கோவிட்-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தவும், பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுக்கவும், பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கானவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் முடியாத மோடி அரசாங்கம், அச்சத்தால் உருவாகி இருக்கின்ற பீதியையும், எதிர்ப்புகளுக்கான பாதைகளைத் தடை செய்கின்ற பொதுமுடக்கத்தையும் பயன்படுத்தி, தனது தாக்குதல் இலக்குகளை இந்திய ஜனநாயகத்தின்மீது மாற்றிக் கொண்டிருக்கிறது.
ஒரு சுகாதார நெருக்கடியை சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய மனிதாபிமான பேரழிவாக நரேந்திர மோடி அரசாங்கத்தால் மாற்ற முடிந்திருக்கிறது. கோவிட்-19இலிருந்து தொடங்கிய அச்சுறுத்தல், இன்றைக்கு பல பரிமாணங்கள் கொண்ட நெருக்கடியாக மாறியிருக்கிறது. பொருளாதாரச் செயல்பாடுகள்அடியோடு சரிந்துவிட்டதன் விளைவாக, வேலை மற்றும் வருமான இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. அதிகாரத்துவ வரையறைகளால் உருவாக்கப்பட்டிருக்கும் மண்டலங்கள், கட்டுப்பாடுகள் மற்றும்நாட்டில் ஏதாவதொரு திருகைக்கூட எந்த அளவிற்கு திருகுவது என்பது குறித்து உள்துறை அமைச்சகத்தின் இறுக்கமான பிடி, வழக்கமாக வருகின்ற வழிகாட்டு நெறிமுறைகள் மீதான திருத்தங்கள் என்று இவற்றின் காரணமாக, குழப்பமான பொதுமுடக்கத்தின் தற்போதைய கட்டம் சாதகமான முடிவிற்கு வருவதற்கான வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உயர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், பொதுமுடக்கம் அகற்றப்படலாம்.அந்த நேரத்தில், பொருளாதாரத்திற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும்.
20 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரத் தொகுப்பு வந்து கொண்டிருப்பதாக பிரதமர் அறிவித்தபோது, மோடியின் ஆட்சி நாடகத்தன்மை மீது கொண்டிருக்கும் ஆர்வம் அனைவரின் முன் காட்சிக்கு வைக்கப்பட்டது. அவரது பல உரைகளில் இருந்ததைப் போலவே, இந்த உரையும் ஒரு குறியீட்டுச் சொல்லைக் கொண்டிருந்தது: இந்தியாவை ஆத்மநிர்பாராக மாற்றுவதே தனது நோக்கமாக இருப்பதாக அவர் பேசியிருந்தார். அந்த வார்த்தை, சுயசார்பு என்று அதிகாரப்பூர்வமாக ஆங்கிலத்தில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த வார்த்தைக்கான துல்லியமான, அச்சுறுத்துகின்ற பொருள், ஒருவரின் சொந்த விதிக்கான பொறுப்பை தானே ஏற்றுக் கொள்வது என்பதாகவே இருக்கின்றது. இன்னும் நினைவில் நீங்காது இருக்கின்ற பிப்ரவரி மாதமாரத்தான் பட்ஜெட் உரையை நிகழ்த்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அந்த வார்த்தையின் உண்மையான பொருளுக்கேற்றவாறு, மே 13 அன்று பொருளாதாரத் தொகுப்பை வெளியிட்டு பேசத் தொடங்கினார், ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்புகளில் தொடர்ந்து அவர் இதைச் செய்து வந்தார். அமைச்சர் வழங்கிய அந்த தொகுப்பு எதிர்பார்த்த அளவிற்கு இல்லாதது மட்டுமின்றி, அவர்களுடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழ்ச்சிக்கான பிரமாண்டமான பயிற்சியாகவும் இருந்தது. பிரதமர் வாக்குறுதியளித்ததை தோற்கடிக்கும் விதத்தில், மொத்தம் ரூ.20.97 லட்சம் கோடிக்கான தொகுப்பை அவரால் அறிவிக்க முடிந்தது. ஆனால் அந்த மிகப்பெரிய பொருளாதாரத் தொகுப்பு, உள்ளே எதுவுமின்றி வெற்றாகவே இருக்கிறது.
அந்த விரிவான சூழ்ச்சியில் பல முக்கியமான கூறுகள் இருந்தன. முதலாவதாக அந்த மோசடி, ஏற்கனவே பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளாக இந்திய ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்டு, மிகமோசமாகத் தோல்வியடைந்திருந்த நடவடிக்கைகள் அனைத்தையும் ஒன்றுசேர்த்து உள்ளடக்கி இருந்து. இரண்டாவதாக, இந்த கோவிட்அச்சுறுத்தல் தோன்றுவதற்கு முன்பாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த செலவினங்களின் கூறுகளை நிதியமைச்சர் இந்த தொகுப்பிற்குள் உள்ளடக்கியிருந்தார். மூன்றாவதாக, பல ஆண்டுகளில் பரவலாகச் செய்யப்பட வேண்டிய செலவினங்களை,’இங்கே மற்றும் இப்போது’ செலவழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தோன்றும் வகையில் அவர் தொகுப்பிற்குள் சேர்த்திருந்தார். நான்காவதாக, தனியார் முதலீட்டை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்ட பல கொள்கை அறிவிப்புகளை, அவையனைத்தும் ஏதோ இப்போதைய நடப்பு நெருக்கடியின் போது பொருளாதார நடவடிக்கைகளைத் தூண்டும் என்பது போல அவர் வெளியிட்டிருந்தார். ஐந்தாவது, கடுமையான மற்றும் முன்னெப்போதுமில்லாத அழுத்தம் நிலவுகின்ற சூழலில், நிதியச் சுருக்கை இறுக்குவதன் மூலம் இந்திய கூட்டாட்சி வரலாற்றிலே இதுவரையில் குறிப்பிடப்படாத பகுதிக்கு அவர் தன்னுடைய புதிய பயணங்களை மேற்கொண்டார். ஆறாவது, ஒரு முழு வாரம் கழித்து மத்திய அமைச்சரவை அறிவிக்கப் போகின்ற சில விஷயங்களைச் சொல்லாமல் விட்டுவிட்டு, உண்மையில் இருந்த சலுகைகளை விட, அந்த தொகுப்பு மிகப் பெரியது, அதிக விளைவை ஏற்படுத்தும் என்ற தோற்றத்தை விதைத்து, தொலைக்காட்சி முன்பாக தன்னுடைய அறிவிப்புகளை எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த பெருமளவு பார்வையாளர்களை மிகத் திறம்பட தவறாக அவர் வழிநடத்தியிருந்தார்.
பயனுள்ள தாக்கம் கொண்டதாக அறிவிக்கப்பட்ட இந்த செலவினங்கள், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்திற்கு மேல் இருக்காது என்பதே தொழில்முறை பொருளாதார வல்லுநர்களிடையே மட்டுமல்லாது, முதலீட்டு வங்கிகள் மற்றும் தரகர்களிடையேயும் இருக்கின்ற பொதுவான ஒருமித்த கருத்தாகவும் இருக்கிறது. மோடி அறிவித்த 10 சதவீத வாக்குறுதியிலிருந்து, அது வெகு தொலைவிலே அன்னியப்பட்டு இருக்கின்றது. தொற்றுநோயால் ஒரே நேரத்தில் உருவாகியிருக்கின்ற தேவை மற்றும் வழங்கல் ஆகிய இரண்டின் சரிவின் பின்னணியில், அரசு சார்ந்த செலவினங்களால் வழிநடத்தப்படுகின்ற நிதி விரிவாக்கம் மட்டுமே தனித்துவமான முக்கியத்துவத்துடன் இருக்கும் என்று, உலகெங்கிலும் உள்ள பரவலான மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கின்ற, பொருளாதார வல்லுநர்கள் பலரும் ஒப்புக்கொள்கிறார்கள். நிதிக் கொள்கை ஆதரவிற்கு குறிப்பிடத்தக்க வாய்ப்பை அளிக்கின்ற வகையில், நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பணப்புழக்கத்தை அதிகரிக்கின்ற வழியையே ஐக்கியப் பேரசு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாபகுதி நாடுகள் போன்ற பல நாடுகளும்தேர்ந்தெடுத்துள்ளன. நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் குறுகிய கால பணப்புழக்க நெருக்கடியை சந்தைகளின் திடீர் சரிவு ஏற்படுத்தியுள்ளதை இந்த நாடுகள் அங்கீகரித்திருந்தாலும், மந்தநிலையிலிருந்து மீள்வதற்குத் தேவையான தூண்டுதலை அளிக்க அவற்றின் நடவடிக்கைகள் போதுமானவையாக இருக்கவில்லை. எனவே, பணப்புழக்கத்தின் மூலமான தீர்விற்கும், நிதி வழியான தீர்விற்கும் இடையில் எதைத் தேர்வு செய்வது என்பது செயற்கையானது மட்டுமல்ல, இதுபோன்ற கடுமையான நெருக்கடியின் போது பொறுப்பற்றதும் ஆகும். உண்மை என்னவென்றால், சந்தைகள் சரிந்துவிட்டதால், இந்த இரு வழிகளிலுமே அரசே முன்னிலை வகிக்க வேண்டும். வெறுமனே வாய் வார்த்தைகளாக அல்லாமல், தன்னிடம் இருக்கின்ற பணத்தை வழங்கி அரசு இதில் திறம்படத் தலையிட வேண்டும்.
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், நடப்பு ஆண்டில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எதிர்பார்க்கப்படுகின்ற சரிவு குறித்து, முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை மே 22 அன்றுவெளியிட்ட போதிலும், அவர் எந்த அளவையும் அப்போது குறிப்பிடவில்லை. ரெப்போ விகிதத்தை 4 சதவீதமாக மேலும் குறைப்பதாகஅவர் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பு முதலீட்டை ஊக்குவிப்பதற்கான வாய்ப்பைக் கொண்டிருக்கவில்லை. கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்றாலும், கடன் வாங்கியவர்களிடம் முந்தைய அறிவிப்பு ஏற்படுத்திய அளவிற்கான வரவேற்பையே அது பெறக்கூடும். ஏனெனில், கடன் வாங்கியவர்களிடம் இருக்கின்ற, கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்குப் பதிலாக, வெறுமனே திருப்பிச் செலுத்தும் காலத்தை மட்டுமே அந்த அறிவிப்பு ஒத்திவைத்ததால், ஒரு கட்டத்தில் அதிக சுமையை சுமத்தக் கூடியதாகவே அந்த அறிவிப்பு இருக்கிறது.

மார்ச் மாதத்தில் மோடி தனது முதல் உரையில் வாக்குறுதியளித்திருந்த பணிக்குழுவை நிறுவுவதை நிர்மலா சீதாராமன் தவறவிட்டிருப்பது, மதிப்பீடுகள் எதுவும் இல்லாத நிலையில் தான் தேர்ந்தெடுக்கும் எந்த பாதையிலும் அவரால் பயணத்தைத் தொடர முடியும் என்பதாகவே இருக்கிறது. உற்பத்தித் திறனும், விநியோகச் சங்கிலிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது. புவியியல், மக்கள்தொகை அல்லது ஒரு கூட்டாட்சி அமைப்பிற்குள் இருக்கின்ற அரசியல் நடத்தையின் நுணுக்கங்கள் ஆகிய எவற்றின் மீது எந்தக் கவனமும் செலுத்தாமல், வண்ண-குறியிடப்பட்ட மண்டலங்கள் என்று தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த நியாயமற்ற பிரிவினையானது, விஷயங்களை மிக மோசமான நிலைக்கே கொண்டு சென்றிருக்கிறது. இந்த நடவடிக்கையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் முத்திரைதெளிவாகக் காணப்படுகிறது.
நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகளுக்குப் பிறகு, இயந்திர கருவிகளைத் தயாரிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த பெங்களூரில் உள்ள ஒரு சிறிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், தனது நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான மூன்று முக்கிய அச்சுகள்- சென்னை மற்றும் நகரத்தைச் சுற்றியுள்ள உற்பத்தி நிறுவனங்கள், புனே-கோலாப்பூர் மற்றும் குர்கான்-மானேசர் பகுதிகள் – தங்களுடைய தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான தேவையில் 75 சதவீத்தைக் கொண்டிருப்பதாக கூறினார். ’இந்த மூன்று அச்சுகளும் அவற்றின் திறனில் சுமார் 7-10 சதவீதத்தில் மட்டுமே இப்போது இயங்குகின்றன’ என்று அவர் கூறினார். தன்னுடைய நிறுவனம், தற்போதைய அளவிலிருந்து சுமார் 25 சதவீதத்திற்கு தன்னுடைய நடவடிக்கைகளை அதிகரித்துக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார். ’ஆனால் எனது வாடிக்கையாளர்கள் முடங்கிக் கிடக்கும் போது, எனது முழுத் திறனையும் கொண்டு செயல்படுவதால் என்ன பயன் இருக்கப் போகிறது?’ என்ற கேள்வியை எழுப்பிய அவர், இந்தியாவில் ’சிறிய அளவிலானவை’ என்று கருதப்படுகின்ற, ஒப்பீட்டளவில் பெரிய நிறுவனங்கள், அதாவது 50 முதல் 100 தொழிலாளர்கள் வரை வேலை செய்து வருகின்ற நிறுவனங்கள், இப்போது மரண பயத்தில் இருக்கின்றன என்றுசுட்டிக்காட்டினார்.
சுமார் 30 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்ற பெங்களூரில் உள்ள பீன்யா தொழிற்பேட்டையில் ஒரு சிறிய தொழில்துறை நிறுவனத்தின் உரிமையாளர், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ.க்கள்) மிகவும் மோசமான நிலையில், ஜிஎஸ்டி வரியைச் செலுத்துவதற்காக கடன் வாங்க வேண்டிய நிலைமையில் இருப்பதாக கூறினார். பெரிய நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்ற பொருட்களுக்கான தொகை குறிப்பிட்ட நேரத்திற்குள் செலுத்தப்படுவதில்லை. ஆனால் அதே நேரத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலித்ததாகக் கருதப்படும் வரியை உடனே செலுத்துவதற்கு பொறுப்பேற்க வேண்டியுள்ளது. பெரிய நிறுவனங்கள் தாங்கள் பெற்றுக் கொண்ட பொருட்களுக்கு பணம் செலுத்துவதை தாமதப்டுத்துவது மட்டுமல்லாமல், அதற்கான வரி செலுத்துவதையும் தாமதப்படுத்துகின்றன. எனவே சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மீது இரட்டை தாக்குதல் நடத்தப்படுகிறது. தனது சொந்த அனுபவத்தை விவரித்த அந்த உரிமையாளர் ’ஜிஎஸ்டி வரியைச் செலுத்துவதற்காக, பொதுத்துறை வங்கியிடமிருந்து ரூ.25 லட்சம் கடன் வாங்கியுள்ளேன். கண்டிப்பாக இந்தக் கடன் அனுமதிக்கப்படக் கூடாதது என்பது வங்கிக்குத் தெரியும் என்றாலும், எனது இக்கட்டான நிலையை வங்கி உணர்ந்திருக்கிறது’ என்று கூறினார்.
இந்தியாவின் தொழில்துறை திறனில் முக்கிய அம்சமாக இருக்கின்ற சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, இரண்டு அடிப்படை காரணங்களுக்காக உற்பத்தி சங்கிலி பாதிக்கப்பட்டிருப்பதைக் காட்டுகின்றது. முதலாவதாக, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களால், குறிப்பாக மூலதனக் கட்டுப்பாடுகளிலிருந்து எழுகின்ற பணப்புழக்க சிக்கல்களைச் சமாளிக்க முடியவில்லை என்பதால் அவை சரிந்து கொண்டிருக்கின்றன. இரண்டாவதாக, பொதுமுடக்கத்தால் ஏற்பட்டிருக்கும் நிலைமைகள், இந்த நிறுவனங்கள் திவால் நிலைக்குச் செல்லவிருப்பதாக அச்சுறுத்துவதன் மூலம், இந்த நெருக்கடியை அதிகரித்துள்ளன. சந்தைகள் மூடப்படுவதோடு, பொதுமுடக்கத்தின் தளர்வு குறித்த குழப்பமான நிலைமைகள், இந்த நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்புகளுக்கான தேவையை மதிப்பிடுவது கடினம் என்ற நிலைமைகளின் கீழ் இயங்குவதையே காட்டுகின்றன. இவ்வாறுஉற்பத்திச் சங்கிலியில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளுடன், தங்களுடைய பொருட்களுக்கான தேவையை மதிப்பிடுவதும் கிட்டத்தட்ட சாத்தியமற்றுப் போயிருப்பதன் காரணமாக, சந்தை நிலைமைகளைக் கணிப்பதற்கான அவர்களுடைய திறன் பலவீனமடைந்திருக்கிறது. விநியோகஸ்தர்கள் திறப்பதற்கு முன்பாக, தங்களால் எவ்வாறு உற்பத்தியைத் தொடங்க முடியும் என்று பஜாஜ் ஆட்டோவின் தலைமை நிர்வாக அதிகாரியும், எம்.டி.யுமான ராஜீவ் பஜாஜ் கேட்பதில் அர்த்தமில்லாமல் இல்லை. உற்பத்திச் சங்கிலிஅடுக்குகளின் உச்சியில் இருக்கின்ற நிறுவனத்தின் தலைவிதியே இவ்வாறு இருக்கும் என்றால், மிகச் சிறிய நிறுவனங்களின் நிலைமையைக் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.
இந்தியாவில் உள்ள சிறு நிறுவங்களைப் பொறுத்தவரை, பெரிய நிறுவனங்கள் சரியான நேரத்தில் பணத்தைச் செலுத்தத் தவறுவதே, தீராத பிரச்சனையாக இருக்கிறது. 45 நாட்கள் என்று வரம்பை நிர்ணயிக்கின்ற சட்டம் இருந்தபோதிலும், சிறிய நிறுவனங்கள் தங்களுக்கான நியாயமான கோரிக்கைகளைப் பெறுவதற்கான சட்ட விதிகளை அமலாக்குவதற்குப் போராட வேண்டியிருக்கிறது. ’ஒரு தொழில்துறைத் தொகுதிக்குள் இயங்கி வரும் ஒரு சிறிய அளவிலான நிறுவனத்திற்கு பல வாடிக்கையாளர்கள் இருப்பதில்லை என்பதால், அதற்கு வர வேண்டிய நிலுவைத் தொகை வழங்கப்படாதபோது, பெரிய நிறுவனத்திற்கு எதிராகச் செயல்படுவதற்கான அதன் திறன் பாதிக்கப்படுகிறது’ என்று கூறிய அந்த தொழிலதிபர், ’ஒன்று அந்த வணிகத்தை விட்டு முழுவதுமாக வெளியேறுவது அல்லது அதற்குள்ளிருந்து எப்படியாவது போராடுவது என்று இந்த இரண்டில் ஒன்றையே அந்த உரிமையாளர் தேர்வு செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தார்.
நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குமாறு, அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசுத் துறைகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இருப்பினும், சிறு நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டியதைவிட, பல மடங்கு அதிகமாக பெரிய தனியார் நிறுவனங்களுக்கே பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத் துறைகள் செலுத்த வேண்டியிருப்பதாக சிறு தொழில்துறை சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. பெரிய தனியார் நிறுவனங்களுக்கு சரியான நேரத்தில் பணம் செலுத்துவதை உறுதி செய்வதற்கான செல்வாக்கை நிதியமைச்சர் ஏற்கனவே கொண்டிருக்கவில்லை என்பது இப்போது வெளிப்படையாகத் தெரிகிறது.
விவரிப்பில் இருந்த கொடுமை
நிர்மலா சீதாராமன் அறிவித்த அந்த தொகுப்பின் முக்கியப்பகுதியாக, வங்கிகளால் அரசாங்க உத்தரவாதத்துடன், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடனாக ரூ.3 லட்சம் கோடி வழங்கப்படும் என்ற வாக்குறுதிஇருந்தது, ரூ.25 கோடி வரை கடன்கள் நிலுவையிலும், ஆண்டு வருமானம் ரூ.100 கோடியும் கொண்ட நிறுவனங்கள் இந்தக் கடனைப் பெறுவதற்குத் தகுதி பெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும், இந்த அறிவிப்பு ஏற்கனவே கிடைத்திருக்க வேண்டியது என்ற மகிழ்ச்சியான வரவேற்பு, அதற்குப் பிறகு வெளியான நிபந்தனைகளால் உடனடியாகத் தளர்வடைந்தது. முதலாவதாக, இந்த தொகுப்பை அங்கீகரித்த மே 20 அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, அந்த கடன் வரம்பு குறித்து தெளிவுபடுத்தப்பட்டது. அதாவது 2020 பிப்ரவரி 29க்கு முன்னர் 60 நாட்கள் வரை நிலுவையில் உள்ள கடன் தொகையை குறிப்பிட்டு அந்த தெளிவுரை இருந்தது. அந்த தேதி மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது கோவிட்-19ஆல் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிறுவனங்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணத்தை அது அதிர்ச்சியூட்டும் வகையில், வெளிப்படையாக நிராகரித்தது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு நிவாரணம் எதுவுமே கிடைக்கவில்லை. அதனால், தொடர்ந்து ஊதியம் செலுத்துவது, சரக்குகளைப் பராமரிப்பது, தாமதமாக பணத்தைப் பெறுவதுடன், பொதுமுடக்கத்தின் போது மேற்செலவுகளைச் செலுத்த வேண்டிய நிலையிலிருந்த நிறுவனங்கள் அரசாங்கத்தின் எந்த உதவியுமின்றி கஷ்டமான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தன. மேலும் அறிவிக்கப்பட்டவாறு, கடன்களுக்கு நேரடியாக அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்படாமல், தேசிய கடன் உத்தரவாத அறங்காவலர் நிறுவனம் லிமிடெட் (என்.சி.ஜி.டி.சி) நடத்தும் திட்டத்தின் மூலம் உத்தரவாதம் வழங்கப்படுவதாகவும் பின்னர் அறிவிக்கப்பட்டது.
அமைச்சரவை ஒப்புதல் வந்த பிறகு, ரூ.3 லட்சம் கோடி என்பது சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மட்டும் அல்லாது, வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கும் (என்.பி.எஃப்.சி) பொருந்தும் என்பது தெளிவாகிப் போனது. தகுதிவாய்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்த கடன்களை 9.25 சதவீதம் என்ற வட்டி விகிதத்தில் பெற முடியும், ஆனால் வங்கிகள் என்.பி.எஃப்.சியிடமிருந்து 14 சதவீத வீதத்தில் வட்டி வசூலித்துக் கொள்ளலாம். இந்த வேறுபாடு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை விடுத்து, என்.பி.எஃப்.சிக்கு வங்கிகள் கடன் வழங்குவதை மிகவும் கவர்ச்சிகரமானதாக்காதா என்ற கேள்விக்கு காலம் மட்டுமே பதில் சொல்லக் கூடும். அசல் தொகையை ஒரு வருட கால அவகாசத்திற்குப் பிறகு செலுத்தலாம். அதே நேரத்தில் கடன்களுக்கு நான்கு ஆண்டு கால அவகாசம் இருக்கும். ஆனாலும் குறைந்தபட்சம் அவர்கள் விரும்பிய திசையில் இந்த திட்டம் செல்லாமல் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. வங்கிகள் தங்களிடம் இருந்து வருகின்ற முக்கியமான கடன் வாங்குபவர்களைத் தவிர, வேறு யாருக்கும் கடன் கொடுக்கத் தயங்குவது அனைவரும் அறிந்ததே. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களாக கடன் வாங்குபவர்களின் வாராக் கடன்களின் அளவு (என்.பி.ஏ), பெருநிறுவங்களாக கடன் வாங்கியவர்களை விட மிகக் குறைவு என்ற போதிலும், வங்கிகள் இவ்வாறே நடந்து கொள்கின்றன.
அரசாங்கத்திடமிருந்து கிடைத்திருக்கும் ’ஆறுதல்’ கடிதம் உதவியிருக்கலாம் என்று வங்கியாளர்கள் கூறுகின்றனர். ஆனாலும், கடன் உத்தரவாதம் என்பதற்கு, வங்கிகள் சரியான, விடாமுயற்சியை மேற்கொள்ள வேண்டியதில்லை என்பதாகவோ அல்லது கடன் வாங்குபவர் கடனைத் திருப்பச் செலுத்த முடியாத நிலைக்கு வந்தால், அதை உத்தரவாதம் அளித்தவரிடம் விளக்க வேண்டும் என்றோ அர்த்தமல்ல என்று வங்கி மேலாளர் ஒருவர் கூறினார். இந்த திட்டத்திற்கு நிதியமைச்சகத்தின் அர்ப்பணிப்பு ரூ.41,600 கோடி மட்டுமே. அதுவும் அந்த தொகை நான்கு ஆண்டுகளுக்கானது. வங்கிகள் தங்கள் இருப்புநிலை அறிக்கைகளில் 20 சதவீத தொகையை நேரவிருக்கும் ஆபத்துகளுக்கான கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதால், இந்த விதிகள் குறிப்பிடத்தக்க வகையில் நேரடியாக, வங்கிகளின் இருப்புநிலை அறிக்கைகளில் லாபங்களைக் குறைத்துக் காட்டவே செய்யும்.
நிதியமைச்சரால் அறிவிக்கப்பட்ட என்.பி.எஃப்.சிகள் மற்றும் வீட்டு நிதி நிறுவனங்களுக்கான ரூ.30,000 கோடி மதிப்புள்ள கடன்கள் என்ற மற்றொரு திட்டத்தையும், அமைச்சரவையின் இறுதி ஒப்புதலுடன் வெளியிடப்பட்ட நிபந்தனைகள்மோசடி என்றே காட்டுகின்றன. இதற்கான சிக்கலான செயல்முறை, பொதுத்துறை வங்கியால் அமைக்கப்படுகின்ற எஸ்பிவியை, அதாவது சிறப்பு நோக்க துணை நிறுவனத்தை (SPV) உள்ளடக்கி இருக்கிறது. ரிசர்வ் வங்கியால் வாங்கப்படுகின்ற, அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்படுகின்ற பத்திரங்களை எஸ்பிவி வழங்கும். அந்தப் பத்திரங்களை விற்பனை செய்வதன் மூலம் எஸ்பிவிக்கு கிடைக்கும் நிதி என்.பி.எஃப்.சிகள் மற்றும் வீட்டு நிதி நிறுவனங்களின் கடனுக்காக ஜப்தி செய்யப்பட்ட சொத்துக்களை வாங்குவதற்குப் பயன்படும். இதில் முக்கியமாக இருப்பது என்னவென்றால், குறுகிய கால, அதாவது மூன்று மாதங்கள் வரையிலான பத்திரங்களுக்கு மட்டுமே இது பொருந்தும். என்.பி.எஃப்.சிகள் மற்றும் வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் பெற்றிருக்கும் கடன் மற்றும் வழங்கியுள்ள கடன் முதிர்வுகளுக்கு இடையே பொருத்தமின்மையை உருவாக்குவதாகவே இருக்கும் என்பதால், இந்த திட்டமும் வெற்றி அடைவதற்கான வாய்ப்பு இருக்கவில்லை.
நிவாரணத் தொகுப்பாக அறிவிக்கப்பட்ட இந்த தொகுப்பிற்குள் இருந்த சில மட்டுமீறிய பகுதிகள், சுதந்திரம் அடைந்தது முதல் மாநிலங்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த எல்லைகளுக்குள் ஆழமான பயணங்களை மேற்கொண்டு, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவே இருக்கின்றன., அரசியலமைப்புச் சட்டத்தில், மாநில விவகாரமாகப் பட்டியலிடப்பட்டுள்ள விவசாயத்தை, மோடி அரசாங்கம் இப்போது மீறியிருப்பதற்கான தெளிவான எடுத்துக்காட்டாக,மாநிலங்களில் இருக்கின்ற வேளாண் உற்பத்தி சந்தைப்படுத்தல் குழு (ஏபிஎம்சி) சட்டத்தை அகற்றியிருப்பதுஇருக்கிறது. பத்திரிகையாளர் சந்திப்பில், இந்த விஷயத்தை ஒத்திசைவுப் பட்டியலுக்குள் கொண்டு வருவதற்காக சட்டத்தில் திருத்தம் செய்ய முடியும் என்று எந்த வெட்கமுமில்லாமல் அதிகாரிகள் கூறினர். அந்தக் கூட்டத்தில், உயர் அதிகாரி ஒருவர் மத்திய சட்டங்கள் மாநில சட்டங்களை விட மேலோங்கியவை என்ற வாதத்தை முன்வைத்தார். மாநிலங்களிடமிருந்து மேலும் மேலும் அதிகாரங்களைப் பறித்தலே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது. மாநில நிதி நிலைமை கடுமையான நெருக்கடியில் உள்ள இப்போதைய நிலையில், இத்தகைய தாக்குதல்களை எதிர்த்து நிற்கும் திறனை மாநிலங்கள் இழந்து நிற்கின்றன. அந்த நிலையில் இது போன்ற நடவடிக்கைகள் மிகவும் கவலை கொள்ள வைப்பதாகவே இருக்கின்றன.
தங்களுடைய மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.எஸ்.டி.பி) மூன்று சதவீத புள்ளிகளாக நிர்ணயிக்கப்பட்டிருக்கின்ற வரம்பை விட இரண்டு சதவீதம் கூடுதலாக, சந்தையில் இருந்து மாநிலங்கள் கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று நிர்மலா சீதாராமன் கடைசி நாளில் அறிவித்தபோது, அந்த அறிவிப்பு மாநிலங்கள் மீது போடப்பட்ட மிகப்பெரிய குண்டாகவே இருந்தது. சில நிபந்தனைகளைக் கடைபிடித்து மாநிலங்கள் அதிக கடன் வாங்கலாம் என்று சொல்லி, அந்த நிபந்தனைகளை மத்திய அரசு பட்டியலிட்டது. அந்த பட்டியலில் இருந்த நிபந்தனைகளின் திணிப்பு,இந்தியாவிலேயே சர்வதேச நாணய நிதியம் என்ற ஒன்று இப்போது அமைந்திருக்கிறதோ என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது! அந்த நிபந்தனைகள் அனைத்தும் தன்னிச்சையாக இருப்பதாகவே தோன்றுகின்றன. மேலும் மாநில அளவில் இருக்கின்ற கொள்கைகளைத் திருத்துவது, அந்த நடவடிக்கைகளை ’சீர்திருத்தங்கள்’ என்று கூறுவது போன்ற செயல்பாடுகள் மோடி ஆட்சிதன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி, மாநிலங்களுக்கு கட்டளையிடுவதாகவே இருக்கின்றன. ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை மாநிலங்கள் செயல்படுத்த வேண்டும் என்று ஒரு நிபந்தனை இருக்கிறது; மற்றொரு நிபந்தனை மாநில அளவில் வணிகத்தை எளிதாக்குகிறமோடியின் தனிப்பட்ட விருப்பத்துடன் இணங்குவதாக இருக்கிறது; மின்சாரத் துறை ’சீர்திருத்தங்களுக்கு’ நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளுடன் விரிவான இணக்கத்தைக் கோருவதாக மேலும் சில நிபந்தனைகள் இருக்கின்றன.
மாநிலங்கள் மீதான தாக்குதல்
தற்போதிருக்கும் பணவீக்கத்திற்கேற்ப, சொத்து வரி, பயனர் கட்டணங்கள் மற்றும் பிற வரிகளில் அதிகரிப்பை அவ்வப்போது மாநிலங்களும் செய்ய வேண்டிய தேவையிருக்கின்றது. மாநிலங்களின் வருவாய் சுருங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்த நிபந்தனைகள் வந்திருக்கின்றன. இந்த நிபந்தனைகளுக்கு பதிலளிக்கும் வகையில் பேசியகேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக், இவ்வாறான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வது கேரளாவுக்கு ஒரு பிரச்சனையாக இருக்காது என்றாலும், இந்த நடவடிக்கைகள் மாநிலங்களின் சுயாட்சியில் மத்திய அரசு பெரிய அளவில் ஊடுருவுவதையே குறிக்கிறது’ என்றார். சத்தீஸ்கர் மாநில நிதியமைச்சர் டி.எஸ்.சிங் தியோ, ’இது கூட்டாட்சி கட்டமைப்பின் மீதான தாக்குதலாக இருப்பதோடு, மிகவும் மோசமான பொருளுடனும் இருக்கிறது. மத்திய அரசின் கொள்கைகளை மாநிலங்கள் மீது திணிப்பதாக இருக்கிறது. இது சரியென்றால், அதற்குப் பிறகு மாநில அரசுகள் எதற்காக இருக்க வேண்டும்?’ என்ற கேள்வியை எழுப்புகிறார். 14ஆவது நிதிக்குழுவின் உறுப்பினரான கோவிந்தராவ், ’இந்த நடவடிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் மத்திய அரசின் அதிகாரங்களைப் பயன்படுத்துவதாகும்’ என்கிறார். சட்டம் அத்தகைய அதிகாரங்களை மத்திய அரசிற்கு வழங்கியிருந்தாலும், அந்த அதிகாரங்கள் இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். ’இந்த அழுத்தம் சந்தைக் கடன்களுக்குப் பயன்படுத்தப்படுகிறதே தவிர, மானியங்களுக்கு அல்ல என்பதால், அது போலித்தனமானது’ என்று ஒரு தொலைக்காட்சி நேர்காணலின் போது அவர் குறிப்பிட்டார்.
ஆந்திர மாநிலத்தின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் ராமகிருஷ்ண ராவ், நிபந்தனைகளை அறிவித்திருக்கும் அந்தக் கடிதம் ’அதிகாரத்துவத்தின் பெருமகிழ்ச்சி’யாக இருப்பதாக கூறினார். ’நிபந்தனைகளுக்குப் பிறகு நிபந்தனைகள், அதற்குப் பிறகு நிபந்தனைகள் என்று ஏராளமான நிபந்தனைகள் உள்ளன, நிபந்தனைகளுக்குள் கூட நிபந்தனைகள் இருக்கின்றன’ என்று ஒரு தொலைக்காட்சி குழு விவாதத்தின் போது அவர் கூறினார்.

இதன் விளைவாக, ஐந்து நாட்களுக்கு மேலாக அறிவிப்புகளை வெளியிட்டு வந்த நிர்மலா சீதாராமன், நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குகின்ற கொள்கை நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் மோடி அரசு இருக்கவில்லை என்ற வேதனையான செய்தியை மட்டுமே நமக்கு வழங்கியுள்ளார். அவர்வெளிப்படுத்திய தெளிவான செய்தியின் காரணமாக, அவர்கூறிய அல்லது கூறாது விட்ட இரண்டு அம்சங்கள் தனித்து நிற்கின்றன. முதலாவதாக, பொதுமுடக்கத்தின்படுதோல்வி. ஏராளமான மனித உயிர்கள் பலி வாங்கப்பட்டிருப்பது, குறிப்பாக இந்தியாவின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு என்ன நேர்ந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இரண்டாவதாக, சில ஏழ்மையான மாநிலங்களில், அதிக எண்ணிக்கையில் புலம்பெயர்ந்தோர் தங்கள் கிராமங்களுக்குச் செல்வது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தை பெருமளவில் அமல்படுத்துவதன் மூலம் உடனடியாக உதவியைக் கோருவதாக இருக்கிறது. இந்த இரண்டு விஷயங்களிலும் அவர் தெளிவற்றவராக, தவறாக வழிநடத்தப்பட்டவராக இருந்ததோடு, அளவிற்கு மீறிய தவறான வாதங்களையும் முன்வைக்கவும் செய்தார்.
எட்டு கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, இரண்டு மாதங்களுக்கு உணவு தானியங்களை வழங்குவதற்காக அரசாங்கம் ரூ.3,500 கோடியை வழங்குவதாக அவர் கூறினார். அவருடைய இந்த கூற்று பல சிக்கல்கள் கொண்டதாக இருக்கின்றது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாமல், உணவு தானியங்களை அவர்களுக்கு வழங்குவதற்கு என்ன திட்டத்தை அவர் வைத்திருக்கிறார்? முகாம்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார், ஆனால் இந்தியாவில் இருக்கின்ற இவ்வாறான முகாம்களில் தங்கியிருக்கும் தொழிலாளர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் கேரளாவில் மட்டுமே இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசாங்கத்தின் வாக்குமூலத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். புலம்பெயர்ந்தோரில் ஒரு சிறிய பகுதியினரே, மாநிலங்களுக்கு இடையில் புலம் பெயர்ந்து குடியேறியவர்களாக இந்த முகாம்களில் தங்கியிருக்கின்றனர் என்பது அதிலிருந்து தெளிவாகிறது. நிச்சயமாக, நிர்மலா சீதாராமன் கூறுவதைப் போல எட்டு கோடிப் பேர் முகாம்களில் தங்க வைக்கப்படவில்லை. உண்மையில், ஏற்கனவே செய்த வேலைக்குகூட பணத்தை தராமல், அவர்களுடைய முதலாளிகளால் விரட்டியடிக்கப்பட்ட பின்னர், சாலைகளில் அல்லது நகரங்களுக்குள் இருக்கின்ற திறந்த வெளியில் இந்த தொழிலாளர்கள் இருப்பதைஊடகங்களில் வெளியாகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன. தங்களுடைய பணியிடங்களுக்குள் இருக்கின்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்து பெரும்பாலான மாநிலங்களின் தொழிலாளர் துறைக்கு எதுவும் தெரியாது என்பதால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவே செய்யும். ’இன்ஸ்பெக்டர் ராஜ்’க்கு எதிராக தொழில்துறை லாபிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகளால் கொண்டு வரப்பட்ட அவர்களுக்கு இசைவான இந்த ஆட்சி, இந்த துறைகள் அனைத்தையும் திறனற்றவையாக ஆக்கி விட்டிருக்கிறது.
அதன் விளைவாக, இந்த புலம் பெயர்ந்த இந்திய குடிமக்கள் யார், அவர்கள் எங்கே இருக்கிறார்கள், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள், எத்தனை பேர் உள்ளனர் என்பது குறித்த தகவல்கள் நம்மிடையே மிகக் குறைவாகவே இருக்கின்றன. நம்மிடம் இருக்கின்ற ஒரே அதிகாரப்பூர்வ தகவல், பத்து ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டுமே. ஆனால் அதுவும்கூட முழுமையானது அல்ல. கல்வியாளர்கள், அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் கணக்கெடுப்புகள் இந்தியாவில் உள்ள புலம் பெயர்ந்தவர்கள் குறித்த தகவல்களை முழுமை செய்கின்றன. இவ்வாறு இருக்கின்ற இந்த தகவல் வெற்றிடம்தான், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்கள் வீடுகளுக்கு ரயில்கள் மூலமாக அரசாங்கம் அனுப்பி வைத்திருக்கிறது என்ற மகத்தான கூற்றை நிர்மலா சீதாராமனைச் சொல்ல வைத்திருக்கிறது. அவருக்குப் பின்னர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், கடந்த மூன்று மாதங்களில் ஒரு இந்தியர் கூட பட்டினியால் இறக்கவில்லை என்று சற்றும் நம்ப முடியாத தகவலைக் கூறியது மட்டுமல்லாது, 1,150 ’ஷ்ராமிக் ஸ்பெஷல்’ ரயில்களில் 15 லட்சம் தொழிலாளர்களை அனுப்பி வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். தங்களுடைய வெற்றியின் அளவைக் குறிக்கும் வகையில், இந்த எண்களை நிரூபிக்க முடியாததே இந்த இரண்டு அமைச்சர்களாலும் செய்ய முடிந்த சாதனையாக இருக்கிறது.
இந்தியாவில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பல வகைகளைச் சேர்ந்தவர்கள். குறுகிய காலத்திற்கு புலம் பெயர்பவர்கள், பருவகால வேலைவாய்ப்பைப் பொறுத்து வருடத்தில் முன்னும் பின்னுமாக நகரக்கூடிய வகையில், ’வட்ட’ முறையைப் பின்பற்றி புலம் பெயர்பவர்கள், மற்றும் நீண்ட கால வேலைக்காக, ஆனாலும் நிச்சயிக்கப்பட்ட வேலைக்காலம் இல்லாது புலம் பெயர்பவர்கள் என்று இந்தியாவிற்குள் புலம் பெயர்பவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
தங்களுடைய வேலையைத் தேடி மாநில எல்லைகளைக் கடக்கிறார்களா என்பதன் அடிப்படையிலும் புலம்பெயர்ந்து வேலை செய்பவர்கள்வகைப்படுத்தப்படுகிறார்கள். மாநிலங்களுக்கு இடையிலான புலம்பெயர்ந்தோரை இந்த பொதுமுடக்கம் மிகவும் கடுமையாக பாதித்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகின்றது. ஆனாலும் மாநிலத்திற்குள்ளாக புலம் பெயர்ந்திருப்பவர்கள் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்படவில்லை என்பது உண்மையல்ல. எடுத்துக்காட்டாக, பொதுமுடக்கத்தின்போது, பேருந்துகளை அனுமதிக்க கர்நாடக அரசு முடிவு செய்தது. ஆனாலும் அந்த தொழிலாளர்களிடமிருந்துஅளவிற்கு மீறி அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக, நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு வடக்கு கர்நாடகாவில் உள்ள இடங்களிலிருந்து பெங்களூரு வரைக்குமான கட்டணம் ரூ.1 லட்சத்துக்கு மேல் வசூலிக்கப்பட்டது. பெங்களூரு நகரம் மாநிலங்களுக்கிடையேயான புலம் பெயர்ந்தவர்களை அதிக எண்ணிக்கையில் கொண்டிருந்தாலும், அங்கே இருக்கின்ற மாநிலத்திற்குள்ளாக புலம் பெயர்ந்திருப்பவர்களின் எண்ணிக்கையும் குறைவானதல்ல. பல தொழில்களில், எடுத்துக்காட்டாகஉபெர் மற்றும் ஓலா ஓட்டுநர்கள் மற்றும் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுபவர்கள் என்று மாநிலத்திற்குள்ளே புலம் பெயர்ந்திருக்கும் பல தொழிலாளர்கள் இருக்கின்றனர்.
துரதிர்ஷ்டம் மிக்க புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
இந்தியாவில் கோவிட் நெருக்கடியின் முகமாக, இந்த துரதிர்ஷ்டம் மிக்க புலம்பெயர்ந்த தொழிலாளர்களே இருக்கின்றனர். இரண்டு மாதங்களுக்கும் மேலாக, தங்கள் முதலாளிகளால் கைவிடப்பட்ட இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து வேலையைக் கறக்கின்ற முயற்சியில், அவர்களை அங்கேயே தங்க வைக்க, மத்திய அரசாங்கமும், பெரும்பாலான மாநில அரசாங்கங்களும், தொழிலாளர்களைக் கைவிட்ட அதே முதலாளிகளுடன் மறைமுக ஒப்பந்தத்தில் ஈடுபட்டிருந்தன. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தை கால்நடையாகவோ, சைக்கிள்களிலோ, சிலர் தங்களுடைய செயற்கைக் கால்களைக் கொண்டோ அல்லது வயதான பெற்றோர்களைஅல்லது சிறு மற்றும் ஊனமுற்ற குழந்தைகளை கைவண்டிகளில் வைத்து தள்ளிக் கொண்டோ அவர்கள் பயணம் செய்துள்ளனர். உண்மையில், தங்களுடைய வீட்டை அடைவதற்கான தீவிர முயற்சியில், அவர்கள் நிலம், நீர் மற்றும் கடல் போன்ற அனைத்து போக்குவரத்து வழிகளையும் முயற்சித்துப் பார்த்திருக்கிறார்கள்.
இதுபோன்ற தங்களுடையசாதனைகளிலிருந்து, பியூஷ் கோயல் மற்றும் நிர்மலா சீதாராமன் போன்றவர்கள் என்னவிதமான திருப்தியை அடைகின்றனர்? இந்தியாவில் மாநிலங்களுக்குள் புலம் பெயர்ந்தவர்களை ஒதுக்கி வைத்து விட்டு பார்த்தாலும், பத்தாண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, மாநிலங்களுக்கு இடையேபுலம்பெயர்ந்து சென்றிருப்பவர்களின் எண்ணிக்கை 565 லட்சமாகும். இதுபோன்று புலம் பெயர்ந்த நான்கு பேரில் ஒருவருக்கு மட்டுமே வீட்டிற்குச் செல்வது தேவைப்பட்டாலோ அல்லது அவர் விரும்பினாலோ, இதுவரையிலும் 141 லட்சம் புலம்பெயர்ந்தோரை, அவர்களுடைய வீட்டிற்கு கோயல்திருப்பி அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஆனால், தங்களை வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு அவரிடம் கேட்டுக் கொண்ட, இந்தியாவின் மிக மோசமான ஏழைத் தொழிலாளர்களில் பத்தில் ஒரு பங்கினரை (பதினைந்து லட்சம் பேரை) மட்டுமேஅவர் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். வீடு திரும்ப விரும்பும் புலம்பெயர்ந்தோரைக் கொண்டு செல்வதற்காக அதிக ரயில்களை மாநிலங்கள்கேட்டு வாங்கிக் கொள்ளலாம் என்று கோயல் கோபமாக கூறியிருந்தார். ஆனாலும் இந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகும், துரதிர்ஷ்டம் மிக்க ஏழைமக்களுக்கென்று தாம் எதையும் செய்து தராதவராகவே இருக்கிறார் என்பது நிச்சயமாக பண்பாடற்ற செயலாகவே இருக்கிறது.
உண்மையில், மாநிலங்களுக்கு இடையிலான புலம் பெயர்வு இந்தியாவில் உள்ள வறுமையின் வரைபடத்தையே பிரதிபலிக்கிறது. உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களிலிருந்து நடைபெறும் புலம் பெயர்வு, இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையிலான புலம் பெயர்வுகளில் பாதி அளவிற்கு இருக்கிறது. இந்த சமன்பாட்டின் மறுபுறத்தில், மாநிலங்களுக்குள்ளேயே புலம் பெயர்வதில் பாதி அளவு மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெறுகின்றது. இந்த சூழலில், கோயலிடம் ஏற்பட்டிருக்கும் இந்த திடீர் உற்சாகம் நம்பமுடியாததாகவே உள்ளது. புலம்பெயர்ந்தோர் திரும்பிச் செல்லுகின்ற மாநிலங்கள் இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களாகும். திரும்பி வரும் தொழிலாளர்களுக்கு உடனடியாக இடமளிக்கும் திறன் அந்த மாநிலங்களிடம் மிகவும் பலவீனமாகவே இருக்கிறது. இப்போது ரயில்களை இயக்குவதற்குத் தயாராக இருக்கின்ற தன்னால், 50-60 நாட்களுக்கு முன்பு ஏன் ரயில்களை இயக்க முடியவில்லை என்ற கேள்வியை கோயல் தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும்.
பயணம் செய்ய விரும்புகின்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று பல மாநில அரசுகள் கேட்டுக் கொண்டுள்ளன. இவை நடைமுறையில் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக என்று அறியப்பட்டாலும், மே மாதத்திற்குள் குறைந்தது 55 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளதை மாநிலங்களிடம் உள்ள பட்டியல் தொகுப்பின் ஒரு பகுதி மட்டுமே வெளிப்படுத்துகிறது. அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் கற்பித்து வருபவரும், கோவிட் நெருக்கடியின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவலநிலை குறித்து பல அறிக்கைகளை வெளியிட்டு வருகின்ற, சிக்கித் தவிக்கின்ற தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு வளையம் (ஸ்வான்) என்ற அமைப்புடன் தொடர்புடையவருமான ராஜேந்திரன் நாராயணன், இவ்வாறான பதிவு செயல்முறை மிகுந்த குறைபாடுள்ளது என்று சுட்டிக்காட்டுகிறார் இவ்வாறான பதிவுமுறை அத்தகைய தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட பயணச்சீட்டுகளுக்கான கறுப்புச் சந்தையை வளர்த்தது என்கிறார். பஸ் அல்லது ரயிலில் பயணிப்பதற்காக, ஏழை புலம்பெயர்ந்தோர் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.8,000 வரை செலுத்துகின்றனர் என்று ஸ்வான் அமைப்பு சமீபத்தில் கூறியது.
இந்த தொழிலாளர்களுக்கான போக்குவரத்து தேவைகள் குறித்த அரசாங்கத்தின் மந்தமான நடவடிக்கைகள், வேண்டுமென்றே அவ்வாறு மேற்கொள்ளப்பட்டதாகவே தெரிகின்றன. கோவிட் நெருக்கடி தீர்ந்ததும், உற்பத்தித்திறனுக்காக தொழிலாளர்கள் தங்கள் பணியிடத்திலேயே இருக்க வேண்டும் என்பதை அரசாங்கமும், தொழில் மற்றும் வர்த்தக லாபிகளும் உணர்ந்திருக்கின்றன. கடந்த ஆறு ஆண்டுகளாக மோடியை தடையின்றி ஆதரித்து வருகின்ற லாபியான, அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை உடனடியாகத் திரும்ப அழைத்து வர வேண்டும், வணிகங்கள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று மே 21 அன்று கோரிக்கை விடுத்தது. தனது சொந்த அவல நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டிய அந்த அமைப்பு, தொழிலாளர்களைத் திருப்பி அனுப்பியதற்காக மாநில அரசுகள் மீது குற்றம் சாட்டியதுடன், அந்த தொழிலாளர்களைத் திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. சுதந்திர இந்தியாவில் இந்த அளவிற்கான மிகப் பெரிய புலம்பெயர்வு அலைகளைத் தூண்டியது எது என்று அந்த அறிக்கையில் ஒரு வார்த்தை கூட இல்லை. அரசாங்கம் குறைந்தபட்சம் எதையாவது செய்திருப்பதாகத் தோன்ற வேண்டும் என்ற பரிமாணத்தை எடுத்துக் கொள்ளும் நிலை வரையிலும், எந்தவொரு உதவியும் வழங்காமலேயே, அந்த தொழிலாளர்களை அன்னிய நகரங்களுக்குளேயே அடைத்து வைக்கும் நோக்கம் மட்டுமே மோடி அரசாங்கத்திடம் இருந்து வந்ததாகவே இப்போது தெரிகிறது,
நாடு முழுவதிலும் உள்ள நகரங்கள் மற்றும் சிறுநகரங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்கள், பரவலாக ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் மட்டுமே, அரசாங்கத்தை அரை மனதுடன் செயல்பட வைத்தன. இந்த பொதுமுடக்கத்தை, தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான திட்டமிடப்பட்ட உத்தி என்பதாக இல்லாமல், தங்களுடைய ஆட்சியின் சர்வாதிகார விருப்பத்தை திணிப்பதற்காக மட்டுமே இந்த அரசாங்கம் பயன்படுத்தியதற்கான தொடர்பு இருப்பது இப்போது தெளிவாகியுள்ளது. பல மாநிலங்களில் வெளிப்படையாக ஒருங்கிணைக்கப்பட்டு, தொழிலாளர் சட்டங்களை நீக்குவது, இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பின் மீதான இடைவிடாத அழுத்தம், விவசாயிகளை மேலும் பாதிக்கின்ற வகையில், விவசாய சந்தைப்படுத்துதல் கட்டமைப்புகளில் திட்டமிடப்பட்ட தொலைநோக்கு மாற்றங்கள் என்று இவை அனைத்தையும் இந்த பொதுமுடக்கத்தைப் பயன்படுத்தி, எதிர்ப்பு பலவீனமாக இருக்கும்போதே பாரதிய ஜனதா கட்சி மற்றும் சங்பரிவார் அமைப்புகள் கொண்டுவர விரும்புவது தெரிகின்றது.
வைரஸின் அச்சுறுத்தல் இருந்து கொண்டிருக்கும் வேளையில், அரசின் திறமையின்மையால் இந்த தொற்றுநோயானது மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளதால், குடிமக்கள் பீதியில் உள்ளனர். எதிர்ப்புகளை ஊக்குவிக்குகின்ற மனநிலையை இந்த நிலைமை ஏற்படுத்தித் தராது. இந்த பொதுமுடக்கத்தால்,குடிமக்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு தொடர்புகொள்வது என்பதை அறியாமல் திகைத்திருக்கின்றனர். மேலும் இதுபோன்ற அரசின் கடுமையான நடவடிக்கைகளுக்கு எதிராக கூட்டாக எவ்வாறு செயல்படுவது என்பதற்கான வரம்புகளும் இருப்பதால், நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. மொத்தத்தில் பார்த்தால், 1970களின் அவசரநிலையை கேளிக்கை இரவு விருந்து போல தோற்றமளிக்கச் செய்திருக்கும் ஓர் இருண்ட சுரங்கப்பாதைக்குள் இந்தியா இப்போது நுழைந்திருக்கிறது,
https://frontline.thehindu.com/cover-story/article31658653.ece
ஃப்ரண்ட்லைன் இதழ், 2020 ஜூன் 05
தமிழில்
முனைவர் தா.சந்திரகுரு