நிதி உரிமையை மறுக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஓரவஞ்சக நிதியரசியலை முறியடிப்போம் (Nithi Urimaiyai Marukkum Ondriya BJP Arasin Oravanjaga Nithiyarasiyalai Muriyadippom)

நிதி உரிமையை மறுக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஓரவஞ்சக நிதியரசியலை முறியடிப்போம் – எஸ்.விஜயன்

நிதி உரிமையை மறுக்கும் ஒன்றிய பாஜகவின் ஓரவஞ்சக நிதியரசியலை முறியடிப்போம்

தேர்தல் களம்:

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. ஐந்து அணிகள் களத்தில் இருந்தாலும் பிரதானப் போட்டியானது தி.மு.க. தலைமையில் உள்ள மதச்சார்பற்ற மக்கள் கூட்டணிக்கும்,

அ.தி.மு.க.வின் தலைமையில் உள்ள அகில இந்திய அளவில் பாஜக அமைத்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையிலானதாகவே தேர்தல் களம் இருக்கிறது. அ.தி.மு.க.வின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. தமிழக அரசதிகாரத்தைக் கவ்விப்பிடிக்க ஐந்து பிரதான உத்திகளைக் கடைப்பிடித்து வருகிறது.

1. பிற மாநிலங்களில் செய்து வருவது போல் தமிழகத்திலும் அப்பட்டமான வகுப்புவாத வெறியைத் தூண்டி மக்களை மதரீதியாக இரு துருவமயமாக்கிப் பிளக்கும் உத்தி. கடந்த ஐந்தாண்டுகளாகத் தமிழகத்தில் வகுப்புவாத மதக்கலவரங்களைத் தூண்டுவதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டிருக்கிறது. வகுப்புவாதப் பிளவு உண்டாக்க அரசு இயந்திரத்திற்குள்ளும் அதிகார வர்க்கத்திற்குள்ளும் சாதிய வகுப்புவாத எண்ணம் கொண்டவர்களை ஒன்றிய அதிகாரத்தைப் பயன்படுத்திப் புகுத்தி தமிழக அரசின் தலையீட்டை முறியடிக்க முயன்றிருக்கிறது. அத்துடன் நீதிபதிகளின் நியமனத்திலும் வகுப்புவாத எண்ணம் கொண்டோரை பதவியலமர்த்தி நீதிமன்றத் தீர்ப்புகளின் மூலம் வகுப்புவெறி திட்டத்தை நிறைவேற்றி வருகிறது.

2. ஆர்.என். ரவி என்ற ஆர்எஸ்எஸ்காரரை ஆளுநராக நியமித்து, அவருடைய அசிங்கமான நடவடிக்கைகள் மூலம் தி.மு.கவை ஆட்சியை நடத்தவிடாமல் அத்துணை அட்டூழியங்களையும் செய்தது. குறிப்பாகத் தமிழகத்தின் உயர்கல்வியைச் சீரழித்து, முன்னேறிய மாநிலம் என்ற அந்தஸ்திலிருந்து கீழிறக்குவது என்பதே ஆர்எஸ்எஸ் இன் திட்டம். அவர் தற்போது உச்ச நீதிமன்றத்தில் குட்டு வாங்கி, அவமானப்பட்டு, தமிழகத்தில் ஒரு காமெடிப் பீஸாகி பிடறியலடிபட்டு வங்கம் சென்றிருக்கிறார்.

3. ஒன்றிய அமலாக்கத்துறை, புலனாய்வுத்துறை, வருமானவரித் துறை ஆகியவற்றைப் பயன்படுத்தி ஆளும் தி.மு.க. எதிர்க்கட்சியான அ.தி.மு.க. அன்புமணி ராமதாஸ் நடத்தும் பா.ம.க. டி.டி.வி. தினகரன் நடத்தும் அ.ம.ம.மு.க. முதலியோரைக் குறிவைத்தது. தி.மு.க.வின் செயல்பாடுகளைக் குறிப்பிட்ட அளவு முடக்கியதோடு தங்களது மதவாதத் திட்டங்களுக்குச் சில சமரசங்களையும் பெற்றது. தி.மு.க.வுக்கு எதிரான கூட்டணியில் இணைவதற்கு அ.தி.மு.க. முதலான கட்சிகளை மிரட்டி வந்தது. அந்த அணிக்குள் இருக்கும் கட்சித் தலைவர்கள் மீது ரெய்டு வழக்கு என்று பணிய வைத்துவிட்டது. இந்தக் கட்சியோடு சேர்ந்தால் தோற்றுவிடுவோம் என்று பயந்து ஒதுங்கியவர்கள், எதிர்காலம் போனாலும் பரவாயில்லை, சிறைக்குச் செல்லாமல் தப்பிப்பதற்காகக் கூட்டணிக்குள் சேர்ந்தார்கள்,

4. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையில் ரவுடிகள், பாலியல் வக்கிர புத்தி கொண்டவர்கள், கட்டப்பஞ்சாயத்துப் பேர்வழிகள் ஆகியோரை விலைக்கு வாங்கி கட்சிப் பதவிகள் கொடுத்து அவர்களின் அடாடிவடிச் செயல்கள் மூலம் தி.மு.க. அரசின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படச் சூழ்ச்சி செய்தது.

5. நிதித்தாக்குதல் – இது ஒன்றிய அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழகத்தின் நிதி உரிமையைப் பறித்து, தமிழ்நாட்டு அரசைச் செயலற்றதாக்கக் கடந்த ஐந்தாண்டுகளாக முயன்று வருகிறது.

இந்த ஐந்தாவது உத்தியை மட்டும் சற்று ஆழமாக ஆய்வு செய்வதே இச்சிறு நூலின் நோக்கமாகும். மற்ற நான்கு குறித்தும் அதிகம் விளக்கத் தேவையில்லை, தமிழக மக்களே நன்கறிவர்.

நியாயமற்ற நிதிப்பகிர்வின் வரலாற்றுப் பயணம்:

இந்தியா பல தேசிய இனங்கள் இணைந்து வாழும் நாடு. தேசிய இனங்களின் உருவாக்கம் வரலாற்று வழிபட்டது. தேசிய இனங்களை மையமாக வைத்து அரசுகள் உருவானதும் ஒரு நெடிய வரலாற்றுப் பயணமே. இந்திய வளர்ச்சிப் போக்கை நாம் உன்னிப்பாகக் கவனித்தால் ஒரு சீரான வளர்ச்சிப்போக்கு இங்குக் கிடையாது. மொழி, பண்பாடு, உற்பத்தித்திறனின் வளர்ச்சி, கல்வியறிவு வளர்ச்சி, இயற்கைவளம் போன்றவற்றில் உள்ள வேறுபாடுகள் காரணமாக இந்த பெரும் பரப்பில் ஒரேயரசு ஒரே நேரத்தில் உதித்தெழுவது சாத்தியமற்றதாகிவிட்டது. இதன் விளைவாகப் பல்வேறு அரசுகள் பல்வேறு காலகட்டங்களில் இம்மண்ணில் தோன்றியதும், இந்த அரசுகளுக்குள் மோதலும், சமரசமும், கொடுக்கலும் வாங்கலும் உள்ள நிலையையே நாம் பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை கண்ட காட்சியாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தப் பெரும் நிலப்பரப்பில் பெரும்பகுதியைத் தன்னுடைய ஆளுகைப் பிரதேசமாக்கிய ஆங்கிலேயர்கள் தங்கள் நலனுக்காக இந்த வேறுபாடுகளுக்குள்ளேயே ஒரே அரசை உருவாக்க முயன்றனர். அவர்களுடைய முயற்சியானது இந்த மண்ணின் வளத்தையும் இந்த மனிதர்களின் உழைப்பையும் சுரண்டி அவர்கள் நாட்டுக்கு எடுத்துச் செல்லும் நோக்கம் கொண்டதாகும்.

ஆங்கிலேயர்களின் சுரண்டலும் கொடுங்கோலாட்சியும் விசிறிவிட்ட எதிர்ப்புணர்வானது இப்பெரும் பரப்பில் பல்வேறு சிறு அரசுகளுக்குள் வாழ்ந்த மக்களை ஒன்றுபடுத்தி அவர்களுக்கு எதிராகப் போராட வைத்தது. இப்போராட்டமானது ஒரு நூற்றாண்டுப் பயணமாகும். வெற்றிபெற்ற பின்பு அமையவிருக்கும் அரசின் கட்டமைப்பு பற்றிய ஒரு புரிதல் இப்பயணத்தின் ஊடாகவே உருவாகி அது கிட்டத்தட்ட எல்லாரும் ஏற்றுக்கொள்ளும் நிலைநோக்கி நகர்ந்தது. இப்பெரும் பரப்பின் மக்கள் தங்கள் விடுதலையை வென்றெடுத்ததும் அமையவிருக்கும் அரசின் கட்டமைப்பு பற்றிய விவாதம் அரசியல் நிர்ணய சபை மூலமாக ஆவணமானது. அந்த ஆவணமே நமது அரசியல் சாசனமாகும்.

அப்போது இருந்த மதராஸ், பம்பாய். வங்காளம், உள்ளிட்டவை ஆங்கிலேயர்கள் உருவாக்கிய மாகாணங்களும், ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்ட 565 சமஸ்தானங்களையும் இணைத்து இந்திய ஒன்றியம் உருவாக்கப்பட்டது. இந்த மாகாணங்களும் சமஸ்தானப் பகுதிகளும் மொழிவாரி மாநிலங்களாக அமைக்கப்பட்டன. விடுதலைப் போரில் முகிழ்ந்த ஒற்றுமையானது வேற்றுமையில் ஒற்றுமை என்ற புதிய தளத்திற்கு இப்பெரும் நிலப்பரப்பின் மக்களை எடுத்துச் சென்றது. வரலாற்று வழியில் இப்பெருநிலப்பரப்பில் உருவான அரசமைப்புகள், அதாவது, வெவ்வேறு பொருளாதார மண்டலங்கள், விடுதலைக்குப் பிறகு பழையபடி பிரிந்து போகாமல், தங்களுக்கிடையில் எல்லாப் பொருளாதார மண்டலங்களுக்கும் நன்மையளிக்கும் விதத்தில் பொருளாதார உறவுகளை ஏற்படுத்தி, எல்லோரும் ஒருசேர முன்னேறும் வகையில் ஓர் ஒன்றியமாகச் செயல்பட முடியும் என்ற சமூகத் தேவையின் வெளிப்பாடே இந்திய ஒன்றியத்தின் தோற்றமும் இதை சட்டப்பூர்வமாக்கிய அரசியல் சாசனமும். அரசியல் நிர்வாகமானது மாநிலம், ஒன்றியம் என்ற இரு பெரும் அரசமைப்புகளுக்குள் வந்தது. இந்த இரண்டின் அதிகாரம் என்ன, இந்த இரண்டும் திரட்டும் நிதியை எவ்வாறு பங்கிடுவது போன்றவற்றிற்கு ஆவணத்தில் வழிகாட்டல் இருந்தாலும் அரசியல் காரணங்களால் கடந்த 75 ஆண்டுகளாகச் சிக்கலாகி வருகிறது. ஒன்றிய அரசானது வரிவசூல் அதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு அவர்களின் உரிமையை மறுக்கும் வகையில் நிதிப்பங்கீட்டில் ஓரவஞ்சனையுடன் செயல்படுவதற்கான வழிமுறையை நமது அரசியல் நடைமுறை அனுமதிக்கிறது.

திட்டக்கமிஷனும் நிதிக்கமிஷனும்:

இப்பெரு நிலப்பரப்பானது மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு மாநிலங்களில் அரசுகளும், இவையெல்லாம் இணைந்த ஒன்றிய அரசும் தோன்றின. மாநிலங்கள் தேசிய இனங்கள் அடிப்படையில் தேசிய இனங்களின் பெரும் போராட்டங்களுக்குப் பிறகு பிரிக்கப்பட்டன. மாநிலங்களும் ஒன்றியமும் இணைந்து வெற்றிகரமாகச் செயல்படுவதற்கு, அரசுகள் திரட்டும் நிதி ஒரு நியாயமான வழியில் மாநில அரசுகளுக்கும் ஒன்றிய அரசுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டியதும், சமச்சீரான வளர்ச்சிக்கான உத்தரவாதமும் முன்தேவையாகும். நிதிப் பகிர்வை ஆய்வுசெய்து ஆலோசனை வழங்க நிதிக்கமிஷன் என்ற அமைப்பும், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு திட்டக்கமிஷன் என்ற அமைப்பும் உருவாக்கப்பட்டன. அத்துடன் பொருளாதாரத் திட்டமிடுதலுக்கான அமைப்பாகத் தேசிய வளர்ச்சிக் கவுன்சில் (NDC) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
நிதிக் கமிஷனின் மிக முக்கியமான பணி என்பது, ஒன்றிய அரசின் வரி வருவாயை ஒன்றிய அரசிற்கும், மாநில அரசுகளுக்குமான பகிர்தல் – இதைச் செங்குத்துப் பகிர்வு என்றழைக்கப்படுகிறது, மாநில அரசுகளுக்கிடையிலான பகிர்தல் – இது கிடைமட்டப் பகிர்வு என்றழைக்கப்படுகிறது. இதே போல் திட்டக்கமிஷனானது மொத்தத் திட்டத்தொகையில் ஒன்றியத் திட்டங்கள், மாநிலத் திட்டங்களுக்கான உதவி என்று செங்குத்துப் பகிர்வும் மாநிலத் திட்டங்களுக்கான உதவி நிதியைப் பகிர்ந்தளிக்கும் கிடைமட்ட பகிர்வையும் செய்யும்.
அரசியல் சாசனம் அறிவியல் ரீதியாகப் பொதுவான அணுகுமுறையைக் கூறினாலும் நடைமுறைக்கு வரும் போது குளறுபடிகள் முளைக்க ஆரம்பித்தன. இதற்குக் காரணம் அடிப்படை வேறுபாடுகளான மொழி, பண்பாடு, உற்பத்தித்திறன் வளர்ச்சி, கல்வியறிவு வளர்ச்சி, இயற்கை வளம் போன்றவற்றில் உள்ள இடைவெளிகள் மறையவில்லை. குறுகிய காலத்திற்குள் மறையவும் முடியாது. 1967ம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள் இந்த வேறுபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது. பலமாநிலங்களில் ஆளும் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து மாற்றுக் கட்சிகளின் தலைமையிலான அரசுகள் தோன்றின. இதன் விளைவாக ஓரவஞ்சக நிதிப்பங்கீட்டு முறை மெல்ல மெல்லத் தோன்ற ஆரம்பித்தது.

நிதிக்கமிஷன்கள்:

ஒன்றிய அரசின் வருவாய்களில் முக்கிய வருவாய் வரிவருவாய் ஆகும். இது மக்களிடமிருந்து நேரடியாக வசூலிக்கப்படுவதால் இந்த வருவாயை அரசியல் சாசனத்தின்படி மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு பிரித்துத் தர வேண்டும். இதை எப்படிப் பிரித்துத் தருவது என்பதற்கான ஆலோசனையை வழங்குவது நிதிக் கமிஷனாகும். நிதிக்கமிஷன் என்பது ஓர் அரசியல் சாசன நிறுவனம். இதைக் குடியரசுத்தலைவர் அமைச்சரவையின் ஆலோசனையின் அடிப்படையில் நியமிப்பார். நிதிக்கமிஷன் உறுப்பினர்களின் தகுதியை நிதிக்கமிஷன் சட்டம் தீர்மானிக்கிறது. பொதுவாக ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நிதிக்கமிஷன்கள் நியமிக்கப்படும். இதன் பரிந்துரைகள் ஐந்தாண்டுகளுக்கு ஒன்றிய அரசால் கடைப்பிடிக்கப்படும். விடுதலையடைந்த பிறகு இதுவரை 16 நிதிக்கமிஷன்கள் அமைக்கப்பட்டு பரிந்துரைகள் வழங்கப் பட்டிருக்கின்றன.

ஒன்றிய அரசின் வருவாய் அனைத்தும் இந்திய அரசின் ஒருங்கிணைந்த நிதியில் (Consolidated Fund of India) சேர்க்கப்படும். இதில் விதிவிலக்கு கிடையாது. கொரோனா துயர்துடைப்புக்கு என்ற பெயரில் பிரதமரின் படத்துடன் ஒன்றிய அரசின் செலவில் பிஎம் கேர் என்ற பெயரில் வருமான வரிவிலக்குச் சலுகையுடன் ஒரு நிதி திரட்டப்பட்டது, ஆனால் பிஎம் கேர் நிதி என்பது மட்டும் ஒருங்கிணைந்த நிதியில் சேராது. இது தணிக்கைக்கும் உட்படாது. இது எவ்வாறு செலவழிக்கப்பட வேண்டும் என்பதற்கும் விதிமுறை கிடையாது. அதில் மாநிலங்களுக்கான பங்கெதுவும் கிடையாது. ஒன்றிய அரசின் வரிவருவாயை ஒன்றியத்திற்கானது, மாநிலங்களுக்கானது என்று இரண்டு பங்குகளாகப் பிரிக்கப்படும். இந்தப் பங்கு விகிதத்தைத் தீர்மானிப்பது நிதிக்கமிஷன்கள். வரிவருவாய் என்பதில் ஒன்றிய அரசு வசூலிக்கும் அனைத்து வரிகளும் அடங்கா. இதில் செஸ், சர்சார்ஜ் போன்ற வகையினங்களில் வசூலிக்கப்படுவது அனைத்தும் ஒன்றியத்திற்கே சொந்தம். அடுத்தது, மாநிலங்களுக்கான தொகுப்பு நிதியை எவ்வாறு மாநிலங்களுக்குக்கிடையே பகிர்வது என்பதையும் நிதிக்கமிஷன்கள் தீர்மானிக்கும். இவற்றுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் அரசியல் சாசனத்தால் வரையறுக்கப்பட்ட நிதிக் கூட்டாட்சி முறையே (Fiscal Federalism), அடுத்தது, ஒருங்கிணைந்த நிதியிலிருந்து மாநிலங்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகைகளுக்கான (Grants) கோட்பாட்டை வகுத்தளிப்பதும் நிதிக்கமிஷன். அக்கோட்பாட்டினைப் படையில் அவற்றைப் பிரித்துக் கணக்கிட்டுச் சொல்வதும் நிதிக்கமிஷன். பஞ்சாயத்து அமைப்புகளுக்கு இந்திய ஒருங்கிணைந்த நிதியிலிருந்து வழங்குவதற்காக நிதி திரட்டும் முறையையும் வகுத்தளிப்பது நிதிக்கமிஷன். இதைத்தவிர குடியரசுத் தலைவருக்கு நிதி விஷயத்தில் தேவைப்படும் விசேஷ ஆலோசனைகள் பற்றியும் குடியரசுத் தலைவர் கேட்டால் வழங்கும்.

மாநிலங்களுக்குப் பகிரவேண்டிய நிதி இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படும். ஒன்று பகிர்மான நிதி (Division of Revenue), இரண்டு விசேஷச் சூழ்நிலையில் வழங்கப்படும் மானியத்திற்கான நிதி (Grants). சில மாநிலங்கள் பின்தங்கிய மாநிலங்களாக இருப்பதால் அவற்றின் வளர்ச்சிக்கு என்று தனியாக மானிய நிதி என்பதை ஒதுக்கியது போக எஞ்சுவது பகிர்மான நிதியாகும். எனவே மானியங்களுக்கு அடிப்படை பின்தங்கிய மாநிலங்களாக இருக்க வேண்டும். இவற்றை எவ்வாறு பகிர்வது என்பதை நிதிக்கமிஷன் பரிந்துரைக்கும் என்றும் உருவாக்கப்பட்டது. இது செயல்படத் துவங்கிய சிறிது காலத்தில் மாநிலங்களில் அதிருப்தி துவங்கியது. இச்செயல்பாட்டில் மானியத்திற்கான தேவைக்கும் வழங்கப்பட்ட மானியத்திற்கும் தொடர்பேதுமில்லை. பகிர்வு நிதி பகிரும் விதத்திலும் தர்க்க ரீதியான முரண்பாடுகள் தோன்ற ஆரம்பித்தன. இதன் விளைவாக மாநிலங்கள் மத்தியில் அதிருப்தி துவங்கியது.

இரண்டு வழிகளில் நிதிப்பங்கீட்டில் மாநிலங்கள் பாதிக்கப் படுகின்றன. முதலாவது செங்குத்துப் பகிர்வு. இதில் தொகுப்பு நிதியில் ஒன்றியத்துக்கு ஒதுக்கப்படும் நிதி அதிகரிக்க அதிகரிக்க மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி குறையும். இதன் விளைவாக ஒவ்வொரு மாநிலமும் பெறும் பங்கும் குறையும். தொகுப்பு நிதியில் சேர்க்கும் நிதியில் நிகர வரி வருவாய். மட்டுமே. வரிவசூல் பொறியமைவுக்கு செலவிடப்படும் தொகை மொத்த வரி வருவாயிலிருந்து கழித்தபின் கிடைப்பதே நிகர வரி வருவாய், அத்துடன் வசூலிக்கப்பட்ட வரியில் செஸ், சர்சார்ஜ் ஆகியவை சேராது. இதுவரை அமைக்கப்பட்ட நிதிக்கமிஷன்கள் நிகர வரி வருவாயில் மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுக்க

பரிந்துரைத்த பட்டியல் இதோ

நிதிக் கமிஷன் (Finance Commission) காலகட்டம் (Period) மாநிலங்களுக்கான பங்கு (State Share)
1-5 நிதிக் கமிஷன் 1952-74

20-25%

6-9 நிதிக் கமிஷன் 1974-95

25%

10வது நிதிக் கமிஷன் 1995-2000

29%

11வது நிதிக் கமிஷன் 2000-05

29.5%

12வது நிதிக் கமிஷன் 2005-10

30.5%

13வது நிதிக் கமிஷன் 2010-15

32%

14வது நிதிக் கமிஷன் 2015-20

42%

15-16 நிதிக் கமிஷன் 2020-31

41%

இந்தப் பட்டியலில் நிகர வரி வருவாயில் மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுக்கும் பங்கு கூடி வந்திருக்கிறது என்று எண்களைப் பார்த்து முடிவெடுத்துவிட முடியாது. பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசு, ஒன்றிய நிதியை அதிகரித்து மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுக்கும் நிதியைக் குறைப்பதற்காக வசூலிக்கும் செஸ், சர்சார்ஜ் ஆகியவை போகப் போக அதிகரித்து வந்திருக்கிறது. இது படிப்படியாக உயர்ந்து 2024-25ம் நிதியாண்டில் மொத்த வரிவசூலில் 23 சதவீதம் செங்குத்துப் பகிர்வில் சேராத செஸ், சர்சார்ஜ் ஆகப் போய்விட்டது.

இரண்டாவதாக, கிடைமட்டப் பகிர்வு. இதில் சில மாநிலங்கள் அதிக நிதியையும் சில மாநிலங்கள் குறைந்த நிதியையும் பெறுவதற்கு வாய்ப்பு உண்டு. மாநிலங்களுக்குக் கிடைக்கும் நிதிகளில் ஏற்படும் வேறுபாட்டை அளப்பதற்கு மாநிலத்திலிருந்து வசூலாகும் நிதியில் எத்தனை சதவீதம் திருப்பிவருகிறது என்ற விகிதாசாரத்தை வைத்து அளவிட முடியும். “தமிழகத்திலிருந்து மத்திய அரசு பெறும் ஒவ்வொரு ரூபாய் வரி வருவாயிலிருந்து தமிழகத்திற்கு 29 பைசாதான் தரப்படுகிறது. மாறாக பாஜக ஆளும் உபியிலிருந்து மத்திய அரசு பெறும் ஒவ்வொரு ரூபாய் வரி வருவாயிலிருந்து அம்மாநிலத்திற்கு 2.73 ரூபாய் தரப்படுகிறது,” என்று இந்த அளவுகோலின் அடிப்படையில்தான் தமிழகத்தின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 11.10.2023 அன்று சட்டசபையில் பேசினார். அவர் பேசியதற்கான புள்ளிவிவர அடிப்படை அருகிலுள்ள படத்தில் இருக்கிறது.

நிதிக்கமிஷன் மூலமாக நடைபெறும் நிதிப் பகிர்வின் விளைவு தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என்ற வாதம் முன்னெழுந்திருக்கிறது. பொதுவாகவே வளர்ச்சியடைந்த மாநிலங்கள் வஞ்சிக்கப்படுகிறது என்று மட்டும் தெரிகிறது. இதனால்தான் மோடி குஜராத் முதல்வராக இருந்தபொழுது குஜராத் வஞ்சிக்கப்படுகிறது என்று பேசி வந்தார். இருப்பினும் மாநிலங்களுக்கான பகிர்வுத் தொகுப்பு நிதி என்பது மொத்த நிதியில் ஒரு பங்கே. பெரும்பங்கு ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில். ஒன்றிய அரசு பா.ஜ.க. வசம் வந்த பொழுது அவர்கள் ஒன்றிய நிதியில் திட்டங்கள் மூலம் பெரும்பங்கு பெறுகிறார்கள். எனவே இப்பொழுது குஜராத் வஞ்சிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு இல்லை. மூன்றாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் (1961-66) தமிழ்நாடு பின்தங்கிய மாநிலமாக இருந்தது என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் ஏற்பட்ட கல்வி வளர்ச்சியும், தொழில் வளர்ச்சியும், தமிழகத்தில் பின்பற்றப்பட்ட குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் நல்ல பலனை அளித்ததன் விளைவாக, மக்கட்தொகை பெருக்கம் மற்ற மாநிலங்கள் அளவுக்கு வேகமாக நடைபெறாததால் மாநில தனிநபர் பொருளுற்பத்தி உயர்ந்ததன் விளைவாகவும், தமிழகம் வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலுக்குள் சென்றுவிட்டது. மத்தியத் தொகுப்புக்கு அதிக வரி செலுத்தி மத்தியத் தொகுப்பிலிருந்து குறைந்த நிதியைப் பெறுவது எப்படி நடைபெற்று வருகிறது என்பதைப் பார்ப்போம்,

கிடைமட்டப் பகிர்வில் பத்துக் காரணிகள் பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றது. சில நிதிக்கமிஷன்கள் இவற்றில் சிலவற்றின் அடிப்படையில் நிதிப்பகிர்வை செய்திருக்கின்றன. 11வது நிதிக்கமிஷனலிருந்து 16வது நிதிக்கமிஷன் வரை கிடைமட்டப் பகிர்வு எந்த அடிப்படையில் நடைபெற்றது என்பதைப் பின்வரும் அட்டவணை விளக்குகிறது:

பகிர்வுக் காரணி (Factor) 11வது கமிஷன் (2000-05) 12வது கமிஷன் (2005-10) 13வது கமிஷன் (2010-15) 14வது கமிஷன் (2015-20) 15வது கமிஷன் (2021-26) 16வது கமிஷன் (2026-31)
வருமான இடைவெளி தூரம்

62.5

50

47.5

50

45

42.5

மக்கட்தொகை (1971 கணக்கெடுப்பு)

10

25

25

17.5

மக்கட்தொகை (2011 கணக்கெடுப்பு)

10

15

17.5

பரப்பளவு

7.5

10

10

15

15

10

வனப்பகுதிகளின் பரப்பளவு

7.5

வனமும் சூழலியலும்

10

10

உட்கட்டமைப்பு குறியீட்டெண்

7.5

நிதிமேலாண்மை ஒழுங்கு

7.5

7.5

17.5

மக்கட்தொகை கட்டுப்பாடு

12.5

10

வரி வசூல் முயற்சி

5

7.5

2.5

மொத்தத் தேசிய உற்பத்தியில் மாநிலத்தின் பங்கு

10

மொத்தம்

100

100

100

100

100

100

• வருமான இடைவெளி தூரம்: அதிகத் தனிநபர் வருவாய் உள்ள மாநிலத்திற்கும் தனியொரு மாநிலத்திற்குமான தனிநபர் வருவாயில் உள்ள இடைவெளி அடிப்படையில் பகிரப்படும். இந்த இடைவெளி அதிகம் இருந்தால் அதிக நிதி கிடைக்கும்.

• மக்கட்தொகை அடிப்படை: 1971, 2011ம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி பகிரப்படும். அதிக மக்கட்தொகை கொண்ட மாநிலம் அதிக நிதி பெறும்.

• பரப்பளவு: மாநிலத்தின் பரப்பளவு அடிப்படையில் பகிரப்படும். அதிகப் பரப்பளவு உள்ள மாநிலம் அதிக நிதி பெறும்.

• வனப்பகுதிகளின் பரப்பளவு: வனப்பகுதியின் பரப்பளவிற்கும் மாநிலத்தின் பரப்பளவிற்கும் உள்ள விகிதத்தின் அடிப்படையில் பகிரப்படும். அதிக விகிதம் கொண்ட மாநிலம் அதிக நிதியைப் பெறும்.

• வனமும் சூழலியலும்: மொத்தத் தேசிய வனப்பரப்பளவில் மாநிலத்தின் வனப்பரப்பளவு அடிப்படையில் பகிரப்படும். இந்த விகிதம் அதிகம் இருக்கும் மாநிலங்கள் அதிக நிதி பெறும்.

• உட்கட்டமைப்பு குறியீட்டெண்: சாலை வசதி, ரயில் வசதி, தொலைத்தொடர்பு வசதி, மின் வசதி, அஞ்சல் நிலையங்கள், கல்வி மருத்துவக் கட்டமைப்புகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். குறைந்த குறியீட்டெண் உள்ள மாநிலம் அதிக நிதியைப் பெறும்

• நிதிமேலாண்மை ஒழுங்கு: வருவாய்க்கும் செலவிற்கும் உள்ள விகிதத்தைக் கணக்கிட்டு, இந்த விகிதமானது மாநிலங்களின் சராசரி விகிதத்திலிருந்து எவ்வளவு தூரம் விலகியிருக்கிறது என்ற அடிப்படையில் பகிரப்படும். நேர் திசையில் அதிக விலகல் உள்ளவை அதிக நிதியைப் பெறும்.

• மக்கட்தொகைக் கட்டுப்பாடு: இது கருவுறுதல் விகிதத்தின் (Fertility Ratio) அடிப்படையில் தீர்மானிக்கப்படும். குறைந்த கருவுறுதல் விகிதம் உள்ள மாநிலம் அதிக நிதியைப் பெறும்

• வரி வசூல் முயற்சி: இது வரி வசூல் திறன் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

அதிக மக்கட்தொகை கொண்ட மாநிலங்கள் பின்தங்கிய மாநிலங்களாக இருந்து வருகின்றன. அவர்கள் தொகுப்பு நிதியிலிருநது அதிக நிதி பெற வருமான இடைவெளி தூரமும் மக்கட்தொகையும் கைகொடுக்கிறது. கிடைமட்டப் பகிர்வுக் கொள்கை தொடர்ச்சியாக மாறுதல் அடைந்து வருகிறது. இந்த மாறுதல்கள் விளைவாகத் தமிழகத்திற்குக் கிடைக்கும் பகிர்வு சதவீதம் கடுமையாகக் குறைந்திருக்கிறது. கிடைமட்டப் பகிர்வில் தொகுப்பு நிதியில் தமிழகத்தின் பங்கு ஒன்பதாவது நிதிக் கமிஷனில் 7.932%, இது தேய்ந்து போய் 15வது நிதிக்கமிஷனில் 4.077%, இது படிப்படியாகத் தேய்ந்திருக்கிறது. ஒன்பதாவது நிதிக்கமிஷனின் பெற்ற விகிதத்தைக்கூட 15வது நிதிக்கமிஷனில் பெறாததால் தமிழகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஏற்பட்ட இழப்பு கிட்டத்தட்ட ஒரு லட்சத்து அறுபத்து மூவாயிரம் கோடிகள்.

வளர்ச்சியடைந்த மாநிலத்தின் நிதியானது பின்தங்கிய மாநிலத்திற்குச் செல்வதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஏனென்றால் இப்பெருநிலப்பரப்பு ஒன்றியமாக அமைவதற்கான நோக்கமே அனைவரும் ஒன்று சேர்ந்து ஒன்றாக முன்னேற வேண்டும் என்பதே. ஒன்றுசேர்ந்து முன்னேறும் போது அதிக வேகத்தில் செல்பவர் குறைந்த வேகத்தில் வருவோரை இழுத்துச் செல்வது நடக்கும். அத்துடன் வளர்ச்சியடைந்த மாநில உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை அனைத்து மாநிலங்களிலிருந்தும் கிடைக்கும். இதன் விளைவாக மாநிலங்களுக்கு இடையிலான வர்த்தக உபரியானது வளர்ச்சியடைந்த மாநிலங்களுக்குச் சாதகமாகத் திரளும். இதை மறுசுழற்சி செய்வதற்கான பொறியமைவை இக்கோட்பாடு உருவாக்கும், எனவே இக்கோட்பாடு அக்காலத்தில் கேள்விக்குள்ளாக்கப்படாமல் இருந்தது.

ஏனென்றால் அன்றைய தினம் தனிநபர் ஊக்கத்தை மட்டுப்படுத்தாமல், அரசுகளின் வலுவான தலையீடு மூலமும் திட்டமிட்ட வளர்ச்சியின் மூலமும் சமச்சீரான வளர்ச்சி நிலையை எட்டுவது என்பது எல்லாரும் ஏற்றுக்கொண்ட கோட்பாடாகும். அத்துடன் இது இந்தியாவில் மூலதனத் திரட்சிக்கு உதவும் கொள்கையாகவும் அன்றைய தினம் இருந்தது. இந்தியத் தொழிலதிபர்கள் தயாரித்த பம்பாய் திட்டத்துடன் (1944) இது ஒத்துப்போனது.

அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தக் கோட்பாடு உலகமய காலகட்டத்தில் கைவிடப்பட்டு வருகிறது. பெயரளவில் மட்டுமே இருக்கிறது. ஏனென்றால் உலகமயக்கட்டத்தில் தனிநபர் ஊக்கத்தின் மூலம் உற்பத்தித்திறன் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவது, மாநிலப் பொருளாதாரங்களின் போட்டியிடும் தன்மை, நலத்திட்டங்களோ, பின்தங்கியவர்களுக்கு உதவுவதோ சிறப்பான பொருளாதார நடைமுறை கிடையாது போன்ற கோட்பாடுகள் முன்னுக்கு வந்து, ஏற்கெனவே அமலில் இருந்த சமத்துவக் கோட்பாடுகளை மறையச் செய்துவிட்டன. ஆக, வளர்ச்சியடைந்த மாநிலங்களிலிருந்து பின்தங்கிய மாநிலங்களுக்கு நிதி செல்வது என்பது திறனின்மையை ஊக்குவிக்கும் செயலே என்ற வாதமும் முன்னுக்கு வந்துவிட்டது. பின்தங்கிய மாநிலங்களின் கட்டுப்பாட்டில் ஒன்றிய அரசு செயல்பட்டால் பின்தங்கியவை வளர்ச்சியடைந்தவற்றை ஆளுகை செய்யும் என்ற வாதமும் முன்னுக்கு வந்துவிட்டது.

பின்தங்கியவர்களுக்கு உதவுவது, ஊக்குவிப்பது, இழுத்துச் செல்வது ஒருபுறமும் இக் கோட்பாடுகளை மறுக்கும் கோட்பாடுகள் மறுபுறமும் போட்டியிடுகின்றன. பின்னது இப்பொழுது ஆளுகைக்கு வந்துவிட்டது. இந்த இரண்டு வாதங்களையும் பயன்படுத்தி பா.ஜ.க. ஆட்சியிலில்லாத மாநிலங்களுக்குக் குறைந்த நிதி போய்ச் சேருமாறு பார்த்துக் கொள்வதும். இதன் மூலமாகத் தங்கள் கட்சி தெரிவு செய்வதற்கான காரணிகளை வலுப்படுத்தவும் பா.ஜ.க. முனைந்து வருகிறது

எனினும் புதிய சூழ்நிலையில், உலகமயக் கட்டத்தில், ஒவ்வொரு மாநிலமும் தன்னுடைய நலனைப் பேணுவதற்கு அதிக முன்னுரிமை கொடுத்துக் கொண்டே பிற மாநிலங்களுக்கு உதவுவது என்ற வகையில் நிதிப் பங்கீட்டில் ஒரு புரட்சிகரமான மாற்றத்திற்கான தேவை இப்போது எழுந்துள்ளது என்பது மட்டும் நிச்சயம்.

திட்டக்கமிஷன்:

நிதிக்கமிஷன் போன்றே திட்டக்கமிஷனும் வளர்ச்சி மேம்பாடு நிதிப் பங்கீட்டில் அங்கம் வகிக்கும் அமைப்பாகும். இது 1951ல் ஏற்படுத்தப்பட்டு 2015ல் கலைக்கப்பட்டுவிட்டது. இதற்குள் உள்ள சில முக்கியமான அம்சங்களைப் பார்ப்போம், ஒட்டுமொத்தத் திட்டச் செலவீடு என்பது ஐந்தாண்டுகளில் ஒன்றிய, மாநில அரசுத் திட்டங்களில் செலவிடப்பட வேண்டி திட்டமிட்ட தொகை. இதற்குள் மாநிலத் திட்டங்களுக்கான உதவித்தொகை அடங்கும். இங்கே விவாதத்திற்குட் பட்டது மாநிலத் திட்டங்களுக்கான உதவித்தொகை பற்றியதே. மத்தியத் திட்டம் பற்றி இங்கே விவாதிக்கப்படவில்லை. மத்தியத் திட்டத்தில் சில மாநிலங்கள் அதிகப் பலனடைவது, சில மாநிலங்கள் குறைவான பலனடைவது என்பது இருந்தாலும் அது பற்றிய நமது விவாதத்தை இப்போது ஒத்திவைப்போம்.

காட்கில் சூத்திரம்:

1952-1969 காலகட்டம் அதிருப்தியின் தோற்ற காலகட்டம் எனலாம். இந்தக் காலகட்டத்தில் கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலும் ஒன்றியத்திலும் ஒரே கட்சி ஆட்சிதான். இருப்பினும் மானிய நிதி வழங்குவதில் ஏற்றுக்கொண்ட தர்க்கம் கடைப்பிடிக்கப்படவில்லை. மானிய நிதித் தேவையின் அடிப்படையிலும் பின்தங்கிய மாநிலங்களுக்கு அதிக நிதி கிடைக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டது. மானிய நிதியைப் பகிர்ந்தளிப்பதற்கான காரணிகளை நிதிக்கமிஷன் முடிவு செய்து ஒன்றிய அரசிடம் பரிந்துரைத்தாலும், அமலாக்கத்தில் ஒன்றிய அரசின் விருப்பு வெறுப்புக்கேற்ப முடிவெடுப்பதற்கு இடமுண்டு. மாநிலத்தின் தேவையின் அடிப்படையில் மானிய நிதியைக் கொடுப்பது என்பது ஒன்றிய அரசிடமிருந்து கடன் வாங்கி செலுத்த முடியாமல், அதை மானிய நிதி மூலமாக சரிசெய்யப்பட்டது. இந்த வசதியைப் பயன்படுத்தி வளர்ச்சியடைந்த மாநிலங்கள் ஒன்றிய அரசிடமிருந்து கடன்வாங்கித் திருப்பிச் செலுத்தாமல் மானிய நிதியைப் பெற்றுச் சரிசெய்தன. மொத்த நிதியில் 22 சதவீதம் மானிய நிதியாக இருந்த ஒரு கட்டத்தில் வளர்ச்சியடைந்த மாநிலம் அதில் 40 சதவீதத்தைக் கவ்விச்சென்ற நிகழ்வும் அதே நேரத்தில் பின்தங்கிய மாநிலம் 12 சதவீத மானிய நிதியையே பெற்ற நிகழ்வும் நடந்தது. ஒரே கட்சி இரு அரசுகளிலும் பொறுப்பு வகித்தாலும் நிதிப்பங்கீட்டில் ஏற்படும் அநீதிகளுக்கு எதிரான குரல்கள் மாநிலங்களிலிருந்து எழத்துவங்கின. 1965ம் ஆண்டு நான்காவது ஐந்தாண்டுத்திட்ட நகல் தேசிய வளர்ச்சிக் கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்ட பொழுது இந்த அதிருப்தி வெளிப்படையாக வெடித்தது.

புகழ்பெற்ற சூழலியலாளர் மாதவ் காட்கில்லின் தந்தையரான தனஞ்செய் ராமச்சந்திர காட்கில் ஒரு பொருளியல் நிபுணராவார். இவர் இந்திய திட்டக்கமிஷனின் துணைத் தலைவராக 1966ல் நியமிக்கப்பட்டார். மொத்த திட்டச் செலவில் ஒரு பகுதி மானிய நிதியாகப் போய்விடுகிறது. அதைப் பிரித்து வழங்கும் அதிகாரம் நிதிக்கமிஷனுக்கு இருப்பதால், திட்டக்கமிஷன் திட்டமிடும் போது மாநிலங்களின் நிதிநிலையை அவதானிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே மானிய நிதி விஷயத்தில் ஓர் ஒழுங்கு ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினார். மாநிலங்களை அழைத்துப் பேசினார். இறுதியில், ஒன்றிய அரசிடமிருந்து மாநிலங்கள் பெறும் கடனும் அதை திருப்பிச் செலுத்த முடியாமல் மானிய நிதியில் சரிக்கட்டுவதையும் முடிவுகட்ட வாங்கிய கடனில் அதிகபட்சமாக 30 சதவீதமே மானிய நிதியின் மூலமாக சரிக்கட்ட முடியும் என்ற விதியை உருவாக்கினார். அடுத்தது திட்ட உதவிக்காக மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வுக்கான விதிமுறையையும் கொண்டு வந்தார். இது கார்கில் சூத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

சமச்சீரான வளர்ச்சி, மாநிலங்களுக்கிடையிலான இடைவெளி குறைய வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்தையும் கார்கில் சூத்திரமும் பின்பற்றியது. காட்கில் சூத்திரம் 1969ல் அமலுக்கு வந்தது. இதன்படி நான்காவது (1969-74) மற்றும் ஐந்தாவது (1974-79) ஐந்தாண்டுத் திட்டங்களின் நிதி பகிர்ந்தளிக்கப்பட்டது. பகிர்ந்தளிக்கப்படும் நிதியானது மாநிலத் திட்ட உதவிக்கென்று திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியாகும் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும், மொத்தத் திட்டத்தில் ஒன்றியத் திட்டத்தொகை போக எஞ்சுவது மாநில உதவிக்கான திட்ட உதவித் தொகை.
இச்சூத்திரத்தின்படி மத்திய உதவித்தொகை பெறுவதில் விசேஷ அந்தஸ்து பெற்ற மாநிலங்களான அஸ்ஸாம், ஜம்மு-காஷ்மீர், நாகாலாந்து ஆகியவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்படும் மாநிலங்களுக்கான உதவித்தொகையாக நிர்ணயிக்கப்பட்ட மொத்த மத்திய நிதித்தொகுப்பில் இந்த மாநிலங்களின் தேவைகளை முதலில் நிறைவேற்றப்படும். எஞ்சிய தொகையை ஒரு நிதித் தொகுப்பாகக் கருதி பின்வரும் ஐந்து பங்குகளாகப் பிரிக்கப்படும்

பகிர்வுக் காரணி (Allocation Criteria) சதவீத ஒதுக்கீடு (Percentage)

மக்கட்தொகை

60%

வரி வசூல் திறன்

10%

தனிநபர் வருமானம்

10%

நிறைவேற்றப்பட்டுவரும் நீர்ப்பாசன மின்னுற்பத்தி திட்டங்கள்

10%

விசேஷப் பிரச்சனைகள்

10%

• மக்கட்தொகை: அதிக மக்கள் தொகை உள்ள மாநிலம் இதில் அதிக நிதியைப் பெறுவர்.

• வரி வசூல் திறன்: தனிநபர் வரி செலுத்தலுக்கும் தனிநபர் வருமானத்திற்கும் இடையிலான விகிதமாகும். இது சதவீதத்தில் நிர்ணயிக்கப்படும்.

• தனிநபர் வருமானம்: தேசியச் சராசரி தனிநபர் வருமானத்தைவிட மாநில சராசரி தனிநபர் வருமானம் உள்ள மாநிலங்களுக்கு இதில் எதுவும் கிடையாது, சராசரியை விட அதிகமாக விலகி இருந்தால் அதிக நிதி கிடைக்கும்

• நிறைவேற்றப்பட்டு வரும் நீர்ப்பாசன, மின்னுற்பத்தித் திட்டங்கள்: அதிகத் திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் மாநிலங்கள் அதிக நிதியைப் பெறும்

• விசேஷப் பிரச்சனைகள்: வறட்சி, வெள்ளம் போன்றவற்றின் அடிப்படையில் வழங்கப்படும். இதைத் தீர்மானிக்கும் விசேஷ அதிகாரம் நிதிக்கமிஷனுக்கு உண்டு. தீவிர ஆய்வுக்குப் பிறகு கொடுக்கலாமா, வேண்டாமா, எவ்வளவு கொடுக்கலாம் என்பதைத் நிதிக்கமிஷன் தீர்மானிக்கும்.

நிகர வரி வருவாயில் நிதிக்கமிஷன் செய்யும் கிடைமட்டப் பங்கீட்டிற்குப் பின்பற்றிய கோட்பாடுகளைக் கிட்டத்தட்ட திட்டக் கமிஷனும் திட்ட உதவித்தொகையைக் கிடைமட்டமாகப் பகிர்வதற்குப் பின்பற்றின. எனினும் இதை முதலில் திட்டக்கமிஷனில் புகுத்தியவர் காட்கில் என்பதால் இது காட்கில் சூத்திரம் என்ற பெயர் பெற்றுவிட்டது.

காட்கில் சூத்திரத்தின் பிரச்சனைகள்:

மாநிலங்களின் சமச்சீரான வளர்ச்சி என்பதை இந்தச் சூத்திரம் உத்தரவாதப்படுத்தவில்லை. மக்கள் தொகை அடிப்படையில் 60 சதவீத நிதி பிரிக்கப்பட்டால் அதிக நிதி பங்களிக்கும் மாநிலம் குறைந்த மக்கள் தொகையைக் கொண்டிருந்தால், இந்த மாநிலம் செலுத்தும் வரியிலிருந்து மக்கள் தொகை அதிகம் கொண்ட மாநிலம் பயனடையும். அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் வளர்ச்சியடைந்த மாநிலமாக இருக்கும் பட்சத்தில் இம்மாநிலங்களின் வளர்ச்சி வேகம் அதிகமாக இருக்கும். பின்தங்கிய, வளர்ச்சியடைந்த மாநிலங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்காக ஒதுக்கப்பட்ட 10 சதவீதத்தில் தனிநபர் வருமானம் தேசியச் சராசரிக்கும் குறைவான மாநிலத்திற்குக் கூடுதல் நிதி ஒதுக்குவதன் மூலம் சாத்தியப்படும் என்கிறது இந்தச் சூத்திரம். தேசியச் சராசரியைவிட அதிகத் தனிநபர் வருமானம் உள்ள மாநிலங்களுக்கு இந்த 10 சதவீதத்தில் எதுவும் கிடைக்காது. இது தனிநபர் ஊக்கத்தைக் குறைக்காமலே இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்ற கொள்கைக்கு இது எதிரானது. தனிநபர் வருமானத்தில் தேசியச் சராசரிக்குச் சற்று உயர்வாக உள்ளவர்கள் எதுவும் பெறமுடியாது என்றால் அவர்கள் உரிமையை இழக்கிறார்கள், ஊக்கம் குறையும், இது இடைவெளியைக் குறைக்க உதவாது. இச்சூத்திரம் அமலாக்கப்பட்டதன் விளைவாக அன்றைய தினம் குறைந்த வருவாய் மாநிலங்களான தமிழ்நாடும், ஆந்திரமும் திட்ட உதவியில் சாரசரிக்கும் குறைவாகப் பெற்றன, ஆனால் உ.பி. பீகார் போன்ற மாநிலங்கள் திட்ட உதவியில் சராசரியைப் பெற்று விட்டன.

இந்தச் சூத்திரத்தில் பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் நிதிப்பகிர்விற்கான கொள்கை என்ற ஒன்று திட்டமானிய நிதிக்கு உருவாக்கப்பட்டுவிட்டது என்ற அடிப்படையிலும், ஒரு மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருப்பது ஒன்றியத்தை ஆளும் கட்சியா அல்லது ஒன்றிய ஆளும் கட்சியை எதிர்க்கும் கட்சியா என்ற பிரச்சனை இதில் இல்லை என்ற அடிப்படையிலும் இது வரவேற்கத்தக்கதே. நான் கொடுத்ததுதான் நிதி என்று ஒன்றிய அரசு அகந்தையுடன் கூறமுடியாது. என்னுடைய கட்சியைத் தெரிவு செய்தால் அதிக நிதி கிடைக்கும், என்னுடைய கொள்கைகளை அதாவது இந்தியை ஏற்றுக்கொள்வது, சமூக நலத்திட்டங்களைக் கைவிடுவது உள்ளிட்ட என்னுடைய கொள்கைகளை ஏற்றுக்கொண்டால் அதிக நிதி கொடுப்பேன் என்றும் ஒன்றிய ஆளும் கட்சி கூறமுடியாது.

காட்கில் சூத்திரத்தில் மாற்றம்:

வெளிப்படையாகத் தெரிந்த அதிருப்தியும் அதையொட்டி எழுந்த வாதப்பிரதிவாதங்களும் காட்கில் சூத்திரத்தில் மாற்றம் கோரின. ஆறாவது ஐந்தாண்டுத்திட்டம் தயாரிக்கப்பட்ட பொழுது, பின்வருமாறு மாற்றம் செய்யப்பட்டது: மூலச்சூத்திரத்தில் உள்ள நான்காவது பங்கான 10 சதவீதம், அதாவது மாநிலங்களின் செயல்பட்டுவரும் நீர்ப்பாசன மின்னுற்பத்தித் திட்டங்களுக்கு ஏற்ப பகிர்வது நிறுத்தப்பட்டது. இந்த 10 சதவீதம் மூன்றாவது பங்கான 10 சதவீதத்துடன் இணைக்கப்பட்டது. மூன்றாவது பங்கு தொகுப்பு நிதியில் 20 சதவீதத்தைக் கொண்டிருக்கும் என்று மாற்றப்பட்டது. அதாவது, எந்த மாநிலங்களில் தனிநபர் வருமானம் தேசியச் சராசரி தனிநபர் வருமானத்தைவிடக் குறைவாக இருக்கிறதோ அவற்றிற்குப் பகிரப்படும். மாற்றப்பட்ட கார்கில் சூத்திரம் ஆறாவது (1980-85), ஏழாவது திட்டம் (1985-90) ஆகிய திட்ட காலங்களில் அமலுக்கு வந்தது. இச் சூத்திரத்தின்படி தமிழ்நாடு தவிர மற்ற அனைத்து பின்தங்கிய மாநிலங்கள் சராசரிக்கும் அதிகமாகத் திட்ட உதவி நிதியைப் பெற்றன. இக்காலகட்டத்தில் கிட்டத்தட்ட ஒன்றிய ஆளுங்கட்சியே அனைத்து மாநிலங்களிலும் ஆளுங்கட்சி என்ற நிலையில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. நாம் ஏற்கெனவே சுட்டிக்காட்டியபடி மொத்தத் திட்ட ஒதுக்கீட்டில் மாநில திட்டங்களுக்கான உதவித்தொகை அடங்கும். நான்காவது முதல் ஏழாவது ஐந்தாண்டுத்திட்டத்தை எடுத்துக்கொண்டால் மொத்தத் திட்டத்தொகை ஒன்பது மடங்கு உயர்ந்திருக்கிறது. எனவே மாநிலங்களுக்கான உதவித் தொகையும் ஒன்பது மடங்கு உயர்ந்திருக்க வேண்டும். ஆனால் உயர்ந்தது அரை மடங்கே. இதன் மூலம் நிதியாதாரம் ஒட்டுமொத்தமாக ஒன்றிய அரசின் பிடிக்குள் சென்றிருக்கிறது என்பதை இதற்குள் நாம் பார்க்க முடியும். அத்துடன் அதிக வருவாய் பெரும் மாநிலங்களில் தனிநபர் திட்டச் செலவீடு அதிகமாக இருக்கும். இது மாநிலங்களுக்கு இடையிலான இடைவெளியை அதிகரிக்கும். இந்த இடைவெளியைக் குறைப்பதற்கு மத்திய உதவித் தொகை தொகுப்பை அதிகரித்தால்தான் சாத்தியம். ஆனால் மத்திய உதவித்தொகைத் தொகுப்பானது ஒட்டுமொத்தத் திட்ட மதிப்பீட்டுத்தொகை வளர்ச்சியில் வேகத்தை விட அற்பமாக வளர்ந்தால் மாநிலங்களுக்கு இடையிலான இடைவெளி எப்படிக் குறையும்?

காட்கில்-முகர்ஜி சூத்திரம்:

ஏழாவது ஐந்தாண்டுத்திட்ட காலம் முடிவடைந்தவுடன் உலகமயமாக்கல் கட்டம் வந்துவிட்டது. அக்டோபர் 11, 1990ல் கூடிய தேசிய வளர்ச்சிக் கவுன்சில் அப்போதைய திட்டக்கமிஷனின் துணைத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜியின் ஆலோசனையின் பேரில் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டது. இது காட்கில்-முகர்ஜி சூத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இதன்படி மாநிலங்களுக்கான திட்ட உதவித்தொகை தொகுப்பானது நான்கு பங்குகளாகப் பின்வருமாறு பிரிக்கப்படும்.

பகிர்வுக் காரணி (Allocation Criteria) சதவீத ஒதுக்கீடு (Percentage)

மக்கட்தொகை

55%

தனிநபர் வருமானம்

25%

நிதிமேலாண்மைத் திறன்

5%

விசேஷப் பிரச்சனைகள்

15%

முதல் பங்கான 55 சதவீதத் தொகுப்பு நிதியானது மாநில மக்கட்தொகைக்கு ஏற்ப முதல் பங்கைப் பற்றி விளக்க வேண்டிய அவசியமில்லை. இரண்டாவது பங்கைப் பிரிக்கும் முறையில் கடுமையான மாற்றம் வந்துவிட்டது. இரண்டாவது பங்கான 25 சதவீதத் தொகுப்பு நிதியானது 20 சதவீதம் 5 சதவீதம் என்று இரண்டாகப் பிரிக்கப்படும். முதல் 20 சதவீதமானது விலகல் முறை மூலமாகப் பகிரப்படும் என்றும் இரண்டாவது, 5 சதவீதமானது இடைவெளி தூர முறை மூலமாகப் பகிரப்படும் என்றும் நிர்ணயிக்கப்பட்டது. விலகல் முறையில் தேசியச் சராசரி தனிநபர் வருமானத்தைவிட மாநில சராசரி தனிநபர் வருமானம் குறைவாக உள்ள மாநிலங்கள் மட்டுமே பெறமுடியும். மாநில சராசரி தனிநபர் வருமானம் என்பது மாநில மொத்த உற்பத்தியை மாநில மக்கள் தொகையால் வகுத்தால் கிடைப்பது. இதுவும் மூன்று வருடங்களுக்கான சராசரியே கணக்கிடப்படும். இடைவெளி தூர முறை என்பது அதிகபட்ச சராசரி தனிநபர் வருமானம் உள்ள மாநிலத்திலிருந்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு தூரம் இடைவெளி இருக்கிறது என்பதைக் கணக்கிட்டு அதற்கேற்ற விகிதத்தில் பகிரப்படும். நிதிமேலாண்மைத் தன்மை எப்படிக் கணக்கிடப்படுகிறது என்றால் திட்டக்கமிஷனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாநிலத் திட்டத்தில் எத்தனை சதவீதத்தை மாநிலங்கள் சுயமாகவே திரட்டுகிறது என்பதுவே. விசேஷப் பிரச்சனைகள் பட்டியலும் விரிவாக்கப்பட்டுவிட்டது. இதில், வெள்ளம், வறட்சி, கடலோரப் பிரச்சனை, பாலைவனப் பிரச்சனை, விசேடமான சுற்றுச்சூழல் பிரச்சனை, அதிக மக்கள் அடர்த்தி கொண்ட பகுதிகள், நகர்ப்புறக் குடிசைப் பகுதிகள், விசேட நிதிப்பிரச்சனைகள் ஆகியவை அடங்கும். இந்தக் கடைசி 15 சதவீதப் பங்கு என்பது தீர்க்கமாக வரையறுக்கப்பட்டது கிடையாது. திட்டக்கமிஷனின் சுய முடிவுக்கு உட்பட்டது என்பதால் இது அதிகச் சூழ்ச்சித்திறத்துடன் கையாள இடம் உண்டு.

புத்தாயிரம் ஆண்டு பிறந்தவுடன் கார்கில் முகர்ஜி சூத்திரமும் திருத்தப்பட்டது. இம்முறை அது 60%-25%-7.5%-7.5% என்றாக்கப் பட்டது. முதல் 60 சதவீதம் மக்கள்தொகை அடிப்படையிலானது, இரண்டாவது 25 சதவீதத் தொகையைப் பிரிப்பதில் மாற்றம் இல்லை ஆனால் மாநிலங்களின் நிதிமேலாண்மைத் திறன் என்பதை மாற்றி நிதிச் செயல்பாட்டு அடிப்படையில் பிரிக்கப்படுவது என்பது 7.5 சதவீதமாக உயர்ந்துவிட்டது. மாநிலங்களின் விசேஷப் பிரச்சனை களுக்கான நிதி 7.5 சதவீதமாகக் குறைந்துவிட்டது. நிதிச் செயல்பாடு என்பதில் முன்பு போல் நிதி திரட்டும் திறன் கிடையாது. இப்போது வரி வசூல் செய்யும் திறன் (2.5%), நிதிமேலாண்மைத் திறன் (2%), மக்கட்தொகை கட்டுப்பாடு (1%), மகளிர் கல்வி (1%), இதர விஷயங்கள் (1%) ஆகியவை அடங்கும். இது 2015 வரை செயல்பட்டது, 2015ம் ஆண்டில் திட்டக்கமிஷன் கலைக்கப்பட்டது அதனிடத்தில் நிட்டி அயோக் என்ற அமைப்பு வந்தது.

நிட்டி அயோக் காலம்:

எப்பொழுதுமே கவர்ச்சிகரமான கோஷத்தை முன்வைத்து நடப்பில் இருக்கும் நடைமுறையை உடைப்பதில் வல்லவர்கள் பா.ஜ.க.வினர். பா.ஜ.க.விற்கு வேப்பங்காயாக கசந்த மதச்சார்பின்மை கோட்பாடு எல்லாராலும் சிறந்த கோட்பாடாகக் கருதப்பட்ட காலத்தில் அதை நேரடியாக எதிர்க்காமல் அவர்கள், போலி மதச்சார்பின்மை (pseudo-secularism), களவாணித்தனமாகச் சிறுபான்மையினரை அமைதிப் படுத்துதல் (Appeasement of Minorities) போன்ற பதங்களின் மூலம் தாக்குவார்கள். சோசலிச அரசியல் செல்வாக்கு செலுத்திய காலத்தில் அவர்களும் காந்திய சோசலிசம் எங்கள் கொள்கை என்றார்கள். காந்தியைச் சேர்த்துக்கொண்டதற்கு காந்தியைக் கொன்றவர்கள் என்ற பழியிலிருந்து தப்பிப்பதற்காக செய்யப்பட்ட உத்தி. மற்றபடி காந்திக்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை. வன்முறைவாதிகள் என்று அப்பட்டமாக அம்பலமானபோது ஒருங்கிணைந்த மனிதநேயம் (Integral Humanism) எங்கள் கொள்கை என்றார்கள். திட்டமிட்ட வளர்ச்சி என்பது இடதுசாரி கோஷமாகும். எனவே இதை ஆரம்பம் முதல் கருவிக்கொண்டிருந்த பா.ஜ.க. முழு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தபின் செய்த முதல் காரியம் திட்டக்கமிஷனை கலைத்ததுதான். நிட்டி அயோக் என்ற அமைப்பை ஏற்படுத்தி அதை வைத்து திட்டக்கமிஷனை நீக்கியது. திட்டமிட்ட வளர்ச்சி என்பது அரசானது சந்தையை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையாகும் என்று பெருமுதலாளித்துவ ஆதரவாளர்கள் கருத ஆரம்பித்து விட்டார்கள். எல்லாவற்றையும் சந்தையின் போக்கில் விட்டுவிட்டால் ஓர் அராஜக உற்பத்திமுறை உருவாகுமே என்ற கேள்விக்கு இந்தப் பொருளாதாரவாதிகளுக்கு பதில் இருக்காது. அராஜக உற்பத்திமுறையே தனிநபர் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் மேடையை அமைத்துக் கொடுக்கும். பா.ஜ.க.

பெருமுதலாளிகளின் கட்சி என்பதால் அவர்கள் திட்டமிட்ட வளர்ச்சிக்கு எதிரானவர்கள். அவர்களின் கொள்கையான ஒரேநாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்பதும் பெருமுதலாளிகளின் ஒரே சந்தை என்ற கோஷமும் இந்த இடத்தில் இணைகிறது. திட்டக்கமிஷனை ஒழித்தார்கள். திட்டக்கமிஷனை ஒழித்தாலும் பா.ஜ.க.வின் ஒற்றை இந்தியா என்ற திட்டத்தின் கீழ் நிட்டி அயோக் ஒட்டுமொத்த நாட்டுக்கான வழிகாட்டுதல்களை வழங்குகிறது, திட்டக்கமிஷன் பின்பற்றிய நிதிக் கூட்டாட்சி (Fiscal Federalism)என்பதற்குப் பதிலாக நிட்டி அயோக் பின்பற்றப்போவது கூட்டுறவுக் கூட்டாட்சி (Cooperative Federalism) என்றார்கள். புதிய புதிய வார்த்தை ஜாலங்கள் மூலம் அநீதியை நடைமுறைப்படுத்துவதே அவர்கள் தந்திரமாகும்.

ஆனாலும், அரசியல் வளர்ச்சிப்போக்கைத் தீர்மானிப்பது பொருளாதார வளர்ச்சிப் போக்குதானே. விடுதலையடைந்த இந்தியா தொழில் வளர்ச்சியில் ஒரு பின்தங்கிய நாடு. தனிநபர் மூலதனத் திரட்சி தொழில் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லப் போதுமானதாக இல்லை. எனவே பொது நிதியிலிருந்து உட்கட்டமைப்புத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டியதும் அந்த உட்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி தனியார் மூலதனத்தை வளர்க்கும் உத்தி இயல்பானதே. வலிமையான பொதுநிதி மூலமாக வளர்த்தெடுக்கப்படும் உட்கட்டமைப்பு வசதிகள் தங்கள் இடத்தில் நடைபெற வேண்டும் என்று ஒவ்வொரு பகுதி தனியார் முதலாளிகளும் விரும்புவதும், அதற்காக அரசியல் பண்ணுவதும் சகஜம். இந்தப் பின்னணியில்தான் உலகமயமாக்கலுக்கு முன்பிருந்த திட்டமிடல் நிகழ்வுப்போக்கும் அதையொட்டிய நிதிப்பங்கீட்டு அமைப்புமுறையும் இயங்கியது. உலகமயக்கட்டம் வந்தபொழுது போதிய தனியார் மூலதனம் இந்தியாவில் திரண்டுவிட்டது. அது பொதுநிதியின் மூலம் நடைபெறும் பொது முன்னெடுப்பை நிறுத்தக் கோரியது. அரசு பொருளாதாரத்திலிருந்து விலக வேண்டிய கட்டம் வந்துவிட்டது என்றது. மேல்மட்டத்தில் இப்படி ஒரு தேவையும் அடிமட்டத்தில் இன்னொரு தேவையும் இருந்தது. ஏற்றத்தாழ்வான வளர்ச்சிப் போக்கு, மக்களிடையே தோன்றிய கடுமையான வருமான ஏற்றத்தாழ்வு, இதன் விளைவாக ஆகப் பெரும்பான்மை ஏழ்மையில் உழல்வது போன்ற யதார்த்தம் அடிமட்டத்தில் இருந்தது. அடிமட்ட யதார்த்தம் அரசு பொருளாதாரத் திலிருந்து விலகுவதை அனுமதிக்கவில்லை. இந்த இரண்டுக்குமான மோதலில் முகிழ்த்ததுதான் இந்திய வகுப்புவாத சக்திகளின் வளர்ச்சி.

இந்திய வகுப்புவாத சக்திகளின் வெளிப்படையான தோற்றம் பாஜக எழுச்சியின் வாயிலாக வெளிப்பட்டது. இது பாசிசத் தன்மை கொண்டது. கடுமையான உயர்சாதி நலனை முன்னிறுத்துவது, இந்திய பெருமூலதனம் பெரும்பாலும் மும்பை, குஜராத் இவற்றை மையமாகக் கொண்ட பனியா, பார்சி முதலாளிகளையும் பிற வட இந்தியப் பனியா முதலாளிகளையும் கொண்டது. தேசிய இன முதலாளிகள் மாநில அளவில் அல்லது மண்டல அளவில் மட்டுமே செயல்படுகின்றனர். மாநிலக் கட்சிகள் பொதுவாகப் பிராந்திய முதலாளிகளையும் பா.ஜ.க., காங்கிரஸ் இந்திய அளவிலான பெருமுதலாளிகளையும் பிரதிநிதித்துவப் படுத்துகிறது. அத்துடன் பெருமூலதன நலனை முன்னிறுத்துவது. பன்முகத்தன்மை கொண்ட இந்தியச் சமூகத்தை ஒற்றைப்பரிமாண சமூகமாக மாற்றும் பொறியியல் வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டு வருகிறது. அதற்கு மாநிலங்கள் தேவையில்லை. உள்ளூர் மக்களின் அபிலாஷைகள் ஒரு பொருட்டல்ல, வலுவான மையப்படுத்தப்பட்ட அரசு, அவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் ஏற்றுக் கொள்ளாதவர்களையும் எதிர்ப்பவர்களையும் சூழ்ச்சி செய்து அழிப்பது போன்ற தன்மையில் இயங்கிவருகிறது. இப்படிப்பட்ட பின்னணியில் இந்த உபகண்டத்தில் தனித்த அடையாளத்துடன் பன்னெடுங்காலமாக இருந்துவரும் தமிழச் சமூகம் வகுப்புவாத சக்திகளுடன் மல்லுக்கட்டிக் கொண்டு வருகிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வகுப்புவாத ஆக்டோபஸ் கரங்களின் பிடி இறுகிவிட்டாலும், தமிழ் மண்ணில் அது தொடர்ந்து தோற்று வருகிறது. தமிழர்களைத் தோற்கடிக்க அதற்குள்ள ஒரே வழி ஒன்றிய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஓரவஞ்சக நிதி ஒதுக்கீட்டின் மூலம் மண்டியிடச் செய்ய முயற்சிப்பதுதான். பல்வேறு தள்ளு முள்ளுகளுடன் இயங்கிவந்த நிதிப்பங்கீட்டு அமைப்புமுறை உலகமயமாக்கல் கட்டத்தில் நாற்சந்திக்கு வந்து நின்றது என்றால், வகுப்புவாத சக்திகள் முழுபலத்துடன் அரியணை ஏறியதும் தடம்புரண்டு சிக்கித்தவித்து வருகிறது.

நிட்டி அயோக் தன்னுடைய நோக்கங்களில் ஒன்றாகக் கூட்டுறவுக் கூட்டாட்சியைச் (Cooperative Federalism) சேர்த்துக்கொண்டாலும் அதன் இணையதளத்தில் இன்னொரு பதமும் ஆழமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அது போட்டித்தன்மையுடைய கூட்டாட்சி (Competitive Federalism). https://niti.gov.in/competitive-federalism இதற்கான விளக்கத்தைப் படித்தால் அதன் எண்ணம் வெளிப்படையாகத் தெரிகிறது. ஒன்றிய அரசு ஏதோ எஜமானன் போலவும், மாநில அரசுகள் அதற்குக் கீழ் இயங்கும் வேலைக்கார அரசுகளாகவும், இவர்களின் செயல்பாட்டில் போட்டியிடும் தன்மையை வளர்த் தெடுப்பதை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டதாகவும் தெரிகிறது. எவ்வளவு அவமானம் பாருங்கள்.

திட்டக்கமிஷன் திட்ட இலக்குகளை நிர்ணயித்து, அதன்படி நகலைத் தயாரித்து அதற்கான நிதிதிரட்டும் வழிமுறையையும் கூறி, நிதியைப் பங்கிடும் வழிமுறையும் கூறி, அரசு செய்ய வேண்டிய வற்றைப் பட்டியலிட்டுக் கொடுத்துவிடும். ஆனால் நிட்டி அயோக் கேந்திரமான வளர்ச்சியை உத்தரவாதப்படுத்தத் தேவையான தொழில்நுட்ப, செயல்திட்ட அடிக்கூறுகளையும் ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் செல்லவேண்டிய திசைவழியை வகுத்துக் கொடுக்கும் சிந்தனைத் தொட்டியாகும் (Think Tank). இதை நாம் கார்ப்பரேட் நிறுவனங்களின் நிர்வாகத்தில் உலகமயமாக்கல் காலத்தில் ஏற்பட்ட நிர்வாக அமைப்பு மாறுதல்களுடன் ஒப்பிடலாம். உலகமயமாக்கலுக்கு முன்பு கார்ப்பரேட் நிறுவனங்களில் கார்ப்பரேட் திட்டத்துறை (Corporate Planning) இருக்கும். அது கார்ப்பரேட் நிறுவனங்களின் செயல்பாட்டிற்கான திட்டத்தை வகுத்துக் கொடுக்கும். உற்பத்தி நிர்வாகம், விற்பனை நிர்வாகம், உள்ளீட்டுப் பொருட்களின் கொள்முதல் நிர்வாகம், மனிதவள நிர்வாகம், நிதி நிர்வாகம், சமூக உறவு நிர்வாகம் ஆகியவற்றிற்கான திட்டங்களை வகுத்துக் கொடுக்கும் அமைப்பாக கார்ப்பரேட் திட்டத்துறை இருந்து வந்தது. உலகமயமாக்கல் கட்டத்தில் சந்தையின் ஆதிக்கம் மேலோங்கியதால், சந்தையில் என்ன மாறுதல் நடக்கிறது, சந்தைக்கேற்றாற் போல் நம்மை எவ்வாறு தகவமைத்துக் கொள்வது, சந்தையில் நமது போட்டியாளர்களை எப்படி எதிர்கொள்வது, நம்முடைய உற்பத்திப் பொருட்களின் தேவை காலவதியாகிவிட்டால் எந்தப் பொருளை உற்பத்திக்காகக் கையிலெடுப்பது, குலைத்துப் போடும் தொழில்நுட்ப வளர்ச்சியை எவ்வாறு எதிர்கொள்வது, கையகப்படுத்தல் இணைத்தல் உத்தியை (Acquisition and Merger) எந்த இடத்தில் எவ்வாறு பயன்படுத்துவது போன்ற விஷயங்களைக் கவனம் செலுத்தி உயர்மட்ட நிர்வாகத்திற்கு ஆலோசனைகள் வழங்கும் அமைப்பின் தேவை எழுந்து வந்தது, குறிப்பாக, உத்திகளை உற்பத்தி செய்யும் சிந்தனைத் தொட்டி போன்ற கேந்திர உத்தி அமைப்பின் தேவையாகும் இது. கேந்திர உத்தியமைப்பு (Strategic Decisions) அல்லது தொலைநோக்கு உத்தியமைப்பு (Visionary Path) என்ற பெயருடன் கார்ப்பரேட் திட்ட அமைப்பை (Corporate Planning) இது மாற்றீடு செய்துவிட்டது. கார்ப்பரேட் நிர்வாகங்களில் செயலுக்கு வந்த கேந்திர உத்தி அமைப்பானது கால வட்ட இடைவெளியில் கேந்திரச் செயல்திட்டம் (Strategy 20xx Actionplan) அல்லது தொலைநோக்கு ஆவணம் (Vision 20xx Document) போன்றவற்றை வெளியிடும். ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்ட நிட்டி அயோக்கானது ஒன்றிய அரசை ஒரு கார்ப்பரேட் அமைப்பாகக் கருதி அது செல்ல வேண்டி திசைவழியை வகுத்துக் கொடுக்கும் சிந்தனைத் தொட்டியாகச் செயல்படுகிறது. ஆக இந்திய அரசின் உயர்மட்ட நிர்வாக அமைப்பும், கார்ப்பரேட் நிறுவனங்களின் உயர்மட்ட நிர்வாக அமைப்பும் ஒரே போன்ற கோட்பாட்டுருவாக்க கருவிகளைக் கொண்டுள்ளது தற்செயலான நிகழ்வல்ல. தொழிலதிபர்களின் பம்பாய் திட்டத்துடன் நமது ஆரம்பக்கட்டப் பொருளாதாரக் கோட்பாடுகள் கொள்கைகள் எப்படி ஒத்துப்போனதோ அது போல் இது கார்ப்பரேட் நிறுவனங்களின் தொலைநோக்கு ஆவணங்களுடன் ஒத்திசைவாக இருக்க வேண்டும் என்ற சமன்பாடு இதற்குள் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இந்தப் பின்னணியைக் கருத்தில் கொண்டு நிட்டி அயோக் கால நிதிப் பகிர்வை நாம் ஆய்வு செய்ய வேண்டும்.

ஜிஎஸ்டி அபகரித்த மாநில நிதியாதார உரிமைகள்:

ஒன்றிய, மாநில அதிகாரப் பங்கீட்டில், வரி விதிக்கும் அதிகாரம் இரண்டு அமைப்புகளுக்கும் உண்டு. ஒன்றியம் விதிக்கும் வரிகள் மொத்த வரிவருவாய்த் தொகுப்புக்குள் சேர்க்கப்பட்டு, செங்குத்துப் பகிர்வாக ஒரு பகுதி ஒன்றியத்திற்கும் எஞ்சிய பகுதி மாநிலங்களுக்கான பகிர்வு நிதித் தொகுப்பிலும் சேரும். மாநிலங்கள் வசூலிக்கும் விற்பனை வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் மாநிலத்திற்கே சொந்தம். ஜிஎஸ்டி நிர்வாகம் வந்த பின்பு ஒரு மாநிலத்தின் தனித்துவமான நிலைமைகளுக்கு ஏற்ப வரிகளை விதிக்கவும், மாநில அரசின் வருவாயைப் பெருக்கவும் உரிமை இல்லாமல் போனது. ஜிஎஸ்டி மூன்று விதங்களில் வசூலிக்கப்படுகிறது. CGST – இது ஒன்றிய அரசின் வரி வருவாய் தொகுப்பு நிதிக்குள் சென்றுவிடும். SGST – இது மாநிலத்திற்குள் நடைபெறும் விற்பனையில் வசூலிக்கப்படும். இது வசூலிக்கும் மாநிலத்திற்கே சொந்தம். IGST – இது மாநிலங்களின் எல்லைதாண்டி நடக்கும் விற்பனைகளில், விற்பனை நடைபெற்ற மாநிலத்திற்கும், ஒன்றியத்திற்கும் சம அளவில் பங்கிடப்படும். ஒன்றியத்துக்குக் கிடைக்கும் வருவாய் மொத்த வரிவருவாயில் சேர்க்கப்பட்டு அதில் ஒரு பகுதி பகிர்வு நிதிக்கு வரும். முன்பு CST (Central Sales Tax) என்று வசூல் செய்து கொண்டிருந்தது இப்பொழுது IGSTக்குள் போய்விட்டது. CST வரி வருவாய் அனைத்தும் விற்பனை நடக்கும் மாநிலத்திற்குச் சொந்தம். IGSTயில் 50 சதவீதம்தான் விற்பனையாகும் மாநிலத்திற்கு வரும். மீதி 50 சதவீதம் ஒன்றிய மொத்த வரிவருவாயில் சேர்க்கப்பட்டு அதில் 41 சதவீதம் மட்டுமே மாநிலப் பங்காக வந்து, விற்பனையாகும் மாநிலத்திற்கு அதில் ஒரு சிறு பகுதி மட்டுமே கிடைக்கும். ஆனால் CST 4 சதவீதம் இருந்தது. இப்பொழுது அது IGST வடிவில் உயர்ந்து மீண்டும் குறைந்துவிட்டது. ஆக CST வரி வருவாயில் நிச்சயம் இழப்பு ஏற்படும். அடுத்து முன்பு விற்பனை வரியை மாநிலங்கள் தீர்மானிக்கும். சில குறிப்பிட்ட துறைகளுக்கு அதிக வரிபோட்டு வருமானத்தைப் பெருக்க முடியும். இப்போது முடியாது. ஜிஎஸ்டி கவுன்சில் தீர்மானித்ததுதான் வரி. இதன் மூலம் நிதியாதாரத்தின் உரிமை பறிபோய்விட்டது. ஆண்டுக்காண்டு வரி வருவாய் வளர்ச்சி ஏற்படுவதால், இந்த இழப்பு ஒரு குறிப்பிட்ட ஆண்டுகள் கழித்து நீங்கிவிடும் என்று கணக்கு கூறுகிறது. எனினும் அதே வேகத்தில் வருமான வளர்ச்சி நிகழ்கிறது என்று நாம் அனுமானித்தால் – இது நியாயமான அனுமானம்தான், நிச்சயமாகத் தொடர் இழப்பு ஏற்படும். எனினும், இதன் மூலம் இந்தியா முழுவதும் ஒரு சீரான வரிவிதிப்பு முறை அமலுக்கு வந்துவிட்டது. இது மாநில உரிமைகளுக்கு எதிரானது. எனினும் பெருநிறுவனங்களுக்கு ஒரே சந்தை கிடைக்கிறது என்ற அளவில் இது பெருநிறுவனங்களின் வேண்டுகோளாகும் என்பதில் சந்தேகமில்லை.

ஒன்றிய அரசு தன்னுடைய செலவினத்தில் காட்டும் ஓரவஞ்சகம்:

நிதிக்கமிஷன் மூலம் நடைபெறும் நிகர வரி வருவாய் வரிப்பகிர்வு, திட்டக்கமிஷன் மூலம் கிடைக்கும் மாநிலத் திட்ட உதவி இவை பற்றிப் பார்த்துவிட்டோம். இவையெல்லாம் ஒன்றிய அரசின் மொத்த வருவாயில் சுண்டைக்காய் மட்டுமே. வரி வருவாயில் பெரும் பகுதியை ஒன்றிய அரசே செலவிடுகிறது. ஒன்றிய அரசின் கட்டமைப்புச் செலவுகள், நலத்திட்டச் செலவுகள், முதலீட்டுச் செலவுகள் ஆகியவை மாநில வாரியாகத்தான் பிரித்துச் செய்யப்படுகின்றன. இதில் அரசியல் ரீதியான ஓரவஞ்சகம் என்பது தற்பொழுது வெளிப்படையாக அமலுக்கு வந்துவிட்டது. ஆம், நான் ஓரவஞ்சகத்துடன்தான் செயல்படுகிறேன். என் கட்சியைத் தெரிவு செய்யுங்கள். உங்களுக்கு உரிய பங்கை நீங்கள் பெறுவீர்கள், இல்லையென்றால் இழப்பீர்கள், உங்களுக்குச் சேரவேண்டியதை வெட்டியெடுத்து எங்கள் கட்சி ஆளும் மாநிலங்களுக்கு அனுப்பி விடுவோம் என்று பிளாக்மெயில் செய்வது வெளிப்படையாகிவிட்டது. ஒவ்வொரு மாநிலத் தேர்தல் பிரசாரத்திலும் டபல் எஞ்சின் சர்க்கார் என்று பிரதமர் கூறுவதற்கு அர்த்தம் இதுதான். இந்த நய வஞ்சகத்தை எப்படிச்செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

திட்டக்கமிஷன் கலைக்கப்பட்டு திட்டங்கள் 2015 முதல் நிறுத்தப்பட்டுவிட்டது. நிதிக்கமிஷன் பிரித்துக் கொடுக்கும் நிதியோடு மாநிலங்கள் திருப்தியடைய வேண்டியதுதான். முன்பு மொத்தத் திட்டத் தொகுப்புத் தொகையில் மாநிலங்களுக்கான மானியம் என்று ஒரு பகுதி உண்டு. இது போய்விட்டதே என்று கூறும் மாநிலங்களுக்கு, ஒன்றிய அரசின் நிதியுதவித் திட்டங்கள் மூலமாக வரும் என்று பதிலளிக்கப்படுகிறது. எப்படியிருப்பினும் பெயர்தான் வேறு, சங்கதி ஒன்றுதான் என்று தெரிகிறது. கொஞ்சம் உற்றுப்பார்த்தால் இதற்குள் உள்ள சூட்சுமம் புரியும். மத்திய அரசின் திட்டச் செலவினங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. ஒன்று ஒன்றிய அரசின் திட்டங்கள், மற்றொன்று ஒன்றிய அரசின் நிதியுதவித் திட்டங்கள். ஒன்றிய அரசின் திட்டங்கள் ஒன்றிய அரசின் அதிகாரப் பட்டியலில் இடம்பெறும் விஷயங்கள் மீதான திட்டங்களுக்கு மட்டுமே செலவிடப்படும். ஒன்றிய அரசின் நிதியுதவித் திட்டங்கள் பொதுப்பட்டியலில் இடம்பெறும் விஷயங்கள் மீதான திட்டங்களுக்கு 60:40 அல்லது 50:50 என்ற விகிதத்தில் ஒன்றிய மாநில அரசுகள் செலவிட வேண்டும்.

ஒன்றிய அரசின் திட்டங்கள்:

ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுப்புத் தொகையில் மாநில வாரியாக இவ்வளவு திட்டங்கள் என்ற கொள்கையில் இத்திட்டங்கள் செயல்படுவதில்லை. வரி வருவாயைப் பங்கிடுவதற்கு நிதிக்கமிஷன் போன்ற ஏற்பாடு இங்கே இல்லை. இங்கே ஒன்றிய அரசின் திட்டங்களைக் கையாளும் அமைச்சரகங்களே எந்தெந்த திட்டங்களை அமல்படுத்துவது எந்தெந்த மாநிலங்களில் அமல்படுத்துவது என்பதைத் தீர்மானிக்கும். ஆக. திட்டங்களின் அடிப்படையிலும், திட்டங்களின் நிதிச் செலவீடு வேகத்தின் அடிப்படையிலும், திட்டங்கள் அமல்படுத்தப்படும் வேகத்திலும் நிதி ஒதுக்கீடு நடைபெறும். இம்முறையைப் பயன்படுத்தி தன்னிச்சையாக நிதி ஒதுக்கீடு செய்வதற்கு எல்லா இடமும் உண்டு. திட்டங்கள் மாநிலங்களில் அமலானாலும் மாநில அரசிற்கு இங்கே எந்தப் பங்கும் கிடையாது. செலவிடப்படும் நிதி மாநிலங்களின் கருவூலங்களின் வாயிலாகச் செலவிடப்படாது. நேரடியாகச் செலவிடப்படும் அல்லது ஒவ்வொரு திட்டத்திற்கென்று ஏற்படுத்தப்படும் மத்திய நிதியமைப்பு மூலமாகச் செலவிடப்படும்.

நான்கு வழிகளில் ஒன்றிய அரசின் திட்டங்கள் மூலமாக எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை ஒன்றிய பாஜக அரசு ஓரவஞ்சகம் செய்கிறது.

1. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களிலும் ஒன்றிய அரசின் திட்டங்கள் செயல்படும். ஆனால் போதிய நிதி போதிய காலத்தில் ஒன்றியக் கல்லாப்பெட்டியிலிருந்து வெளிவராது, ஆமைவேகத்தில் நகர்த்தும் சம்மதிப்புள்ள திட்டங்கள் எல்லா மாநிலங்களிலும் இருக்காது. இதற்குத்

தமிழக உதாரணங்கள்:

தமிழகத்தில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியும் மருத்துவமனையும்: அறிவிப்பு செய்து பத்தாண்டுகளில் நாட்டப்பட்ட அடிக்கல்லோடு இப்பொழுது சுற்றுச்சுவர் பணி நடந்திருக்கிறது.

ரயில்வே திட்டங்களான திண்டிவனம்-திருவண்ணாமலை, அத்திப்பட்டு-புத்தூர், மொரப்பூர்-தர்மபுரி, மன்னார்குடி-பட்டுக்கோட்டை ரயில்பாதைகள். கடந்த மூன்றாண்டுகளில் ரயில்வே வளர்ச்சிக்காகத் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை 19,068 கோடி, ஆனால் ஒரே ஆண்டில் உபிக்கு மட்டும் ஒதுக்கிய தொகை 19,858 கோடி.

நாடு முழுவதும் விரைவுச் சாலைகள் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 50,655 கோடி, இதில் தமிழகத்தில் வரப்போகும் விரைவுச் சாலைகள் ஏதும் இல்லை.

2. சிறப்பு உதவி தேவைப்படும் மாநிலங்களுக்குச் சிறப்புத் தேவையின் அடிப்படையில் தீர்மானிக்காமல் அரசியல் நலனை முன்னிறுத்திச் செய்யப்படும். இன்றைக்கு சிறுபான்மை ஒன்றிய அரசை முட்டுக்கொடுத்துவரும் நிதிஷ்குமார் கட்சி, நாயுடு கட்சிகள் ஆளும் பீகார், ஆந்திரம் ஆகியவற்றிற்கு இப்போது ‘சிறப்புத் தேவை’ எழுந்ததுள்ளது. ஒரு வடகிழக்கு மாநிலத்தில் பாஜக ஆட்சி புரியும் மாநிலமாக இருந்தால் அங்கே அதிக ஒன்றியத் திட்டங்கள் இயங்கும். வன்முறை மூலமாகவும், பணபலம் மூலம் ஆட்களை விலைக்கு வாங்கி ஆட்சியைப் பிடித்த திரிபுராவில் ஒன்றியத் திட்டங்கள் பாயத் துவங்கின. சிறப்புத் தேவை உள்ள மாநிலமாக அங்கீகரிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்தை இழந்துவிட்டது. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் வருவதால் நிகர வரிவருவாயில் மாநிலங்களுக்கு 14வது நிதிக்கமிஷனில் ஒதுக்கிய 42% நிதியானது 15வது நிதிக்கமிஷனில் 41%ஆக குறைந்துவிட்டது. இதற்கு ஜம்மு-காஷ்மீர் ஒன்றிய ஆளுகைப் பிரதேசமாக மாற்றப்பட்டதை காரணமாகக் கூறப்பட்டது. இருப்பினும் ஜம்மு காஷ்மீருக்குத் தேவையான ஒன்றிய திட்டங்கள் கிடையாது.

3. மாநிலங்களில் செயல்படும் ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மாநில அரசைக் கலந்தா லோசிப்பது கிடையாது. இதன் மூலம் திட்டம் தோல்வி யடைவதை உறுதி செய்து மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என்று குற்றம் சாட்டி அரசியல் செய்வது, நாம் தமிழக உதாரணத்தை மட்டும் பார்ப்போம், தென்னக ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைச் செலவு செய்ய முடியவில்லை. காரணம் நிலம் கையெடுப்பு நடத்துவதில் தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என்று ரயில்வே அமைச்சர் குற்றம் சாட்டுகிறார். மாநில அரசுடன் கலந்தாலோசித்து திட்டம் சீரான வேகத்தில் நகர்வதற்கான ஏற்பாடு இல்லாமல் திட்டத்தை முடக்கி தமிழகத்தை வஞ்சிக்கும் வேலை இது.

4. கொள்கையளவிலும் கோட்பாட்டளவிலும் வேறுபடும் திட்டங்களைப் புகுத்தி மாநிலத்தின் முற்போக்கான கொள்கைகளை உடைப்பது. இதற்கு இணங்க மறுத்தால் மாநிலத்திற்கு நிதியிழப்பு. உதாரணத்திற்குக் குருகுல வாசமும் குலக்கல்வி முறையையும் தமிழகம் நீண்டகாலமாக எதிர்த்து வருகிறது. குலக்கல்வி முறையை வலியுறுத்தும் பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்தைத் தமிழக அரசு ஏற்கவில்லை. எனவே இதில் ஒதுக்கிய நிதியில் தமிழகத்திற்கு அதன் நிதிப்பங்கு இழப்பு. கொள்கை வேறுபாடு ஒருபுறம் இருக்கட்டும். யார் கொள்கை சிறந்தது என்ற விவாதம் வேறுதளத்தில் நடக்கட்டும். முதலில், அவரவர் கொள்கையைக் கடைப்பிடிக்க அவரவர்களை அனுமதிக்க வேண்டும். நமது குடும்பத் திருமண விருந்தில் மாமிசம் சாப்பிடாதவர்களுக்குத் தனிப் பந்தி அமைப்பதில்லையா? இஸ்லாமியர்கள் திருமண விருந்திலேயே நாம் இதைப் பார்த்திருக்கிறோம். அவர்களை மாமிசம் சாப்பிடுங்கள், இல்லையேல் சாப்பிடாமல் செல்லுங்கள் என்று கட்டளை இடுவதில்லையே. விஸ்வகர்மா திட்டம் பிடிக்கவில்லை என்றால் அதில் தமிழகத்தின் பங்கு இது. இதைப் பயன்படுத்தும் வகையில் திறன் மேம்பாட்டுக்கான மாற்றுத் திட்டத்தைக் கொடுங்கள், நாங்கள் எங்கள் திட்டமாக உங்கள் மாநிலத்தில் அமல்படுத்துகிறோம் என்று கூறுவதுதானே கூட்டுறவு கூட்டாட்சி,

ஒன்றிய அரசு நிதியுதவியளிக்கும் திட்டங்கள்:

ஒன்றிய அரசின் நேரடித் திட்டங்கள் மூலம் எப்படி ஓரவஞ்சகமாக நடந்து கொள்கிறதோ, அதே வழிமுறைகளில் ஒன்றிய அரசின் நிதியுதவித் திட்டங்களிலும் நடந்து கொள்கிறது, ஒன்றிய அரசின் திட்டங்களில் மாநிலங்களுக்கு எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்று எந்தக் கொள்கையும் இல்லையோ அதுபோலத்தான் ஒன்றிய அரசின் நிதியுதவி அளிக்கும் திட்டங்களுக்கும் நடக்கிறது. ஒன்றிய அரசின் நிதியுதவித் திட்டங்களில் 50:50லிருந்து 75:25 வரை பங்களிப்பு இருக்கும். இங்கே மாநில அரசு சமர்ப்பிக்கும் திட்டங்களை ஒப்புதல் அளிப்பதற்குத் தாமதப்படுத்துவது, ஒன்றிய அரசின் பங்கைக் கொடுப்பதற்குத் தாமதப்படுத்துவது, மாநில அரசு ஏற்றுக்கொள்ளாத கொள்கையைக் காரணம் காட்டி ஒன்றிய அரசின் பங்கை நிறுத்தி வைப்பது போன்ற வழிகளில் ஒன்றிய அரசின் நிதியுதவி அளிக்கும் திட்டங்களிலும் பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களை வஞ்சிப்பது நடைபெற்று வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் ஒன்றிய அரசின் நிதியுதவித் திட்டங்கள் அனைத்தையும் பட்டியலிட்டு அவற்றில் செலவிடப்பட்ட மொத்தத் தொகை எவ்வளவு, அதில் தமிழகத்தில் செயல்பட்ட, செயல்பட்டுவரும் ஒன்றிய அரசின் நிதியுதவித் திட்டங்களில் ஒன்றிய அரசின் பங்காகக் கிடைத்தது எவ்வளவு என்று பட்டியலிட்டால் கணக்கீடுகளும் விளக்கங்களும் கொண்ட நீண்ட பட்டியல் நமக்கு கிடைக்கும். எடுத்துக்காட்டாக, செம்மொழிகளின் வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கும் ஒன்றிய அரசு 25000 பேர் மட்டுமே பேசும் சமஸ்கிருதத்திற்கு 2,500 கோடி நிதி ஒதுக்குகிறது. தமிழ் உள்ளிட்ட பிற தேசிய மொழிகளுக்கு 100 கோடி அளவில் மட்டுமே ஒதுக்குகிறது. அலகாபாத்தில் (பிரயாக்ராஜ் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு விட்டது) கும்பமேளா நடத்துவதற்குச் சிறப்பு நிதியாக ஒன்றியப் பகுதியிலிருந்து 2,500 கோடி ஒதுக்கியது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் இயற்கைப் பேரிடர்களில் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்வதற்கு நிதி ஒதுக்க மறுக்கிறது. எனவே ஒரு சிலவற்றை மட்டும் பார்ப்போம்,

சமக்ரா சிக்ஷா திட்டம்: பள்ளிக் கல்வி வளர்ச்சிக்காக 2018ம் ஆண்டு துவங்கப்பட்ட திட்டம் இது. மழலையர் பள்ளி முதல் 12ம் வகுப்புவரை உள்ள கல்வித் தரத்தை மேம்படுத்துவது, நவீனச் சாதனங்களின் உதவியுடன் கல்வியை மேம்படுத்துவது என்ற நோக்கம் கொண்டது. இதற்கு முன்பு செயல்பட்ட சர்வ சிக்ஷா அபியான், ராஷ்ட்ரிய மத்தியமிக்சிக்ஷா அபியான், ஆசிரியர் கல்வி ஆகிய மூன்று திட்டங்களை இணைத்து உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி மாநிலங்கள் சமர்ப்பிக்கும் திட்ட மதிப்பீட்டின் 60 சதவீதச் செலவை ஒன்றிய அரசு ஏற்கும். தமிழக அரசு சமர்ப்பித்த திட்டத்தை ஏற்றுக்கொண்டும் நிதி வழங்குதல் தாமதம் காட்டி வருகிறது. 2000 கோடி தரவில்லை என்று தமிழக அரசு நீதிமன்றம் சென்றுள்ளது.

பிஎம்ஸ்ரீ திட்டம் (பிரதான் மந்திரி ஸ்கூல்ஸ் ஃபார் ரைசிங் இந்தியா): இதன்படி நாடுமுழுவதும் உள்ள 14000 அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவது அடங்கும். மும்மொழிக் கொள்கையைத் தமிழகம் ஏற்கவில்லை என்றும் பிற்போக்கான தேசியக் கல்விக் கொள்கை 2020ஐ ஏற்கவில்லை என்றும் கூறி ஒன்றிய அரசானது இத்திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு நிதி வருவதைத் தடுத்துவருகிறது.

கல்வி உரிமைச் சட்டப்படி தரவேண்டிய நிதியுதவி: பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்கள், பாதகமான நிலையில் வசிப்பவர்களின் குழந்தைகளின் கல்வியைப் பாதுகாக்க இவர்களுக்கு நிதியுதவி கொடுக்க வேண்டும் என்று கல்வி உரிமைச் சட்டம் கூறுகிறது. இதன்படி தமிழகத்திற்கு வரவேண்டிய நிதியை ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. 2023-24, 2024-25 ஆண்டுகளில் நீதிமன்றம் சென்று தமிழக அரசு 700 கோடியைப் பெற்றது.

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம்: இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசு பகிர வேண்டிய 50 சதவீத நிதியை பகிராததால், அந்த நிதியைத் திரட்டுவதற்கு மாநில அரசு 9000 கோடி வரை 2022-23ல் கடன் வாங்கியிருக்கிறது. 2023-24க்கு 12000 கோடி கடன் வாங்க வேண்டியதிருக்கிறது. இது மாநில நிதிச்சுமையை அதிகரித்திருக்கிறது என்று சட்டமன்றத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார்.
பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா: கிராமப்புற மக்களுக்கு வீடு கட்டுவதற்கு நிதியுதவியளிக்கும் திட்டத்தின்படி தமிழகத்திற்கு இது 72,000 கோடி : 48 ஆயிரம் கோடி, ஆனால் ஒரு வீட்டிற்கு அளிக்க வேண்டிய நிதியுதவி அதிகபட்சம் 1,25,000 என்ற நிபந்தனையை விதித்திருக்கிறது. இதைக் கடைப்பிடித்தால் கூரையில்லா வீடுதான் கட்ட முடியும். கூரையுடன் கூடிய வீட்டைக் கட்ட வேண்டுமானால் ஒரு வீட்டிற்கு 2.4 லட்சம் தேவைப்படும். எனவே கூடுதல் நிதியை மாநில அரசு செலவிட வேண்டியதாயிற்று. ஒன்றிய அரசின் 72000 கோடியைப் பெற வேண்டுமானால் மாநில அரசானது 1.68 லட்சம் கோடி செலவிட வேண்டும். கூடுதல் நிதியான 1,20,000 கோடியில் ஒன்றிய அரசின் பங்கு ஏதும் இல்லை என்கிறார் மாநில நிதியமைச்சர்.

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம்: மாநில அரசால் சமர்ப்பிக்கப்பட்ட இந்தத் திட்டங்கள் ஒன்றிய அரசால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. 2011ல் 20 லட்சம் மக்கள் தொகை உள்ள நகரங்களுக்கு மட்டுமே அனுமதி என்ற வாதத்தை முன்வைக்கிறது. 2025ல் இந்த இரு நகரங்களும் 20 லட்சத்தைத் தாண்டிவிட்டன, அத்துடன் இந்த இரு நகரங்களில் 2011க்குப் பிறகு இணைத்துக் கொள்ளப்பட்ட நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளின் 2011 மக்கள் தொகையையும் சேர்க்க வேண்டும் என்கிறது மாநில அரசு. இது போல் விளக்கங்களுக்கு உட்பட்டு 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் 20 லட்சத்துக்கும் குறைவாக உள்ள நகரங்கள் பலவற்றிற்கு அனுமதி வழங்கியிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

ஏன் பா.ஜ.க.வையும், அதன் அடிமையாகிவிட்ட அ.தி.மு.க.வையும் தோற்கடிக்க வேண்டும்?

பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியை ஏன் தோற்கடிக்க வேண்டும் என்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. நாம் பொருளாதார நிதியம்சங்களை மட்டுமே இங்கே கவனத்தில் எடுத்துள்ளோம். அதற்குள்ளேயே இவர்களைத் தோற்கடிக்க வலுவான காரணங்கள் இருக்கின்றன என்பதையே வலியுறுத்தினோம். தொகுத்துக் கூறினால்:

1. விடுதலையடைந்த காலத்திலிருந்தே, வகுப்புவாத. தனியார்மய கொள்கைகளை ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த கட்சி பாஜக. விடுதலையடைந்த இந்தியாவில் போதிய தனியார் மூலதனம் திரண்டிருக்கவில்லை என்ற நிலையில் இந்திய அரசதிகாரத்தைக் கைப்பற்றிய பெருமுதலாளிகள் மூலதனம் திரளுவதற்கேற்ற கொள்கைகளான பொதுநிதியில் உட்கட்டமைப்பை வளர்க்க ஏதுவான சோசலிச முத்திரை பதித்த கொள்கைகளை அனுமதித்தனர். ஆகவே பா.ஜ.க.விற்கு அன்றைக்கு அரசியலில் இடமில்லாமல் போயிற்று. திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி என்ற கோட்பாட்டினடிப்படையில் திட்டக்கமிஷன்களும் அதற்கேற்றாற் போன்ற நிர்வாகப் பொறியமைவும் ஏற்படுத்தப்பட்டன.

2. போதிய தனியார் மூலதனம் திரண்டுவிட்ட காரணத்தால் அரசு பொருளாதார அரங்கிலிருந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது காலம் காலமாக பாஜக வலியுறுத்தி வந்த கொள்கைகளோடு ஒத்துப்போனதால், பாஜக செல்வாக்கைப் பெருக்குவதற்கான நிதியுதவி பல தரப்பிலிருந்து கொட்டத் துவங்கின. காங்கிரஸ் கட்சியும் தன்னுடைய அடிப்படைக் கொள்கையைக் காலத்திற்கேற்றாற்போல் மாற்றுகிறேன் என்று உலகமயம், தனியார்மயம், தாராளமயக் கொள்கைகளுக்குத் தாவியது. இதன் விளைவாக ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகள் காங்கிரஸ் கட்சியைச் செல்வாக்கு இழக்கச் செய்துவிட்டது. அதே கொள்கைகளைப் பேசிய பா.ஜ.க.வோ வகுப்புவாத கோஷங்கள் மூலம் முன்னுக்கு வந்துவிட்டது. இப்பொழுது அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் பெருமுதலாளிகளின் தெரிவாக பா.ஜ,க. ஆனது.

3. திட்டமிட்ட பொருளாதார பொறியமைவு பா.ஜ.க.வால் அடித்து நொறுக்கப்பட்டது. திட்டக்கமிஷன் கலைக்கப்பட்டது. அதனிடத்தில் நிட்டி அயோக் வந்தது. பெரு நிறுவனங்களில் கார்ப்பரேட் பிளானிங் துறைகள் உலகமய கட்டத்தில் எப்படிக் கேந்திர/தொலைநோக்கு உத்திகளை வகுக்கும் துறைகளாக ஆயினவோ அதேபோல் பொருளாதாரத்தைக் கையாளும் இந்திய அரசின் பொறியமைவும் மாற்றப்பட்டன.

4. கடுமையான ஏற்றத்தாழ்வும் வாழ்க்கை நெருக்கடியும் ஆகப்பெரும்பாலான மக்களை சூழ்ந்துகொண்ட நிலையில், வகுப்புவாதத்தைக் கையிலெடுத்து பா.ஜ.க. சமாளித்து வருகிறது. வகுப்புவாதம் கவ்வ முடியாத சமத்துவ நோக்கு கொண்ட தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை. தமிழகத்தைப் பணியவைக்க ஒன்றிய அரசின் நிர்வாகக் கட்டமைப்பைப் பயன்படுத்தி நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சகம் காட்டிவருகிறது, அது கூட்டுறவுக் கூட்டாட்சி என்ற கோஷத்தை முன்வைத்து விடுதலையின் போது உத்தரவாதப்படுத்தபட்ட நிதிக்கூட்டாட்சி அமைப்பைத் தகர்த்தது,

5. மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா இந்தப்போக்குகளுக்கு எதிராகக் கடுமையாகப் போராடியவர். திமுக தொடர்ச்சியாகப் போராடிக்கொண்டு வருகிறது. ஆனால் செல்வி ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அ.தி.மு.க.விற்கு திறனற்ற தலைமை ஏற்பட்டதால், அ.தி.மு.க.வானது பா.ஜ.க. முன் மண்டியிட்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தமிழகத்தை நிதி விஷயத்தில் ஒன்றிய அரசு வஞ்சித்ததற்கு எதிராக எந்தக் குரலையும் எழுப்பவிலை. மாறாகத் தொடர்ச்சியாகத் தமிழகத்தின் எதிரணி சார்பாக சேம்சைடு கோல் அடித்து வருகிறது.

6. இந்திய ஒன்றியத்தில் திரளும் வரி வருவாயின் ஒரு பகுதியே மாநிலங்களுக்கு முறையாகப் பிரித்துக் கொடுக்கப்படுகிறது. இதை நிதிக்கமிஷன் செய்கிறது. காலத்திற்கேற்றாற்போல், மாநிலங்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் பகிர்வுக் கொள்கை மாறி வந்திருக்கிறது. இதற்குள் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் இருந்தாலும் ஒரு வரைமுறைக்குள் இது இயங்குகிறது. ஆனால் நிதிக்கமிஷனின் பகிர்வில் வராத நிதி ஒன்றிய அரசின் நியாயமற்ற, தன்னிச்சையான, பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட முறையில் கையாளப்பட்டு எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை வஞ்சித்து வருகிறது. இதன் விளைவாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள அரசுகள் தங்கள் மாநில மக்களின் தேவைக்கேற்ற முன்னேற்றத் திட்டங்களைச் செயல்படுத்துவது முடக்கப்படுகிறது. இதன் மூலம் எதிர்க்கட்சிகளைத் தெரிவுசெய்த மக்களுக்கு டப்பா எஞ்சின் சர்க்காரைக் கொண்டு வாருங்கள் என்று கட்டளை இடுகிறது.

7. ஒன்றிய அரசின் புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ஆகியவற்றைப் பயன்படுத்தி, எதிர்க்கட்சி அரசியல்வாதிகளைப் பழிவாங்குதல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பொய்வழக்குகள் போட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பானது இதனை உறுதி செய்கிறது. தி.மு.க. தலைமை உறுதியாக இதுபோன்ற அடாவடி அரசியலை எதிர்த்துப் போராடி வருகிறது. எனவே தி.மு.க. அரசு தொடர வேண்டிய தேவை தமிழகத்தின் நலனுக்கு மிக முக்கியமானதாகும்.

8. தேர்தல் முடிவுகள் மதச்சார்பற்ற மக்கள் கூட்டணிக்குச் சாதகமாக இல்லையென்றால், தமிழகம் வகுப்புவாத வன்முறைக் களமாகிவிடும். இதுவரை அடைந்த முன்னேற்றங்கள் பின்னுக்குத் இழுக்கப்படும். பா.ஜ.க.வின் கைப்பாவையாகச் செயல்படும் அ.தி.மு.க. கடுமையான நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி சின்னாபின்னமாகும் நிலை உருவாகும். பாஜகவின் நிதிஷ்குமார் நிலைதான் நமது எடப்பாடியாருக்கும் ஏற்படும். எனவே, அ.தி.மு.க. என்ற கட்சியின் அடையாளத்தைக் காப்பாற்ற அக்கட்சியைத் தோற்கடிக்க வேண்டியது இன்றைய தேவை. தோல்விக்குப் பின் அவர்கள் சுயபரிசோதனை செய்து தமிழக மக்கள் நலன் காக்கும் கொள்கைகளுக்குத் திரும்புவதோடு திறனுடைய தலைமையை அடையாளம் காண்பார்கள். இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்படுவார்கள்.

9. காலம் மாறியிருக்கிறது, நிலைமைக்கேற்றாற்போல் நிதிப்பகிர்தல் பொறியமைவு மாற்றமடைவது தவிர்க்க முடியாதது. இப்பொறியமைவை இயக்கும் கொள்கைகளும் கோட்பாடுகளும் மாறுவதும் தவிர்க்க முடியாதது. இந்த மாற்றத்தின் விளைவாக நிகழ்ந்த மாற்றமான சமத்துவக் கொள்கைகளை நீக்கிவிட்டு அந்த இடத்தில் போட்டியிடும் தன்மையை வளர்க்கும் கொள்கைகள் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அதேநேரத்தில் திறன் மேம்பாடு, தனிநபர் ஊக்கம், பின்னால் வருபவர்கள் முன்னோக்கி இழுத்துச்செல்லத் தேவையான கூடுதல் உந்துவிசை போன்றவற்றின் மூலம் சமச்சீரான முன்னேற்றத்தை எட்டுவது சாத்தியமே. இவையெல்லாவற்றிற்கும் மேலாக, அரசியல் காழ்ப்புணர்வின்றி முறையான நிதிப்பங்கீட்டு அமைப்பு முறை ஒன்று உருவாக வேண்டும். ஒன்றியத்தில் ஆளும் கட்சி எந்த மாநிலத்தையும் வஞ்சிப்பதற்கு அதில் இடமிருக்கக் கூடாது. இது அதிகாரக் குவிப்பை உடைத்து அதிகாரப் பகிர்வின் மூலம்தான் சாத்தியம். அதிகாரக் குவிப்பை அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட பா.ஜ.க.வின் பலம் பெருகப் பெருக நியாயமான நிதிப்பங்கீட்டு பொறியமைவு அமைவது சாத்தியமல்ல. எனவே பா.ஜ.க.வை நிலைகுலையச் செய்யுமளவிற்குத் தோற்கடிக்க வேண்டும்.

10. நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், நியாயமான நிதிப் பங்கீட்டுக் கொள்கைக்காகப் போராடுவார்கள். நிதியதிகாரக் குவிப்புக்கு எதிராகச் சட்டமன்றத்தில் குரலெழுப்புவார்கள். அதிகாரப் பகிர்வை வலியுறுத்துவார்கள்.

ஒழியட்டும் ஒன்றிய அரசின் ஓரவஞ்சக நிதிப்பகிர்வு முறை!
உதிக்கட்டும் பகுத்தறிவுப்பூர்வமான நிதிப்பகிர்வு முறை!
உரிமையாகக் கிடைக்க வேண்டிய நிதி கிடைக்கட்டும்!
ஒன்றுக்கும் உதவாத பா.ஜ.க.வின் டப்பா எஞ்சின் சர்க்கார் வேண்டாம்!

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் - ரூ. 10,000 பரிசு புத்தகங்கள் வெல்வோம்..

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *