குழந்தைகளின் மனம் முழுவதும் கற்பனைக்கு எட்டாத உலகம் ஒன்று இயங்கிக் கொண்டே இருக்கிறது. அந்த உலகத்தில் எப்போதும் துறுதுறுவென்று ஓடிக்கொண்டே இருக்கும் குழந்தைகளுக்கு கதை கேட்பதற்கு என்று தனித்துவமான நேரம் எப்படியோ கிடைத்துவிடுகிறது. அப்படிக் கிடைத்த நேரத்தை ஆக்கிரமிப்பதற்காவே இன்றைய கதை சொல்லிகளும், பெரியவர்களும், ஆசிரியர்களும் வரிசையில் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
கதைகள் குழந்தைகளின் மனதிற்குள் செய்யும் மாயம் அளப்பரியது. கேட்கும் திறனை, பேசும் திறனை, வாசிக்கும் திறனை, எழுதும் திறனை, புதிய கோணத்தில் சிந்திக்கும் திறனை என்று ஏராளமான திறன்களை வளர்க்கின்றன.
மொத்தம் பதினொரு உள்ளடக்கங்களைக் கொண்டுள்ள இந்நூல், பலவேறு விதமான மாயா ஜாலங்களைக் கொண்டிருக்கிறது. அனைத்தும் கற்பனைதான் என்ற போதும், பிரமிக்க வைக்கும் கற்பனைக் கதையாக எழுதப்பட்டுள்ளது.
அனைத்து வகைக் குழந்தைகளும் வாசிப்பதற்கு ஏதுவான எளிமையான சொல்லாடல்கள், குழந்தைகள் மத்தியில் புழங்கும் அன்றாடப் பேச்சுநடை, நினைவுகூர்ந்து திரும்பச் சொல்லும் அளவிற்கான காட்சி அமைப்பு. பக்கத்து வீட்டு அண்ணா அக்காக்களின் பெயர்களைப் போன்ற கதாப்பாத்திரங்களின் பெயர்கள் என்று இந்நூலைப் பற்றி சொல்லிக்கொண்டே செல்லலாம்.
”மரம் பச்சை நிறக் குட்டிவானம்” என்ற கதை மிகவும் வித்தியாசமாக உள்ளது. நான்கூட சிறுவயதாக இருந்த போது மரம், செடி, கொடிகளுடன் பேசி இருக்கிறேன். அவைகளிடமிருந்து எந்தப் பதிலும் எனக்குக் கிடைத்ததில்லை. ஆனால், நான் சொல்வதைப் புரிந்து கொண்டதைப் போலத்தான் அவற்றின் இலைகள் தலையாட்டியிருக்கின்றன.
மனிதர்கள் பேசுவதைத் தாவரங்கள் புரிந்துகொள்கின்றன என்று எங்கோ கேள்விப்பட்டிருக்கின்றேன். அது உண்மையா? பொய்யா? என்பது இன்றளவும் எனக்குத் தெரியாது. இப்பொழுதும் குழந்தைகள் மரம் செடிகளிடம் பேசுவதைப் பார்க்கவே செய்கிறேன். இந்தக் கதையில் வருவதுபோலவே, என் கிராமத்தில் உள்ள பாட்டி மரத்தின் மேல் பேய் இருக்கும், பிசாசு இருக்கும் என்று பயமுறுத்துவார். இரவில் மரத்தின் பக்கவே திரும்பிப் பார்க்காத காலம் அது.
ஆனால், பகல் நேரத்தில் அதே மரத்தின் அடியில் தான் எல்லோருமாகச் சேர்ந்து விளையாடியிருக்கிறோம். இப்போதும் அதை நினைத்தால் சிரிப்பாகத்தான் இருக்கிறது.
இயற்கை என்பது மனிதர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரம். அதில் மரங்களும் ஒரு அங்கம் என்பதை வித்தியாசமான முறையில் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க முயன்றிருக்கிறார் இந்நூலின் ஆசிரியர் சரிதா ஜோ.
மரங்களின் இன்றியமையாத பங்கினை மிக அழகாக வர்ணித்து உள்ளதால் குழந்தைகளின் மனதில் மரங்கள் நீங்காத இடம் பிடிக்கும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.
மரங்கள் மனிதர்களுக்கு எண்ணற்ற பலன்களைத் தருகிறது. மனிதர்கள்தான் தங்களது சுயநலத்திற்காக வெட்டிச் சாய்க்கிறார்கள் ”நிழலைத் திருடிய பூதம்” என்ற இந்நூலை வாசிக்கும் குழந்தைகளுக்கு மிக அருமையான விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் இந்நூலின் ஆசிரியர். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுக்களும்.
எஸ்.ஹரிணி சண்முகம்
நூலின் பெயர் : நிழலைத் திருடிய பூதம்
எழுத்தாளர் : கதைசொல்லி சி.சரிதா ஜோ
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன்
பக்கங்கள் : 64
விலை : ரூ.60/-
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.