நிதானமான வேகம் கட்டுரை -R.இராஜமோகன்

நிதானமான வேகம் கட்டுரை -R.இராஜமோகன்




அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் (setc) ஓட்டுனராகவும் ஓட்டுனர் பயிற்சி ஆசிரியராகவும் (DRIVING INSTRUCTOR)  32 ஆண்டுகள் பணிபுரிந்து சென்ற 2018 ஓய்வு பெற்றுள்ளேன்.

தமிழகத்தின் தலைநகரிலிருந்து அனைத்து மாவட்டங்களின் அனைத்து ஊர்களுக்கும் பேருந்து ஓட்டி இருக்கிறேன். ஆனாலும் அதிக காலம் வண்டி ஓட்டியது சென்னை கும்பகோணம் (தடம் எண் 303) வழித்தடத்தில் தான். பெரும்பாலும் இரவு நேரப் பணி தான்  தினசரி சாலைகளில் விபத்துகளைப் பார்த்துப் பார்த்து வேதனை அடைந்ததுடன் நானும் மிக மோசமான விபத்துகளில் சிக்கி உயிர் பிழைத்திருக்கிறேன் எனது தொழிலைப் பற்றி நினைக்கும்போது “மிகவும் பொறுப்பான கடமை உணர்வு மிக்க பொதுச் சேவை செய்து உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய உயர்வான தொழில் என பெருமை கொள்வதா ? அல்லது “அதிக படிப்பறிவில்லாத முரட்டுச் சுபாவம் கொண்டவர்கள் ( பேருந்து லாரி ஓட்டுனர்கள் பற்றி பொதுமக்கள் மத்தியில் அப்படித்தான் கருத்து நிலவுகிறது) தேர்ந்தெடுக்கக்கூடிய பாதுகாப்பு இல்லாத உயிரை பணயம் வைக்க கூடிய இரவு பகல் தூக்கம் இல்லாத மிக கடினமான தொழில் என வருத்தம் கொள்வதா?  ஒரு தீர்மானமான முடிவுக்கு வருவதற்கு நேரமில்லை வருடங்கள் உருண்டோடிவிட்டன.

 பதவி உயர்வு பெற்று விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை பணியிடமாகக் கொண்டு பணி தொடர்ந்தேன்.  விபத்துக்களை ஆய்வு செய்யும் பணி எனக்கு வழங்கப்பட்டது. அதாவது சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் எமது பேருந்துகளில் விபத்துகள் நேரிட்டால் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பயணிகளுக்கு உதவி செய்து மாற்றுப் பேருந்துகளில் அனுப்பவேண்டும். காவல்துறையினருடன் இணைந்து TRAFFIC CLEAR செய்ய வேண்டும்.  விபத்தின் தன்மைக்கேற்ப காவல் நிலையம் அரசு பொது மருத்துவமனை மற்றும் RTO அலுவலகத்திற்கு நான் நாள் கணக்கில் அலைய வேண்டி இருக்கும். இறுதியாக ஆய்வறிக்கை ACCIDENT REPORT தயார் செய்து தலைமையகத்திற்கு அனுப்ப வேண்டும் அதன் அடிப்படையில் நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளும். இதுவே என் பணி.

ஓட்டுநர் பணியை விட இந்த பணியில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் கொடுமையானவை. மிக மோசமான விபத்துக்களைப் பார்த்துப் பார்த்து, ஓய்வுக்குப்பின் எப்பாடுபட்டாவது சாலை விபத்துகளைத் தடுக்க வேண்டும்

என்ற தீர்மானத்துடன் பத்திரிகைகளில் எனது அனுபவங்களைக் கட்டுரையாக எழுதினேன். அகில இந்திய வானொலி நிலையத்தின் காரைக்கால் பண்பலை 100.3-ல்  ஒரு மணி நேர பேட்டியளித்தேன். இந்த நிகழ்ச்சிஅனுபவம் அற்புதம்” என்கிற தலைப்பின் கீழ் 2020இல் ஒலிபரப்பாகி வானொலி நேயர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து TNSTC KUMBAKONAM மண்டல தலைமையக பயிற்சி பள்ளியில் ஓட்டுநர்களுக்கான ஒருநாள் சிறப்புப் பயிற்சி வகுப்பு எடுத்தேன். எமது நிர்வாகத்தினர் எனது வேண்டுகோளுக்கிணங்க சென்னை, திருச்சி, மதுரை பயிற்சிப் பள்ளிகளில் வகுப்பு எடுக்க என்னை அனுமதித்தனர்.  மேலும் கும்பகோணம் சுற்றி உள்ள பள்ளி கல்லூரி வாகன ஓட்டுநர்களுக்கும் விபத்து விழிப்புணர்வு வகுப்பு நடத்தி வருகிறேன்

என்னுடைய வகுப்புகளில் கலந்து கொள்ளும் எனது தம்பிகளான ஓட்டுநர்களுக்கு நான் அறிவுரைகள் ஏதும் வழங்குவது இல்லை. மாறாக என் அனுபவங்களை விளக்கமாகச் சொல்லுகின்றேன். சாதாரண வகுப்பறையில் கரும் பலகையில் வரைந்து மிக மோசமான கொடூரமான விபத்துகளை அவர்கள் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறேன்.  இன்றைக்கு இருக்கக்கூடிய நவீன வசதிகள் SENSOR CONTROL எதுவுமே இல்லாத வாகனங்களைச் சாதாரணமான manual steering – இல் இயக்கி ஒரே சாலையில் (போகவும் வரவும்) மற்ற வாகன ஓட்டிகளை (குறிப்பாகச் சைக்கிள் ஓட்டிகள்) எப்படி அனுசரித்து ஓட்டினோம் என்பதை விளக்குகிறேன். எப்போதுமே ஒரு ஹெவி ஓட்டுநருக்குச் சவாலாக இருப்பவர் மற்றொரு ஹெவி வண்டியின் ஓட்டுனர்கள் அல்ல.  இந்த வண்டியை அவர் எப்படி எதிர் கொள்வார் என்பதை இங்கிருந்தே அவரது மனநிலையை இந்த ஓட்டுனரால் கணிக்க முடியும். ஆனால் எந்த வகையிலும் கணிக்க முடியாதவர்கள், சவாலாக இருப்பவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் தான்!  எங்கிருந்து வந்தார், எந்த பக்கம் நுழைந்தார், நம் வாகனத்தை எப்படி முந்தினார் எதையுமே கணிக்க முடியாது.  பெரிய வண்டி ஓட்டுநர் RV  கண்ணாடியில் இருசக்கர வாகனத்தைக் கவனித்த அடுத்த வினாடியே புயல்போல் முந்தி சென்று விடும். முன்னால் சென்று கொண்டிருக்கும் வாகனம் பற்றியோ எதிரில் வந்து கொண்டிருக்கும் வாகனம் பற்றிய பயமோ கவலையோ இல்லை. 

ஒருவர் மட்டும் செல்லும் இருசக்கர வாகனம் சரியான வேகத்தில் நிதானமாகச் செல்லும் என நம்பலாம். இருவர் செல்லும் வாகனம் ஓரளவு கவனமாகக் கடந்து செல்லும். மூவர் அல்லது நால்வர் (குறிப்பாக நண்பர்கள்) செல்லும் வாகனம் எந்தவிதமான விதிகளுக்கும் கட்டுப்படாது. அந்த நேரம் சாலையைப் பயன்படுத்தும் மற்ற

எல்லோரையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். இன்றைய சமுதாயத்தில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பங்களில் ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு அல்லது  மூன்று இருசக்கர வாகனங்கள் உள்ளன. ஆனால் ஹெல்மெட் எத்தனை உள்ளது? அதை எத்தனை பேர் முறையாகப் பயன்படுத்துகிறோம்? எத்தனை ஹெல்மெட்டுகள் சுவாமி அறையில் தொங்க விடப்பட்டுள்ளன? ஹெல்மெட் என்பதன் உண்மையான அர்த்தம்உயிர்காக்கும் உத்தமதோழன் என்பதுதான். பயணத்தின்போது அணியவும் பின்பற்றவும் தேவை சில நிமிடங்கள் தான். அந்த சில நிமிடங்கள் தான் உங்கள் வாழ்க்கையின் பல வருடங்களைத் தீர்மானிக்கின்றன என்பதை உணருங்கள் ஹெல்மெட் அணிய தயங்காதீர்; இனிய உயிரை இழக்காதீர். இந்த சாலையைப் பயன்படுத்தும் யாரையும் நம்பாதீர்கள். யாருக்கும் முறைப்படி ஓட்டத் தெரியவில்லை, சாலை விதிகளை யாரும் அறிந்திருக்கவில்லை, முரட்டுத்தனமாக ஓட்டுகிறார்கள் என்று நினையுங்கள். நீங்கள் மட்டுமே எல்லாம் அறிந்து முறைப்படி ஓட்டுவதாக நம்புங்கள். இந்த நம்பிக்கையுடன் விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பக்குவத்துடன் ஓட்டுவீர்களாயின் விபத்துக்கு வாய்ப்பே இல்லை

என்னுடைய கிளை மேலாளர் விபத்துக்குள்ளான ஓட்டுனரை விசாரிக்கும் போது அந்த ஓட்டுனர் கூறுவார் : அவன் வலது பக்கம் திரும்ப போகிறான் என்று நினைத்தேன் ஐயா அவன் திடீரென்று நிறுத்திவிட்டான் நம் வண்டி பின்னால் மோதி விட்டது என்பார். உன்னை இவர், அவன்  என்ன நினைத்தார் நீ என்ன நினைத்தாய் என்று நான் கேட்கவில்லை என்ன நடந்தது அதை மட்டும் சொல் என்பார்.  சாலையைப் பயன்படுத்தும் எவரும் என்ன நினைக்கிறார் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதை மற்ற வாகன ஓட்டிகள் தீர்மானிக்க முடியாது. போதுமான இடைவெளியுடன் முன்னெச்சரிக்கை உணர்வுடன் ஒன்றினால் மட்டுமே பின்பக்கம் மோதலை தவிர்க்க முடியும் ஒரு பேருந்தின் பாதுகாப்பான வேகம் என்ன என்ற கேள்விக்கு 40 KMPH 50, 60 என்று பல ஓட்டுநர்கள் பதிலளித்தனர்.

பேருந்து மட்டுமல்ல வேறு எந்த வாகனமாக இருந்தாலும் சரி ; இடத்திற்குத் தகுந்த வேகமே பாதுகாப்பானது என்பதே சரியான பதில்.  60 KMPH தாண்டியும் கூட ஓட்டலாம்; அதற்கான சாலைகள் உள்ளன. ஆனால் நகர எல்லைக்குள் நெரிசலான சாலை சந்திப்புகள், குறுகிய சாலைகள், பள்ளி அருகாமையில் ரவுண்டானாக்களில், மேம்பாலங்களில், பேரிகார்டு ஸ்பீடு பிரேக்கரில், ரயில்வே கிராசிங்கில், சர்வீஸ் ரோடு துவக்க முடிவு சாலைகளில் அரசு பொது மருத்துவமனை சாலைகளில் இப்படிப் பல இடங்களுக்கும் பல வேகங்கள் உள்ளன. இவற்றை நினைத்துக் கொண்டே ஓட்ட  வேண்டியதில்லை. மூளையில் பதிந்து விட்டால் தானாகவே அந்தந்த இடங்களில் கைகள் அனிச்சையாகச் செயல்பட்டு வேகத்தை மட்டுப்படுத்தி விடும்

பல வருடங்கள் பேருந்து லாரிகளில் பணிபுரிந்து கூட பல ஓட்டுனர்களிடம் பல தவறான ஓட்டும் முறைகள் பதிந்து போயிருக்கும். அவை தவறானவை என்பது கூடப் புரியாமல் சுலபமானவை என்றே புரிந்து கொண்டிருப்பார்.  தன் கிளீனருக்கும்  அதையே சொல்லிக் கொடுப்பார். உதாரணமாகப் பகல் நேரங்களில் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டு செல்வது. அதாவது இவர் செல்லும்வரை எதிரில் வரும் எல்லா வாகனங்களும் வழிவிட்டு ஓரமாய் நிற்க வேண்டுமாம். இவர் சென்ற பின் தான் மற்ற வாகனங்கள் செல்ல வேண்டுமாம் இந்த விதியை இவர் (குறிப்பாக தனியார் பேருந்து ஓட்டுனர்கள்) எந்த பயிற்சி பள்ளியில் கற்றாரோ தெரியவில்லை. சாலையின் இடது புறம் மட்டுமே உங்களுடையது; வலதுபக்கம் எதிரில் வருபவர்களுக்குத் தான் சொந்தமானது எதிரில் வாகனம் வரும்போது லைட் போட்டு காட்டி (அது எந்த வாகனமாக இருந்தாலும் சரி) நிற்க சொல்ல எவருக்கும் உரிமை, அதிகாரம் இல்லை. அந்த அதிகாரம் காவல்துறை, தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற எமர்ஜன்ஸி வாகனங்களுக்கு மட்டுமே உரியது. அதேபோல் ஓட்டுனர் இருக்கையில் சரியாக நேராக நிமிர்ந்து அமர்ந்து சீட் பெல்ட் அணிந்து ஸ்டியரிங்கை முறையாக பிடித்து (க்ளாக் வைஸ் 3-9) ஓட்டினால் மட்டுமே அந்த வாகனம் ஓட்டுனருக்கு கட்டுப்பட்டு ஓடும். அப்படி தான் ஒவ்வொரு வாகனமும் உற்பத்தியின் போதே வடிவமைக்கப்பட்டுள்ளது. அப்படித்தான் ஓட்ட வேண்டும். மாறாக சீட்டில் CROSS ஆக அமர்ந்து ஒரு கையில் ஸ்டியரிங்கை பிடித்து மற்றொரு கையில் SHIFT ROD அல்லது ஹாரனை அலட்சியமாக அடித்து ஸ்டைலாக RV கண்ணாடியைப் பார்க்காமலேயே இடது பக்கம் அமர்திருப்பவருடன் பேசிக் கொண்டு சிரித்துக் கொண்டு ஓட்டுவீர்களாயின் இன்றல்ல நாளை அல்ல சில தினங்களுக்குள் நீங்களோ உங்கள் பயணியோ  அல்லது சாலையை பயன்படுத்திய யாரோ  ஒரு அப்பாவியோ மருத்துவமனையில் படுக்கப் போவது உறுதி. அதற்கான தண்டனையும் உமக்குத்தான், உயிரோடு இருந்தால் !

ஒரு சமுதாயம் சிறப்பாக அமைய என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு “நீ உனது குடும்பத்தை நேசி ஒவ்வொரு தனி மனிதனும் தன் உயிரைவிட குடும்பத்தை நேசித்து அதற்காகவே தன் உழைப்பை வாழ்க்கையை அர்ப்பணிப்பானாயின் இந்த சமுதாயம் மிக சிறப்பாக அமையும்” என அன்னை தெரசா கூறியதாகப் படித்திருக்கிறேன். ஒரு நல்ல ஓட்டுனராகிய நீங்கள் உங்கள் வாகனத்தை நேசியுங்கள். நேசிப்பு என்பது யாருக்கும் இரவல் கொடுக்காமல் இருப்பது மட்டுமல்ல. சிறப்பாகப் பராமரித்து அதன் தேவைகளைப் புரிந்து கொண்டு கழுவி துடைத்து சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். நேரமில்லையா (வாரம் ஒருமுறை) உங்கள் வாகனமானது எஞ்சின் சத்தம், ஹெட்லைட் வெளிச்சம், ஹாரன் சத்தம் போன்ற பல மொழிகளில் உங்களிடம் பேசும் என்னிடம் பேசி இருக்கிறது ! அந்த மொழிகள் உங்களுக்கு மட்டுமே புரியும் புரிந்துகொண்டு ஓட்டுங்கள் அழகாக ஓட்டலாம்

“நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்” எனத்துவங்கும் பழைய பாடலில் எங்கே வாழ்க்கை தொடங்கும் என்ற சரணத்தைக் கவியரசு கண்ணதாசன் நமக்காகத்தான் அன்றே எழுதி இருக்கிறார் என தோன்றுகிறது. அனுபவித்துக் கேளுங்கள் ஆழ் மனதில் ஆணி அடித்து  வைத்துக்கொள்ளுங்கள் நிதானமான வேகம் நிம்மதியான பயணம் அதிரடி வேகம் ஆபத்தில் தான் முடியும். சென்னை கோயம்பேடு காவல் நிலைய வாசலில் பல வருடங்களுக்கு முன் நான் பார்த்த வாசகம் கல்வெட்டு போல் மனதில் பதிந்து விட்டது அதாவது சாகசம் புரியும் இடம் சாலைகள் அல்ல மெதுவாகச் செல்பவர்கள் கோழைகள்  அல்ல உண்மைதான் நிதானமாகப் பொறுப்புடன் கவனமாக ஓட்டுபவரை கண்டால் மற்றவர்களுக்கு இலக்காரம் தான் பயந்த சுபாவம் ஓட்டத்தெரியாதவன் உள்ளவன் என்றுதான் நினைக்கின்றனர். பரவாயில்லை அப்படியே இருக்கட்டும் அதிவேகம் செல்பவன் யார் தெரியுமா அரக்கன்! மனித உயிர்களைப் பலி கொள்ளத் துடிக்கும் இரத்த வெறிபிடித்த மிருகம். நீங்கள் மனிதனா மிருகமா…?

இன்றைய வாகன ஓட்டுநர்களுக்கு விபத்துகளுக்கு அடுத்தபடியாக பெரும் சவாலாக மன உளைச்சலாக உள்ளது எரிபொருள் சிக்கனம் தான். நான் சொல்வதைக் கேளுங்கள். தானாக டீசல் பெட்ரோல் மிச்சமாகும். ஒரு தாய் வயிற்றில் இரட்டை குழந்தைகள் தான் விபத்தில்லா இயக்கம் எரிபொருள் சிக்கனம் ஒரு கல்லில் ஒரு மாங்கா அடித்தவன் திறமைசாலி ஒரே கல்லில் இரு மாங்காய்கள் அடித்தவன் அதிர்ஷ்டசாலி நீங்கள் எல்லோரும் அதிர்ஷ்டசாலிகள். விபத்து விழிப்புணர்வோடு வாகனம் ஓட்டுங்கள் எரிபொருள் மிச்சமாகும்; எரிபொருள் சிக்கனம் எண்ணத்துடன் வாகனம் ஓட்டுங்கள் விபத்து ஏற்படாது அதற்கு நான் கேரண்டி! எரிபொருள் சிக்கனத்திற்கான உயரிய விருதினை நான் அன்றைய போக்குவரத்து செயலர் திரு தீபேந்திரநாத் சாரங்கி அவர்களிடம் பெற்றுள்ளேன். Nithanamana Vekam Article By R.Rajamohan நிதானமான வேகம் கட்டுரை - R.இராஜமோகன்இந்த கட்டுரையை நான் எழுதிக் கொண்டிருக்கும்போது என் மகன் “சொல்லவந்ததைச் சுருக்கமாகச் சொல்லி சிக்கனமாக எழுதலாமே” என்றார். எனக்கு அப்படி எழுத தெரியவில்லை. காரணம் என் சர்வீஸில் முப்பது ஆண்டுகளில் பல பேருந்துகளை ஒட்டியிருக்கும் மொத்த தூரம் 26 லட்சத்து 37 ஆயிரம் கிலோமீட்டர்கள் இதையும் தாண்டி ஓட்டிய சாதனையாளர்கள் இருக்கின்றார்கள். சிக்கனமாகக் கொஞ்ச தூரம் ஓட்டி இருக்கவில்லை, அதேபோல சிக்கனமாக எழுதவும் தெரியவில்லை என்னுடைய அனுபவங்களைப் போலவே  என்னுடைய விளக்கங்களும் சற்று விரிவாக தான் வருகின்றன.

அதிக வாகனங்களைக் கொண்டு செயல்படக் கூடிய எந்த நிறுவனமாக இருந்தாலும் சரி அதன் ஓட்டுநர்களுக்கு விபத்தில்லா இயக்கம் எரிபொருள் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு வகுப்பு எடுக்க தயாராக உள்ளேன். ஓய்வு காலத்தில் பொழுதைப் போக்குவதற்காக இதில் நான் ஈடுபடவில்லை உழைத்து ஓய்ந்த பின்னும் என் அனுபவங்களுக்கு முக்கியத்துவம் அளித்து என்னை நம்பிக்கையுடன் புதிய ஓட்டுநர்களுக்கு வழிகாட்டியாய் அமர்த்தி அழகு பார்க்கும் எனது நிர்வாகத்திற்கு (SETC) நான் நன்றி உள்ளவனாக இருக்கிறேன் . 62 வயது நடந்து கொண்டிருக்கிறது இனி வாழப்போகும் நாட்கள் பயனுள்ளதாக என் ஓட்டுனர் சமுதாய தம்பிகளுக்காக விபத்துக்களைத் தடுத்திட என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுகின்றேன். விபத்துக்களே இல்லாத தமிழகமே எனது குறிக்கோள். விபத்துக்களைக் குறைத்திடும் உயிர் காக்கும் பணியில் அல்லும் பகலும் வெயிலிலும் மழையிலும் தளராமல் உழைக்கும் தமிழக போக்குவரத்து காவல் துறைக்கும் மாவட்ட நிர்வாகங்களுக்கும்  இதே பணியில் ஈடுபட்டுள்ள தனியார் தொண்டு அமைப்புகளும் சிறு உதவியாக என் பணி அமையும் என நம்புகிறேன் நன்றி வணக்கம்.

R.இராஜமோகன்
SETC DI RTD
கும்பகோணம்
செல் :9952295910
9789604577

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *