49 ஆவது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியான விசில் என்ற இந்த புத்தகத்தை, எழுத்தாளரும், சமூகப் பெண்ணிய ஆய்வாளரும், வரலாற்று ஊடகவியலாளரும் மற்றும் ஹெர் ஸ்டோரீஸ் பதிப்பகத்தின் இணை நிறுவனராக பணியாற்றி வருபவருமான தோழர் நிவேதிதா லூயிஸ் அவர்கள் எழுதியுள்ளார்கள்.
தன்வரலாற்றுப் புனைவுப் புத்தகமாக 17 அத்தியாயங்களில் 260 பக்கங்கள் கொண்ட புத்தகமாக ஆசிரியர் அவர்கள் இந்த விசில் புத்தகத்தை எழுதியுள்ளார்கள்.
அழகிய குடும்ப விவரிப்புகளோடு, பள்ளிக்கூட சுவாரசியப் பயணங்களோடு முதல் அத்தியாயம் ஆரம்பிக்கிறது. பள்ளியில் படித்து முடிக்கும் தருவாயில் ரயில்வே துறை வேலைக்கானத் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றிருந்ததால், பள்ளிப் படிப்பை முடித்த உடனே, வேலையில் அமரும் நிலை ஆசிரியருக்கு ஏற்படுகிறது. அந்தப் பதினெட்டு வயது முதல் முப்பத்து ஆறு வயது வரையிலான ஆசிரியரின் பயணம் எப்படி இருந்தது என்பதுதான் இந்த புத்தகத்தின் கதை.
இளம் வயதிலேயே வேலைக்குச் சென்றதால் பணியிடத்தில் ஆசிரியர் அனுபவித்த பணிச்சுமைகள், இன்னல்கள், இடையூறுகள் முதலியவைகளை, ஒவ்வொரு அத்தியாயங்களிலும் வாசிக்கின்ற பொழுது, ஆசிரியருடனே நாமும் பயணித்துச் செல்வது போன்ற ஒரு உணர்வு தொற்றிக் கொண்டது. ரயிலில் அதிகம் நான் பயணம் செய்ததில்லை என்ற போதும், ரயில்வே வேலைகள் குறித்த அதிக அறிமுகம் எனக்கு இல்லை என்ற போதும், இந்த புத்தகத்தை வாசித்து முடிக்கும் போது ரயில்வே துறைச் செயல்பாடுகள் குறித்துக் கொஞ்சமாவது அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமின்றி தெரியாத பல வார்த்தைகளையும், பல செய்திகளையும் அறிந்து கொள்ள முடிந்தது. உதாரணமாக விசில் ப்ளோயர்ஸ், சரக்கு ரயில் பெட்டிகளின் வகைகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அவைகளின் செயல்பாடுகள் என்று இந்தப் புத்தகம் வழி நிறையவே அறிந்து கொள்ள முடிந்தது.
பல்வேறு இடங்களில் ஆசிரியரின் துணிச்சலும், தன்னம்பிக்கையான முன்னகர்வுகளும் வாசிக்கும் போது வியப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, அறிவியல் நுட்பமாக பல ஆண்டுகளாக, மறைமுகமாக சரக்கு ரயில் பிரிவில், நடைபெற்று வந்த எடை மிஷின் கொள்ளையைத் துணிச்சலுடன் வெளிப்படுத்தியது வாசிக்கும் பொழுதே நமக்கு இருக்கையின் நுனியில் இருந்து அடுத்தது என்ன நடக்குமோ என்ற ஒருவித ஆர்வத்தை ஏற்படுத்தியதையும் இந்த புத்தகத்தின் வழி உணர முடிந்தது.
ஆசிரியரின் துணிந்து செயல்பட்ட இத்தகைய நிலை ஒரு பக்கம் இருந்தாலும், அவரின் இத்தகைய செயல்பாடுகளால் பணியிடத்தில் அவருக்குக் கொடுக்கப்பட்ட அழுத்தங்கள், “இவள் பெண்தானே” என்ற அடிமட்டப் பார்வையுடன் அளிக்கப்பட்டப் பணி சார்ந்த துன்பங்கள், திறமை இருந்து, மேற்கட்டப் பணிப் பொறுப்பை ஏற்கும் தேர்வுகளில்,ஆசிரியர் அவர்கள் முதல் மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றாலும், இந்தக் கொள்ளையை வெளிக்காட்டிய ஒரு காரணத்திற்காகத் தலைமைப் பொறுப்பாளர்கள் அவரை அலைக்கழித்த விதம் முதலிய பகுதிகளை வாசிக்கும் பொழுது, உண்மையும் நேர்மையும் நமது செயல்களில் வெளிப்பட்டால், என்னென்ன இன்னல்களை இத்தகையப் பணிகளில் எதிர்கொள்ள நேரிடும் என்று அறிந்து கொள்ளவும் இந்த புத்தகம் வாய்ப்பளித்தது.
இவைகளுக்கு மத்தியில், பணிச்சுமை காரணமாக உடல் அளவில் ஏற்பட்ட இன்னல்கள், குடும்பத்தை முறையாகக் கவனிக்க முடியவில்லை என்ற ஏக்கங்கள், விரைவில் நமக்கு இந்நிலை மாறாதோ என்ற ஆசிரியரின் எதிர்பார்ப்புகள் முதலியவும் இந்தப் புத்தகத்தின் சுவாரசியத்தைக் கூட்டியது எனலாம்.
பல்வேறு இன்னல்களும் இடையூறுகளும் ஆசிரியர் வாழ்வில் ஏற்படும் பொழுதெல்லாம், “எவ்வளவோ பார்த்துவிட்டோம், இதைப் பார்க்க மாட்டோமா என்ன” என்று கூறி ஆசிரியர் அந்த நிகழ்வுகளை எளிதாகக் கடந்து சென்ற விதங்களை வாசிக்கின்ற பொழுது, நமக்கும், ஒருவித உத்வேகவும் இதையே நமது வாழ்வில் கடைபிடித்தால் என்ன என்ற யோசனையும் மனதில் எழுந்தது.
முறையான ஓய்வே இன்றி, குடும்பத்தைச் சரிவரக் கவனிக்க முடியாது, வாழ்க்கையின் சிறு சிறு மகிழ்வுகளை அனுபவிக்க இயலாது, எதை நோக்கிதான் நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம்? இப்படி பணிச்சுமையும் மன அழுத்தமும் நமக்குத் தேவைதானா? என்று இறுதி அத்தியாயத்தில் ஆசிரியர் எடுத்த ராஜினாமா கடிதம் முடிவு, “சபாஷ் சரியான முடிவை ஆசிரியர் எடுத்து விட்டார்” என்ற மகிழ்வையும் மனதினிலே இந்தப் புத்தகம் ஏற்படுத்தியது.
எல்லாவற்றையும் விட இந்த புத்தகத்தில் என்னைக் கவர்ந்தது என்னவென்றால், ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்புகள்தான். ஆசிரியர் அவர்கள் ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்புகளையும் எண்களாகவே(Numbers) இந்த புத்தகத்தில் வழங்கியுள்ளது, இதுவரைக் கேள்விப்படாத, பார்த்திராதப் புதுமையாகத் தோன்றியது. அந்தந்த அத்தியாயங்களில் ஆசிரியரின் வாழ்க்கையில் பயணித்த எண்களையும், அந்த எண்களைக் கணிதத்தின் வாயிலாக வெளிக்காட்டியதையும், அத்தகைய எண்களை அந்தந்த அத்தியாயங்களின் தலைப்புகளாகக் கூறி இருப்பதையும் கண்டு “எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறார்களோ தெரியவில்லையே” என்ற எண்ணத்தை மனதில் ஏற்படுத்தியது. கணிதத்தைப் பட்டப் படிப்பாகத் தேர்ந்தெடுத்துப் படித்த மாணவன் நான் என்ற போதும், ஒவ்வொரு அத்தியாயங்களிலும் அந்த எண்களைக் குறித்து ஆசிரியர் வெளிப்படுத்திய விதமும் தெரியாத பல கணிதப் பெயர்களை எளிதில் புரியும் வண்ணம் விளக்கிய விதமும், “மற்றொரு கணித மேதை ராமானுஜர் இந்த உலகில் பிறந்து விட்டாரோ” என்று ஆசிரியரை எண்ண வைத்தது.
தன்வரலாற்றுப் புத்தகங்கள் எவ்வளவோ கேள்விப்பட்டிருப்போம்.. தன்வரலாற்றுப் புனைவுப் புத்தகங்களையும் பார்த்திருப்போம். ஆனால் பெண்கள் தாங்களாக முன்வந்து, தங்களது வரலாற்றைப் புனைவாக, ஆசிரியரின் இத்தகைய புத்தகம் போன்று வெளியிட்டு இருப்பதை நான் இப்பொழுதுதான் கேள்விப்பட்டிருக்கிறேன்.இது ஒரு புதுமையான முயற்சியாகவும், பாராட்டக்கூடிய செயலாகவும், பல்வேறு திறமைகளோடு மிளிரும் பெண்களுக்கு உதாரணமான செயல்பாடாகவுமே, பார்க்கத் தோன்றியது. அந்த வகையில் ஆசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
மொத்தத்தில் இக்கால இளையோர்களுக்கு, அரசுப் பணிக் கனவுகளோடு பயணிப்பவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, ஒரு தன்னம்பிக்கைப் புத்தகமாகவும், “வாழ்க்கை என்பது மிகப்பெரியது. நம்மைச் சுற்றி நிகழ்கிற நிகழ்வுகளுக்குள்ளேயே நம்மை அடக்கி விடக்கூடாது. அடிமைகளாக பணியிடங்களில் பணியாற்றிடக் கூடாது. சுதந்திரப் பறவைகளாகப் பயணித்திட நாம் முன் வர வேண்டும். தவறுகளும் கொள்ளைகளும் ஊழல்களும் நம் கண் முன்னே நிகழும் பொழுது, அதனை வெளிப்படுத்தத் துணிவுடன் முன் வர வேண்டும்” முதலிய செய்திகளைக் கூறும் புத்தகமாகவும், இவற்றையெல்லாம் முன்வந்து இந்த புத்தகம் மூலம் வெளிப்படுத்திய ஆசிரியரை ஒரு வழிகாட்டியாகவுமே என்னால் இந்த புத்தகத்தை வாசித்து முடிக்கும்போது உணர முடிந்தது.
எனவே,
ஊழல்களையும் கொள்ளைகளையும் வெளிப்படுத்த
ஊதிடுவோம் விசில்!
வாசித்திடுவோம் விசில்!!
நன்றி.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “விசில்” தன்வரலாற்றுப் புனைவு (Autofiction) நாவல் |
| ஆசிரியர்: | நிவேதிதா லூயிஸ் |
| வெளியீடு: | ஹெர் ஸ்டோரிஸ் |
| விலை: | ₹.332 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 மோ. ஆடம்ஸ், கூட்டப்புளி, திருநெல்வேலி மாவட்டம். |
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இந்நிகழ்வில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

