கிறிஸ்தவத்தில் ஜாதி (Christhavathil Jaathi) – கள ஆய்வுகளும் நேர்காணல்களும்
வரலாறு தொல்லியல் பண்பாடு உள்ளிட்ட தளங்களில் பல ஆண்டுகளாக இயங்கி வருபவர், முன்னாள் மத்திய அரசுப் பணியாளர், உள்ளூர் மறைக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுபான்மைச் சமூகத்தின் வரலாற்றை முனைப்போடு மக்களிடம் கொண்டு செல்பவர், முதல் பெண்கள் உட்பட பல நூல்களை எழுதி இருப்பவர். இவரது கிறிஸ்துவத்தில் ஜாதி பற்றிய விரிவான அலசல்களுடன் வெளிவந்திருக்கிறது இந்த நூல்.
வட தமிழ்நாட்டில் ராவுத்தநல்லூர் கண்டிகை தொடங்கி நடு தமிழ்நாட்டின் திண்டுக்கல் பஞ்சம்பட்டி வரையில் உள்ள நிலப்பரப்பை எடுத்துக்கொண்டு அதில் கிறிஸ்துவத்தில் ஜாதியம் வேரூன்றி வளர்ந்து நிற்கும் நிலையை கள ஆய்வுகள் நேர்காணல்கள் வாயிலாக இந்த நூல் ஆவணப்படுத்துகிறது.
1990 களில் தலித் எழுச்சி வரலாற்றை ஆவணப்படுத்துவதோடு அன்றைய தலித் களப்போராளிகளின் நேர்காணல்கள் மூலம் இன்றும் களத்தில் செய்ய வேண்டுவன என்னென்ன அவற்றை எப்படி முன்னெடுத்துச் செல்லலாம் என்பது பற்றியும் இந்த நூல் உரையாடுகிறது.
ஜாதியும் என்பது தலித் கிறிஸ்தவர்களின் பிரச்சனை என்று ஒதுங்கிச் செல்லாமல் ஒட்டுமொத்த சமூகமும் வஞ்சிக்கப்படும் அவர்களின் பக்கம் நின்று நியாயம் கிடைக்கப் போராட வேண்டும் என்பதை இந்த நூல் அழுத்தமாக பதிவு செய்கிறது.
இந்த நூல் கிறிஸ்துவத்தில் உள்ள உள்கட்டமைப்பு சிக்கல்கள் குறிப்பாக ஜாதி சிக்கலை முன்னிறுத்தி எழுதப்பட்டதே அன்றி தனிப்பட்ட முறையில் யாருக்கும் எவ்விதத்திலும் தீங்கு விளைவிக்கவோ திருச்சபைக்கு பிரச்சனை உருவாக்கவோ எழுதப்பட்டது அல்ல”” என்ற தனது தெளிவுரையுடன் இந்த நூலை எழுதிச் செல்லும் நூலாசிரியர் கிறிஸ்துவ மதத்தில் காணப்படும் ஜாதிய பிரச்சனைகளையும் அதன் காரணமாக மக்களுக்குள்ளே நிலவி வரும் ஏற்றத்தாழ்வுகளையும் அதன் பின்னணியில் உள்ள கள நிலவரத்தையும் நேரடியாக கள ஆய்வுகள் மூலம் அணுகி இருக்கிறார்.
கும்பகோணம் மறை மாவட்டத்தில் உள்ள தொண்டமாந்துறை மற்றும் கோட்டப்பாளையம்
செங்கல்பட்டு மறை மாவட்டத்தில் உள்ள பாப்பநல்லூர், கினார் கண்டிகை புதூர், ராவுத்தநல்லூர் கண்டிகை
திண்டுக்கல் மதுரை மாவட்டத்தில் உள்ள தோமையார்புரம், சகாய மாதா மக்கள் மன்றம், பஞ்சம்பட்டி
ஆகிய களங்களை நேரடியாக ஆய்வு செய்து அந்தப் பேராலயங்களிலும் அங்கே வசிக்கும் கிறிஸ்தவர்களுக்கு உள்ளே உள்ள ஜாதியப் பிரச்சனைகளையும் இந்த நூல் ஆவணப்படுத்துகிறது.
கிறிஸ்துவ மக்களுக்குள் நிலவும் ஜாதிய பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரவும் தலித் கிறிஸ்தவர்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் பங்காற்றமும் தம்மை ஒப்படைத்திட்ட முக்கியமான ஐந்து ஆளுமைகளை நேர்காணல் செய்து அவர்களின் வழியேயும் கிறிஸ்துவ மதத்திற்குள் நிலவும் ஜாதிய முரண்பாடுகளையும் அவற்றை களைவதற்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் அதனால் அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட பயங்கரமான இடர்பாடுகளையும் இரண்டாவது பகுதியில் இந்த நூல் விவரித்துச் செல்கிறது.
தலித் கிறிஸ்துவ விடுதலை இயக்கம் திரு. மேரி ஜான்
துறும்பர் விடுதலை இயக்கம் சகோதரி அல்போன்சா
மூத்த தலித் போராளி தந்தை மாற்கு
தமிழ்நாடு தாழ்த்தப்பட்ட வகுப்பு கிறிஸ்தவர்கள் சங்கம் திரு. மனோகரன்
தலித் கிறிஸ்துவ உரிமைகள் இயக்கம் தந்தை இயேசு மரியான் ஆகியோர்களின் நேர்காணல்கள் வழியே 1990 களில் நிலவிய இன மோதலும் ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை நிலை கூட மாறாத அடிமைத்தனமும் வெளிச்சத்திற்கு வருகின்றன.
ஜாதி என்பது ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் ஆழப் பதிந்து வேரூன்றி நின்று மேல் ஜாதி கீழ் ஜாதி என்ற அடிப்படையிலும் பொருளாதாரத்தின் அடிப்படையிலும் மனித குலத்தை வஞ்சித்துக் கொண்டே இருக்கிறது. இந்து மதத்தில் கணக்கில்லாத ஜாதிகள் நிலவி வரும் சூழலில் கிறிஸ்துவ மதத்திலும் அத்தகு சூழல் நிலவி வருகிறது. பல தலைமுறைகளின் தொடர்ச்சியான புறக்கணிப்பிற்கு உள்ளாகி இன்றும் கிறிஸ்துவத்தில் தலித் இன மக்கள் முன்னேற்றம் அடையாமலும் தங்களுக்கு தேவையான உரிமைகளைப் பெற இயலாமலும் போராடிக் கொண்டிருக்கும் சூழலே நிலவி வருகிறது. இத்தக சூழலை இந்த நூல் மிக கவனமாகவும் முழுமையாகவும் ஆய்வுக்கு உட்படுத்தி நமக்கு அறியத் தருகிறது.
கிறிஸ்துவத்திலும் தலித் கிறிஸ்தவர்கள் வன்னியர்கள் நாடார்கள் பட்டியலின மக்கள் என பல்வேறு விதமான ஜாதிய கட்டமைப்புகள் இருந்தாலும் அங்கும் பட்டியலின மக்களும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும் ஒடுக்கப்பட்டே வாழ நிர்பந்திக்கப்படுகின்றனர். அவர்களுக்கான உரிமைகள் முற்றிலுமாக மறுக்கப்படுகிறது திருச்சபையின் உள்ளே செல்வதற்கு கூட தலித் மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது அவர்கள் தமக்கென ஒரு தனி ஆலயத்தை உருவாக்கிக் கொண்டு அதற்குள்ளேயே அவர்கள் தங்களது கடவுளை வணங்க நேரிடுகிறது ஊருக்குப் பொதுவாக இருக்கும் திருச்சபை பேராலயங்களுக்குள் நுழையவோ அங்கு நடைபெறும் நிகழ்வுகளிலும் விழாக்களிலும் முழுமையாக அவர்கள் பங்கேடுக்கவும் தங்கள் வரி செலுத்தி தேரை தங்களது பகுதிக்கு எடுத்துச் செல்லவும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
எங்கெல்லாம் கிறிஸ்துவ சமுதாயம் வாழ்ந்து வருகிறதோ அங்கெல்லாம் அவர்களுக்குள்ளும் சாதிய வேற்றுமைகள் தலை தூக்கி நிற்கின்றன என்பதை நூல் முழுமையாக அறியத் இருக்கிறது.
1930 களில் கும்பகோணத்தில் கூட்டப்பட்ட தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்கள் மாநாட்டிற்கு தலைமை வகுத்து தலித் பெண்களை சமூகப் போராளிகளாக மாற்றிய மிகப்பெரிய ஒரு பெண் ஆளுமை மேரி சௌந்தரி அமிர்த வாசகம் அம்மையார் அவர்களது பங்களிப்பையும் இந்த நூல் விரிவாக நமக்கு எடுத்துச் சொல்கிறது.
அதிகாரம் பொறுப்பு இரண்டுமே தரப்படாத இடங்களில் வெறும் பார்வையாளராக மட்டுமே ஒடுக்கப்பட்ட சமூகத்தை வைத்திருப்பது ஜாதிய ஒடுக்கு முறையே. ஆதிக்க ஜாதி தன்னை இப்படித்தான் அதிகாரத்திற்கு இணக்கமாக நிலைநாட்டிக் கொள்கிறது. நான் எடுத்துச் செல்வேன் அவன் வேடிக்கை மட்டுமானால் பார்க்கட்டும் என்கிற அவர்களின் மனதினவை வளர்ப்பது அதை எதிர்த்து கேள்வி கேட்காத திருச்சபை உள்ளிட்ட பொது சமூகம் என்பதை பல பேராலயங்களில் இன்று நடந்து வரும் ஜாதிய மோதல்களுக்குக்கான முதல் புள்ளியாக இந்த நூல் அறியத் தருகிறது.
கிறிஸ்தவ பெண்களுக்குள்ளும் ஜாதிய பிரச்சினை அதிகமாக தலைதூக்கி அவர்களது சுய முடிவுகளை அடக்கி ஒடுக்கி விடுகிறது. அருந்ததியர் ஜாதிப் பெண்கள் கிறிஸ்தவர்களாக தாய் வீட்டில் வாழ்ந்தாலும் இந்துக் குடும்பத்தில் வாழ அனுப்பப்பட்டால் அவர்கள் மீண்டும் கிறிஸ்துவத்திற்கு வருவதற்கு அவர்களை சுற்றிய ஆணாதிக்க சமூகமும் வீடுமே தடைக்கல்லாக மாறுகிறது.
இந்த நிலை அருந்ததியர் இன பெண்களுக்கு மட்டும் என்று இல்லை எந்த ஜாதியைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் திருமணம் எந்த மதத்தைச் சேர்ந்த ஆனுடன் நடைபெறுகிறதோ அவர் விரும்பியோ விரும்பாவிட்டாலோ அந்த மதத்தை அவர் கடைபிடிக்கும் நிர்பந்தம் அவருக்கு ஏற்படுகிறது. அப்போது பெண் உடல் மதம் உள்ளம் மீதான முழு ஆதிக்கத்தையும் ஆண் மட்டுமே கைக்கொண்டு விடுகிறான் என்று இன்றைய பெண்களின் அடிமை நிலையை இந்த நூல் காட்சிப்படுத்துகிறது.
நியாயமாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யவும் தங்கள் எதிர்பார்ப்பை எடுத்துரைக்கவும் ஆயரை மக்கள் அணுகுவதே கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபையின் வழக்கம் அங்கேயும் ஜாதி வெறி உச்சத்தில் இருக்கும் போது எளிய மக்கள் யாரிடம் சென்று முறையிடுவது தொடர்ச்சியாக ஆயர் இல்லம் அவர்களை உதாசீனம் செய்து மேலும் ஜாதிய பிரச்சினையை வளர்த்துக் கொண்டே இருக்கிறது.
ஒடுக்கப்பட்ட சமூகத்தின் முன்னேற்றத்தை காண வரும் ஆதிக்க ஜாதிகளுக்கு அவர்கள் முன்னேறிச் செல்வதில் விருப்பமில்லை சமத்துவத்தில் அவர்களுக்கு நாட்டம் இல்லை இருக்கும் நிலைமை அப்படியே வைத்திருப்பதிலும் தன்னிடத்தை ஜாதிய படிநிலை என உயரத்தில் அப்படியே தக்க வைத்துக் கொள்வதையும் அதை எவ்விதத்திலும் விட்டுத் தராத இறுக்கத்தை பேணுவதையும் ஆதிக்க சாதியினர் விரும்புகின்றனர்.
வழிவழியாக வந்த வழக்கம் வாடிக்கை இங்கு இப்படித்தான் எல்லாமும் எனச் சொல்லி சமத்துவத்துக்கு எதிராக பழக்க வழக்கத்தை நிறுத்துவது ஜாதிய வெற்றியாக மாறி விடுகிறது. இதை எதிர்த்து யாரேனும் போர்க்கொடி உயர்த்தினால் அவர்களை ஏதேனும் ஒரு விதத்தில் மட்டுப்படுத்தி அவர்களது செயல்களை கட்டுக்குள் வைத்து அவர்களை செயல்பட விடாமலேயே செய்து விடுவதில் ஆதிக்கு சாதியினர் உறுதியாக நிற்கின்றனர்.
தலித் கிறிஸ்தவர்களுக்கு தேவையான அடிப்படை உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. கோவில் நிர்வாகத்தில் அவர்களுக்கு இடம் இல்லை. பங்கு பேரவை அமைக்கப் படவில்லை. தேரிழுப்பதில் அவர்களுக்கு உரிமை இல்லை. கோவில் தேர் தலித்துகள் தெருக்களுக்கு வருவதில்லை. அவர்களிடம் திருவிழா வரி வசூல் செய்யப்படுவதில்லை. எதிலும் பங்கெடுக்க உரிமையில்லை கோயிலில் திருமணம் பூஜையில் ஒன்றாக கலந்து கொள்ள அனுமதி இல்லை தலித் கிறிஸ்துவ சடலங்கள் மந்திரிக்க ஆலயத்துக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. தனித் தனி கல்லறைகள் தலித் மக்களுக்கு தனியாகவும் மற்ற ஜாதியினருக்கு தனியாகவும் அமைக்கப்படுகின்றன.
தலித் கிறிஸ்தவர்கள் தங்களுக்கென்று தனியாக கட்டிக்கொண்ட கோயிலிலும் பூஜை வைக்க பாதிரியார்கள் வருவதில்லை இதுபோன்ற பல நெருக்கடிகள் இந்த நூலில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை விழுப்புரம் கடலூர் மாவட்டங்களில் துறும்பர் என அழைக்கப்படும் புதிரை வண்ணார் மக்கள் அங்கும் இங்கொன்றுமாக சிதறிக் கிடக்கின்றனர் கிறிஸ்தவ புதிரை வண்ணார் மக்கள் இறந்து போனால் அடக்கம் செய்யக் கூட இடமின்றி பரிதவிப்பையான நிலையில் வாழ்கின்றனர். ஆதிக்க ஜாதியினர் வீட்டில் இறப்பு நிகழும் போது சாவுச் சடங்குகளான நடை பாவாடை விரித்தல் அரிச்சந்திர கோடு நடுக்கட்டான் சடங்கு அனைத்தையும் இவர்களே செய்கிறார்கள். அவற்றை சரியாக செய்யவில்லை என்றால் அவர்களை அடித்து உதைத்து துன்புறுத்துவதும் உண்டு.
ஆனால் இவர்களுடைய வீட்டில் இறப்பு நிகழும் போது அந்த பிணத்தை எங்கு புதைப்பது என்கிற கவலையில் தவிக்கிறார்கள்.அந்த நேரத்தில் புறம்போக்கு இடத்தில் ஊரார் பார்த்து எங்கு புதைக்க சொல்கிறார்களோ அங்கே புதைக்க வேண்டிய நிலைமைக்கு புதிரை வண்ணார் சமூகம் தள்ளப்படுகிறது. இப்படியான சமூகத்தினரை தேடிக் கண்டறிந்து அவர்களின் வாழ்வில் பற்பல முன்னேற்றங்களை நிகழ்த்திய அருள் சகோதரி அல்போன்சா அந்தோணிசாமி அவர்களின் நேர்காணல் நூலில் ஆகச்சிறந்த நேர்காணலாக அமைகிறது.
தலித் கிறிஸ்தவர்களிடையே காணப்படும் ஒற்றுமையின்மையும் போனால் போகட்டும் என்ற விட்டேத்தி மனப்பான்மையும் அவர்களை ஒன்று சேர விடாமல் தடுக்கும் ஆதிக்க சக்தியினரின் மறைமுகமான தூண்டலும் இந்த நூலில் வெளிச்சம் போட்டு காட்டப்படுகிறது. தலித் கிறிஸ்தவர்கள் தங்களுக்கான முழு உரிமைகளையும் முன்னெடுப்பதற்கு ஒன்றிணைந்து சட்டப் போராட்டத்தை நிகழ்த்த வேண்டிய காலத்தின் அவசியத்தையும் நூல் எடுத்துரைக்கிறது.
ஒரு சமூகமாக அவர்கள் ஏன் புரிதலில், இறை நம்பிக்கையில், அது காட்டும் சமத்துவத்தில் பின்தங்கி விடுகின்றனர் என்பதை பேட்டிகள் மற்றும் கள ஆய்வுகள் மூலம் எடுத்துரைக்கும் இந்த நூல் எல்லா மக்களிடமும் அன்பையும் கருணையையும் விதைக்கும் இயேசுவின் திருநாமத்தின் பேரில் மக்கள் சாதியை மறந்து எல்லோரையும் சகோதரன் என ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அடிநாதமாக எழுதிச் செல்கிறது.
நூலின் விவரங்கள்:
நூல்: கிறிஸ்தவத்தில் ஜாதி (Christhavathil Jaathi) – கள ஆய்வுகளும் நேர்காணல்களும்
ஆசிரியர்: நிவேதிதா லூயிஸ்
வெளியீடு: ஹெர் ஸ்டோரீஸ், சென்னை
பக்கம்: 624
விலை: 750
முதல் பதிப்பு: டிசம்பர் 2023
நூல் அறிமுகம் எழுதியவர்:
இளையவன் சிவா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
அருமையான புத்தக விமர்சனம்!