நிவேதிதா லூயிஸ் எழுதிய "பெயரற்றவர்களின் குரல்" புத்தகம் ஓர் அறிமுகம் | Nivedita Louis's Peyaratravarkalin Kural Book Review | www.bookday.in

நிவேதிதா லூயிஸ் எழுதிய “பெயரற்றவர்களின் குரல்” கட்டுரைத் தொகுப்பு – நூல் அறிமுகம்

“பெயரற்றவர்களின் குரல்” கட்டுரைத் தொகுப்பு – நூல் அறிமுகம்

காலங்காலமாக பெண்கள் சந்தித்து வரும் பாலியல் வன்புணர்வு கொடுமைகளை, அதன் வலிகளை, வடுக்களை, முகநூல் வழியாக கட்டுரைகளை பெற்று அதை தொகுப்பாக்கியுள்ளார் எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ். வாதை மிகுந்த சம்பவங்கள் மொத்தம் 47 கட்டுரைகள். பின்னிணைப்பாக வ.கீதாவுடன் பெண்ணியம் குறித்தான ஒரு உரையாடல், மிகக் கனமான துயரம் தாங்கிய புத்தகமாக பெயரற்றவர்களின் உள்ளக் குமுறல் ஒலித்திருக்கிறது.

காலம் நவீனப்பட்டாலும், பெண்களை மிக இழிவாகவும், அவர்களை பாலியல் பண்டங்களாகப் பார்க்கும் மனநிலையில் இருந்து, பெருவாரியான ஆண்கள் இன்னும் மாறவில்லை என்பதை, பல்வேறு கட்டுரைகளில் வயது வித்தியாசமின்றி, பாலியல் சீண்டலுக்கு ஆளான பெண்கள், தங்கள் முகத்தை மறைத்துக் கொண்டு காலம் கடந்த பின்னும், எதிர்காலப் பெண்கள் பாதிக்கப்படாமலிருக்க, தங்கள் துயரங்களை பதிவாக்கியுள்ளனர்.

பெரும்பாலான சம்பவங்கள் ஏற்கனவே கேட்கப்பட்டவைகளாக இருந்தாலும்,
24 ஆவது கட்டுரையான “எட்டாக் கனியான நாப்கின்” உள்ளபடியே நெஞ்சை உலுக்கியது. இந்தக் காலத்திலும் ஒரு பழங்குடியின கிராமத்தில் இந்தக் கொடுமைகள் நடப்பதறிந்து அதிர்ந்து போகிறோம். இன்னும் சமூகத்தின் பொதுத் தளத்திற்கு கொண்டு வரப்படாத உண்மைகள் எத்தனையோ என்று எண்ணத் தோன்றுகிறது.

நாப்கின் பயன்படுத்தக் கூடாது என்ற கிராமத்தின் கட்டுப்பாடும், மாதவிலக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக பெண்கள் மாத்திரைகள் வாங்கி போட்டுக் கொண்டு தள்ளிப்போடுவதும், அதனால் உடல் நலக் கோளாறுகள் ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுப்பதும் நாம் என்ன மாதிரியான உலகத்தில் வாழ்கிறோம் எனும் வெறுப்பையே ஏற்படுத்துகிறது. இன்று வரை கிராமத்து மூட நம்பிக்கைக்கு கட்டுப்பட்டு, நாப்கின் அணியாத பெண்கள் வசிப்பது எவ்வளவு பெரிய சமூகத் தீங்கு.

33 ஆவது கட்டுரையான “நனி எனும் நான்” சமபால் ஈர்ப்பாளரின் உளவியல் சிக்கல் குறித்தது. பொதுவான பெண்களுக்கே ஆண்களின் உலகத்தில் மரியாதை இல்லை எனும் போது, தான் கொண்ட லெஸ்பியன் உறவும், கணவனோடு வாழ முடியாத சூழலும், ஒரு பெண்ணை எவ்வளவு துயரப்படுத்தும். பால்புதுமையினரின் பிரச்சனையை இன்றளவும் ஏற்பதில்லை, நவீன உலகம் என்று சொல்லப்படுகின்ற இன்றைய வாழ்வியல் முறை.

23 ஆவது கட்டுரையில் “கல்லாகிய கடவுளுக்கு நன்றி” எனும் தலைப்பில் 33 வயது வரைக்குமான தனது வாழ்வை பிரித்து எழுதியிருக்கிறார். ஆசாரமான குடும்பத்தை சேர்ந்த பெண்ணொருவர். அதில் பல்வேறு பாலியல் கொடுமை குறித்து பேசினாலும், மதுரையின் பிரபலமான நரம்பியல் நிபுணர் என்றழைக்கப்படும் மருத்துவர் சீனிவாசனின் முகத்திரையை கிழித்தெரிந்திருக்கிறார். இன்று அந்த மருத்துவர் உயிருடன் இல்லை. அன்றைய காலகட்டத்தில் எம் ஜி ஆருக்கு வைத்தியம் பார்த்ததாக சொல்வார்கள். அன்றே அதிக கட்டணம் வாங்குவார். முன்பதிவு செய்து தான் பார்க்க முடியும் எந்நேரமும் கூட்டம் அள்ளும். அவரும் ஒரு பாலியல் சுரண்டல்காரர் என்று அறியும் போது, அவர் மீதான மரியாதையும் செத்துப் போனது.

மொத்தமாக தொகுப்பை வாசிக்கையில், எழுத்திற்கு சம்பந்தமில்லாத பெண்கள் தங்கள் மனக்குமுறல்களை வெளியிட்டு இருக்கிறார்கள். தொகுப்பாசிரியர் அதை ஒழுங்குபடுத்தியிருக்கிறார். அவரையும் மீறி ஒரு சில இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் சம்பவங்கள், விரசங்களாக வாசிப்பாளருக்கு தோன்றுவதை தவிர்த்திருக்கலாம். அது பெண்கள் வலி, துயரம் குறித்தான மைய நோக்கத்தை சிதைத்து விடுகிறது.அதே போல் ஆண் குழந்தைகளின் பாலியல் சுரண்டல் குறித்தும் ஒரு கட்டுரையாக்கம் செய்திருக்கலாம்.ஆனால் கட்டுரையாசிரியர் அதை திட்டமாக மறுத்து விடுகிறார்.

இந்த புத்தகத்தில் சொல்லப்பட்ட கதைகளை விட பகிரப்படாத கதைகளே இவ்வுலகில் அதிகம்.கற்பனைக்கெட்டாத கொடும்துன்பங்களை சுமந்து நடைபிணமாக வாழ்பவர்களே அதிகம்.இன்னும் எத்தனை காலம் தான் பெண்கள், சொல்ல முடியாத கதைகளை தூக்கிச் சுமக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. பழங்காலத்தை விட இந்த புதுக்காலம் பெண்களை மேலும் மேலும் துயருருத்தும் என்றே நடக்கும் சம்பவங்கள் கூறுகின்றன. இது ஆண்கள் நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகம், தொகுத்து பதிப்பித்த எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ் அவர்களுக்கு வாழ்த்துகள்.

நூலின் விவரங்கள்:

நூல்: “பெயரற்றவர்களின் குரல்” கட்டுரைத் தொகுப்பு (Peyaratravarkalin Kural)
ஆசிரியர்: நிவேதிதா லூயிஸ்
பக்கம்: 368
விலை: ரூ.500
பதிப்பாளர் முகவரி: ஹெர் ஸ்டோரிஸ்

எழுதியவர் : 

✍🏻 செ. தமிழ்ராஜ்
வண்டியூர்
மதுரை

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. மருதுபாரதி

    பெயரற்றவர்களின் குரல்..

    பெண்களின் வலி நிறைந்த பக்கங்களை மெனக்கிட்டு தொகுத்த நிவேதிதா அவர்களுக்கும்
    எந்நூலையும் மிகக் கராறாக மதிப்பீடு செய்யும் நூல் விமர்சகர் தமிழ்ராஜ் அவர்களுக்கும் எமது அன்பும் வாழ்த்தும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *