கேள்விக்குறியாகிப் போன உமது முதுகுக்குத் தான் தெரியும்
செந்நிற ரேகைகள் சிலதும்
கருவிழிக்கோடுகள் பலதும்
வலிந்து தீண்டிய
பாரத்தின் பொதி எது என்று..
நட்சத்திங்களையும்
விண்மீன்களையும்
காண திராணியற்ற பிடரி
குறுகித் தான் கிடக்கிறது
நூற்றாண்டுகளாய்..
தாடையும் முகவாயும்
தொட்டுக் கொண்ட தொண்டைக்குழி
நிலம் தாழ்ந்து கவனித்துப் பழகியது
கனத்து நிற்கும் மண்டைஓடுகள்
கொக்கரித்துத் தெறிக்கும்
எச்சிலின் ஆதிக்க வாடை தாங்காது..
வெளுத்துக்காயும் பல வேட்டிகளின் வெள்ளாமைக்குப் பின்பான
நதிக்கரை காணா முக்கோண நுனியொன்றும்
கறைகண்ட உமது
வேட்டிக்குத் தான் தெரியும்
இளைப்பாறலின் போதாக்குறை..
நிதம் நீ பசியாறுவதை
எரியும் பிணங்களின் தழல்கள்
வாப்பாரித் தெறிக்கிறது…
சோற்றுக்குள் பிணவாடை கூட
செரித்துப் பழகிய தலைமுறைகள்
சடைபிடித்துப் போன
உமது பிள்ளையின் மயிர்க் காலில் ஊசலாடும் பேன்கள்
எதிர்பார்த்துக் கிடக்கும்
துளியேனும் செந்நீர் ஊறாதா என
ஊரையே கொண்டாடி
வழியனுப்பும் உனை வரவேற்க
மல்லுகட்டுகின்றன
பெருங்குடி ஆணவம்..
அழுகுகிறாய் உயிரோடு
அழுகாமலும் போன
சதைகளின் புழுக்கள்
செமிக்க மாட்டாது மரணித்தன…
எல்லோருக்குமானவனாக நீ…
உன்னை நிமிர்த்திப் பார்க்கக் கூட வேண்டாம்
ஒரு பாததூரம்
உறங்க வழி வாய்த்தால் போதும்
நீள் நித்திரையின் யாத்திரையாவது மிஞ்சுமே…
தாலாட்ட தலைமுறையின் மிச்சமாக..