ஆயிஷா இரா.நடராசன் எழுதிய "NITRO-நைட்ரோ கிளிசரின் முதற்றே உலகு! (ஒரே ஒரு வேதிப்பொருளால் உலகை மாற்ற முடியுமா?!)" கட்டுரை | நைட்ரோ கிளிசரின் (Nitroglycerin) கட்டுரை | www.bookday.in

NITRO-நைட்ரோ கிளிசரின் முதற்றே உலகு! – ஆயிஷா இரா.நடராசன்

NITRO-நைட்ரோ கிளிசரின் முதற்றே உலகு!

(ஒரே ஒரு வேதிப்பொருளால் உலகை மாற்ற முடியுமா?!)

– ஆயிஷா இரா.நடராசன்

       C3H5{(ONO2)3} இதுதான் நைட்ரோ கிளிசரின் (Nitroglycerin) . அந்த காலத்து எம் ஜீ ஆர் பட பாணியில் ஒருத்தர் ரொம்ப கெட்டவர் ஒருத்தர் நல்லவர் என்கிற இரட்டை பிறவியாக இந்த பூமியில் கண்டுபிடிக்கப்பட்ட வேதிப்பொருள்.. இருதய நோய் என்கிற மாரடைப்பை எப்போது வேண்டுமானாலும் எதிர்கொள்ளும் கொடுமையான நிலையில் இருக்கும்.. பல லட்சம் பேருக்கு ஆஞ்ஜியோ சிகிச்சைக்கு மிகவும் பயனளிக்கும் வாசோடைலேட்டர் அதாவது ரத்தக் குழாயை அகலப்படுத்தும் மருந்தாகப் பயன்படுவது ஒரு புறம்.. பயன்படுத்துகிறவரையே வீழ்த்தி விடுகின்ற கொடூரமான ( தில்லி குண்டுவெடிப்பு உட்பட) வெடிபொருளாக பயன்படுவது இன்னொரு புறம். இது எப்படி உலகின் போக்கை மாற்ற முடியும் என்று கேட்கிறீர்களா.. வாருங்கள் அறிவியலின் வரலாற்றுக்குள் நுழைவோம்.

நைட்ரோ கிளிசரின்  பிறந்த கதை எத்தனையோ சினிமாக்களின் சுவாரசியமான திருப்புமுனை கதைகளை விட அபாரமானது. அதன் கதை ஒரு இத்தாலிய வேதியியல் அறிஞரிடம் இருந்து தொடங்குகிறது. அஸ்கானியோ சோப்ரேரோ.. அதுதான் அவருடைய பெயர். 1812 ஆம் ஆண்டு காஸல் என்னும் நகரத்தில் பிறந்தவர். டூரின் மற்றும் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் ஆகிய இடங்களில் மருத்துவம் பயின்றவர் எதனாலோ சீசன் பல்கலைக்கழகத்திற்கு திரும்பி ஜஸ்ட்டஸ் லீபிக் என்பவரோடு நட்புக்கொண்டு வேதிஇயல் பக்கம் சென்றுவிட்டார். 1832 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்று டூரின் பல்கலைக் கழகத்தில் வேதியியல் பேராசிரியர் ஆனார். தன்னுடைய ஆய்வுக் கூடத்தில் இரவு நேரத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளும் ராக்கோழி என்று பெயர் பெற்றார் சோப்ரேரோ. இரவில் அவரோடு தங்கி சாகச ஆய்வுகளில் ஈடுபடுவதை ஒரு சில மாணவர்களும் விரும்பினார்கள். இப்போதெல்லாம் பேராசிரியர்கள் கல்லூரியில் பகலில் கல்லூரி நேரத்திலேயே வேலை செய்வது அபூர்வமாகிவிட்டது.

ஆயிஷா இரா.நடராசன் எழுதிய "NITRO-நைட்ரோ கிளிசரின் முதற்றே உலகு! (ஒரே ஒரு வேதிப்பொருளால் உலகை மாற்ற முடியுமா?!)" கட்டுரை | நைட்ரோ கிளிசரின் (Nitroglycerin) கட்டுரை | www.bookday.in
அஸ்கானியோ சோப்ரேரோ (Ascanio Sobrero), நைட்ரோகிளிசரினின் கண்டுபிடிப்பாளர்

அப்படிப்பட்ட சாகச இரவுகளில் சில வேதிப்பொருள்களை வெடி மருந்துகளாக பயன்படுத்த முடியுமா மாற்றாக அறிமுகம் செய்ய முடியுமா என்பது குறித்து அவர் ஆராய்ந்தார். இப்படி தான் மாணவர்கள் யாரும் இல்லாத ஒரு இரவில் 1847 ஆம் ஆண்டு நைட்ரோகிளிசரின் என்கிற அந்த வேதிப்பொருளை கண்டுபிடித்தார். அவர் அதற்கு பைரோ கிளிசரின் என்று பெயர் வைத்தார். உண்மையில் அவர் உருவாக்கியதை பார்த்து அவரே மிகவும் பயந்து போனார். ஒரு வருடத்திற்கு வெளியே சொல்லவில்லை அதன் பிறகு ஒரு ஆய்வுக் கட்டுரையின் மூலம் அதன் பயன்பாடுகள் குறித்து ஒருபோதும் தயவு செய்து இதை உருவாக்கிவிடாதீர்கள் என்று அதற்கு எதிராக கடுமையான எச்சரிக்கை விடுத்தார். அதற்கு ஒரு காரணம் இருந்தது ஆய்வுக் கூடத்தில் முதல் முறை அதை தயாரித்த பொழுது வலது கையின் இரண்டு விரல்களையும் அவர் இழந்திருந்தார் இரண்டாவது முறை முயற்சி செய்த பொழுது இடதுகை கட்டைவிரல் பறிபோனது.

ஆனால் இப்போதுதான் திருப்புமுனை. உலகெங்கிலும் எப்படியாவது அதனை கண்டுபிடிக்க பயன்பாட்டுக்கு கொண்டுவர கடுமையான போட்டி நிலவத் தொடங்கியது. அப்போதெல்லாம் வெடிமருந்து வைத்து சாலைகளை ஏற்படுத்தவும் மலைகளைத் உழைக்கவும் பயன்படுத்தி வந்த கருப்பு போடி என்று அழைக்கப்பட்ட சீன தேசத்தின் எரிபொருளால் ஒரு பயனும் இல்லை என்கிற அளவிற்கு நைட்ரோ கிளிசரின் (Nitroglycerin) பயங்கரமாக வேலை செய்தது. ஆனால் பயன்படுத்தப்படும் இடங்களில் எல்லாம் தொழிலாளர்கள் செத்துக் கொண்டிருந்தார்கள் எல்லா இடங்களிலுமே ரத்தக்கறையில் போய்தான் முடிந்தது.

இருந்தாலும் உலகம் அதை கைவிட தயாராக இல்லை அதை பாதுகாப்பான ஒன்றாக எப்படி மாற்றுவது என்கிற விஷயம் யோசிக்கப்பட்ட பொழுது அந்த இரவு நேர சாகச ஆய்வுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மாணவர்களில் ஒருவராக இருந்த ஒருத்தருடைய குடும்பம் களத்தில் குதித்தது. இமானுவேல் நோபல் மற்றும் அவருடைய மகன்கள்.. இரவு நேரத்தில் ஆய்வுக் கூடத்தில் கழித்தவர் வேறயாருமல்ல. ஆல்பிரட் நோபல். இமானுவேல் நோபலின் மகன்.. அவர்கள் குடும்பத் தொழிலாகவே மாற்றி வெடிமருந்து உலகிற்குள் நுழைந்தார்கள். தன்னுடைய மகன் ஆல்பிரட் நோபல் இரவு நேர சாகச வேதியியல் ஆய்வகத்தில் தான் முயற்சி செய்ததையெல்லாம் தந்தைக்கு சொல்லிக்கொடுக்க.. வெடிமருந்து தொழிற்சாலை ஒன்றை சிறிதாக உருவாக்க குடும்பம் தொழிலில் குதித்தது.

ஆயிஷா இரா.நடராசன் எழுதிய "NITRO-நைட்ரோ கிளிசரின் முதற்றே உலகு! (ஒரே ஒரு வேதிப்பொருளால் உலகை மாற்ற முடியுமா?!)" கட்டுரை | நைட்ரோ கிளிசரின் (Nitroglycerin) கட்டுரை | www.bookday.in
ஆல்ஃப்ரெட் நோபல் மற்றும் டைனமைட் (Alfred Nobel: Nobel Peace Prize and Dynamite Inventor)

ஆனால் சுவீடன் தேசத்தின் பொறியியலாளரான இமானுவேல் நோபல் ரஷ்யாவுக்கு இடம் பெயர்ந்தார். அங்கு ஆட்சி செய்து வந்த ஜார் மன்னன் இரண்டாம் நிக்கோலஸ் அரசவை ஆயுத உற்பத்தி நிபுணராக இமானுவேல் நியமிக்கப்பட்டிருந்தார். அருமையான வருமானம். ஆனால் ப்ரீமிய யுத்தத்தில் ஜார்ஜ் மன்னர் கொல்லப்படவே அனைத்தையும் இழந்து அவர்கள் உடனடியாக ரஷ்யாவில் இருந்து குடும்பத்தோடு தப்பி மீண்டும் சுவீடனில் வந்து இறங்கினார்கள். இமானுவேல் நோபலின் மூன்றாவது மகன் அல்பிரட் நோபல். அவர்கள் தங்கள் குடும்பமாக இரண்டு விஷயங்களை தயாரிப்பதற்கான தொழில் கூடத்தை ஸ்டாக்ஹோம் நகரில் வைத்திருந்தார்கள். ஒன்று சாயங்கள். அந்த காலத்தில் சாயங்கள் தயாரிப்பதும் அதை விற்பதும் மிகப்பெரிய வணிகம்

இரண்டாவது வெடிமருந்து. சாயங்களை விட ஆல்பிரட் நோபலுக்கு வெடிமருந்துகளின் மேல் தான் ஆர்வம். ஒருகாலத்தில் கல்லூரியில் இரவு நேர சாகச ஆய்வகத்தில் தான் மேற்கொண்டு வந்த ஆய்வுகளை எல்லாம் இப்போது தொடருவதற்கு.. சுதந்திரமான வாய்ப்பு அவருக்கு கிடைத்து இருந்தது. நைட்ரோ கிளிசரினை கையில் எடுத்தார் நோபல். ஆனால் அந்த 1861 ஆம் ஆண்டு அந்த முழு பட்டரையும் வெடித்து சிதறியது.. ஆல்பர்ட் நோபலின் இளைய சகோதரர் எமில் நோபல் உட்பட..  வேலை செய்த ஐந்து தொழிலாளர்களும் உடல் சிதறி உயிரிழந்து போனார்கள். அல்பிரட் நோபல் தப்பியிருந்தார். இப்போது ஊரே சேர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாக்ஹோம் நகருக்குள் இருந்த பட்டரையை ஊருக்கு வெளியே திறந்தவெளியில் வைக்க நிர்பந்தித்தது. இமானுவேல் பணிந்திருந்தார்.

ஏற்கனவே பெரும்பாலான தங்களுடைய வருமானத்தை எல்லாம் இழந்துபோய் ரஷ்யாவில் இருந்து குடி மாறி இருந்த அந்த குடும்பத்தில் நைட்ரோ கிளிசரின் (Nitroglycerin) விபத்து மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி இருந்தது. இறந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு கொடுத்தது போக மீதியை வைத்து வேறு தொழில் தெரியாது என்பதற்காக சாயப்பட்டறை உருவாக்கப்பட்டது. தன்னுடைய சொந்த சகோதரரை வீழ்த்திய நைட்ரோகிளிசரினை எப்படியாவது அடக்கி தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர சபதம் எடுக்கிறார் அல்பிரட் நோபல். அனைத்து வகையான கலவைகளையும் செய்து பார்க்கிறார். ஆனால் இப்போது சிக்கல் என்னவென்றால் அவர் தன்னுடைய பெற்றோர்களுக்கு தெரியாமல் அதை செய்ய வேண்டும். கரணம் தப்பினால் மரணம்.. என்று தன்னையே கொடுக்காமல் ஒன்றும் செய்ய முடியாது இருந்தாலும் இந்த உலகில் மனிதனின் ஆர்வமும் வெறித்தனமான தேடலும் ஒரு வகையான போதையை கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது.

எது எப்படியாக இருந்தாலும் உலகம் முழுவதும் இருந்து நைட்ரோகிளிசரின் தேவை என்று நோபல் குடும்பத்திற்கு ஆர்டர் வந்து கொண்டே இருந்தது. எனவே அதை தயாரித்து கைசாகர் என்று அழைக்கப்பட்ட ஃபோர்ஸ் சிலிக்கா அடிப்படையிலான டின்களில் அதை நிரப்பி ஜெர்மனிக்கு பிரான்ஸ் நாட்டிற்கு அவர்கள் கப்பலில் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். இப்படியான சூழலில் ஒருநாள் களிமண்ணை போன்ற ஒரு பொருள் லேசாக ஓட்டை விழுந்த அந்த சிலிக்கா டின் ஒன்றில் இருந்து வழிவதை ஆல்பிரட் நோபல் கவனித்தார். சிலிக்கா சேர்க்கப்பட்ட அந்த நைட்ரோகிளிசரின்னை அடைத்து வைக்கும் பெட்டி செய்யப்பட்ட உலகத்தோடு அது வினைபுரிந்து இருக்க வேண்டும்.. விரைவில் நேரடியாக பெட்டியை உருக்கி நைட்ரோகிளிசரின் ஓடு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கருஞ்சிவப்பு நிறத்தில் களிமண் போல ஒன்றை அல்பிரட் நோபல் உருவாக்க முடிந்தது.. வெறும் கையால் அதை உருவமாக பிடித்து வைக்கவும் அவரால் முடிந்த பொழுது காற்றில் உலர்த்தி கெட்டித்தன்மை பெற்ற பிறகு சுத்தியலால் அடித்துவும் வீசி சுவற்றில் எறிந்து சோதித்த பொழுதும் அது வெடிக்கவில்லை. மாறாக தீ பற்றினால் மட்டுமே வெடித்தது. அடுத்த 10 நாட்களுக்கு அவர் ஆய்வகத்தில் இருந்து வெளியில் வரவில்லை.. இறுதியாக  வெளியில் வந்த பொழுது தான் புதிதாக அடைந்திருந்த நைட்ரோ கிளிசரினின் ஒன்று விட்ட தம்பிக்கு அவர் டைனமைட் என்று பெயர் வைத்திருந்தார்.

ஆயிஷா இரா.நடராசன் எழுதிய "NITRO-நைட்ரோ கிளிசரின் முதற்றே உலகு! (ஒரே ஒரு வேதிப்பொருளால் உலகை மாற்ற முடியுமா?!)" கட்டுரை | நைட்ரோ கிளிசரின் (Nitroglycerin) கட்டுரை | www.bookday.in
நைட்ரோகிளிசரினின் வேதியியல் அமைப்பு (C₃H₅(ONO₂)₃)

டைனமைட் என்கிற அந்த வெடிப்பு அரக்கனுக்கு அவர் உரிமம் பெற்றார்.. இதன்மூலம் பணம் கொட்டத் தொடங்கியது. ஆனால் கதை அதோடு முடியவில்லை. நைட்ரோ கிளிசரின் (Nitroglycerin) அவரை அதன் பிறகும் உறங்கவிடவில்லை. 1875 ஆம் ஆண்டு வழக்கம் போல் இரவு நேரத்தில் தன்னுடைய சாகச ஆய்வுக் கூடத்தில் காலத்தை கழித்த பொழுது ஒரு கண்ணாடி கூம்பு குடுவை உடைந்து கையை கிழித்துவிட்டது. அவசரம் அவசரமாக சென்று அலமாரியைத் திறந்து கொலோடியான் என்கிற அந்த காலத்து டிஞ்சர் பாட்டிலை எடுத்து வந்து காயம் பட்ட இடத்தில் அப்ப தொடங்குகிறார். அது எப்படி வேலை செய்யும் என்பது நமக்கு தெரியும் அதில் இருக்கும் ஆல்கஹால் முழுவதும் காற்றில் கலந்து ஆவியாகி விட நைட்ரோ செல்லுலோஸ் காயத்தின் மீது இழை போல படிந்து விடும். காய்ந்து விடும். காயம் முற்றிலும் ஆறிய பிறகு உரித்து தூக்கி எறிந்துவிடலாம். ஆனால் அன்றைய இரவில் அந்த திரவம் நைட்ரோ கிளிசரின் வைத்திருந்த ஒரு குடுவையில் லேசாக கொட்டி விட்டது.. சட்டென்று அதை கவனித்த ஆல்பிரட் நோபல் இந்த நைட்ரோ செல்லுலோஸ் திரவத்தை நைட்ரோ கிளிசரின் உடன கலந்து விளையாடுவது என்று முடிவு செய்தார். இப்போது அவருக்கு விரைவில் கூழ்ம பொருள் ஒன்று கிடைத்தது.. டைனமைட் மாதிரியே செயல்பட்டாலும் டைனமைட் காற்றில் கலந்து ஏற்படுத்தும் நெடி வியர்த்து கொட்டுதல் போன்றவை இல்லாமல் இருப்பதை அறிந்து இதற்கு ஒரு பெயர் வைப்பது என்று முடிவுசெய்து குழுமம் என்று ஆங்கிலத்தில் ஜெல்லி என்பதற்காக டைனமைட் போல ஜல்லிமைட் என்று பெயர் வைத்தார்.. ஆனால் மார்க்கெட்வாதிகள் அதை ஜெலட்டின் என்று மாற்றினார்கள். வெடி வைத்து பாறைகளை தகர்ப்பதற்கு மட்டுமல்ல போர் ஆயுதங்கள் செய்யவும் தீவிரவாதிகள் கையில் கிடைத்தால் சகட்டுமேனிக்கு குண்டு வைக்கவும் பயன்படுகின்ற ஒன்றாக இந்த உலகம் அதை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறது.

இந்த மாதிரி ஆய்வுகள் நடந்து கொண்டிருந்த பொழுது மட்டுமல்ல இவற்றின் மூலம் கோடிக்கணக்கான வருவாய் நோபலுக்குக் கிடைத்துக் கொண்டிருந்த பொழுதும் அங்கே முக்கியமான ஒருவர் வேலையில் இருந்தார் அவருடைய பெயர் கான்ஸ்டன்டைன் ஹியரிங். வேடிக்கை என்னவென்றால், நம் கதையின் ஆரம்ப கதாநாயகர் பேராசிரியர் அஸ்கானியோ சாபரேரோ நடத்திய இரவு வேதி ஆய்வுக் கூடத்தில் இவரும் ஒருவராக இருந்தவர்.. ஆய்வகத்தில் நைட்ரோகிளிசரின் பயன்படுத்தப்படும் போதெல்லாம் கடுமையான தலைவலி மற்றும் இதயத் துடிப்பு அதிகரிப்பு போன்றவை தனக்கு ஏற்படுவதை ஹியரிங் உணர்ந்தார். ஆனால் ஒரு அதிசயம் என்னவென்றால் சிறு வயது முதலே அவ்வப்போது முற்றிலும் மயக்கம் போட்டு விடுகின்ற உடல்நிலை கொடுத்துக்கொண்டிருந்த கஷ்டம் திடீரென்று நின்று போனது. மயக்கம் போடாத ஒன்னரை ஆண்டுகள் கழித்து அவரை விட அவருடைய மருத்துவர் அதிகம் கவலைப்படத் தொடங்கினார்.  அவருக்கு வில்லியம் மியூரல் என்று ஒரு மருத்துவ நண்பர் இருந்தார். அவருடைய மருத்துவமனையின் நோயாளிகள் நடுவே இருதய நோய் பாதிக்கப்பட்ட பலர் இருந்தார்கள் இருதயம் நின்று போகின்ற ஒரு சூழல்.. ஆஞ்சினோ என்று மருத்துவ உலகம் இதனை அழைக்கிறது. சற்று நின்றுவிட்டு பிறகு மீண்டும் துடிக்கும் எனவே நீங்கள் மயக்கம் போட்டு விடுவீர்கள்.

ஹியரிங் தனக்கு நோய் குணமானதை நைட்ரோ கிளிசரின் (Nitroglycerin) பயன்படுத்திய ஒரு காரணத்தோடு இணைத்து யோசித்தார்.. பிறந்தது புதிய அற்புதம். இப்போது நைட்ரோகிளிசரின் கொஞ்சம் கொஞ்சம் அளவுகளில் ஆல்பிரட் நோபலின் ஆய்வகத்தில் இருந்து காணாமல் போக தொடங்கியது. அந்த இடத்தில் இருந்து ஆஞ்சினோ பேக்டோரிஸ் என்கின்ற நாள்பட்ட இதய நோய் அல்லது இதய செயலிழப்பு நோய் குணமாவதற்கு சக்தி வாய்ந்த ரத்த நாளங்களை விரிவுபடுத்துகின்ற வாசோடை லேட்டராக அது பயன்பட தொடங்கியது. இப்போதும் லேசாக இதயம் வலித்தால் நாக்குக்கு அடியில் வைக்கும் மாத்திரையாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆயிஷா இரா.நடராசன் எழுதிய "NITRO-நைட்ரோ கிளிசரின் முதற்றே உலகு! (ஒரே ஒரு வேதிப்பொருளால் உலகை மாற்ற முடியுமா?!)" கட்டுரை | நைட்ரோ கிளிசரின் (Nitroglycerin) கட்டுரை | www.bookday.in
பெர்தா சுட்னர்

கொஞ்ச காலத்தில் அல்பிரட் நோபல் உலகத்தின் மிகப்பெரிய பணக்காரராக மாறியிருந்தார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் அவருடைய கண்டுபிடிப்புகள் எந்த அளவிற்கு ஆட்கொல்லிங்கள் என்பது பற்றி அவருடைய ஆசிரியரே பக்கம் பக்கமாக அவரை எதிர்த்து எழுதிக்கொண்டிருந்தார். நோபலுக்கு திருமணமே ஆகவில்லை .. வாழ்க்கையில் அவருக்கு இருந்த ஒரே பெண் சகா என்றால் அது  பெர்தா சுட்னர். ‘மிகப்பெரிய பணக்காரருக்கு படித்த வீட்டு வேலைகள் செய்யக் கூடிய மொழி மற்றும் தட்டச்சில் சிறந்து விளங்கும் இல்லத்தை பார்த்துக் கொள்ளத் தக்க ஒரு மேற்பார்வையாளர் பெண் தேவை’ என்று ஆல்பிரட் நோபல் கொடுத்த விளம்பரத்தைப் பார்த்து அவரிடம் வந்து சேர்ந்தவர் இந்த பெர்தா. ஆனால் ஆறே மாதங்கள்தான் அவரால் அங்கு வேலை செய்ய முடிந்தது. பெர்தா ஒரு எழுத்தாளர் ஆல்பிரட் நோபலுடன் ஆறு மாதங்களில்  .. தீவிரமான உலக அமைதி போராளியாக அவர் மாறினார். 1899 ஆம் ஆண்டு ‘உங்கள் ஆயுதங்களை கீழே வையுங்கள்’ என்ற தலைப்பில் ஒரு அற்புதமான புத்தகத்தை பெர்த்தா எழுதினார்.

ஆல்பிரட் நோபலின் வீட்டில் இருந்து விலகினாரே தவிர அவர்கள் இருவருக்கும் இடையில் பரஸ்பர கடிதப் போக்குவரத்து நட்பு அங்கீகாரம் தொடர்ந்தது. தான் எழுதும் கடிதங்களில் எல்லாம் தன்னை ஒரு மரண வியாபாரி என்று இந்த உலகம் அழைக்கிறது என்று தொடர்ந்து வருத்தப்படுவார் நோபல். அவருடைய மூத்த சகோதரர் லூட்விக் 1888 ஆம் ஆண்டு .. இறந்து போன பொழுது குறிப்பாக பிரான்ஸ் நாட்டினுடைய செய்தித்தாட்கள் உலகத்தின் மரணத்தின் வியாபாரி ஒருவழியாக அனாதையாய் செத்துப்போனான் என்கிற தலைப்பிட்டு  அல்பிரட் நோபல் இறந்துவிட்டதாக தவறான செய்தி வெளியிட்டு இருந்ததை நோபலுக்கு தெரிவித்தது பெர்தா அம்மையார்தான் .

இதனை பற்றி கேள்விப்பட்டவுடன் அடுத்த இரண்டு ஆண்டுகளில் கடுமையான இருதய நோய்க்கு தள்ளப்பட்டார் நோபல். மிக பெரிய நகைமுரண் என்னவென்றால் தன் இறுதி நாட்களில் தான் கண்டுபிடித்த நைட்ரோ கிளிசரின் திரவத்தை ட்ரிநைட்ரின் என் பெயரில் மருந்தாக வாய்வழியே ஊற்றிக் கொள்ள வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. பெர்த்தா கொடுத்த ஊக்கத்தால் தன்னுடைய உயிலை எழுதுகின்ற பொழுது வெறும் அறிவியலோடு உலக அமைதிக்காகவும் ஒரு நோபல் பரிசை இணைத்தார் அவர்.. 1905 ஆம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டவரின் பெயர் பெர்தா.. இந்த பரிசை பெற்ற முதல் பெண்ணாக வரலாற்றில் இடம் பிடித்தது நோபலின் ஒரு பெண் தோழமை.. அதுமட்டுமல்ல நைட்ரோ கிளிசரின் என்கிற வேதிப்பொருளை மருத்துவ பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததற்காக.. அடுத்தடுத்து 1998 வரையில் நான்கு மருத்துவ நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஒரு வேதிப்பொருள் நைட்ரோ கிளிசரின் (Nitroglycerin) நோபல் பரிசை ஸ்தாபித்து உலகத்தின் அறிவியல் போக்கை மாற்றியது ஒரு புறம். நோபல் பரிசு என்கிற ஒன்று அறிவியலை மட்டுமா மாற்றியது. இன்றைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உட்பட நோபல் நோபல் என்று உலகையே அலறவைத்து இருக்கிறது என்பதுதான் உண்மை. இது ஒரு புறம். வெடிபொருளாக உலகத்தை மேலும் மேலும் அபாயகரமான இடமாக்கி இன்று (டெல்லி வெடிகுண்டு  சம்பவம் வரை..) ரத்தத்தில் உறைய வைத்துக் கொண்டிருப்பது இன்னொருபுறம். மருத்துவ உலகில் பல இருதய நோயாளிகளை காப்பாற்றுகின்ற மருந்தாக உலகை மாற்றியது மூன்றாவது விதம் என்றால் இப்போது  வாலிப வயோதிக அன்பர்களுக்கு(?!) சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் வயாகரா வகையறாவாக சந்தையில் இறங்கியிருப்பதும் அதே நைட்ரோ கிளிசரின் வேதிப்பொருள் லேட்டஸ்டாக  எடுத்திருக்கும் புதியஅவதாரம் தான்.

எழுதியவர் : 

✍️ – ஆயிஷா இரா.நடராசன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *