என்னைப் பற்றி நன்றாகவே அறிவேன். ஒரு நாள் எனது பெயர், அசுரத்தனமான ஒன்றின் ஞாபகத்துடன் பிணைக்கப்பட்டிருக்கும் பூமியில் இருந்திராத நெருக்கடியுடன், மிக மிக ஆழ்ந்த மனசாட்சியின் மோதலுடன், அதுவதை நம்பியும் கோரியும் புனிதமாக வைக்கப்பட்டிருந்த ஒவ்வொன்றிற்கும் எதிராக எழுப்பப்பட்ட தீர்ப்புடன் பிணைக்கப்பட்டிருக்கும். நான் மனிதனில்லை, வெடி மருந்து.
– நீட்ஸே ECCE HOMO- 1888.

ஒரு புறம் கதே என்னும் மகத்தான ஆளுமை வாக்னர் என்னும் இசைக் கலைஞன், ஹோல்டரின் என்னும் கவிஞன் எழுந்திருப்பதும் மறுபுறம் ஹிட்லர் என்னும் குரூர அதிகார உருவம் பிரம்மாண்டம் கொண்டிருப்பதுமான ஜெர்மானிய மண்ணில், அதிரடியான சலனங்களை மதத்தில் தத்துவத்தில் ஏற்படுத்திய நீட்ஸே (1900- 1844) உருக்கொண்டார். அவ்வளவு ஆச்சரியத்திற்கும் அருவருப்புக்கும் உரியவராயிருந்தார். இம்முரண் நிலைகளெல்லாம் அவ்வாளுமையில் படிந்திருந்ததா? அல்லது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்ததா? கடவுள் இறந்துவிட்டார் என்னும் பிரகடனத்தால் அவதூறுக்கு உள்ளாக்கப்பட்டாரா? பரிசீலிக்கலாம்.

நீட்ஸே ஒரு பாதிரியாரின் மகன். மொழியியல் பயின்றவர். 24 வயதிலேயே பேராசிரியவர். அவருக்கு 4 வயதாயிருந்தபோதே அவரது தந்தை மனநிலை பாதிப்புற்று ஓராண்டிலேயே இறந்துபோனார். இதனால் மத நம்பிக்கை கொண்டிருந்த குடும்பப் போக்கிற்கு எதிரான நிலையில், துயரத்தை எதிர்கொண்டு நல்லவனாயிருப்பது எப்படி என்னும் எண்ணம் உலுக்கி எடுக்கிறது. வெறி கொண்டு சிந்தித்து எழுதி, தெய்வீக கட்டளைகளுக்கு, அதிகாரத்திற்கு எதிராக தன்னை நிறுத்திக் கொண்டவர். அவர் மீண்டும் மீண்டும் நேசித்த உளவியல் சிகிச்சையாளர் சலோமி அவரை நிராகரித்து விடுகிறார். 1881இல் ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்று, ஸ்விட்ஜர்லாந்தில் தங்கி ஆல்ப்ஸ் மலைகளில் மணிக் கணக்கில் சதா ஏறி இறங்கி, சிந்தனையின் உச்சத்தில் எழுதிக் கொண்டிருப்பவராக இருந்து, ஒரு கட்டத்தில் அவரும் மனநிலை பிசகியவராக, தனது அபிமானத்துக்குரிய கிரேக்க நாயகன் டயோனிஸஸ் பெயரில் கையொப்பமிடுபவராகி, படுத்த படுக்கையாகி, புலம்பியபடி இறந்து போகிறார்.

நரம்பு மண்டலம், இருதய இயக்கம் இரண்டையும் பாதித்த Cadasil என்னும் மரபணு சிக்கலால் நீட்ஸே இறந்தார் என்கின்றனர் பெல்ஜிய – ஸ்விட்ஜர்லாந்து நரம்பியலாளர்கள். நடுத்தர வயதிலேயே மனச் சிதைவுக்கு உள்ளாகிய அவருக்கு தற்கொலை எண்ணங்களும் இருந்துள்ளன. அவரது இச்சிக்கலுக்கு பரம்பரையாக வந்துள்ள போக்கும் காரணம் எனப்படுகிறது. அவரது தந்தை இறப்பதற்கு ஒரு வருடம் இருந்தபோது பார்வையும் இழந்து முடமாகிவிட்டவர். நீட்ஸே 1889இல் மனநிலை பிசகி 11 ஆண்டுகளாக மலைகளில் ஏறியும் இறங்குவதுமாயிருந்தார். முதலில் தாயின் அரவணைப்பிலும், அடுத்து சகோதரியின் கவனிப்பிலும் உயிர் வாழ்ந்திருந்தார். தன்னை குடும்பத்தை நிலை நிறுத்தல் உலகியல் முன்னேற்றம் பெறுதல் பேரும் புகழும் மிக்க ஆளுமையாக கொண்டாடப்படல் என்னும் எண்ணங்கள் அறவே இல்லாமல், சிந்தனைப் பிழம்பாக ஒளிர்ந்தார்.

அவர் ஒரு கவிஞரும் இசைக்கலைஞரும் கூட.

ரிச்சர்ட் வாக்னர் என்னும் இசைக் கலைஞருடனான அவரது நட்பும் கலந்து உறவாடலும் அவ்வளவு நெருக்கமும் தீவிரமும் கொண்டது. அவ்வளவு பகைமையுடன் பிரியவும் செய்தது. ஆளுமைச் சிக்கலால் நேர்ந்ததா, சிந்தனை முரணால் நேர்ந்ததா என்று கூற முடியாதபடி இருந்தது.

ஷோபன்ஹோவரிடம் அபிமானம் கொண்டு, சிந்தனைப் பயணத்தைத் தொடங்கும் அவர், சீக்கிரமே அந்த அவநம்பிக்கை தத்துவாசிரியரிடமிருந்து விலகி விடுகிறார். ஷோபன்ஹோவரின் சீடனாக தன்னை அறிவித்துக் கொண்டவருக்கு எங்கும் நிரம்பிய துயரத்தை எதிர்கொள்ள, ஷோபன்ஹோவரின் சிந்தனை போதாமையாக இருந்தது தெரியவருகிறது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் ஜெர்மனியில் நிலவிய கழிவரக்கத்திற்கும் அதீத புனைவியல் தன்மைக்கும் அதுவே காரணம் என்று பழிக்கவும் செய்கிறார்.

சிற்பி ரோடினும் இலக்கிய கர்த்தா தாஸ்தோயெவ்ஸ்கியும் அவரை ஈர்த்து, வெட்டி விலக்கி விடுகின்றனர். டான் க்விஜோட் அவரை முழுமையாக ஆக்கிரமிக்கும் பாத்திரமாகிறது. குரூரமும் வன்முறையும் மண்டிய உலகில், குறிக்கோளுடன் வாழ்ந்த, ஆற்றில்மிகு பாத்திரமாகிறது. அது நன்னம்பிக்கை அளித்த பாத்திரமா? இல்லை, வாழ்வின் சவால்களுக்கு சரியான அணுகுமுறையைக் கொண்டிருந்ததால், இன்பியல் நாடகமாகப் பார்த்து சிரித்ததால், மடியும் வரை சிரித்துக் கொண்டிருந்ததால்.
இப்படி ஆழமும் பொறுப்புணர்வும் கொண்டு சிந்தித்து வந்த அவர், இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த அறிவுஜீவிகளாக விளங்கிய ஃபூக்கோ, தெரிதா, டெலூஸ் போன்றோரிடம் பெரும் செல்வர்க்கு செலுத்தக்கூடியவராநார். அதே வேளையில் ஜனநாயகம், சமத்துவவாதம், தேசியவாதம் என்பன அவருக்கு உவப்பில்லாதவை. அதீத தன்னம்பிக்கை மிக்கவர். துயரிலிருந்து மிகப் பெரும் வெகுமதி கிட்டும் என நம்பினார். பெரும் பயங்கரத்திலிருந்து, தனிமையுணர்விலிருந்து மாபெரும் கலை உருக்கொள்ளும் என்றார்.
அனுபவமின்றி மாபெரும் கலைப் படைப்பை ஒருவரால் உருவாக்க இயலாது. உடனடியாக உலகளாவிய பெருமையைப் பெறவும் முடியாது, முதல் முயற்சியிலேயே பெரும் காதலனாகிட இயலாது, ஆரம்ப கட்டத் தோல்விக்கும் பிந்தைய வெற்றிக்குமிடையே, ஒரு நாள் என்னவாகப் போகிறோம் என்பதற்கும் தற்போது என்னவாக இருக்கிறோம் என்பதற்குமிடைப்பட்ட இடைவேளையில், வேதனையும் பதற்றமும் பொறாமையும் அவமானமும் வந்தே தீரும். நிறைவேற்றலின் உட்கூறுகளை தன்னெழுச்சியாக கையாள முடியாததால் நாம் வருந்துகிறோம்.

ஒரு புறம் அதிரடி வாசகங்கள் அவரிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பைத்தியக்கார விடுதியில் சாதாரணமாக நடந்து போனால், இறை நம்பிக்கை எதனையும் நிரூபணம் செய்யவில்லை என்று எடுத்துக் காட்டும்.

மதம் சார்ந்த நபரை சந்தித்த பிறகு என் கைகளை கழுவவேண்டும் என எப்போதும் உணர்கிறேன். பெண்களைச் சந்திக்கப் போகும்போது சவுக்குடன் செல்ல வேண்டும்.

தன் சட்டையை உரித்துக் கொள்ள இயலாத பாம்பு மடியும். அப்படியே தம் அபிப்பிராயங்களை மாற்றிக் கொள்ள இயலாதவர்கள் மனிதர்களாக இருக்க இயலாது.

மறுபுறம் ஆச்சரியகரமான கூற்றுகள் புறப்படும். மனிதன் இனியும் கலைஞனாக இல்லை, கலைப்படைப்பாகி இருக்கிறான்.
பனிக்கட்டி மீது தன் எண்ணங்களை வைக்க இயலாதவன், பிரச்சனை (ஆட்சேபனை)யின் வெம்மைக்குள் நுழையக் கூடாது. விழிப்புணர்வு கொண்டுவிட்டால் அப்படியே நித்தியமாக விழிப்புணர்வு பெற்றிருக்க வேண்டும். விளக்கவுரையில் மறைந்துள்ளது பிரதி. உன்னத ஆன்மா தன்னைப் போற்றும்.

சிந்தனையாளராக, தத்துவாசிரியராக அவரது பங்களிப்பு என்ன?

நாடகம், உள்ளுணர்வு, ஒழுங்கீனம், சீர்குலைவு, போதை (எதிர்கருத்துநிலை) ஆகியவற்றின் கடவுள் டயோனிஸஸ் தான் நீட்ஸேக்கு ஆதர்சம். மனநிலை பிறழ்ந்த நிலையிலும் மறக்க இயலாத படிமம் டயோனிஸாகத் தன்னைக் கருதிக் கொண்டு, அப்படியே கையொப்பமிட்டவர். டயோனிஸஸின் இறுதிச் சீடராகவும் திரும்பத் திரும்ப நிகழ்தலின் Eternal recurrence) ஆசிரியராகவும் தன்னை பிரகடனம் செய்து கொண்டவர்.

டயோனிஸஸ் வெறித்தனத்தின் கடவுளும் கூட ஒன்று அது சுய அழிவுக்கு இட்டுச் செல்லும் அல்லது தீர்க்க தரிசன வடிவமாகும் என்று நீட்ஸே தொடர்பாக இதனை விளக்குவார் ராபர்டோ கவாஸ்ஸோ.

டயோனிஸஸ் அசாதாரணமான ஆளுமை. ஜீயஸின் தொடையிலிருந்து பிறந்தவராக, இரு தாய்களைக் கொண்டவராக குறிப்பிடப்படுகிறார். அவரது …..இசையும் பரவசமிகு நடனமும் சுய பிரக்ஞையிலிருந்தும் சமூகத்தளைகளிலிருந்தும் மனிதனை விடுவிப்பவை எனப்படும்.

நீண்ட தாடியுடன், மிருகம்போல வடிக்கப்பட்ட டயோனிஸஸ், நீட்ஸேக்கு சரியான முன்மாதிரிதான், முன்னோடிதான்.

மனிதன் மூன்று கட்டங்களைத் தாண்டி வந்து, அதிமனிதன் (Super man) ஆக முடியும் என இவ்வாறு பேசினார் ஜராதுஸ்டிரா நூலில் கூறுவார். ஒட்டகம், சிங்கம், குழந்தை என்பன அம்மூன்று கட்டங்கள்.

ஒட்டகம், நம்மைவிடப் பெரியது, சற்று தியாகம் செய்யத் தயங்காதது, சுய ஒழுக்கமும் வசதிகளைக் கைவிடும் துணிவும் வேண்டுவது. சிங்கம், எதிர்த்துப் போராடும், கலகம் புரியும், சுதந்திரத்தை நாடும். குழந்தை, புதுப்படைப்பு என்ற வகையில், தன் பெருமதிகளை உருவாக்கிக் கொள்ளும் அதிமானுடனுக்கு வழிவிட்டு நிற்கும். புழுவிலிருந்து மனிதனாகியும் இன்னும் உன்னில் பெரும்பகுதி புழுவாய் உள்ளது. ஒரு காலத்தில் மனிதக் குரங்குகளாய் இருந்தாய், இப்போதும் மனிதன், குரங்கை விடவும் குரங்காய் இருக்கிறான்… அதி மனிதனே பூமியின் அர்த்தம்.

இன்னொரு கன்னத்தைக் காட்டி அடிமையாக நிற்கும் நிலைக்குப் பதிலாக, எஜமானனின் ஒழுக்க நிலையை வற்புறுத்தினார். அது மற்றவர்களை ஒடுக்கி வைக்காமல், வாழ்வின் புதுப்பாதைகளையும் பெறுமதிகளையும் உருவாக்க வேண்டும் என்றார்.

நீட்ஸேயுடன் தொடர்புபடுத்தப்பட்டு வருவது இன்மைவாதம். ஆனால், இன்மைவாதத்தை அவர் வற்புறுத்தவில்லை, வாழ்க்கையை ஏற்குமாறே வாதிட்டார் எனப்படுகிறது. இன்மைவாதம் தவிர்க்க முடியாததாக இடம் பெறவே செய்யும். நாம் அதனூடே போராடிச் செல்ல வேண்டும், சமாளிக்க வேண்டும் என்றார் எனப்படுகிறது.

“நான் விவரிப்பது அடுத்த இருநூற்றாண்டுகளின் வரலாறே. வந்து கொண்டிருப்பதை, வேறுவிதமாக வர இயலாததை விவரிக்கின்றேன். அது இன்மைவாதத்தின் வருகை… நமது ஒட்டுமொத்த அய்ரோப்பியப் பண்பாடும் இப்போது சிறிதுகாலமாக நாசத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது… என்பதுதான் நிடிஸேயின் கூற்று.

நீட்ஸேயின் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள கருத்தமை அதிகாரத்தின் மீதான பற்றுறுதி (Will to power) தனது சூழலை எதிர்த்த போராட்டமாயும் வாழ்வதற்கான காரணமாயும் மனிதனுக்கு இருப்பது அதிகாரப்பற்றுறுதியே தவிர இனப் பெருக்கமோ சந்தோஷமோ அல்ல. அவரது நித்திய நிகழ்வு மற்றும் …..தத்துவத்தின் ஆதாரமே அதிகாரப் பற்றுறுதி தான். அது தடைகளை எதிர்கொள்கையில், தொடர்ந்து போராடுகையில் உருக் கொள்வதில் இடம் பெறும். அதிகாரத்தை, படைப்பாற்றலை தீவிரப்படுத்துவதை நோக்கியது.

வாக்னருக்கும் இது உடன்பாடுதான். இக்கருத்தமைவுதான் நாஜிகளை ஈர்த்தது, அதிகார வெறி கொள்ள வைத்தது, யூதர்களை அழிக்கமுற்பட்டது. ஆனால் இந்தத் தொனியில் நீட்ஸே பேச வில்லை, will to power நூலை நீட்ஸேயின் மறைவுக்குப் பிறகு பதிப்பித்த அவரது சகோதரியின் இடைச் செலுகல் என இப்போது வாதிடுகிறார் வால்டர் காஃபிமன் நீட்ஸேயின் நம்பகமான மொழி பெயர்ப்பாளராகக் கருதப்படுபவர். அச்சகோதரி நாஜி சார்பு கொண்டிருந்தவர்.

நித்திய நிகழ்வு (eternal recurrence) என்பது இன்னொரு கருத்தமைவு. ஒரே தன்மைத்தான சம்பவங்கள், ஒரே தன்மைத்தான அனுபவங்கள் நிரந்தரமாக நிகழ்ந்து கொண்டே இருப்பது, பெரும் பாரமாகிவிடும். ஆனால் அதுவே அறுதியாக வாழ்வை உறுதிப்படுத்தல், இன்மைவாதத்தின் வெறுமையை நிரப்புவது, அதனைப் புரிந்துகொண்டு தழுவிக் கொள்ள வேண்டும் விதியை நேசிக்க வேண்டும், வாழ்வை ஏற்று திடப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தெய்விக ஒழுங்கின்றி உள்ள நிலையிலும், இன்மைவாதத்தைத் தவிர்க்கவும் அனைத்துப் பெறுமதிகளையும் மறுமதிப்பீடு செய்ய வேண்டும். பயின்ற சிந்தனையாளர்களில் ஒருவரான ஆரம்ப கட்டத்தில் நீட்ஸே விரும்பி எமர்ஸனின் Oversoul என்னும் கருத்தாக்கத்திலிருந்து, Overman, superman என்பது தோன்றியிருக்க வேண்டும். கிருத்தலிலிருந்து மிகப் பெரும் நன்மையினையும் மிகப் பெரும் ஆனந்தசத்தையும் அறுவடை செய்தலின் ரகசியம், அபாயகரமாக வாழ்தலில் உள்ளது. அபாயகரமாக வாழ்தல், கயிற்றின்மேல் நடப்பது போன்றது. மனிதனிடம் படைப்பாளியும் படைப்பும், மனிதனும் அதிமனிதனும் சேர்ந்தே உள்ளனர் என்பார்.

நாவல் வடிவில் நீட்ஸே புனைந்து புதிய தத்துவம் பேசுகிறார் thys spake Zarathustra நூலில். 10 ஆண்டுகாலம் குகையில் தனித்துவாழும் தீர்க்க தரிசி ஜராதுஸ்ட்ரா, அலுத்துப் போய், மானுட சமுதாயத்திடம் தான் அறிந்திருப்பதை தெரியப்படுத்துகிறார். நன்மை தீமை என்னும் நெறிமுறையை முதலில் நிறுவியவர் ஜராதுஸ்ட்ரர். அதனின்றும் உருக்கொண்டவை யூத கிறித்தவ நெறிகள். இதனை உடைத்து நொறுக்க புதிய ஜராதுஸ்ட்ரரைப் படைத்துக் கொள்கிறார் நீட்ஸே.

33வது வயதில் குமட்டலாலும் தலைவலியாலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நீட்ஸே, ஏறக்குறைய ஒரு கண் பார்வையுடன், நாள்தோறும் ஆறிலிருந்து எட்டுமணி நேரம் வரை நடைப் பயிற்சி மேற்கொண்டார். அப்போது உருக்கொண்ட எண்ணங்களை குறித்து வைத்தார். ஓரிடத்தில் எழுதுகிறார். எனது நீண்ட நடைப் பயிற்சிகளின்போது நிறைய அழுதேன், அது உணர்ச்சிவயப்பட்ட கண்ணீரல்ல, மகிழ்ச்சி, பாடுதல், ஆடுதலின் கண்ணீர்- அது இன்றைய மனிதரைப் பார்த்து நான் கொண்ட புதுப் பார்வையால் வந்தது.

இசையால் கிட்டும் பரவசம் நடைப் பயிற்சியிலும் கிட்டும் என்பது அவரது பார்வை. A philosophy of walking என்னும் தலைப்பில் நூலும் எழுதியுள்ளார்.

நீட்ஸேயின் இந்த ஈடுபாட்டை ஃபிரெடரிக் கிராஸ் இப்படி விளக்குகிறார்.

பாதையின் திருப்பத்தை அடைந்திட நீண்ட வழியில் நடந்து வந்திருப்பவருக்கு, எதிர்பார்த்திருந்த பார்வைக் கோணம் வாய்க்கிறது, நிலவியலின் அதிர்வு எப்போதும் நிலவுகிறது. நடப்பவரது உடலில் அது திரும்பத் திரும்ப நிகழ்கிறது. ஒன்று மற்றதின் அதிர்வை ஈர்த்துக் கொள்வதாக உள்ள இரு தந்திகளைப் போல, இரு பிரசன்னங்களின் ஒத்திசைவு, முடிவற்ற மறுதொடக்கமாகிறது. நித்திய நிகழ்வு என்பது, இவ்விரு உறுதிப்பாடுகளின் தொடர்ச்சியான மறுநிகழ்வின் சுழற்சி பிரசன்னங்களின் அதிர்வின் சுழற்சியான உருமாற்றம்.

வால்டர் காஃப்மனைப் பொறுத்தமட்டில், நீட்ஸேவுக்கு சிரிப்பு, உலகை நோக்கிய வாழ்வை நோக்கிய ஓர் அணுகுமுறையை பிரதிநிதித்துவப்படுத்தும். பெறுமதிகள், நிகழ்வுகள், நிறுவனங்கள் மற்றும் போற்றப்படக்கூடியவர்கள் குறித்த தெளிவான வினாக்களுக்கு சிரிப்பு அவசியம். தான் நேசிப்பவற்றிடமிருந்து சிறிது தொலைவில் தன்னை நிறுத்திட அது தேவை. உண்மையான மதிப்பை அடைந்திடுவதற்கான பாரபட்சமற்ற மதிப்பீட்டிற்கு அது வழிவகை செய்யும். இன்னும் ஆழமாயும் தீவிரமாயும் சிரிப்பை விளக்கக்கூடியவர் நீட்ஸே.

தத்துவாசிரியர்களை அவர்களது சிரிப்பக்கேற்ப வகைப்படுத்துவேன்- பொன்னான சிரிப்பு வரை சிரிக்கக் கூடியவர்கள் வரை. தத்துவத்தை செயல்படுத்தும் கடவுளரும் அதிமானுட- புனிதமான சடங்குகளின்போதுகூட அவர்களால் சிரிப்பதை நிறுத்த இயலாது என்று தோன்றுகிறது.

நீட்ஸேயிடமிருந்து எழுச்சிமிக்கதும் ஊக்கமளிப்பதுமான பார்வைகள் கிடைக்கும் என்பதற்கு இன்னும் நிறையவே சாட்சியங்கள் உண்டு. ஒன்றைச் சொல்லலாம்.

நமது படைப்பாற்றலின் பற்றுறுதிகளை கடவுளிடமிருந்து மீட்டுவிட்டால், மீண்டும் நம் கதைகளின் நாயகர்களாகிவிடுவோம். கலைப் படைப்புகளைப் போல் நம் வாழ்வை நடத்திட அவர் ஊக்குவிக்கின்றார். ஒருவன் உன்னத நிலையை அடைவது படிப்படியான முயற்சிகளாலேயே சாத்தியம். சமூக நெறிகளை பின்பற்றினாலே அடையலாம். மரபை மதித்தாலே பிரகாசிக்கலாம்- என்பதில் அவருக்கு உடன்பாடில்லை.

அதுவரையிலான போக்கை நிராகரிக்க வேண்டும். தீரத்துடன் எழுச்சி கொள்ள வேண்டும்- மின்சார அதிர்ச்சிகூட அவசியமாகலாம் என்பது தான் நீட்ஸே நிலைப்பாடு. ஆன்மாவுக்கு மின் அதிர்ச்சி அளித்தால், தத்துவம் சிகிச்சையாகும்.

தத்துவத்தின் தொடக்கப் பு்ள்ளியாக தீரமிகு தத்துவவாதியாக சாக்ரடீஸைக் கருதும் நீட்ஸே, தன்னை இரண்டாவது சாக்ரடீஸாக எண்ணிக் கொள்வார். சாக்ரடீஸுடன் மோதி முரண்பட்டு விமர்சிப்பார். பிளேட்டோவை விடவும் சாக்ரடீஸுக்குத் தான் முக்கியத்துவம் தருவார். சாக்ரடீஸின் சொல்லாடல்களைப் பதிவு செய்தவர்தான் பிளேட்டோ என்பதால் ஒவ்வோர் உண்மையினையும் விசாரணைக்கு உட்படுத்திய சாக்ரடீஸின் மாபெரும் பங்களிப்பு.

இப்பின்புலத்தில், அப்பாவைத் தத்துவத்திற்கு எதிர் நிலையில் மானுடர் குறித்த இயற்கையான பார்வை மிக்கவராகிறார் நீட்ஸே. மூல உளவியலாளர் ஆகிறார். பல கருத்துகள் புறவிய உலகைப் பற்றி அல்லாமல், மனிதரைக் குறித்தே பெரிதும் வெளியிடுகின்றன என்பார்.

நமக்கு மிக மதிப்புமிக்கனவாக உள்ளவை பகுத்தறிய முடியாதவை என்பார். ஒவ்வொன்றையும் விசாரணைக்கு உட்படுத்துகையில் நமக்குப் பிரியமானவையும் நெருக்கமானவையும் நரகத்தில் முடியும் என சாக்ரடீஸை விமர்சிக்கவும் செய்கிறார்.

சாக்ரடீஸ் செய்தவை, சொன்னவை மற்றும் சொல்லாதவை என அனைத்திலும் அவரின் தீரத்தை, ஞானத்தை பாராட்டுகிறேன் என்று கொண்டாடவும் செய்கிறார்.

நீட்ஸேயின் தனித்துவம், மானுட உந்துதல்களுக்கு உறவியல் கோட்பாடுகளைக் கண்டறியவதில் உள்ளது. முந்தைய தத்துவவாதிகளிடம் வாழ்க்கை, சிந்தனைக்கும் அறிவுக்கும் சேவை புரிந்திட, சாக்ரடீஸிடம் சிந்தனை வாழ்க்கைக்கு சேவை புரிந்தது அவரின் தனித்துவம். சாக்ரடீஸின் தீவிரம், வேடிக்கை கலந்தது. வேடிக்கை நிறைந்த ஞானம்மானுட ஆன்மாவின் உயரிய நிலையைக் கட்டமைப்பது என்பார் நீட்ஸே. இதை ஒட்டியே, உண்மையின் ஒரு பகுதியை உணரும்போதெ்ல்லாம் ஒருவரின் இருதயத்தில் நர்த்தனம் நிகழ்கிறது என்றார். பாவம் பற்றிய குற்றவுணர்வுகள் மனிதனுக்குப் பெரும், சுமையாக மாறி வாழ்வை கசப்பாக்கி விடுவதால், அவனது ஆன்மாவுக்கு அதிர்ச்சி தருவதுடன், வேடிக்கை- சிரிப்பை ஊட்டி, அசலான வாழ்வின் பக்கம் அவனைத் திருப்புவதைத் தன் பிரதான நோக்கமாகக் கொண்டிருந்தார் எனலாம்.

நீட்ஸேயின் காதலை நிராகரித்துவிட்டாலும் அவர் மீது மதிப்பு வைத்துச் சரியாகப் புரிந்து கொண்டிருந்த சலோமி குறிப்பிடுகிறார். “நீட்ஸேயிடம் மிகவும் முடியாதபடியும் ஆற்றல் மிகு மனநிலைகளுக்கு இட்டுச் சென்றுவிடும்.

நீட்ஸேயின் புதிரும் இதுதான். அது ஒரு படைப்பாற்றலின் இயக்கம். ஒரு கருத்தமைவு, கொள்கை, தத்துவம், நம்பிக்கை்க் கேற்ப வாழ்க்கையை அணுகுவதை விட்டு, வாழ்க்கையுடன் அவற்றைப் பொருத்தப் பார்ப்பவர் அல்லது வாழ்க்கையிலிருந்து அவற்றைத் தருவிக்க முயல்பவர். அவரது வாழ்வு போன்றே அவரது தத்துவமும் முரண்கள், பிரச்சனைகள் நிறைந்தது. சர்ச்சைகள் அவரது வாழ்வால், கருத்துகளால் எழுந்தன என்பதை விடவும், தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதால் காலத்தின் நிர்ப்பந்தத்தால் சூழல் காரணமாக ஏற்பட்டன என்று சொல்ல முடியும். கிறித்துவத்தை நிராகரித்ததால் பழிசுமத்தப்பட்டார் என்று வாதிட முடியும்.

நிறுவனம் சார்ந்து இயங்காமல், அதிகாரத்திற்கு துணைபோகாமல் குடும்பம் என எந்த நிறுவனத்தையும் நிறுவிக் கொள்ளாமல், நடைப் பயிற்சியைக்கூட சிந்தனைத் தளமாக ஆக்கிக் கொண்டு, தீவிரம் கொண்ட பயணத்தில் பைத்தியமாகி, தனிமையில் ஆழ்ந்துபோன ஓர் ஆன்மாவே நீட்ஸே. விக்டர்ஃபிராங்கல்் போன்ற அறிவுஜீவிகள் அவரை முற்றிலும் நன்னம்பிக்கைவாதியாக எழுச்சியூட்டும் ஆளுமையாக அறிவுத்தணவாக முன்வைப்பதில் நியாயம் இருக்கவே செய்கிறது.

கடுமையும் கிடுகிடுப்புமிக்க முரட்டு ஆளுமையாக அவர் உருவானது ஏன் என்பதை ஸ்டீபன்ஸ்வேய்க் விளக்குகிறார். “நீட்ஸேயின் தனிமை உலகினைப் போல் அவ்வளவு பரந்தது. அவரது ஆயுளின் இறுதி மட்டும் விரிந்து கிடந்தது. 15 ஆண்டு காலத் தனிமை, அவரது இருதயத்தைச் சுற்றியிருந்த மேலோட்டை இறுக்கமாக்கிவிடவே, இணக்கமாயும் கலகலப்பாயும் சமூகத்துடன் உறவாட இயலவில்லை.
தன் உண்மையான உருவம் என்னவென்று நீட்ஸேயே சித்தரித்துக் காட்டுகிறார், அதுவும் ஒரு கவிதையில்

பிழம்பென நிறைவு கொள்ளாது
எப்போது பாய்ந்தெழுவேன் என்றறிவேன்
பிரகாசித்து என்னையே விழுங்கிவிடுகிறேன்,
நான் தொடுவதெல்லாம் கனவாகத் தகிக்கின்றது.
விட்டுச் செல்வதெல்லாம் கருகிய எச்சமே
இயற்கையில் இப்படி நானொரு பிழம்பு

ஆதாரங்கள்:

1. Emperor of vehemency- book Rrview: Fredric Nietzsche, Curtis cate william T. Vollmann- Deccan chronicle ……2005
2. Th c/s spake Zarathustra/Freidrich Nietzsche
3. Nietzsche Versys soerates/KJL Kjeldsen
4. How to live better,According to Nietzsche/Becca Rothfeld/ theatlantic.com
5.Nietzsche on walking and creativity /Maria popova enternalisedofficial.com
6. Nietzsch/Joshua Hehe/Joshuashaunmichaelhehe medium. com
7 Nietzsches Enternal return Alex Ross Annals of Philosophy
8. Schopenhaur us Nietzsch: The Meaning of Suffering/ iai.tu
9. Why a Fulfilling life Requires Embracing Rather than Running from Difficulty/ Maria popova/ brainpickings.org.
10. The struggle with Daemon Holderlin, kleist& Nietzsche/ Stefan zweigh.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *