நூல் அறிமுகம்: *நிழல் இராணுவங்கள்* – ராம் கோபால்

நூல் அறிமுகம்: *நிழல் இராணுவங்கள்* – ராம் கோபால்



நூல்: நிழல் இராணுவங்கள் 
ஆசிரியர்: திரேந்திர கே.ஜா  |  தமிழில் இ.பா. சிந்தன் 
பதிப்பகம் : எதிர் வெளியீடு 
விலை: ரூ. 200

இவ்வளவு நாட்களாய் ஒன்னும் மண்ணுமாய் தானே பழகி வந்தோம். திடீரென்று அவர்கள் எங்களுக்கு எப்படி எதிர் ஆனார்கள்? எங்கள் மீது அவர்களுள் இத்தனை வன்மமா? இந்த வன்மம் திடீரென்று அவர்களுள் வந்துவிட்டதா, இல்லை அந்த வன்மம் அவர்கள் மனதில் இத்தனை நாள் இருந்த இடம் தெரியாமல் இருந்தது, இப்போது திடீரென்று பொங்கியதா? அவர்களின் இத்திடீர் வன்மம் ஏற்பட நாங்கள் என்னதான் செய்து விட்டோம்? – கலவர பூமிகளில் பாதிக்கப்பட்ட வாழ்விழந்த மத சிறுபான்மையினர்களின் கேள்விகள் தான் இவை. இங்கே இந்தியத் திருநாட்டில் பெரும்பாலும் கலவரங்களின் பொது இரை இஸ்லாமியர்களே. எப்படி இந்து மக்கள் இஸ்லாமியர்களுக்கு மீதான மத துவேஷத்திற்கு இரையானார்கள்? இந்திய நாட்டில் கிட்டத்தட்ட 90 சதமானமாக இருக்கும் இந்து மக்களுக்கு வெறும் 5.3 சதமானம் மட்டுமே மக்கள் தொகை கொண்ட இஸ்லாமிய மக்களின் மீதான பயம் ஏன்?

ஆர்.எஸ்.எஸ் ஒரு டிசிப்பிளின் சொல்லிக் கொடுக்கிற, தேசபக்தியை ஊட்டுகிற ஒரு அமைப்பு, அவ்வளவே. அதைப் போய் நாட்டில் நடக்கிற கலவரங்கள் பலவற்றிற்கும் பங்காளிகள் ஆக்குவது சரியா? ஆங்காங்கே தீவிரவாத குணம் கொண்ட இந்து அமைப்புகள் சில செய்யும் வன்முறைகளுக்கும், தவிர்க்க முடியாமல் ஏற்படுத்துகிற உயிரிழப்புகளுக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கும் தொடர்புப் படுத்துவது நிச்சயமாகச் சரியான ஒன்றாக இருக்க முடியாது தானே? கவனமா பாருங்க, நம்ம இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத் பல விஷயங்களில் பாஜகவோடு ஒன்றாக இருந்தாலும், தேர்தல்களில் தனித்து நிற்கவில்லையா, அப்படின்னா இந்து மக்கள் கட்சியும் பாஜகவும் ஒரு மரத்துக் கிளைகள் என்று சொல்வது தப்புதானே? வி.எச்.பி, இந்து மக்கள் கட்சி, பஜ்ரங் தள், அனுமன் சேனா, ஸ்ரீராம் சேனா, அபினவ் பாரத் என்ற பெயரில் அமைப்புகள் பலவும் தனித்தே பதிவு செய்திருக்கின்றன என்பது மட்டுமல்ல, அவைகளில் சிலவற்றிற்குத் தேசிய தலைமை மாநிலத் தலைமையும் கூட இருக்கின்றன என்கையில், பாஜகவும் அவர்களும் வேறு வேறுதானே?

நண்பர்களே, இந்தக் கேள்விகள் உங்கள் உள்ளும் எழுகிறதல்லவா? அப்படியென்றால், உங்களுக்கு உதவ சமீபத்தில் எதிர் வெளியீடு மூலமாக இ.பா.சிந்தனின் பிசிறில்லா எளிய மொழிபெயர்ப்பில் திரேந்திர கே.ஜாவின் புத்தகமான “நிழல் இராணுவங்கள்” இருக்கிறது.

வெவ்வேறு பெயர்களில் தனித்தனியே அமைப்புகளாகப் பதிவு செய்திருப்பினும், இவை அனைத்தும் சித்தாந்தத்தில் மற்றும் அதன் விளைவாக மத துவேஷத்திலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு ஒத்திசைவாகவே இருப்பதை இப்புத்தகம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அது மட்டுமில்லாமல், எல்லா அமைப்புகளின் தலைமைகளும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் கீழ் ஏதோ ஒரு காலத்திலிருந்தவர்களாக இருப்பதையும் நாம் பார்க்க முடிகிறது. வெளியே பார்ப்பதற்கு தனித்தனி அமைப்புகளாக செயல்படுவது போல் தோற்றமளித்தாலும், தேர்தல் காலங்களில் பாஜகவிற்குச் சாதகமான சூழலை ஏற்படுத்துவதில் மிகப் பெரும் அளவிற்கு உதவுபவைகளாகவும் பல சமயங்களில் நேரடியாக அந்தந்த அமைப்புகளின் தலைவர்கள் பாஜக கட்சியின் வேட்பாளர்களாகத் தேர்தலில் நிற்பதையும் நாம் காண முடிகிறது. அப்படித்தான் இந்து யுவ வாகினி என்னும் அமைப்பின் தலைவராக இருந்த யோகி ஆதித்யநாத் தற்போது பாஜகவின் முதல்வராக இருப்பதையும் நாம் பார்க்க முடிகிறது. இந்த உதிரி அமைப்புகள் எனப்படுவைகள் நிகழ்த்தும் அரசியல் கொலைகள், கலவரங்கள் உள்ளிட்ட படுபாதக செயல்களுக்கு இவைகள் தனித்தனியே உள்ள fringe elements என சொல்லி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தன் மீது குற்றங்களின் / படுபாதகங்களின் நிழல்கள் விழா வண்ணம் ஒரு நல்ல பெயரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் ஒரு மோசடியைச் செய்வதை இந்தப் புத்தகம் அம்பலப்படுத்துகிறது.



சமீபத்தில் 370 சட்ட திருத்தம் மூலம் லடாக் பகுதியில் இருக்கும் பெரும்பகுதி புத்த மத மக்களின் ஒரு நீண்ட நாள் கோரிக்கை நாங்கள் நிறைவேற்றியிருக்கிறோம் என்று பெருமை கொள்ளும் பாஜகவின் பின் உள்ள சூதை விளங்கிக் கொள்ளப் பஞ்சாப் மாநிலங்களில் அதே போல் சீக்கிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் ராஷ்டிரீய சீக் சங் என்ற பெயரில் செயல்படும் விதமும் அதன் நோக்கமும் இப்புத்தகத்தைப் படிக்கையில் விளங்குகிறது. நாளை புத்த மதமும் இந்து மதத்தில் அடக்கமே என்று சொல்லி அந்த மதத்தை அழிக்கவே இந்த போலி பெருமை என்பதும் விளங்குகிறது. இந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் பிடியில் சிக்காமல் மக்களைக் காக்க அவர்கள் கைகொள்ளும் அதே மத செயல்பாடுகளை மத கொண்டாட்டங்களை தன் வயப்படுத்துவது என்னும் கேரளத்து முற்போக்கு அமைப்புகளின் செயல்பாடுகள் மீது நம்பிக்கையின்மையே நிலவுகிறது.

இந்தப் புத்தகம் சொல்லும் மிக முக்கிய அம்சமாக நான் பார்ப்பது, என்னதான் இந்துத்துவா என்ற சொல்லில் அனைத்து இந்து மக்களுக்காக உழைப்பதாகச் சொன்னாலும், ஆதிக்க சாதியினரின் கருத்தியலை அப்படியே தக்க வைக்கவே ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அதன் நிழல் இராணுவங்கள் செயல்படுவதை இப்புத்தகம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஆதிக்க சாதியினரின் கருத்தியல் என்பது இந்து தர்மத்தில் உயர் பிரிவினராகக் கருதப்படும் பிராமணர்களின் கருத்தியலே, பார்ப்பனீயமே. தனக்குக் கீழாக மக்கள் இருக்கிறார்கள் என்ற புரிதலில் அவர்களை எல்லா விதங்களிலும் ஒடுக்கி, தங்களை விடக் கீழாகவே அவர்களை வைத்திருக்கும் சூழ்ச்சி செயல்பாடுகளே, சூதான கருத்தியலே பார்ப்பனீயம். இந்த கருத்தியல் தான் தாங்களே சாதி அடுக்கில் கீழாக இருக்கிறோம் என்பதை உணராமல் பிற்படுத்தப்பட்ட சாதியினர் பட்டியலின சாதியினரை ஒடுக்குவதற்கும் காரணமாக இருக்கிறது. இந்த புரிதலில் தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தவிர மற்ற அதன் பெரும்பாலான நிழல் இராணுவ அமைப்புகளின் தலைமைப் பகுதியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மிகுதியாக இருக்கிறார்கள். இங்கேதான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை வெல்லும் சூத்திரம் இருப்பதாக நான் உணர்கிறேன். அது பிற்படுத்தப்பட்ட சாதியனர் மற்றும் பட்டியலின மக்கள் ஆகிய இரு பிரிவினரிடமும் சாதி அடுக்கில் கீழாக இருப்பதற்காகவே, ஆம், சாதி என்ற பேதம் நீங்காமல் பார்த்துக் கொள்வதற்காகவே ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அதன் நிழல் இராணுவங்களான அமைப்புகளும் செயல்படுகின்றன என்பதை அம்பலப்படுத்திட வேண்டும்.

மேலும், இந்த அமைப்புகளுக்குப் பெரிதான கொள்கைகள் இலட்சியங்கள் இருப்பதாகச் சொல்லிக் கொண்டாலும், உண்மையில் அவைகள் காசு பார்ப்பதையே பிரதான வேலையாகக் கொண்டிருக்கிறது என்பதும் அம்பலமாகிறது. அது மட்டுமல்லாது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உறுப்பினர்கள் ஓர் இராணுவ ஒழுங்கினை கொண்டிருப்பார்கள் என்பதையும் அவர்களின் ஒழுக்க கேட்டினையும் இப்புத்தகம் சில இடங்களில் சொல்லாமல் விடவில்லை. காங்கிரஸ், சமாஜ்வாடி, அகாலிதளம் உள்ளிட்ட கட்சிகளும் ஆதிக்க சாதியினரைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற புரிதலில் கொள்கையில் ஆர்.எஸ்.எஸ் வளர உதவினார்கள் என்பதும் இப்புத்தகத்தின் மூலம் விளங்குகிறது.

அவசியம் வாங்கி படிங்க.. விலை ரூ.220/- தான். எதிர் வெளியீட்டின் பதிப்பக வலைப்பக்கத்தில் ஆர்டர் செய்தால் விலை ரூ.200 மட்டும் தான். அவர்களின் டெலிவரி ஸ்பீடும் சூப்பர் (அடுத்த நாளே வந்துவிட்டது). நல்ல இலகுவான மொழிபெயர்ப்பிற்கு இ.பா சிந்தன் தோழருக்கு, வாழ்த்துக்கள்.



Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *