நிழல்களின் வழியே
பாதை கண்டு பயணிப்பவன்
நான்
நிழல்களில் பேதங்களில்லை
இனம் மதம் நிறம் பால் என
பாகுபாடுகள் இல்லை
சில நேரம் குதித்துக் குதித்து வரும்
நிழல்களைப் பார்க்கும் போது
மனதைப் பார்ப்பது போலவே இருக்கும்
நடனமிடும் சுடரின் நிழல்
நடராஜரின் அம்சம்
திரியின் நிழல்
பேசும் மௌனத்தின் நாவு
பறக்கும் புறாவின் நிழலைப் பார்க்கையில்
தரையை முத்தமிடத் தோன்றும்
சிறகு விரித்த காக்கையின் நிழல்
இருளின் பேரண்டம் போல்
உருக் கொள்ளும்
மழையின் நிழலை
ஒரு முறையேனும் தரிசிக்க முடியாதவர்களாகிப் போகிறோம் நாம்
ஏரியில் குதிக்கும் மழைத்துளியின் நிழல் தான்
ஒரு நீர்ப் பூவாய் முகிழ்த்து மேலெழுவது
கர்ப்பக் கிரககத்தில்
மூலவரின் அசலை விடவும்
நிழல் தான் சுவரில்
துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும்
விளக்கின் வெளிச்சத்தில்
அருள் பாலிக்கவில்லையென்றாலும்
பாவனை செய்யாது
நிழல்களையே பார்த்துப் பழகிய கண்களுக்கு
உலகமே ஒரு நிழலாட்டம் போலத்தான்
தோன்றும்
சேக்ஸ்பியரின் நிழலாய்
எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்
என்று கேட்ட மெளனியின் நிழல் தான்
இந்த கவிதையில் விழுந்திருப்பது
நினைவுகளின் நிழலைத்
தேடி அலைந்தவன்
எனது நிழலைப் பார்த்த
நாளிலிருந்து தான்
நான் கொஞ்சம்
அடக்கி வாசித்துக்
கொண்டிருக்கிறேன்
தங்கேஸ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.