நோம் சோம்ஸ்கியைப் பொறுத்தவரைஇந்த நெருக்கடி “முதலாளித்துவத்தின் புதிய தாராளமய பதிப்பின் மற்றொரு மகத்தான தோல்வியைகுறிக்கிறது என்பதே கொரோனா வைரஸ் தொற்றுநோய் தந்திருக்கும் முக்கிய படிப்பினையாக இருக்கிறது. மேலும் அவர் வாஷிங்டனில் ’அரசாங்கத்தை நடத்து வருகின்ற கோமாளிகளால்’ நிலைமை மோசமடைகிறது என்கிறார்.

மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகப் பேராசிரியராக மொழியியலில் புரட்சியை  ஏற்படுத்திய, உலகின் மிக முக்கியமான அறிவுஜீவிகளில் ஒருவராக உள்ள நோம் சாம்ஸ்கி, 2017 இலையுதிர் காலத்தில் அரிசோனா பல்கலைக்கழகத்தில் ஆசிரியப் பணியில் சேர்ந்தார். டுசானில் உள்ள தனது வீட்டிலிருந்து EURACTIVஇன்  கூட்டாளரான Efe  உடன்  அவர் பேசினார்.

கோவிட்-19 இலிருந்து என்ன கற்றுக் கொள்ளலாம் என்று கேட்டதற்கு, தற்போதைய பொருளாதார ஒழுங்கின் தோல்விகளை சுட்டிக்காட்டிய சாம்ஸ்கி, இது முதலாளித்துவத்தின் நவீன தாராளவாத பதிப்பின் மற்றொரு மிகப்பெரிய தோல்வியாக இது இருக்கிறது. மிகப்பெரும் தோல்வி. இதிலிருந்து நாம் பாடத்தைக் கற்றுக்கொள்ளவில்லை என்றால், அடுத்த முறை அது மிகமோசமாகிவிடும்’ என்றார். ’என்ன நேர்ந்திருக்கிறது என்பது மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது.

2003ஆம் ஆண்டில் ஏற்பட்ட சார்ஸ் தொற்றுநோய்க்குப் பிறகு, பிற தொற்றுநோய்கள் வரும்; அநேகமாக கொரோனா வைரஸ் வகையிலான தொற்றுநோய் வரும் என்பதை அறிவியலாளகள் நன்கு அறிந்திருந்தனர் அந்த நேரத்தில் ஃப்ளூ காய்ச்சலுக்கு செய்யப்படுவதைப் போன்று, தயார் செய்ய முடிந்திருக்கும். ஒவ்வொரு ஆண்டும் சிறிய மாறுபாடுகள் இருப்பதால், புதிய காய்ச்சல் தடுப்பூசியை நீங்கள் வைத்திருக்க வேண்டியுள்ளது.  உள்ளது. நீங்கள் அதற்குத் தயாராக இருப்பதால், மிக விரைவிலேயே அதை நீங்கள் உற்பத்தி செய்கிறீர்கள்’.  ‘இப்போது அது போன்று செய்யப்படவில்லை. யாராவது அதற்கான முயற்சியைத் தொடர வேண்டும்’

‘இரண்டு சாத்தியங்கள் இப்போது உள்ளன. மருந்து நிறுவனங்கள்: அவர்களிடம் வளங்கள் உள்ளன. நம் மீது பரிசுகளைத் திணிக்கின்ற அவர்கள் மிகப்பெரிய பணக்காரர்களாக இருக்கின்றனர். ஆனால் அவர்கள் அதைச் செய்ய மாட்டார்கள். அவர்கள் சந்தையிடம் இருந்து வருகின்ற சமிக்ஞைகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். வரவிருக்கின்ற பேரழிவிற்காக மருந்துகளைத் தயாரிப்பதில் எந்த லாபமும் இல்லை என்று சந்தை சமிக்ஞைகள்  அவர்களிடம் கூறியிருக்ன்றன’.

’பின்னர் நவீன தாராளவாத சுத்தியல் வருகின்றது: அரசாங்கங்கள் எதையும் செய்வதற்கு அது அனுமதிப்பதில்லை. அரசாங்கங்களே பிரச்சினை; அவை தீர்வு அல்ல என்று ஆக்கி விடுகின்றன’.

’வாஷிங்டனை இயக்குகின்ற கும்பலினால், அமெரிக்கா ஒட்டுமொத்த பேரழிவிற்குள்ளாகப் போகிறது. தங்களைத் தவிர உலகில் உள்ள அனைவரையும் எப்படிக் குறை கூறுவது என்பது தெரிந்த அவர்களே, இந்தப் பேரழிவிற்கு பொறுப்பு. இப்போதுள்ள நெருக்கடியின் மையமாக அமெரிக்கா உள்ளது. உலக சுகாதார அமைப்பிற்கு இறப்பு மற்றும் தொற்றுநோய்கள் குறித்த தரவைக் கூட வழங்க முடியாத அளவிற்கு செயல்பட முடியாத ஒரே நாடு இன்று இதுதான்’.

பிரச்சினையை  ட்ரம்ப்  நிர்வாகம் அணுகுகின்ற முறை இயற்கைக்கு மாறாக இருக்கிறது என்று  சாம்ஸ்கி விவரித்தார்.

’பிப்ரவரியில், தொற்றுநோய்  ஏற்கனவே  அளவிற்கு மீறி அதிகரித்திருந்தது. அமெரிக்காவிற்கு வெளியே இருக்கின்ற அனைவரும் அதை அங்கீகரித்துள்ளார்கள்… பிப்ரவரி  மத்தியில், அடுத்த ஆண்டிற்கான தனது புதிய பட்ஜெட்டை டிரம்ப் கொண்டு வருகிறார். அதை நாம் உற்று நோக்க வேண்டியது அவசியம்.

Coronavirus news: Noam Chomsky reveals ‘true culprit’ behind COVID …

ஒரு மிகப்பெரிய தொற்றுநோய்க்கு மத்தியில், நோய் கட்டுப்பாட்டு மையம் மற்றும் அரசாங்கத்தின் சுகாதார தொடர்பான பிற பகுதிகளுக்கு அளிக்கப்படுகின்ற நிதி, அவற்றை ஏற்கனவே இருந்ததைவிட குறைக்கும் வகையில் வெட்டப்படுகிறது. புதைபடிவ எரிபொருள் தொழிலுக்கான நிதியுதவி அதிகரிக்கப்படுகிறது. மேலும் ஒழுங்கமைக்கப்பட்ட மனித வாழ்வை அழிக்கின்ற வகையில் மானியங்கள் வழங்கப்படுகின்றன. ராணுவத்திற்கான கூடுதல் நிதி, அளவிற்கதிகமாக, கட்டுப்பாடற்று இருக்கிறது. டிரம்பின் அந்த புகழ்பெற்ற  சுவருக்கு கூடுதலாக நிதி வழங்கப்பட்டிருக்கிறது.

’இது அரசாங்கத்தை நடத்தி வருகின்ற  சமூகத்திற்கெதிரான நோய் கொண்டிருக்கும் கோமாளிகளின் தன்மையைப் பற்றியும், அவர்களால் நாடு பாதிக்கப்படுவதைப் பற்றியும்  உங்களுக்குச் சொல்கிறது’

’அவர்கள் இப்போது வேறொருவரைக் குறை கூறவும், சீனாவைக் குறை சொல்லவும், உலக சுகாதார அமைப்பின் மீது குற்றம் சுமத்தவும் தீவிரமாக முயல்கின்றனர். அவர்கள் இப்போது செய்து வருவது உண்மையில் குற்றமாகும். உலக சுகாதார அமைப்பிற்கு நிதி அளிக்க மறுப்பது  – இதற்கு என்ன பொருள்?  உலக சுகாதார அமைப்பு  உலகம் முழுவதும், பெரும்பாலும் ஏழ்மையான நாடுகளில், தாய்மார்களின் உடல்நலம், வயிற்றுப்போக்கு இறப்பு மற்றும் இதுபோன்ற செயல்பாடுகளை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆக ‘தெற்கே இருப்பவர்கள் பலரைக் கொல்வோம். அது  எனது தேர்தல் வாய்ப்புகளை  அதிகரிக்கும்’ என்றே அவர்கள் சொல்ல வருகிறார்கள்’.

கொரோனா வைரஸின் அச்சுறுத்தலைக் குறைக்க முயன்ற ட்ரம்ப், அதற்குப் பின்னர் ஆரம்பத்தில் தான் தவறு செய்ததை ஒப்புக் கொள்ளாமல், நெருக்கடியைச் சமாளிப்பவர் என்ற பாத்திரத்தைத் தழுவிக் கொண்டார்.

’டிரம்ப் பெரிய ஆள் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதுவரையிலும் இருந்தவர்களிலேயே அவர்தான்  மிகப் பெரிய  நம்பிக்கை மனிதர்.  பி.டி.பர்னாமையே தகுதியற்றவர் போன்று தோற்றமளிக்கச் செய்கிறார். தன்னுடைய ஒரு கையில் ‘ஐ லவ் யூ, நான் உங்களை மீட்க வந்திருப்பவன். என் மீது நம்பிக்கை வைக்கவும், நான் உங்களுக்காக இரவும் பகலும் உழைக்கிறேன்’ என்று ஒரு பேனரைப் பிடித்துக் கொண்டு, அடுத்த கையைக் கொண்டு உங்களுடைய முதுகில் குத்துகின்ற திறன் கொண்டவராக அவர் இருக்கிறார்.

தன்னை வணங்குகின்ற வாக்காளர்களை அவர் இப்படி வெறித்தனமானகவே கையாளுகிறார். அவர் என்ன செய்கிறார் என்பது முக்கியமல்ல. குடியரசுக் கட்சியினர்  பார்க்கின்ற ஊடகங்களின் ஒரே ஒரு பகுதியான ஃபாக்ஸ் நியூஸ், ரஷ் லிம்பாக், மீடியாவின் ப்ரீட்பார்ட்  பகுதி போன்ற மிகவும் சுவாரஸ்யமான ஊடக நிகழ்வுகள் அவருக்கு இப்போது உதவி வருகின்றன’

’அவர் என்ன சொன்னாலும், அதை அப்படியே அவை எதிரொலிக்கின்றன. இன்றைக்கு அவர் ‘இது வெறும் காய்ச்சல், அதை மறந்துவிடுங்கள்’ என்று சொன்னால், ‘ஆம், இது காய்ச்சல்தான், அதை மறந்துவிடுங்கள்’ என்று சொல்வார்கள். அடுத்த நாள் ‘இது ஒரு பயங்கரமான தொற்றுநோய். நான்தான் அதை முதலில் கவனித்தேன்’ என்று  அவர் கூறினால், ‘வரலாற்றிலேயே அவர் மிகப் பெரிய நபர், அவரது கண்டுபிடிப்பு மிக அற்புதமான விஷயம்’ என்று அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கூக்குரலிடுகிறார்கள்.

’ஒவ்வொரு நாளும் இதுபோன்றுதான் கடந்து செல்கிறது. இதற்கிடையில் அவரே, காலையில் ஃபாக்ஸ் நியூஸைப் பார்த்து விட்டு, இன்று தான் என்ன சொல்ல வேண்டும் என்பதைத் தீர்மானித்துக் கொள்கிறார். ரூபர்ட் முர்டோக், ரஷ் லிம்பாக் மற்றும் வெள்ளை மாளிகையில் உள்ள சமூகத்திற்கெதிரான நோய் கொண்டிருப்பவர்கள் நாட்டை அழிவிற்கு இட்டுச் செல்வது திகைப்பூட்டுவதாக இருக்கிறது’.

Noam Chomsky on Trump’s Disastrous Coronavirus Response, Bernie …

இயற்கையோடு மனிதர்கள் தங்களை தொடர்பு கொள்ளும் விதத்தை இந்த தொற்றுநோய் மாற்றுமா என்ற  கேள்விக்கான பதில் இளைஞர்களிடமிருந்தே வரும் என்று சாம்ஸ்கி கூறுகிறார்.

’கணிப்பதற்கான வழி  எதுவும் இல்லை. இப்போது நடந்து கொண்டிருப்பதற்கு உலக மக்கள் எவ்வாறு எதிர்வினை ஆற்றுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அது இருக்கிறது. இப்போதிருக்கின்ற நவீன தாராளவாத பிளேக்கை விரிவுபடுத்துகின்ற வகையில் மிகுந்த சர்வாதிகார, அடக்குமுறை அரசுகளுக்கே இது வழிவகுக்கும். உண்மையில், அவர்கள் இப்போது அதைத்தான் செய்து வருகிறார்கள். நினைவில் கொள்ளுங்கள். எப்போதும் தாங்கள் போராடி வருவதை ஒருபோதும்  முதலாளித்துவ வர்க்கம் விட்டுத் தராது. இதற்கிடையே பாதுகாப்பை வழங்குகின்ற விதிமுறைகளை அழித்தொழித்து விட்டு, புதைபடிவ எரிபொருட்களுக்கு அதிக நிதி ஒதுக்குமாறு அவர்கள் கேட்கிறார்கள்’.

’நேற்றுதான், டிரம்பின் கீழ் இருக்கின்ற (அமெரிக்க) சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம், நிலக்கரி உற்பத்தியாளர்களின்  இணை அமைப்பாக  மாற்றப்பட்டுள்ளது … நிலக்கரி ஆலைகளைச் சுற்றியுள்ள நிலங்களில் பாதரசம் மற்றும் பிற மாசுபடுத்துகின்ற பொருட்கள் கொட்டப்படுவதைக் கட்டுப்படுத்துகின்ற விதிகளை அது நீக்கியுள்ளது. ‘அமெரிக்க குழந்தைகளை அதிக எண்ணிக்கையில் கொல்வோம், சுற்றுச்சூழலை அழிப்போம். இதன் மூலம் நிலக்கரி நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்ட முடியும்’ என்பதே இதற்கான பொருள். அவை சுற்றுச்சூழலை அழிக்கின்றன. ஒவ்வொரு நாளும் அதைத்தான் அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்., அவர்கள் நிறுத்தப் போவதில்லை. எதிர் சக்திகள் எதுவும் இல்லையென்றால், இந்த உலகம் தான் அழிந்து போக வேண்டியிருக்கும்’

கோவிட்-19இன் புவிசார் அரசியல் தாக்கங்களை எடைபோடுகின்ற சாம்ஸ்கி, ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஒற்றுமை  இல்லாதது குறித்து தவறு காண்கிறார்.

’சர்வதேச அளவில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கும்போது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது’.

’நெருக்கடியைக் கையாள்வதில் ஜெர்மனி மிகச் சிறப்பாக செயல்படுகிறது. அது அதிகப்படியான மருத்துவமனை திறனைக் கொண்டிருக்கிறது. அதிகப்படியான நோயறிதல் திறனைக் கொண்டிருக்கிறது. நவீன தாராளமய விதிகளை அது  கண்டிப்பாக கடைப்பிடிக்கவில்லை’.

’இத்தாலியில் தொற்றுநோய் மிகவும் கடுமையாக இருக்கிறது. அப்படியிருக்கும் போது அவர்கள் ஜெர்மனியிலிருந்து உதவி பெறுகிறார்களா? இல்லை. அட்லாண்டிக்கின் மறுபுறத்தில் இருக்கின்ற உள்ள கியூபா என்ற ‘வல்லரசிடமிருந்து’ அவர்கள் உதவி பெறுகிறார்கள்,. கியூபா டாக்டர்களை அனுப்வி வைக்கிறது, சீனா பொருட்களை அனுப்புகிறது, எனவே குறைந்தபட்சம் இந்த நாடுகளிடமிருந்து அவர்கள் சில உதவிகளைப் பெறுகிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பணக்கார நாடுகளிடமிருந்து அல்ல. இது சிந்தனையைத் தூண்டுகின்ற ஒரு விஷயத்தை உங்களுக்குத் தெரிவிக்கிறது’.

’உண்மையில், இப்போது உண்மையான சர்வதேசத்தைக் காட்டுகின்ற ஒரே நாடு – இது முதல் முறையல்ல –  கியூபா மட்டுமே. அது நம்மைச் சிந்திக்க வைக்க வேண்டும். 60 ஆண்டுகளாக மோசமான அமெரிக்காவின் தாக்குதல், பொருளாதாரத்தடை, பெருமளவிலான பயங்கரவாதத்திற்கு கியூபா உள்ளாகியுள்ளது. சில அதிசயங்களால், அவர்கள் தப்பிப் பிழைத்திருக்கிறார்கள். சர்வதேசவாதம் என்றால் என்ன என்பதை உலகுக்கு அவர்கள் தொடர்ந்து காட்டி வருகின்றனர்’.

’ஆனால் அமெரிக்காவில் இதைப் பற்றி பேச நீங்கள் முடியாது. அமெரிக்காவில் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், கியூபா மனித உரிமை மீறல்களைக் கொண்டுள்ளது என்று அதனைக் குறை கூறுவது மட்டுமே. கியூபாவில் அவ்வாறு நடக்கவே செய்கிறது. உண்மையில், மிக மோசமான மனித உரிமை மீறல்கள் அங்கேதான் நடக்கின்றன. தென்கிழக்கு கியூபாவில் குவாண்டனாமோ என்ற இடத்தில் அவ்வாறான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அந்த இடம் அமெரிக்காவிடம் உள்ளது, அமெரிக்கா அந்த இடத்தை கியூபாவிடமிருந்து  துப்பாக்கி முனையில் பறித்துக் கொண்டது. அங்கிருந்து திரும்பிச் செல்ல மறுக்கிறது, ஆனால் இவற்றையெல்லாம் நாம் சொல்ல வேண்டியதில்லை’.

’கண்ணியமான, கீழ்ப்படிதலுள்ள நபர் இன்னும் வேறு ஏதாவது சொல்ல வேண்டும். சீனாவைக் குறை சொல்ல வேண்டும், ‘மஞ்சள் அபாயம்’ என்று அதனை அழைக்க வேண்டும். அது அமெரிக்க வரலாற்றில் மிக ஆழமாக ஊடுருவியுள்ளது. சீனர்கள் நம்மை அழிக்க வருகிறார்கள், 19ஆம் நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள் என்று நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தூண்டி விடலாம்’.

 

Chomsky on Education, Children, and the Value of Work | The Bully ...
Chomsky on Education, Children, and the Value of Work | The Bully …

‘ஒரு முற்போக்கான சர்வதேசத்திற்கான அழைப்பு இப்போது இருக்கிறது. இந்த அழைப்பை அமெரிக்காவில் உள்ள பெர்னி சாண்டர்ஸ், ஐரோப்பாவில் யானிஸ் வரூபாகிஸ் ஆகியோர் விடுத்திருக்கின்றனர். ஐரோப்பா, அமெரிக்கா, தெற்கிலிருந்து முற்போக்கான கூறுகளை ஒன்றிணைக்க வேண்டும். இது வெள்ளை மாளிகையில் உருவாக்கப்பட்டிருக்கின்ற பிற்போக்கு சர்வதேசத்தை எதிர்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது’.

வளைகுடா எண்ணெய்வள முடியாட்சிகள், அல்-சிசியின் எகிப்து, மோடியின் இந்தியா, வலதுசாரி தலைமையிலான இஸ்ரேல் மற்றும் விக்டர் ஓர்பனின் கீழ் உள்ள ஹங்கேரி உள்ளிட்ட மிகவும் பிற்போக்குத்தனமான, மிருகத்தனமான நாடுகளை  ஒன்றிணைக்க டிரம்ப்  நிர்வாகம் முயல்கிறது என்று சாம்ஸ்கி கூறுகிறார். .

’பெர்னியை அடிப்படையாகக் கொண்ட முற்போக்கு சர்வதேசம் மட்டுமே வளரும் என்பதே நான் காணுகின்ற ஒரே உண்மையான நம்பிக்கை, அடிவானத்தில் தெளிவாகத் தெரிகின்ற நம்பிக்கை. சாண்டர்ஸ் பிரச்சாரம் தோல்வியுற்றிருப்பதாக பொதுவாகக் கூறப்படுகிறது. இது முழுக்கத் தவறானதாகும். உண்மையில் அது மிகப்பெரிய வெற்றியாகும். நம்பமுடியாத வெற்றி. சாண்டர்ஸ் தனது கலந்துரையாடல் மற்றும் கொள்கைகள் குறித்த தளத்தை மிகவும் கணிசமாக மாற்றிக் கொண்டிருக்கின்றார். சில ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிடப்பட முடியாத  விஷயங்கள், இப்போது கொள்கை விவாதத்தின் மையத்திற்குள் வந்திருக்கின்றன. பசுமை புதிய ஒப்பந்தத்தைப்  போல, அது உயிர்வாழ்வதற்கு இன்றியமையாததாக இருக்கிறது’.

https://www.euractiv.com/section/economy-jobs/interview/chomsky-on-covid-19-the-latest-massive-failure-of-neoliberalism/?fbclid=IwAR1TbFus1-UmsUU4PDiEm38ihev_LV7q1xdLUKnVE7KZOdltWesFY_7ttWs

கிறிஸ்டினா மேக்டலனா  

2020 ஏப்ரல் 25

தமிழில்

முனைவர் தா.சந்திரகுரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *