நூல் அறிமுகம்: நிவேதிதா லூயிஸின் *வடசென்னை – வரலாறும் வாழ்வியலும்* – கி. ரமேஷ்வடசென்னை – வரலாறும் வாழ்வியலும்
நிவேதிதா லூயிஸ்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பக்கம்: 263;
விலை: ரூ;300/-

சென்னை என்றால் வடசென்னை, தென்சென்னை என்று இரண்டு பிரிவாக அறியப்படுகிறது. இப்போது நிர்வாகக் காரணங்களுக்காக மத்திய சென்னையும் உருவாகி இருக்கிறது. ஆனால் சென்னையின் இதயம் எது என்று கேட்டால் அனைவரும் கண்ணை மூடிக் கொண்டு வடசென்னை என்று சொல்லி விடுவோம். அப்படிப்பட்ட வரலாறையும், மண்ணின் மைந்தர்களையும் கொண்டது வடசென்னை.

சென்னையின் வரலாறையும், அதன் பண்பாட்டுச் சின்னங்களையும் விளக்கும் புத்தகங்கள் வந்திருக்கின்றனவா? வந்திருக்கின்றன. அவை சிறப்பாக அதன் செய்திகளைப் பதிவு செய்துள்ளனவா? ஆம். அப்படியானால் இப்போது நிவேதிதா லூயிஸ் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘வடசென்னை’ புத்தகத்தை நாம் ஏன் படிக்க வேண்டும்? அப்படியென்ன சிறப்பு அதில் இருக்கிறது? அதைத்தானே சொல்ல வருகிறேன். பொறுங்கள்.

நீங்கள் சென்னையின் சிறப்பை அறிய வந்து இந்தப் புத்தகத்தை எடுத்துப் படிக்க வருகிறீர்களா? ஆமென்றால் நீங்கள் புத்தகத்தை எடுத்த உடனேயே நிவேதிதா தனது பைக்கில் ஏறி உட்கார்ந்து கொண்டு, வாருங்கள் வடசென்னையை அறியலாம் என்று உங்களையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டு விடுகிறார். அவர் வடசென்னையின் சிறப்புக்களைத் தேடிக் கண்டுபிடித்துப் பயணிக்கும்போது நாமும் கூடவே பயணிக்கிறோம். அலுப்புத் தட்டாத பயணம். மண்ணின் மைந்தர்களுடன் அவர் மட்டுமல்ல, நாமும் சேர்ந்து பழகிக் கொண்டே பயணிக்கிறோம். அதுதான் இந்தப் புத்தகத்தின் சிறப்பு. படித்த வேகத்தில் நான் நேராக நிவேதிதாவுக்கு போன் செய்து ’வலுக்கட்டாயமாக’ என் சகோதரியாக்கிக் கொண்டு விட்டேன் என்றால் அந்தப் புத்தகம் என்மீது செலுத்தியிருக்கும் தாக்கத்தை நீங்கள் அறிந்து கொள்ளலாம். நிவேதிதாவை எனக்கு அறிமுகப் படுத்தி வைத்த மருதனுக்கு இங்கு நன்றியைத் தெரிவிக்க வேண்டும்.சரி, புத்தகத்துக்குள் செல்வோமா? நிவேதிதா வடசென்னையின் ஒவ்வொரு கல்வெட்டாக, ஒவ்வொரு பழைய கட்டிடமாகத் தேடித் தேடிச் சென்று அவற்றின் கதையை, வரலாறை அறிந்து பதிவு செய்திருக்கிறார். அவர் வெறும் வரலாற்று ஆசிரியர்களைப் படித்து அதைச் செய்யவில்லை. ஒவ்வொரு இடத்திலும் அங்கு வாழும் மனிதர்களை, அக்காக்கள், அண்ணன்களைச் சந்தித்து அவர்களுடன் உரையாடி, உறவாடி விவரங்களைப் பெற்றிருக்கிறார். அவர்களுக்கெல்லாம் உறவாக ஆகியிருக்கிறார். அவர் ஒவ்வொரு மனிதராகச் சொல்லச் சொல்ல, அவர்களும் நமக்கு உறவாகி விடுகிறார்கள். அவர்களது மகிழ்ச்சியும், சோகமும், ஆர்வமும் நம்மையும் தொற்றிக் கொண்டு விடுகின்றன.

அவர் ராயபுரத்தையும், கல்மண்டபத்தையும், ராயப்பர் சர்ச்சையும், மீன் சந்தையையும், தொண்டியார் தர்காவையும், இன்ன பிற இடங்களையும் விவரிக்கும் போது, நாமும் இவ்வளவு வருடங்களாகச் சென்னையில் இருக்கிறோம், இவ்வளவு நெருக்கமாகப் பார்த்ததில்லையே, விவரங்களை அறியவில்லையே என்ற ஏக்கத்தைத் தூண்டி விட்டு விடுகிறார் நிவேதிதா. அடுத்த முறை நாம் அந்த இடங்களுக்குச் செல்லும்போது அவற்றை நிச்சயம் பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டி விடுவதுதான் அவரது வெற்றி.

அவர் வடசென்னை குறித்து ஒரு காணொளிக் காட்சியில் பேசியபோது நான் கேட்டதுண்டு. அதில் கூறிய விவரங்கள் வரலாற்றுப் பதிவுகளாக இருந்தன. ஆனால் இந்தப் புத்தகம் அதைத் தாண்டி மனிதர்களுடன் பேசுகிறது. அவர் கல்மண்டபம் சந்தைக்குச் சென்று அங்கிருக்கும் அக்காக்களுடன் பேசி, அந்த ஓடுகளின் வரலாற்றைச் சொல்லும் போது நாமும் அங்கு அக்காக்களுடன் உட்கார்ந்து கேட்கிறோம். அந்த மார்க்கெட்டுக்கு விடிவு வரவில்லையே என்று நிவேதிதா வருந்தும்போது நாமும் வருந்துகிறோம். எதாவது செய்ய வேண்டுமென்ற உந்துதலும் வருகிறது.

சாந்தியாகோ என்ற பெயரை நாம் பலரும் கேட்டிருப்போம். அந்தப் பெயரின் பின்னால் இருக்கும் வரலாற்றை இந்தப் புத்தகத்திலிருந்துதான் அறிந்தேன். வடசென்னை கால்பந்துக் குழுக்கள் பற்றிக் கேட்டிருக்கிறொம், படம் கூடப் பார்த்திருக்கிறோம். அந்த விவரங்களையும் அவர் சொல்லும் போது நாமும் ஏன் அந்தச் சிறுவர்களுடன் விளையாடவில்லை என்ற ஏக்கத்தை உண்டாக்கி விடுகிறார்.பல்லாங்குழி இனியன் பழங்குடிச் சிறுவர்களை அழைத்து வர அவர்களுடன் பயணித்து மியூசியத்தைக் காட்டி மகிழும்போது நாமும் சிறுவர்களாகிறோம். அவர்களை அழைத்துச் சென்று குன்ஹிராமன் ஸ்டோர்சில் ஐஸ்கிரீம் வாங்கிச் சுவைக்கும்போது நாமும் உருகி விடுகிறோம். அவர்கள் படகு கட்டும் இடத்தை பார்த்துக் குதூகலிக்கும் போது நாமும் மகிழ்கிறோம்.

இப்படி ஒரு புத்தகத்தை எழுதிய சகோதரி நிவேதிதாவும், இப்படி எழுதத் தூண்டிய மருதனும் பாராட்டுக்குரியவர்கள். முன்னொரு முறை மூத்த எழுத்தாளர் பா.ராகவன் என்னிடம் சொன்னார்: “நீ எழுதும் போது வாழைப்பழத்தை உரித்து வாயில் இட்டால் எப்படி வழுக்கிச் செல்லுமோ, அப்படி உன் எழுத்துக்கள் வழுக்கிச் செல்ல வேண்டும்” என்று ஆலோசனை கூறினார். அதை நான் செய்தேனா இல்லையா என்பது தெரியாது, நிவேதிதா முழுதுமாக நிறைவேற்றியுள்ளார்.

வாருங்கள், நிவேதிதா தன் பைக்கில் ஏறி மரபு நடைக்குத் தயாராக இருக்கிறார். சேர்ந்து வடசென்னையைச் சுற்றிப் பார்ப்போம்.

அந்த பைக்கின் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கலாமே நிவேதிதா!