுத்தி மறுத்துவிடுவேன்.  இவ்ளவுதான் என்னுடைய எதிர்ப்பு. நமக்கு பிடிக்காத ஒன்றை எதற்கு தட்டில் வாங்கி பின் அது வீணாக்க வேண்டும் என்ற ஒரு எள்ளவிலுள்ள நல்ல எண்ணம். எங்கள் வருகைக்கும் முன்பிருந்த காலை சிற்றுண்டிப் பட்டியலில் புதன்கிழமை பூரி மசாலா போடுவதுதான் வழக்கமாம். எண்ணெய் மிகுந்த இந்த உணவால் கல்லூரி விடுதி குடியிருப்பாளர்கள் (குறிப்பாக பெண்கள்) தங்கள் சருமத்தில் முகப்பரு வருகிறது என்று ஒரு காரணத்தைக் காட்டி அந்த ருசியான பூரி மசாலாவை நிறுத்திவிட்டு இந்த உப்புமாவை சேர்த்திருக்கிறார்கள்.

இதை எதிர்த்து ஒரு மாணவன் சில கோரிக்கைகளோடு எங்கள் கல்லூரி நிர்வாக அதிகாரியிடம் முறையிட்டிருக்கிறான். அவனுக்கு அடி விழுந்தது. இத்தனைக்கும் நாங்கள் கொடுக்கும் பணத்தில் எங்களுக்கு சேவை செய்யும் இடத்தில் இருந்து கொண்டு இந்த வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். ஆனால் பலன் கிடைத்தது. சில நாட்களில் புதன் கிழமைகளில் உப்புமா நீக்கப்பட்டு பூரி மசாலா சேர்க்கப்பட்டது. (ஷஷாங்க் ரெடெம்ப்ஷன் படத்தில் சுதந்திர வேட்கையோடு Andy Dufresne உரக்க இசையை இசைக்கச் செய்து தனது எதிர்ப்பை பதிவு செய்வது போலதான்)
இந்த மாற்றம் அந்த ஒரு மாணவனின் துணிச்சலாலும், நெஞ்சுரத்தாலும் மட்டுமே சாத்தியமானது. என்னை போன்ற “இருக்குற இடம் தெரியாம இருந்துக்கணும் ” என்ற கொள்கையை கடைப்பிடிப்பவர்கள் பலரும், பூனைக்கு யார் மணி கட்டுவது என்று பயந்து ஒதுங்கிவிடுவார்கள்.  தயக்கமும் (ஜெயமோகன் அண்மையில் “தயக்கமெனும் நோய்” என்ற கட்டுரை எழுதியிருக்கிறார், அவர் பங்குக்கு தயக்கம் இல்லாமல்  புளித்த மாவை கொடுத்த விற்பனையாரை சராமாரியாக கேள்வி கேட்டு காயமும் அடைந்திருக்கிறார்), பாதுகாப்பின்மையும் ஒரு  சில காரணங்கள்.
ஒரு மனிதரின் தன் வரலாற்று நூலைப் பற்றி எழுதும் போது இந்த நினைவலைகள் வந்ததற்கு காரணம், பெருமைக்குரிய துரைக்கண்ணு அவர்கள் தன் சிறு வயதிலிருந்து  டைனோசருக்கே மணி கட்டியிருக்கிறார், ஒன்று அல்ல இரண்டல்ல,  நூற்றுக்கும் மேலான டைனோசருக்கு மணி கட்டியிருக்கிறார்.
ஆங்கிலத்தில் “Walk The Talk ” என்றொரு பழமொழி உண்டு, அதற்கு ஈடான திருக்குறள் வாசகமான “நிற்க அதற்குத் தக ” என்ற துணுக்கு இந்த இலக்கியப் படைப்பின் தலைப்பிற்கும்  இந்த மகத்தான மனிதருக்கும் சாலப் பொருந்தும்.
காமராஜர் 1957-1962 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் 16,000-க்கும் மேற்பட்ட புதிய பள்ளிகளைத் திறந்தார் என கேள்விப்பட்டிருக்குறேன். 1960இல் பிறந்த இவர் “நாளொன்றுக்கு 12 கிலோ மீட்டர் நடக்க முடிந்தால் தான் ஆறாம் வகுப்புப் படைக்க முடியும். அந்த அளவுக்கு உடல் ஆரோக்கியம் இருந்தால் மட்டுமே தொடர்ந்து படிக்க முடியும் ” என்பதை பதிவு செய்திருக்கிறார். எனது தந்தையும், அவர் படிக்கும் காலத்தில், பள்ளிக்கு 5 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும் என்பதை குறிப்பிட்டிருக்கிறார், ஆனால் அது பெரும் வலிமையைக் கோருகிறது என்று வாசித்தவுடனே, மீண்டும் அனுதாபக்கடலில் கிடந்தேன்.  இவர் கடந்து சென்ற பாதை மிகக்கடினமானது.  தன் குழந்தைக்காலம், பால்யகாலத்தை பற்றி சொல்லும் பொழுது பெரிதும் சுயபட்சாதாப நிலையிலில்லாமல் உள்ளதை உள்ளதுப் படி தன்  அனுபவ பகிர்வுகளை தொய்வில்லாமல் மிக துல்லியமான நினைவடுக்குகளிருந்து எழுதியிருக்கிறார்.
காளியாட்டத்திற்கு புகழ் பெற்ற தஞ்சை மாவட்டங்களிலுள்ள இடங்கள் மற்றும் அங்கிருந்த தீண்டாமை , பண்ணையாரின் பின்புலம், வறுமை சூழ்ந்த வீடு, தள்ளாடும் வாழ்க்கையினால் கல்வியின் மீது ஆர்வமின்மை என்ற இருண்ட பக்கங்களோடு தொடங்கும் இவரது வாழ்க்கை, பின்பு  பள்ளிக்கூடத்திற்கு பெற்றோரில்லாமல் தானாக நேரில் சென்று சேர்வது, தலையாரியாக தனது தந்தை பணியாற்றிய  (மிட்லன்ட் தியேட்டர் உரிமையாளர்) ராமச்சந்திர ஐயர் மற்றும் அவர்களது மகனின் உதவி கிடைத்தது, ஆசிரியர்களின் வழிகாட்டுதல் என்று தன் கல்லூரி சேரும் வரை இருந்த நினைவுகள் சற்று இனியதாக இருக்கிறது.
பின்புதான் இவரது புரட்சி அத்தியாயங்கள் தொடங்குகின்றன. நக்சல்பாரி இயக்கம் என கருதப்பட்ட மா லெ வில் இனைந்த  பின்பான இவரது இயக்க செயல்பாடுகள் என்னை மலைக்க வைத்தன. பொன்பரப்பி தமிழரசன், பெண்ணாடம் புலவர் கலிய பெருமாள் என எழுத்துக்கள் ஊடாக அறிந்த போராளிகளை இவர் நேரில் சந்தித்திருக்கிறார். மிகுந்த போராட்டத்துடன் தான் தன் உதவித் தொகையிலிருந்து கல்லுரிக் கட்டணத்தை செலுத்தியிருக்கிறார். ஒருவேளை இந்த போராட்ட மனநிலைதான் இவரை தொடர்ந்து அறச்   சீற்றத்துடன் தன் அலுவல் பணிகளிலும்  மக்கள் நலப்பணியிலும் வந்த  குறிக்கீடுகளை எதிர் கொள்ளச் செய்திருக்கிறது.
NLC யில் பணியமர்த்தப்பட்டு பின் வரும் அத்தியாயங்கள் தான் எனக்கு தெரிந்த இடத்தின் தெரியாத  பக்கங்களை நுகர்ந்தேன். குறிப்பாக ஜவஹர் பள்ளிப் பொதுத் தேர்வுகளில் முன்னாள் தலைமை ஆசிரியர் சுந்தரம் செய்த முறைகேடுகள் மற்றும் மறைந்த முன்னாள் தலைமை ஆசிரியர் ராமானுஜம் பற்றிய புகார்கள் எனக்கு அதிர்ச்சிகள் தந்தன. சுந்தரம் அவர்களை பற்றி பெரியதாக எந்த அபிப்ராயங்கள் இல்லை என்பதனால் தோழர் சே.துரைக்கண்ணு அவர்களின் பதிவு என்னை மிகுந்த சிந்தைக்குள் ஆழ்த்தவில்லை. ஆனால் நான் பெரிதும் மதிக்கின்ற ராமானுஜம் அவர்களும் உயர் அதிகாரிகளின் அழுத்தத்தில் ஆசிரிய பணி நியமனத்தில் முறைகேடிற்கு துணைபோனாரா? என்று கடந்த காலத்தை அசைபோட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் இதை தலைமை ஆசிரியர் ராமானுஜம் அவர்கள் கையாண்ட விதம் தான் நான் அவரின் மேல் வைத்திருக்கும் மரியாதையை நீர்த்துப் போகாமல் செய்கிறது. அப்படி என்னச் செய்தார் என்பதை புத்தகத்தின் 91ஆம் பக்கத்தில் வாசித்துத் தெரிந்து கொள்ளலாம்.
இவரது கல்வி புரட்சியில் மேலும் மேலும் நடந்த தொடர் மாற்றங்களினால்  ; ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள்கள் என்று அனைத்து தரப்பினருமே பயனாளிகளாக இருந்திருக்கிறார்கள் (நானும் உட்பட).
ஆசிரியர் ஆறுமுகம் அவர்களின் தனிப்பயிற்சி கூடத்தில் அவ்வப்போது முன்னெச்சரிக்கையாக யாராவது கண்காணிக்கிறார்களா என்று அவர் பார்ப்பதுண்டு. அப்போது தனிப்பயிற்சிக்கு எதிராக யார் இருக்க முடியும்? ஏன் தொல்லை செய்கிறார்கள் என்ற மனநிலையில்தான் இருந்தேன். இந்த புத்தகத்தை வாசித்தவுடன் தான் இதன் மறுபக்கம் தெரிந்து தோழர் துரைக்கண்ணு பக்கம் நிற்க வைத்தது.
நேர்மையாக செயல்பட்டதனால் மட்டுமே பல குறுக்கீடுகளையும் சில எதிரிகளையும் சம்பாதித்திருக்கிறார். கல்வியும், அறமும், நேர்மையும், போராட்ட குணமும், நல்ல தோழமையும் சட்டம்  மட்டும் மனித உரிமையைப் பற்றிய விழிப்புணர்வும் ஒரு சேர ஒரு மனிதனுக்கு கிடைப்பின், அது அந்த மனிதனை என்ன செய்யும் என்பதற்கான சான்றாக தன் வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறார்.
“காவல் துறை இருக்கும் போதே திமுகவினர் உள்ளே புகுந்து ரகளை செய்து தேர்தல் பணிகளை சீர்குலைத்தனர் ” என்று மூத்த கட்சியின் அத்து மீறல்களையும் பதிவுச் செய்ய தவறவே இல்லை. “எங்க தலைக்கு தில்ல பார்த்தியா ” என்ற வசனம் தான் நினைவுக்கு வந்தது.
நெய்வேலி நகரியத்தில் உள்ள தொழிலாளர்கள் (குறிப்பாக INCOSERV ) மட்டுமல்ல, ஒரு கோணத்தில் அனைத்து நெய்வேலிவாசிகளுமே இவருக்கு நன்றி கடன் பட்டிருக்குறோம். அவ்வளவு பங்களிப்பை ஆற்றிருக்கிறார் இவரது பணி காலத்தில்.
வாத்தி படத்தில் பதிவு செய்யப்பட ஆசிரியரின் வகுப்பறை அமர்வுகளை  தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்புவதை தோழர் சி துரைக்கண்ணு பல வருடத்திற்கு முன்பே செய்திருக்கிறார்
இந்த புத்தகம் பொது வாழ்வில் நிகழ்ந்தவைகளால் நிறைந்தது. இவரது குடும்ப வாழ்க்கை பற்றிய சிறிய குறிப்பாக கடைசியில் சில பக்கங்களில் விட்டுச் சென்றிருக்கிறார். சற்று கூர்ந்து கவனித்தால்  அதில் கூட இவரது முற்போக்கு  கொள்கையில் எந்த வித சமரசமற்று தனது மகள்களது திருமணத்தை நடத்தியது பற்றிய குறிப்பே இருக்கிறது.
இந்த மனிதருக்குள் அழகியலும் ஒளிந்திருக்கிறது (எனக்கு இயல்பாகவே சினிமா பார்ப்பதில் நல்ல ஆர்வம் என்பதை 40ஆம் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் ). நம் நாடு படும் பாடு, அதில் வாழ்வதற்கே பெரும் போராட்டங்களை கோரும் இவரது வாழ்க்கையானது  போராட்டம் நிறைந்ததால் அவரது இலகுவான அழகியல் பக்கங்களை பெரிதும் இந்த படைப்பில் காணமுடியவில்லை.இந்த புத்தகத்தோடு நிறுத்திவிடாமல் அடுத்து மேலும் மேலும் எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வாழ்வதற்கே தள்ளாடும் போது அழகியல் முக்கியமல்ல தான். எழுத்தாளர் சரத் சந்திரா சட்டோபாத்யாயா கண்டதை டாகுர் காண மறுத்ததிலும் ஒரு அரசியல் உள்ளது.
பறங்கியரின் ஆட்சியில் ஆங்கிலேயர்கள் இலக்கியத்தை சரத் சந்திர சட்டோபாத்யாயா எடுத்துச் செல்லும் திசையிலிருந்து (அவரது பதேர் தாபி மற்றும் பிற படைப்புகளைப் பார்க்கவும்) தாகூரின் மாய உலகுக்கு (கீதாஞ்சலியைப் பார்க்கவும்) திசை திருப்ப விரும்பினர்.
தாகூரைத் தொடர்ந்து, இந்தி எழுத்தாளர்கள் நவீன காதல்வாதத்தை கையில் எடுத்தனர், இது இந்தி இலக்கியத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்தியாவில் கபீர், ஃபைஸ், காசி நஸ்ருல் இஸ்லாம், சுப்ரமணிய பாரதியார்  போன்றவர்கள், ஐரோப்பாவில் டிக்கன்ஸ், ஷா, பால்சாக், விக்டர் ஹ்யூகோ, மாக்சிம் கோர்கி, அமெரிக்காவில் வால்ட் விட்மேன், அப்டன் சின்க்ளேர் மற்றும் ஸ்டெய்ன்பெக் போன்ற கலைஞர்கள் சமூக நோக்கத்திற்காக   கலைபணியை முன்னெடுத்தனர் , நவீன காதல்வாத  கவிஞர்கள் வெறும் அழகியலுக்காக  கலையை கொண்டு சென்றனர் , இதைத்தான்  தாகூர் போதித்து நடைமுறைப்படுத்திவந்தார், இந்த போக்கு இந்தியா போன்ற ஏழை நாட்டில் உண்மையில் ஒரு தப்பித்தல் மனநிலைதான்.
“நாம் நமது அன்றாடத்தில் பலவகையான சமரசங்களுடன் வாழ்க்கிறோம். உலகியல் கவலைகள் கொண்டிருக்கிறோம். அதன் பொருட்டு குற்ற உணர்ச்சி அடைந்துகொண்டுமிருக்கொறோம். அந்நிலையில் ஒரு நம்பிக்கையின் பொருட்டு வாழ்க்கையை அர்ப்பணித்த ஒருவர் நமக்கு ஆழமான குற்ற உணர்ச்சியை அளிக்கிறார். நமக்கு ஒரு வகை கிளர்ச்சியையும் அளிக்கிறார். நாம் அவரை நம்மை அறியாமலேயே நம்மை விட உயர்ந்த இடத்த்தில் வைக்கிறோம். அவரைக் கர்மவீரர் என நம்பத் தலைபடுகோறோம். வழிபாட்டுணர்வு கொள்கிறோம்.
.
.
.
இயல்பாக இளைஞர்கள் தீவிரப் போக்குக்கொண்ட இயக்கங்களில் சேர்க்கிறார்கள். தன்னை எதிர்கால வாழ்க்கைக்கு தயார்படுத்திக் கொள்ளவேண்டிய அகவையில் அவர்கள் அங்கே செல்வது ஒரு மாபெரும் வீணடிப்பு. ”
-ஜெயமோகன்
மேற்காணும் ஜெயமோகனின் வரிகளை நான்  எதிரொலி அறையில் வசதியாக கேட்டுக்கொண்டிருக்கும் மனநிலையில் இருந்தாலும் செயல்வீரர்  சி துரைக்கண்ணு அவர்களின் வீரத்திற்கு தலைவணங்குகிறேன்.
“என் வாழ்க்கையே என் செய்தி” என்ற காந்தியின் கூற்று இவருக்கு பொருந்தும்.
இந்த புத்தகத்தை வாசித்துவிட்டு என் தந்தையிடம் incoserv, அன்சாரி, தலைமை ஆசிரியர் சுந்தரம் என சிலரை சுட்டிக்காட்டி , நினைவிருக்கிறதா என்று கேட்டதற்கு ஆம் சிலது நினைவிருக்கிறது என்றும் குறிப்பாக incoserv குறித்து மேலும் சில தகவல்களை பகிர்ந்தார். இவை அனைத்தும் கேட்ட நான், இவ்வளவு காலங்களை நெய்வேலி நகரியத்தில் கழித்த எனக்கு இதெல்லாம் தெரியாமல் போய்விட்டதே என்று கூறினேன். அதற்கு தந்தையிடம் வந்த பதில் “தெரிஞ்சு என்ன பண்ணப் போற? “
ஆம் தெரிஞ்சு என்ன பண்ணப் போறேன் ?
தைப்பொங்கலன்று இந்த புத்தகத்தைக் குறித்த வாசுகி பாஸ்கரின் பதிவை முகநூலில் பகிர்ந்து இந்த படைப்பை அறிமுகப் படுத்திய என் நன்மதிப்பிற்குரிய ஆசிரியர் Selvan Natesan அவர்களுக்கு மிகுந்த நன்றிகள்
நன்றியுடன் NLC யில்  தோழர் சி.துரைக்கண்ணு  அவர்களின் கல்வி புரட்சியால் பயனடைந்த பயனாளிகளில்  ஒருவன்
நூலின் தகவல்கள்: 

நூல்: நிற்க அதற்குத் தக 
ஆசிரியர்: சி.துரைக்கண்ணு
விலை: ₹.180
பதிப்பகம்: நீலம் பதிப்பகம்
வெளியான ஆண்டு: 2024
நூலை பெற தொடர்பு எண்: +91-6369825175

அறிமுகம் எழுதியவர்: 

அன்புக்குமரன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *