வரவிருக்கின்ற எதிர்காலத்திற்காக தங்கள் பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்று ஒருகட்டத்தில் விரும்பிய ஒவ்வொரு குழந்தையும், தங்களுடைய வீடுகளுக்குள் சோம்பிக் கிடைக்கின்றார்கள். தாமதமாக தேர்வுகளைத் நடத்த வேண்டும் அல்லது ஒரேயடியாக அவற்றை ரத்து செய்து விட வேண்டும் என்பதே அவர்களின் மற்றொரு விருப்பமாக இருக்கின்றது. உலகெங்கிலும் கொரோனா வைரஸ் அழிவை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவர்களின் இந்த இரண்டு வெளிப்படையான விருப்பங்களும் உண்மையில் நிறைவேறியுள்ளன. ஆனால் அதற்கேற்ற சூழ்நிலைகளில் இல்லை. தொற்றுநோய் அறிவிக்கப்பட்டபோது, பள்ளிகளும் கல்லூரிகளுமே மூடப்பட்ட முதல் நிறுவனங்களாக இந்தியாவிலும் இருந்தன. இருப்பினும், இந்த விடுமுறைகள் மாணவர்கள் நினைத்தபடி ஆனந்தமாக இருக்கவில்லை. .
ஊரடங்கலுக்கு இந்திய கல்வி நிறுவனங்கள் தயாராக இருக்கவில்லை. பள்ளிகளும், கல்லூரிகளும் மூடப்பட்ட நிலையில், தாறுமாறான இணையவழி கற்றல் மாதிரிகளை அறிமுகப்படுத்தி, இழந்த நேரத்தை ஈடுசெய்ய வேண்டுமென்ற பைத்தியக்காரத்தனமான அவசரம் அனைவரிடமும் இருந்தது. பெரும்பாலான இந்திய கல்வி நிறுவனங்களில், நல்ல நிலையில் வேலை செய்கின்ற கணினிகளோ, சரியான அலைவரிசையுடனான வைஃபை இணைப்புகளோ இருந்தால், அது உண்மையில் அதிசயம்தான். இத்தகைய தொழில்நுட்பக் குறைபாடுகளுக்கு இடையே, எந்தவொரு இணையவழி நடவடிக்கைகளும் தோல்வியடையவே செய்யும்.
ஆனாலும் இணையவழி வகுப்புகள் தொடங்கி, இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும், இதுபோன்ற மோசமாக ஒட்டி வைக்கப்பட்டு செயல்படுத்தப்படும் திட்டத்தை, அவ்வாறே தேர்வுகளுக்கும் மேற்கொள்ள முடியாது என்பது கவனிக்கத் தக்கது. குறிப்பாக இங்கே இருக்கின்ற வைஃபை மற்றும் கணினி பாதுகாப்பை யாராலும் நம்ப முடியாது. அறிவை வழங்குவதாக வகுப்பறைகள் இருக்கின்றன என்றாலும், நடத்தப்படுகின்ற தேர்வுகள், குறிப்பாக இந்தியக் கல்விச் சூழலில், மதிப்பீடு மற்றும் போட்டிகள் குறித்ததாக மட்டுமே இருக்கின்றன. எனவே, மாணவர்கள் முறையாக கற்பிக்கப்படவில்லை என்ற நிலையில், முறையான மதிப்பீடு என்ற கேள்வி எழவே கூடாது.
அனைத்து தரப்பு மாணவர்களும்
மார்ச் மாத மத்தியில் டெல்லி பல்கலைக்கழகம் மூடப்பட்டது, இப்போது இணையம் மூலமாக இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது குறித்து அதிகாரிகள் குழப்பி வருகிறார்கள். இவ்வாறான சூழலில், முதன்மை பங்குதாரர்களாக இருக்கின்ற மாணவர்களிடமிருந்து எந்தவொரு கருத்தும் பெறாமலேயே, இத்தகைய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
டெல்லி பல்கலைக்கழகம் போன்ற பொது பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள், வாழ்க்கையின் அனைத்து தரப்பையும் சார்ந்தவர்களாக இருக்கின்றார்கள். அந்த மாணவர்களில் பெரும்பாலானோர் தங்கள் வீடுகளுக்கும் கிராமங்களுக்கும் திரும்பிச் சென்றிருக்கின்றனர். இணையவழியிலான தேர்வுகளை நடத்துவதற்கு மிக அவசியமாகத் தேவைப்படுகின்ற விரைவான வைஃபை இணைப்பு வசதி, தனிப்பட்ட கணினிகள் அல்லது மடிக்கணினிகள், தங்கள் வீடுகளில் அமைதியான இடம் போன்ற வசதிகளுக்கான வாய்ப்புகள் அனைத்து மாணவர்களிடமும் நிச்சயம் இருக்கப் போவதில்லை.
டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. வரலாறு படித்து வருகின்ற மாணவர் ஒருவர், ’பேனா, காகிதம் போன்ற அடிப்படை வசதிகளே எங்களிடம் இல்லாத நிலையில், இணையவழித் தேர்வுகள் எட்டாக் கனியாக எங்களிடமிருந்து வெகு தொலைவிலேயே இருக்கின்றன’ என்கிறார். இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ளும் பல மாணவர்களில் இவரும் ஒருவர். இதுவே இணையவழி வகுப்புகளாக இருந்தால், அவற்றில் கலந்து கொள்ளலாம் அல்லது அந்த வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாத போது, கலந்து கொண்டவர்களை அணுகி அவர்களிடம் உள்ள குறிப்புகளைப் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் தேர்வுகளைப் பொறுத்தவரை, வேறு ஒருவரை எவ்வாறு நம்புவது? ஆக தேர்வு என்ற ஒன்று ஏன் வேண்டும் என்ற கேள்வி இங்கே எழுகின்றது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் (ஜே.என்.யூ), அதிகாரிகள் தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளனர். ஆனால் ஜூன் அல்லது ஜூலை மாதங்களுக்குள் தேர்வுகள் நடத்துவதற்கான சூழல் ஏற்பட்டு விடும் என்று நம்புகிறார்கள். வெவ்வேறு தேர்வு மையங்களை தங்களுடைய சொந்த தேர்வு முறைகளைப் பயன்படுத்தி தேர்வுகளை நடத்த ஜே.என்.யூ நிர்வாகம் அனுமதித்துள்ளது. குறிப்பாக அறிவியல் துறைகள் ஆஃப்லைன் தேர்வுகளுக்குச் செல்வதைத் தேர்வு செய்திருக்கின்றன.
புதிய கொரோனா வைரஸ் தன்னுடைய கணிக்க முடியாத தன்மையில் சீராக இருப்பதை, கடந்த சில மாதங்கள் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் போகப் போகின்ற பாதை உண்மையில் யாருக்கும் தெரியாது என்ற நிலையில், எஞ்சிய ஆண்டிற்கான அட்டவணையைத் திட்டமிடுவது சற்று குழப்பம் ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. குறிப்பாக மாணவர்களில் பெரும்பாலானோர் டெல்லிக்கு வெளியே வசித்து வருகின்ற நிலையில், மீண்டும் நகரத்திற்கு வருவதற்கான பயணத்தை அவர்கள் முதலில் திட்டமிட வேண்டும்.
தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்
இவ்வாறு செய்ய வழி இல்லாவிட்டாலும், பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் இன்னும் தேர்வுகளை நடத்துவதிலே மிகவும் தீவிரமாக இருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, தேர்வுகளே கல்விக்கான ஒரே அடையாளமாகத் தெரிகின்றன. இந்திய கல்வி நிர்வாகங்கள் எப்போதுமே தங்கள் மாணவர்களிடம் கருணை காட்டுவதாக இருப்பதில்லை என்பதால், இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. எளிமையான நிர்வாகப் பணிகள் குறித்த சிக்கலான நடைமுறைகளிலிருந்து, ஒத்துழைக்காத, சிக்கலான வலைத்தள சேவையகங்கள், ஊதியமில்லாத கல்வி வளங்கள், அணுக முடியாத அதிகாரிகள் என்று அனைத்துமே – மாணவர்களின் வாழ்க்கையை முடிந்தவரை கடினமாக்குவதற்கான நிறுவன கட்டமைப்பையே அவை கொண்டிருக்கின்றன.
நான்கு மாதங்களாக வகுப்பில் அமர்ந்திருந்த மாணவர்கள், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றைக் கற்றுக்கொண்டதாக தேர்வுகளின் மூலம் நிரூபிக்க வேண்டும். உண்மையில் பெரும்பாலான மாணவர்கள் வகுப்பில் நிச்சயமாக உட்கார மாட்டார்கள். ஏதோவொரு வழிகாட்டி புத்தகத்தைக் கொண்டு அவர்களால் இந்த தேர்வுகளில் எளிதில் தேர்ச்சி பெற முடியும். எனவே, அடிப்படையில், இந்த தேர்வுகளின் நோக்கம் ஒருபோதும் நிறைவேறுவதில்லை. இருந்தாலும், சாதாரண சூழ்நிலைகளில் இவையனைத்தும் நியாயமானவையாகவே இருக்கின்றன.
ஆனால் தற்போதைய நிலைமை அதுபோன்று இயல்பானதல்ல. இந்த பல்கலைக்கழகங்கள் அனைத்தும் தங்களுடைய விதிமுறைகளிலிருந்து விலகி, தேர்வுகளை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதற்கு இதுதான் சரியான நேரம்.. இதுவொன்றும் விசித்திரமான பரிந்துரை இல்லை. ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் படிக்கும் நண்பர் ஒருவர், அங்கிருக்கும் பேராசிரியர்கள் குழு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், மாணவர்களுக்கு அவர்களின் கடந்த கால செயல்திறனின் அடிப்படையில் சராசரி மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளதாக கூறினார். தங்களுடைய மதிப்பெண்ணை மேம்படுத்த விரும்புகின்ற மாணவர்களுக்கு தேர்வுகளை எழுத அனுமதி வழங்கலாம் என்றும் அந்த குழு பரிந்துரைத்துள்ளதாக அவர் என்னிடம் கூறினார்.
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தால் இதைச் செய்ய முடியுமென்றால், நிச்சயமாக, அனைத்து பல்கலைக்கழகங்களும் அதைப் பின்பற்றலாம். தொற்றுநோய்க்கு நடுவில் தேர்வுகளை எழுதுமாறு மாணவர்களைக் கேட்பது முற்றிலும் நியாயமற்றது என்பதை பல்கலைக்கழகங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தேர்வுகளை எழுதுவதற்கன வசதிகள் பற்றிய கேள்விகள் மட்டுமல்லாமல், மாணவர்களின் உளவியல் சூழ்நிலைகள் குறித்தும் இங்கே கேள்விகள் எழுகின்றன. இந்த கொரோனா வைரஸ் எடுத்துள்ள உயிர்களின் எண்ணிக்கையை கேள்விப்படுகின்ற அவர்களால் எவ்வாறு தேர்வுகளுக்கு படிப்பதில் கவனம் செலுத்த முடியும்? மேலும், இந்த மாணவர்களில் சிலர் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம். தேர்வுகளை எழுதுவது அத்தகைய மாணவர்களுக்கு மேலும் அழுத்தம் தருவதாதாகவே இருக்கும்.
2020ஆம் ஆண்டிற்கான தேர்வுகளை ரத்து செய்யுங்கள். கற்றலில் கவனம் செலுத்துங்கள்.
ரேச்சல் ஜான் , பத்திரிக்கையாளர், தி பிரிண்ட் இதழ்
தி பிரிண்ட் இணைய இதழ், 2020 ஏப்ரல் 26
தமிழில்
முனைவர் தா.சந்திரகுரு