“சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கதை” என்ற தலைப்பை பார்த்ததுமே நூலினை வாசிக்கும் ஆர்வம் கூடியது. நம் முன்னோர்களின் வரலாற்றை தெரிந்துகொள்ளும் ஆர்வம் நம் அனைவருக்குமே இருப்பது இயல்பு. வெறும் கதைகளாக, ஆதாரமற்ற தகவல்களாக இல்லாமல் பல்வேறு ஆய்வு நூல்களையும், ஆராய்ச்சி கட்டுரைகளையும், வரலாற்றுத் தரவுகளையும் இடம், தேதி, பெயர் என அனைத்து தகவல்களையும் ஆய்வுக்கு உட்படுத்தி அதன் சாரத்தை, தேவையான குறிப்புகளை கட்டுரையாக தொகுப்பது என்பது சுலபமான ஒன்றல்ல.
புனைவிலக்கியத்திலிருந்து கட்டுரைகள் வேறுபடுவது அதன் உண்மைத் தன்மையைக் கொண்டே. வரலாற்றின் முக்கிய ஆய்வாக விளங்கும் சிந்து சமவெளி குறித்த தகவல்களை ஆதாரமின்றி எழுதிச் செல்லமுடியாது என்பதை கருத்தில் கொண்டு ஆசிரியர் நிவேதிதா லூயிஸ் அவர்கள் தனது உழைப்பின் பலனாக நமக்கு இந்த நூலை பரிசாக அளித்துள்ளார். சிந்து சமவெளி நாகரிகம் குறித்து நாம் ஒவ்வொரு நூலாக, ஆவணங்களாக தேடிப் படிப்பது என்பது நடைமுறையில் சாத்தியங்கள் குறைந்த ஒன்று. அதனை மனதில் கொண்டு நமக்கு எண்பது பக்கங்களுக்குள் நிறைவாக அளித்திருக்கும் ஆசிரியருக்கு நன்றி.
நூலின் உள்ளடக்கத்தினை ஏழு தலைப்புகளுக்குள் பொருத்தியுள்ளார்.
சிந்து எனும் புதிர்:
ஆசியாவின் தொன்மையான புதிர் சிந்து என்று தொடங்கி அதன் கட்டமைப்பு, ஒழுங்கு, மேலான்மை, கலாச்சாரம், பண்பாடு, எழுத்து, மொழி என்று ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாகரீகத்தை கூறி நம்மை ஆச்சரியம் கொள்ள வைக்கிறார். பலுசிஸ்தான் பகுதி தொடங்கி மறைந்துபோன ஹக்ரா – கக்கர் நதிக்கரை வரை பறந்து விரிந்திருந்த நாகரீகம் சிந்து.
சிந்து நாகரீகத்தைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள இந்தியத் தொல்லியல் துறையின் தலைமை இயக்குனர் ஜான் மார்ஷலின் பங்கு மிகப்பெரியது.
கி. மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு பிறகான வரலாற்று அடையாளங்களே நம்மிடம் இருந்த போது அதற்கும் முந்தைய காலகட்டத்தில் மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களும், பொருட்களும் கிடைத்துள்ளன. ஆனால் அவற்றின் காலம் என்ன என்பது இன்னும் புதிராகவே உள்ளது. மெசபடோமியாவின் சுமேரிய நாகரீகத்திற்கு ஒத்தது சிந்து நாகரீகம் என்பதை கேட்கும் போது நமது அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுகிறது. கட்டுமானம், நெசவுத் தொழில், குயவுத் தொழில், வணிகம், குழந்தை வளர்ப்பு, பறவை மற்றும் விலங்குகள் வளர்ப்பு, முத்திரை, ஓவியம், சிற்பம், உருவ எழுத்துகள் என அனைத்திலும் முன்னோடிகளாக சிந்து வெளி மக்கள் இருந்துள்ளனர். இருப்பினும் அவர்களின் மொழிப்புதிர் இன்னும் அவிழ்க்கப்படாமல் இருப்பது ஆச்சரியம்.
ராகிகடி பகுதியில் கிடைத்த எலும்புக்கூடுகள் மேலான டி. என். ஏ. ஆய்வுகள் – சிந்துவெளி மக்கள் இங்கேயே வாழ்ந்த நம் முன்னோர்கள். இந்தியர்களின் பிதாமகர்கள். தென்னிந்திய ஏ. எஸ். ஐ. ஜீன்களை ஒத்த ஜீன்களைக் கொண்டிருந்தவர்கள் என்ற தகவல் வியப்பில் ஆழ்த்துகிறது.
வரலாற்றின் ரயில் பாதை:
1863 – பிரன்டன் எழுதி வெளியிட்ட “சிந்து ரயில்வே” ஆய்வறிக்கையே சிந்து நாகரீகத்தின் துவக்கம். பிராமினாபாத் நகரம் நில நடுக்கத்தால் தரை மட்டம் ஆகியிருக்கலாம், சிந்து ஆறு இந்த வழித்தடத்தை மாற்ற இந்த நிலநடுக்கமே காரணமாக இருந்திருக்கலாம் என்று பெல்லசிஸ் கணிக்கிறார். பிராமினாபாத் என்ற பெயரைக்கொண்டு இது கி. பி. ஆறு அல்லது ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த இந்துக்களின் நகரமாக இருக்கலாம் என்பதும் அவரது கணிப்பே. ஆங்கிலோ சீக்கியப் போர், ஆங்கிலோ பாரசீகப் போர் மூலம் பெர்னஸ் போன்றோர் இறந்ததால் அவர்களின் ஆராய்ச்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டன என்பதை படிக்கும் போது நமக்கு ஏமாற்றம் மிஞ்சுகிறது. அடுத்ததாக சார்லஸ் மேசனின் பயணக்கட்டுரை ஹரப்பா என்ற சிந்து நாகரீகத்தை விளக்குகிறது.
முதல் முத்திரை, முதல் பானை ஓடு:
இந்தியத் தொல்லியலின் தந்தை என்றழைக்கப்படும் அலெக்சாண்டர் கன்னிங்காம் தொழிற்முறை தொல்லியலாளர் அல்ல. 1871, ஜனவரி 1, இந்தியா தொல்லியல் துறை உருவான நாள். 1872 இல் தொல்லியல் நோக்குடன் ஆராய்ந்த கன்னிங்காம், “ஹரப்பாவில் கிடைத்த பொருட்களிலேயே மிக வினோதமான பொருள், மெருகேற்றிய கருங்கல் முத்திரை” என்று தெரிவிக்கிறார். ஆனால் அவர் அவற்றை பௌத்த எச்சம் என்று கண்ணோட்டத்தில் பாரத்ததால் புறம்தள்ளியுள்ளார் என்பவை நமக்கு கூடுதல் தகவல்களை அளிக்கின்றன. பிராமிய எழுத்து வடிவத்தை உலகுக்கு அடையாளம் காட்டிய பிரின்செப்பின் தொல்லியல் ஆர்வமும் நமக்கு பலத் தகவல்கள் கிடைக்க காரணமாக இருந்துள்ளன. கர்சனும் மார்ஷலும் இணைந்து செய்த புனரமைப்பு பணிகள் முக்கியமானவை என்பது தெரிகிறது.
தொடரும் தோல்விகள்:
1914 இல் “ஹரால்டு ஹார்கிரீல்ஸ்” எடுத்த புகைப்படங்கள் இன்றும் ஹரப்பா குறித்த தகவல்களை ஆவணமாக பார்க்கும் வாய்ப்பை அளித்துள்ளது. இத்தாலி நாட்டிற்கு நம் இந்தியா மீதான ஈர்ப்பும் இந்தியத் தொன்மைமிக்க பொருட்களை இத்தாலிக்கு கொண்டு சென்றதும் இந்தப் பகுதியில் விளக்கப்படுகிறது. ஐரோப்பியரான டெசிடோரியின் தமிழ் மீதான ஆர்வமும் வால்மீகி ராமாயணம் மற்றும் கோசுவாமி துளசிதாசரின் ராமாயணம் நூல்களை ஆய்வு செய்து அளித்த கட்டுரையும் நம்மை வியப்பில் ஆழ்த்துபவையாக உள்ளன. 1919 இல் அளித்த அவரது ஆய்வறிக்கை முத்திரை, எலும்புத்துண்டுகள் மற்றும் கற்கருவிகள் குறித்து முக்கியத் தகவல்களை கொண்டதாக அமைகிறது.
இரு துருவங்கள்:
ஹரப்பாவை உலகுக்கு அறிமுகம் செய்துவைத்த தளபதிகளாக கர்சன துறை மற்றும் மார்ஷல் இருவரையும் குறிப்பிடுகிறார் ஆசிரியர். ஹரப்பா குறித்த முதல் ஆய்வுக் கடிதத்தை மார்ஷலுக்கு அனுப்பியவர் என்ற பெருமையை “தயாராம் சாஹ்னி” பெறுகிறார். இவரது முக்கிய கண்டுபிடிப்புகளாக கட்டிட சுவர்கள், மூடியிட்ட கழிவு நீர் கால்வாய்கள், தானியக் களஞ்சியம் மற்றும் செங்கற்களின் அளவு இருக்கின்றன. இங்கு கிடைத்த முத்திரைகள் மௌரிய காலத்திற்கு முந்தையவையாக கருதப்பட்டதும் முக்கியமான ஒரு திருப்பம். ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ முத்திரைகள் ஒத்திருந்ததை கண்டறிய பானர்ஜியின் ஆய்வு முக்கியப் பங்கு வகிக்கிறது.
புதிர் விடுவிப்பு:
முகலாயர் காலத்திற்கு முந்தைய கோயில்கள், குஷானர் காலத்து காசுகளை கண்டறிந்ததில் பானர்ஜி அடுத்த கட்ட நகர்வை நோக்கி நகர்த்தியுள்ளார். பல கேள்விகளுக்கு விடையாக ஸ்பூனரின் ஆய்வுகள் அமைந்துள்ளன. 1924 இல் மார்ஷல் வெளியிட்ட அறிக்கை சிந்து வெளி என்ற நாகரீகத்தை உலகுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமாக இருந்த பானர்ஜியின் ஆய்வுக் குறிப்புகள் மார்ஷல் மூலம் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது, மனிதர்கள் என்றும் மனிதர்களே என்பதை உணர்த்துகிறது.
சிந்து சமவெளி நாகரிகம் – அறிவிப்பும் அதன் பின்னும்:
ஹரப்பா குறித்து பானர்ஜியும் மொஹஞ்சதாரோ குறித்து சாஹ்னியும் அளித்த பொருட்களும் முத்திரைகளும் ஒன்றை ஒன்று ஒத்திருந்தது ஆச்சரியத்தை அளிக்கிறது. கிறிஸ்து பிறப்பதற்கு 2600 ஆண்டுகளுக்கு முன்பே பண்டைய பாரசீகப் பகுதிக்கும் வடமேற்கு இந்தியாவிற்கும் தொடர்புகள் இருந்திருக்க கூடும் என்ற கணிப்பு நம்மை ஆச்சரியம் கொள்ள வைக்கிறது.
பர்னெஸ், மேசன், கன்னிங்காம், பிரின்செப், காநிங் துரை, மாயோ துரை, ஜான் மார்ஷல், கர்சன், கியூகஸ் புல்லர், ஹீராநந்த சாஸ்திரி, மைல்ஸ் இர்விங், டெசிடோரி, தயாராம் சாஹ்னி ஹார்கிரீவ்ஸ், ரகல்தாஸ் பானர்ஜி, ஸ்பூனர், வத்ஸ் போன்ற பல்வேறு தொல்லியல் ஆய்வாளர்களின் உதவியுடன் பல தரவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இவர்களைக் கொண்டு மார்ஷல் மேற்கொண்ட பல ஆண்டுகள் ஆய்வின் விளைவாக அவர் அளித்த அறிக்கை “சிந்து மற்றும் பஞ்சாபின் பகுதிகளில் 5000 ஆண்டுகளுக்கு முன் நகரங்களும், உயர்ந்த கலைகளும் எழுத்து வடிவமும் கொண்ட உன்னத நாகரீகம் ஒன்று இருந்திருக்கிறது”.
“இந்தியா தன் தொன்மையை, சிந்துவெளி என்ற தன் தாய் மடியை இப்படித்தான் பெரும் போராட்டத்திற்கு பின் கண்டடைந்தது” என்று முடித்திருக்கும் ஆசிரியர் இந்தியாவின் தொன்மையை நம்மிடம் எடுத்து கூறியதில் பெருமிதம் கொள்வதற்கான ஆதாரமாக இந்த நூல் அமைந்துள்ளது.
நூலின் விவரம்:
நூல்: சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கதை (கட்டுரை)
ஆசிரியர் : நிவேதிதா லூயிஸ்
பக்கங்கள் : 120
விலை : ரூ. 120
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
நூல் அறிமுகம் எழுதியவர்:
பிரியா ஜெயகாந்த்,
சென்னை
தொலைபேசி எண்: 9840308787
மின்னஞ்சல்: [email protected]
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.