ஒளிப்பதிவாளர் நிவாஸ் காரை வீட்டுக்கும், கட்டாந்தரைக்கும், எண்ணெய் வழியும் தலைக்கும், வெற்று கருப்பு உடம்புக்கும் காமிரா வழி உயிர்கொடுத்தார் – அஜயன் பாலாஒளிப்பதிவாளர் நிவாஸின் மரண செய்தி சற்று முன் நண்பர் சிஜே ராஜ்குமார் பதிவிட்டிருந்தார் .

16 வயதினிலே படத்தின் ஒளிப்பதிவு மூலம் அவர் தமிழ் சினிமா காட்சியியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை துவக்கிவைத்தவர் . அப்படம் மூலம் அவர் நிகழ்த்தியது மிகப்பெரிய மடைமாற்றம். பாரதிராஜா அவர்களின் காட்சி மொழியும் திரைக்கதையும் என்னதான் அந்த படத்தை உயரத்துக்கு இட்டுச்சென்றாலும் நிவாஸின் பங்கும் அதில் கணிசமானது என்பதை யாரும் மறுக்க முடியாது. 35 mm ல் பெஸ்ட் கம்போசிஷன் அந்த படம் தான் வெற்று நிலத்தை இப்படியும் அழகுற காண்பிக்க முடியும் என காரை வீட்டுக்கும் கட்டாந்தரைக்கும் எண்ணெய் வழியும் தலைக்கும் வெற்று கருப்பு உடம்புக்கும் காமிரா வழி உயிர்கொடுத்தார்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பிறந்த சீனிவாசன்.

புதுமையக தன் பெயரை நிவாஸ் என சுருக்கிக்கொண்டார். சில மலையாளபடங்களில் பணிபுரிந்தவருக்கு 1976ல் மோகினியாட்டம் திரைப்படம் மூலம் கிடைத்த தேசிய விருது பாரதிராஜாவுக்கு அடையாளம் காட்டியது. புனே திரைப்படக்கல்லூரி மாணவர்கள் கொடிகட்டிப் பறந்த காலத்தில் சென்னை திரைப்படக்கல்லூரியும் சாதாரணமானது அல்ல என சொல்லி விருது வாங்கியவர். பதினாறு வயதினிலேவை தொடர்ந்து கி.போ.ரயிலிலும் தன் மேதமையை நிரூபித்தார். சிகப்பு ரோஜாவில் இந்த மின்மினிக்கு, நினைவோ ஒரு பறவை இரண்டு பாடல்களும் இப்போதும் இவர் பெயரைச்சொல்லும் இவர் மீதிருந்த அபிமானத்தால் இவரை இயக்குனராக்கி கல்லுக்குள் ஈரம் என அழகு பார்த்தார் இயக்குனர் பாரதிராஜா. தொடர்ந்து இவர் இயக்கிய எனக்காகக்காத்திரு காட்சியியல் கவிதை.தெலுங்கில் சாகர சங்கமம் என்றும் தமிழில் சலங்கை ஒலி என்றும் புகழ்பெற்ற கே விஸ்வநாத் எடுத்த காவியத்தை இயல்பு மாறாமல் திரையில் வார்த்துக்கொடுத்தவர். அதில் ஒவ்வொரு இடமும் சூழலும் பாத்திரங்களை விட நம் ஆழ்மனதோடு அதிகம் உரையாடும் . அந்த அளவுக்கு நுணுக்கமான ஒளிப்பதிவு. மென்னுணர்வுகளின் சிம்பொனியாக அப்படம் திகழ்ந்தது என்றால் அதற்கு மூல வித்தகர் நிவாஸ் என்பது தொழில் நுட்பம் அறிந்தவர்கள் மட்டுமே அறிந்துணர முடியும்.

பின் சில காலம் இடைவெளிவிட்டு இரண்டாவது இன்னிங்க்ஸில் செண்பகமே செண்பகமே, ஊருவிட்டு ஊருவந்து என வேறொரு கிராமத்தின் கவிதை பாடியவரால் தொடர்ந்து ஏனோ சோபிக்க முடியவில்லை . அகண்ட திரை ஆபாவாணன் பி.சி ஸ்ரீராம் போன்ற சென்னைதிரைப்ப்டக்கல்லூரி மாணவர்களின் புது வெள்ள வருகை பாரதிராஜாவுக்கு கிடைத்தபி. கண்ணன் போன்றவர்கள் இவரை மறக்கச் செய்துவிட்டனர். நிவாஸின் மரணம் தமிழ் சினிமாவுக்கு பெருமையும் மகுடமும் சூட்டிய மகத்தான கலைஞனின் மரணம் அவருக்கு பாலுமகேந்திரா நூலகம் தன் மவுன அஞ்சலியை செலுத்துகிறது.