நிவேதிதா லூயிஸ் தொகுத்த "ஹெப்சிபா 100" புத்தகம் ஓர் அறிமுகம் | Nivedita Louis's Hephzibah Jesudasan 100 Book Review | www.bookday.in |

நிவேதிதா லூயிஸ் தொகுத்த “ஹெப்சிபா 100” – நூல் அறிமுகம்

கடந்த வாரம் நான் முற்போக்கு புத்தகத் திருவிழாவுக்குச் சென்றிருந்த போது தோழர் நிவேதிதா லூயிஸ் இந்தப் புத்தகத்தை (“ஹெப்சிபா 100”) என்னிடம் கொடுத்தார். நான் அதை வாங்கிக் கொண்ட போது எனக்கு அதன் முக்கியத்துவம் தெரியாமல்தான் வாங்கிக் கொண்டேன். கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு என்ற அவ்வைப் பாட்டியின் சொற்களை மீண்டும் உணர்த்துவதாக இந்தப் புத்தகம் அமைந்திருந்தது. இரண்டே நாட்களில் படித்து தமிழ் இலக்கியத்தில் ஹெப்சிபாவின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன்.

ஹெப்சிபா. இந்தப் பெயரை ராஜம் கிருஷ்ணன், அநுத்தமா என்றெல்லாம் நீளும் பெயர்ப்பட்டியலைப் போல் நான் அறிந்திருக்கவில்லை. இப்போதுதான் இந்தப் பெயரைக் கேள்விப்பட்டேன் என்றால் என் அறியாமையை நினைத்து நானே வெட்கப்படுகிறேன்.

ஹெப்சிபாவின் நூற்றாண்டில் நிவேதிதா லூயிஸ் தனது வழக்கம் போல் தேடியலைந்து ஹெப்சிபா பற்றிய செய்திகளை சேகரித்து நம்மிடம் கொண்டு வந்து சேர்த்துள்ளார். ஹெப்சிபா குறித்து பலர் எழுதிய கட்டுரைகளையும், தானே எழுதிய கட்டுரைகளையும் தொகுத்து, ஹெப்சிபாவின் மிகப்பெரும் பங்களிப்பை நம்மிடம் கொண்டு வந்து சேர்த்ததற்கு சகோதரி நிவேதிதாவுக்கு என் நன்றியும், பாராட்டும்.

ஹெப்சிபாவை அவர் அறிமுகம் செய்யும் விதமே அருமை:

”ஃபில்டர் காபியும் ஹிண்டு பேப்பருமாக அதகளப்பட்டுக் கொண்டிருந்த தமிழ் எழுத்துலகில் அக்கானி இனிப்பாக, பனைமணம் கமழ வட்டாரக் கதைக்களத்தின் நேரமையைச் சொல்ல வந்தவர் ஹெப்சிபா ஜேசுதாசன். பன்முக ஆளுமை. புனைவு எழுத்தாளராக அதிகம் அறியப்பட்ட ஹெப்சிபா, சிறந்த புனைவல்லாத நூல்களும் எழுதியுள்ளார். மொழியியல் வரலாற்று ஆய்வெழுத்து, சிறார் எழுத்து, மொழிபெயர்ப்பு, கவிதைகள் என பல வகைமைகளில் கோலோச்சியுள்ளார். சிறந்த கல்வியாளராக, பதிப்பாளராகத் திகழ்ந்துள்ளார்.”

ஹெப்சிபா நான்கு தமிழ் நாவல்களை மட்டுமே எழுதியுள்ளார். புத்தம் வீடு, டாக்டர் செல்லப்பா, அநாதை, மாநீ என்ற நான்கும் கன்னியாக்குமரி வட்டார வழக்கில், அந்த மக்களின் வாழ்க்கையை அப்படியே கொண்டு நிறுத்தும் விதமாகப் படைக்கப்பட்டுள்ளன.

இது தவிர அவர் ஒரு ஆங்கிலப் பேராசிரியராக இருந்தாலும், அவரது கணவரும் தமிழ்ப் பேராசிரியருமான ஜேசுதாசனின் தூண்டுதலில், இருவருமாக இணைந்து தமிழ் இலக்கிய வரலாற்றை மிகவும் சிறப்பான முறையில் 1700 பக்கங்களில் வடித்துள்ளனர். இது தவிர கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள், சிறார் இலக்கியம் எனப் பலவுமாக 15 நூல்களை மொத்தமாக எழுதியுள்ளார் அவர்.

அவரது நூற்றாண்டி ஒட்டி ரோஜா முத்தையா நூலகத்துடன் ஹெர் ஸ்டோரீஸ் நடத்திய கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள், கருத்துரைகளைத் திரட்டி இந்தப் புத்தகத்தை ஹெர் ஸ்டோரீஸ் பதிப்பித்துள்ளது. இந்தப் புத்தகத்தில் அவர் எழுதிய கடைசிக் கடிதமும் ’அவரது எழுத்திலேயே’ இடம் பெற்றுள்ளது. அவரது எழுத்தைப் பற்றி அவரே தீபம் பத்திரிகையில் எழுதிய கட்டுரையும் இடம் பெற்றுள்ளது.

அவரது எழுத்து குறித்து அவர் எழுதிய கட்டுரையில் அவர் ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார். அதை அனைவருக்குமான செய்தியாகவே நான் பார்க்கிறேன்:

”ஒன்று, புகழுக்கென்று வாழ்கின்ற எழுத்தாளன் மனம் சுழியில் நன்கு அகப்பட்டுக் கொண்ட ஓடம் போல என்பது. நிம்மதியோ நிலையான சந்தோஷமோ என்றிருப்பவர்கள், தங்களை மறந்தும் புகழில் மயங்கி விடக்கூடாது. புகழ் கள்ளைப் போன்றது. மயக்கம் தருவது”.

மேலும் ஒன்றைச் சொல்கிறார். அவரது எழுத்துக்கள் அந்தரத்திலிருந்து குதித்து விடவில்லை. அவரது வாழ்க்கையில் அவர் பார்த்தவற்றிலிருந்துதான் வருகிறது என்பதைச் சொல்லி விடுகிறார். புத்தம் வீட்டின் கதாப்பாத்திரங்கள் அவர் பார்த்தவைதான் என்கிறார். பனையேறும் தொழிலாளர் வாழ்க்கை, பெண்களின் சிறை வாழ்க்கை எல்லாம் அவரது நேரடி அனுபவம்தான்.

அடுத்த கட்டுரையில் ஹெப்சிபாவைத் தான் தேடியடைந்த கதையை விளக்குகிறார் நிவேதிதா. வழக்கம் போல் அவரது அனுபவங்கள் நம்மை அந்த இடத்துக்கே கொண்டு செல்கின்றன. அவருடன் நாமும் ஹெப்சிபாவின் குடும்பத்தார் அவரது நூற்றாண்டை அனுசரிக்கும் விழாவில் கலந்து கொள்கிறோம்.

இன்னொன்று. அவரது ஊர் பனைவிளை என்பதைப் பார்க்கையில் அந்தப் பெயரே காரணப் பெயராக இருப்பதையும், அது எனக்குப் புதிதாக் இருப்பதையும் கண்டு அனுபவித்தேன். வட்டார வழக்கின் இனிமை. பதநீர் என்பதற்கு அக்கானி என்ற இனிய பெயர்.

பனைவிளையில் பிறந்து ஏழு வயதில் பர்மாவுக்கு அவரது தந்தையால் அழைத்துச் செல்லப்பட்ட ஹெப்சிபா, அங்கு இரண்டாம் உலகப்போரால் பாதிக்கப்பட்டு ஊர் திரும்பி இங்கு ஜேசுதாசனை மணந்து குடியமர்ந்தார். அவரது வாழ்க்கையின் இந்த அனுபவத்தில் பெரும்பான்மையை மாநீ என்ற ஒரு நாவலில் விளக்குகிறார் ஹெப்சிபா. பர்மாவின் வாழ்க்கையை அதில் எழுதியிருப்பதை கட்டுரையாளர் கோதாமணி மிகவும் சிறப்பாகக் கூறுகிறார். அதை படித்தவுடன் இந்த நாவலை எப்படியும் படித்து விட வேண்டும் என்ற ஆவல் எழுந்தது.

புத்தம் வீடு நாவல் பற்றிய அறிமுகத்தை பேரா.சுடர்மணி மிகவும் சிறப்பாகக் கொண்டு வந்து தந்திருக்கிறார். வாழ்க்கை எப்படியெல்லாம் மாறுகிறது!

”கற்பனாவாதக் கதைகளும் எழுத்தாளர்கள் தாம் காண விரும்பிய இலட்சியப் பெண்களுக்கு உருவம் கொடுக்கும் கதைகளும் வெளிவந்து கொண்டிருந்த காலத்தில், உயர்சாதி அல்லது உயர்வர்க்கப் பெண்களுடைய வாழ்க்கையே புனைவுகளில் மையம் கொண்டிருந்த காலத்தில் முதன்முதலாகப் பெரும் உடைவை நிகழ்த்தியவர் ஹெப்சிபா ஜேசுதாசன்.”

இந்த நாவலை பதினைந்தே நாட்களில் எழுதியுள்ளார் ஹெப்சிபா. அது ஒரு நாவலாசிரியரின் முதல் நாவல் என்றே சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பாக வந்த நாவல். முதல் வட்டார வழக்கு நாவல், முதன் முதல் கிருஸ்தவ சமூகத்தைப் பேசிய நாவல், உயர்குடிப்பெண்கள் கதைகள் எழுதப்பட்ட காலத்தில் நாடார் சமூகப் பெண்களை எழுதிய நாவல், சாதிய முரண்கள் அல்லாமல் ஒரே சாதிக்குள்ளிருக்கும் முரணை அம்பலப்படுத்திய நாவல், முதன்முதல் பனையேறிகளின் வாழ்வைப் புனைவில் பதிவு செய்த நாவல், ஒரு வட்டாரத்தைப் பதிவு செய்ததன் மூலம் ஒரு இனவரைவியல் ஆவணம் என்று பல்வேறு சிறப்புகளையும் தகுதியையும் கொண்ட படைப்பு. விவரிப்பே இப்படி என்றால் நாவல் எப்படி இருக்கும்? காலச்சுவடு வெளியிட்டுள்ளது. வாங்கித்தான் படிப்போமே?

டாக்டர் செல்லப்பா நாவலை பேரா.ஏ.ராஜலட்சுமி விளக்கி எழுதியுள்ளார். பிறந்தது முதல் கடைசி வரை விரக்தியிலும், ஏமாற்றத்திலும் வாழ்ந்த ஒருவரின் கதையாக இந்த நாவல் அமைந்துள்ளதை கட்டுரையாளர் விளக்குகிறார். இந்த நாவலை தமிழ்ப்புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.

தமிழ் இலக்கிய வரலாற்றை அவர் பதிவு செய்துள்ள விதமும், அதை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்து நிவேதிதா கொடுத்துள்ள விதமும், இந்த வரலாற்றை ஆங்கிலத்துக்குப் பதிலாக தமிழில் அவர் பதிவு செய்திருந்தால் தமிழ் வாசகர்களுக்கு மிகவும் சிறப்பாக அமைந்திருகும் என்று தோன்றியது. தொல்காப்பியம் முதல், கடந்த நூற்றாண்டு வரை அனைத்தையும் குறித்து அருமையாக விளக்குகிறார் ஹெப்சிபா, தனது கணவரின் உதவியுடன். அதைப் பற்றி எழுதத் தொடங்கினால், முழுக் கட்டுரையையும் எழுதி விடுவேனோ என்ற அச்சத்தில் அதைத் தவிர்க்கிறேன். இந்தப் புத்தகம் 1700 பக்கங்களுக்கு மேல் உள்ளது என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருநாள் இல்லை ஒருநாள் நிச்சயம் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்து, தமிழின் மேன்மையை அறிய வேண்டும்.

புத்தகத்திலிருந்தே இந்த சொற்களை பயன்படுத்தி அறிமுகத்தை முடிக்கிறேன்:

”ஹெப்சிபாவுக்கு முன்பாகவும், பின்பாகவும் இவ்வாறு இலக்கிய வரலாறைப் பதிவு செய்த பெண் ஆய்வாளர், வரலாற்றாளர் வேறெவரும் இல்லை என்பதைக் கொண்டே இப்படைப்புகளின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

”பெண் என்பதாலேயே இலக்கிய பீடம் பெண்களுக்கு எளிமையாகக் கிடைத்து விடுகிறது. பெண்கள் எழுதுவது என்ன? எனக் கேட்கும் ஆணாதிக்க எழுத்தாளுமைகளுக்குத் தக்க பதிலாக, ஹெப்சிபாவின் இந்த நூல்களை வாசிக்கக் கொடுக்கலாம்.”

நூலின் விவரங்கள்:

புத்தகம் : ஹெப்சிபா 100
தொகுப்பும் பதிப்பும்: நிவேதிதா லூயிஸ்
பதிப்பகம் : ஹெர் ஸ்டோரீஸ்
பக்கங்கள்: 114
விலை: ரூ.170
நூலைப் பெற: 96003 98660

எழுதியவர் : 

✍🏻 கி.ரமேஷ்.

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *