மஞ்சள் காமாலை நோயை அறியாதவர்கள் இருக்க முடியாது. இந்நோயைப் பற்றிய பதிவு 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்திருக்கிறது. இன்றைய நவீன மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவரும் கிமு நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவருமான ஹிப்போக்கிரடஸ் இந்நோயைப் பற்றி பதிவு செய்திருக்கிறார். தமிழகத்தில் வீரராஜேந்திர சோழர்கால (பதினோராம் நூற்றாண்டு) கல்வெட்டுகளில் மஞ்சள்காமாலை பற்றிய குறிப்பு உள்ளது.
இந்நோய் ஒரு வகைக் கிருமியால் பரவுகிறது என்கிற புரிதல் ஆரம்பத்தில் இருந்தது. எனவே அக்கிருமியை ஒழிக்கும் மருந்துகளின் மேல் கவனம் செலுத்தபட்டது. பொதுவாக ஒருவர் கிருமியால் குறிப்பாக வைரஸால் தாக்கப்பட்டால் அவருடைய நோயெதிர்ப்பு ஆற்றல் உடனடியாக செயல்பட்டு எதிர்வினையாற்றும், எப்பேதும் தயார் நிலையில் இருக்கும் உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தியானது (innate immunity) அன்றாடம் தாக்கும் கிருமிகளை உடனடியாக எதிர்க்கும். மேலும் இதுவரை கண்டிராத புதிய கிருமிகள் வந்தால் அவற்றை ஒழிப்பதற்கான ஆயுதத்தை நம் உடல் தத்தெடுத்த நோய் எதிர்ப்பு சக்தி (Adapted immunity) மூலம் அதனை எதிர்க்கும். அந்த ஆயுதத்தை ஆண்டிபாடி (Antibody) என்பார்கள். மனித உடலில் நோயை ஏற்படுத்தும் கிருமிகளின் மேல்புறத்தில் உள்ள மூலக்கூறு அமைப்பானது நமது செல்களிடம் பொருந்துமாறு இருக்கும். இவற்றை ஆண்டிஜன் என்பார்கள். இந்த ஆண்டிஜன்கள் செல்களி மூடியைத் திறக்கும் சாவிகளாக செயல்படுகின்றன. கிருமிகளின் ஆண்டிஜன்கள் செல்களைத் திறந்து செல்வதை தடுக்கும் முகமாக தத்தெடுத்த நோயெதிர்ப்பு சக்தி முலம் தயாரிக்கப்படும் ஆண்டிபாடிக்கள் இந்த ஆண்ஜென்களிடம் பொருந்துமாறு வடிவமைக்கப்படுவதால் கிருமிகள் ஆண்டிபாடிக்காளல் கவ்விப் பிடிக்கப்படுகின்றன. கிருமியின் புதிய வைரஸ்களை எதிர்கொள்வது இந்த தத்தெடுத்த நோய் எதிர்ப்பு சக்தி மூலமாகவே நடைபெறுகிறது. இவ்வாறு உருவான ஆண்டிபாடிக்கள் நோயை வீழ்த்தியவுடன் சிலகாலம் உடலில் தங்கியிருக்கும். இதனை ரத்தத்தில் உள்ள சீரம் என்ற மஞ்சள் திரவத்திலிருந்து பிரித்தெடுக்கலாம். அவ்வாறு பிரித்தெடுக்கும் ஆண்டிபாடி வைத்து இவருக்கு இன்ன கிருமி தாக்கியிருக்கிறது என்பதை அறியலாம்.
மஞ்சள் காமாலை நோய் அடிப்படையில் நோயின் அறிகுறியே. இது கல்லீரலின் செயல்திறன் கெடுவதால் ஏற்படுவது. உடல் மேல் தோல் மஞ்சள் நிறமாக மாறுவதும் கண்களில் உள்ள வெள்ளைப் பகுதி மஞசளாக மாறுவதையும் வைத்து இதை நாம் அறிந்திருக்கிறோம். கல்லீரல் பாதிப்பை பாதிப்புகளை கல்லீரல் அழற்சி (Hepatitis) என்று பெயரிட்டு அழைக்கப்படுகிறது. கல்லீரல் அழற்சி ஒருவகை கிருமிதாக்குதலால் ஏற்படுகிறது. இக்கிருமிகள் தண்ணீர் மற்றும் உணவு வழியாக பரவுகிறது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. பிற்கால அறிவியல் முன்னேற்றத்தின் விளைவாக மஞ்சள் காமாலையை தோற்றுவிக்கும் கிருமியான வைரஸ் அடையாளப்படுத்தப்பட்டு விட்டது. எனவே இந்த வைரஸ் ஒரு ஆர்என்ஏ வைரஸ் என்று கண்டுபிடித்து அதற்கு புரத மேலோட்டிலான ஒற்றை இழை வடிவ ஆர்என்ஏ வைரஸ் கூட்டம் (Picornaviridae) என்று பெயரிட்டு அதற்கான மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டது. பல நூற்றாண்டுகளாக புழக்கத்தில் இருந்த உள்ளூர் மருத்துவ முறைகளும் இதற்கான மருந்துகளை கண்டுபிடித்து பயன்படுத்தி வந்தன.
எனினும் அறுவை சிகிச்சை செய்பவர்களில் பெரும்பாலோனோர் மஞ்சள் காமாலை ஏற்பட்டு மாண்டு போவது புரியாத புதிராக தொடர்ந்தது. அறுவைசிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு மஞ்சள் காமலை ஏன் ஏற்படுகிறது? அறுவை சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு திட்டமிட்ட பாதுகாக்கப்பட்ட உணவுமுறைகள் கடைப்பிடிக்கும் போது தண்ணீரின் மூலமாகவும் உணவு மூலமாகவும் மட்டுமே பரவும் இந்த நோய் எப்படி ஏற்படுகிறது? என்ற கேள்வி முன்னுக்கு வந்தது. அமெரிக்காவின் பெத்தேஸ்டா நகரில் இயங்கும் ‘நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் ஹெல்த் ‘ என்ற ஆய்வு நிறுவனத்தில் 1970களில் பணியாற்றி வந்த பரூச் புளூம்பெர்க் என்ற ஆய்வாளர் அறுசை சிகிச்சைக்குப் பின் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவரின் இரத்தில் இருந்து சீரத்தை பிரித்து எடுத்து ஆய்வு செய்கையில் அதில் இருந்த ஒரு ஆண்டிபாடிக்களில் ஒரு வித்தியாசமான இரசாயன வினையை கண்டறிந்தார்.
ஆஸ்திரேலியா நாட்டின் பூர்வகுடியைச் சேர்ந்த அந்த நோயாளியின் இரத்த சீரத்தை பரிசோதனை செய்ததால் இதற்கு ஆஸ்திரேலிய ஆண்டிஜன் (Au-Antigen) என்று பெயரிட்டார். இவருக்கு இரத்ததானம் செய்தவரின் உடலை பரிசோதித்ததில் இதே ஆண்டிஜன் இருப்பது அறியப்பட்டது. எனவே கல்லீரல் அழற்சி வெறும் தண்ணீர் அல்லது உணவு மூலமாக மட்டும் பரவுகிறது என்ற முடிவு முழுமையானது அல்ல என்பது நிரூபனம் ஆகியது. தீவிர ஆய்வுக்குப் பிறகு தண்ணீர் மற்றும் உணவு மூலமாக பரவும் நோய்க்கு காரணமான வைரஸ் கல்லீரல் அழற்சி A வைரஸ் (HAV) என்று பெயரிட்டு அழைக்கப்பட்டது. இரத்த செலுத்தலின் ஏற்படும் கல்லீரல் அழற்சிடககு காரணமான வைரஸை கல்லீரல் அழற்சி B வைரஸ் (HBV) என்றழைக்கப்பட்டது. இதை சீரம் ஹெப்பாட்டிட்டிஸ் என்றும் கூறுவார்கள். இந்த நோயை உண்டாக்கும் கிருமிகள் HAV கிருமியை விட சற்று மாறுபட்டது. இவை ஹெப்படான் குடும்பத்தை சேர்ந்த வைரஸ்கள். ஆக, HBV என்ற வைரஸை கண்டுபிடித்துவிட்டார்கள் இதுவும் மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் இன்னொரு வகை வைரஸ். அடுத்து என்ன? இதற்கான தடுப்பு மருந்து. அதனையும் கண்டுபிடித்துவிட்டார்கள். இதன் விளைவு அறுவை சிகிச்சையின் போது ரத்தம் செலுத்தப்பட்டவர்களின் இறப்பு வீதம் குறைந்தது. இந்த அரிய கண்டுபிடிப்புக்காக பரூச் புளூம்பெர்க்கிற்கு 1976ம் ஆண்டில் உடற்கூறியல் மற்றும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அறுவை சிகிச்சையின் போது இரத்த தானம் செய்தவர்களின் இரத்தத்தை HBV பரிசோதனை செய்த பின்பே இரத்தம் செலுத்தும் வழக்கம் நடைமுறைக்கு வந்த பின்னும் அறுவை சிகிச்சையின் போது மஞ்சள்காமாலை ஏற்பட்டு இறப்பவர்களின் இறப்பு வீதத்தை 20 சதவீத அளவிற்கு மட்டுமே குறைக்க முடிந்தது. எனவே புதிய வகை வைரஸும் மஞ்சள் காமாலை ஏற்படுத்துகிறது என்ற முடிவுக்கு வர நேர்ந்தது. இந்த மஞ்சள் காமாலையும் ரத்தம் செலுத்தப்படும் போது ஏற்படுவதால் இதை B அல்லாத வைரஸ் (non-B) என்று முதலில் பெயரிட்டார்கள்.
பரூச் புளும்பெர்குடன் பணியாற்றிய இளம் விஞ்ஞானி ஹார்வே ஆல்டர் 1970களின் மத்தியில் அவரது ஆய்வகத்தை விட்டு விலகி அதே நிறுவனத்தில் உள்ள NIH இரத்த வங்கிக்கு சென்றார். அங்கு சென்று தமது ஆய்வுப் பணிகளை தொடர்ந்தார். அவர் ஆய்வு செய்த ஒரு நோயாளிக்கு நீண்டகால நோயரும்பலில் (incubation) தோன்றும் HBV நிலைக்கு மாறாக குறுகிய காலத்தில் தோன்றியது. இதிலிருந்து ரத்தம் மூலம் பரவும் கல்லீரல் அழற்சிக்கு இரண்டு வகை வைரஸ்கள் காரணமாகிறது என்ற முடிவுக்கு வந்தார். அந்த இரண்டாவது வகை என்ன என்பதே அவரது கவனமாக இருந்தது. ‘A, B‘ வகை அல்லாத மஞ்சள் காமாலை என்பதைக் குறிக்கும் வகையில் non-A, non-B Hepatitis (NANBH) என்று பெயரிடப்பட்டது. அவரது ஆய்வில் சில ஆண்டுகள் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கடுமையான தொடர்முயற்சியின் விளைவாக ஒரு கட்டத்தில் இந்த NANBH மனிதர்கள் மட்டுமல்லாது மனிதக் குரங்குகளின் (Chimpanzee) செல்களுக்குள்ளும் இது செல்ல முடியும் என்றறிந்தார். தொடர்ச்சியான ஆய்வின் மூலம் NANBH தோற்றுவிக்கும் வைரஸ்களின் விட்டம் 30லிருந்து 60 நானோ மீட்டர் என்பதையும் மற்ற இரு வைரஸ்களிலிந்து இது எந்த விதத்தில் மாறுபடுகிறது என்பதையும் அதன் ஆண்டிஜனை வைத்து கண்டறிந்தார். முழுமையான ஆய்வில் இது ஒரு மைல்கல் என்பதில் சந்தேகம் இல்லை. இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்றாலும், மனிதக்குரங்கில் செலுத்தப்பட்ட நோயை வைத்து அனுமானிப்பது என்ற அளவிலே இருந்தது, எனவே NANBH தோற்றுவிக்கும் வைரஸின் முக்கியமான அம்சங்களை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. பத்தாண்டுகள் இந்த தேக்க நிலை நீடித்தது.
இதற்கிடையில் சிரான் கார்ப்பரேசன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மைக்கேல் ஹாட்டன் என்ற விஞ்ஞானி 1982ம் ஆண்டில் NANBH வைரஸ் தேடுதல் வேட்டையில் இறங்கினார். இவர் ஆய்வின் அணுகுமுறையில் ஒரு மாற்றத்தைக் கொணர்ந்தார். மூலக்கூறுகளை ஆய்வது என்பதே அந்த அணுகுமுறை. பொதுவாக வைரஸ்கள் ஓம்புயிர்களின் (Host) செல்களுக்குள் சென்று அந்த செல்கள் பிரியும் போது அதன் உட்கட்டமைப் பயன்படுத்தி பெருகுகின்றன. இதில் இரண்டு வகைகள் உள்ளன, முதலாவது Lytic Cycle. இவ்வகை பெருக்கம் ஓம்புயிர்களின் செல்களை அழித்து பெருகும் முறையாகும். உதாரணம் கொரானா வைரஸ். மற்றொன்று Lysogenic Cycle. இவ்வகைப் பெருக்கத்தின் போது ஓம்புயிர்களின் மரபணு வரிசைச் தொடரில் (டிஎன்ஏ சங்கியில்) போய் அமர்ந்து கொள்கின்றன. கல்லீரல் அழற்சியை ஏற்படுத்தும் வைரஸ்கள் பெருகும் முறை Lysogenic Cycle. ஆல்டர் கண்டுபிடித்த Au-Antigenஐ மனிதக்குரங்கிற்கு செலுத்தி வைரஸ் பெருகிய நிலையில் அதன் மரபவை எடுத்து அதைப் பிளந்து அதன் எதிர் மூலக்கூறை (Complementary DNA) உருவாக்கினார். இது போல் பல மூலக்கூறுகள் உருவாக்கி ஒவ்வொன்றையும் பல துண்டுகளாகப் பிரித்து ஒவ்வொன்றின் சங்கிலித் தொடர் பட்டியலைத் தயாரித்தார். NANBH நோய் தாக்கப்பட்டவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மரபணுக்களை இதே போல் துண்டுகள் செய்து, இன்னொரு சங்கிலித்தொடர் பட்டியலைத் தயாரித்தார். இரண்டையும் ஒப்பிட்டார். அப்படி ஒப்பிடுகையில் பல லட்சக்கணக்கான துண்டுகளின் தொகுப்பில் ஒரே ஒரு தொகுப்பு மட்டும் மனித மரபணுத்துண்டாகவும் இல்லை மனிதக்குரங்கு மரபணுத் துண்டாகவும் இல்லை. எனவே இதுதான் அந்த வைரஸின் மரபணுவின் முக்கிய பாகம் என்று கண்டறிந்தார். அதற்கு கல்லீரல் அழற்சி வைரஸ் C (HCV) என்று பெயரிட்டார். இவர் ஆய்வு செய்த காலத்தில் மனித மரபணுத் தொகுப்பு கண்டுபிடிப்பது முழுமையடையவில்லை ஆனால் கணிசமான மரபணுக்கள் அடையாளப்படுத்தப்பட்டுவிட்டது. இவர் செய்த பணி என்பது சளைக்காத பணி.
ஆக, ஹார்வே ஆல்டர் HCV என்ற ஒன்று இருப்பதையும் அதை Au-Antigen மூலமாக அடையாளப்படுத்தியதையும் இவை மனிதக்குரங்குகளுக்கும் பரவும் தன்மை கொண்டவை என்பதையும் கண்டுபிடித்தது ஒரு மைல்கல் என்றால். மனிதக்குரங்குக்கு இந்நோயை கொண்டு சென்று அதன் மரபணுவை எடுத்து துண்டுகளாக்கி நோயுற்ற மனிதனின் மரபணுவை எடுத்து துண்டுகளாக்கி இரண்டு துண்டுகள் தொகுப்பையும் ஆய்ந்து HCV அடையாளம் கண்டது இன்னொரு மைல்கல் ஆகும். இந்த இரண்டாவது மைல்கல்லுக்கு ஆய்வை நகர்த்திச் சென்றவர் மைக்கேல் ஹாட்டன்.
இப்படி தனிமைப்படுத்தப்பட்ட வைரஸான HCVக்கும் நோயாளிக்கு ஏற்பட்டிருக்கும் மஞ்சள்காமாலை அறிகுறிக்கும் தீர்க்கமான தொடர்பு இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும். இதைச் செய்தவர் சார்லஸ் ரைஸ். பொதுவாக மரபணுத்தன்மை உள்ள எந்த ஒரு மூலக்கூறும் தன்னுருவாக்கும் (cloning) ஆற்றல் கொண்டவை. எனவே HCV எப்படி தன்னுருவாக்கம் செய்கிறது என்கிற ஆய்வைத் தொடர்ந்தார். முதலில் HCV வைரஸின் 3′ நீளத் துண்டை வெட்டி எடுத்து மனிதக்குரங்கின் உடலுக்குள் செலுத்தி இது தன்னுருவாக்கம் செய்து பெருகுகிறதா என்று ஆய்வு செய்தார். எதிர்பாத்தபடி இது தன்னுருவாக்கம் பெறவில்லை. மரபணுக்கள் தன்னுருவாக்கம் பெறும் போது பிழைகள் ஏற்படுகின்றன. இப்பிழைகளை தவிர்க்கும் அமைப்பு முறையும் மரபணுக்களில் உள்ளது. இப்பொழுது அந்த மூன்றடி நீளத் துண்டுக்குள் சில மாற்றங்களை செய்தார் குறிப்பாக பிழைகளை நீக்கும் செயல்திறன் கொண்ட பகுதிகளடங்கியதாகச் செய்து மீண்டும் மனிதக்குரங்கிற்குள் செலுத்திய பொழுது தன்னுருவாக்கம் துவங்கியது. இதன் விளைவாக அந்த மனிதக்குரங்கிற்கு மஞ்சள்காமாலை ஏற்பட்டது. இவருடைய இந்த ஆய்வே HCV வைரஸ் மஞ்சள் காமாலையை ஏற்படுத்துகிறது என்பதை தீர்மானகரமாக உறுதி செய்தது.
இந்த மூவரின் பணியானது மனித சமூகத்திற்கு செய்யப்பட்ட அளப்பரிய சேவையாகும். இவர்களின் சீரிய முயற்சியின் பலனாக HCV என்ற வைரஸ் அடையாளப்படுத்தப்பட்டது. இது உடலுக்குள் புகுந்து நோயரும்பல் காலம் மற்ற இரு வைரஸ்களை விட குறைவு. உடலுக்குள் செலுத்தப்படும் இரத்தத்தின் மூலமாகவோ இதர திரவங்கள் மூலமாகவோ பரவுகிறது. இதற்கு மருந்து கிடையாது HAV, HBV வைரஸ்கள் ஏற்படுத்தும் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இம்மருந்துகள் HCVக்கு வேலை செய்யாது என்றிருந்த நிலையில் இவ்வைரஸ் அடையாளம் காணப்பட்டதால் மிகக் குறுகிய காலத்திற்குள் இதற்கான மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இதனுடைய இருத்தலை ஆய்வகத்தில் உறுதி செய்ய வழிமுறை இல்லாத காலங்களில் நோயாளிக்கு இரத்தம் செலுத்தும் போது இவ்வைரஸ் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய முடிந்ததில்லை. இதன் விளைவாக அறுவை சிகிச்சைக்குப் பின் மஞ்சள் காமாலை நோய் கண்டு மாண்டு போவது சர்வ சாதாரணமாக நடைபெற்று வந்தது. இன்று இந்த இறப்புகள் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டன. ஆகவே இவர்களின் பங்களிப்பு என்பது மகத்தானது.
ஆயினும் இதுபோன்ற அறிவியல் விஷயங்கள் பரவலாக மக்களிடம் செல்லாததால் ஒல்லொரு வகை கல்லீரல் அழற்சி வைரஸுக்கு உரிய வகை சிகிச்சை செய்யாமல் இறந்து போவர்களின் எண்ணிக்கை இன்றும் அதிகமாகத்தான் இருக்கிறது. 2015ம் ஆண்டில் மட்டும் உலகில் HAV, HBV, HCV வகை கல்லீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டவர்கள் முறையே 11.4, 25.7 மற்றும் 0.72 கோடி பேர், HCV வகை கல்லீரல் அழற்சியால் இறந்து போனவர்கள் 13.2 லட்சம் பேர். உரிய சிகிச்சை இருந்தும் இவ்வளவு பேர் இறந்து போவது என்பது வேதனைக்குரியது. இது ஒருபுறம் அறியாமையின் காரணமாக நிகழ்கிறது. மற்றோருபுறம் வசதியின்மை காரணமாகவும் நிகழ்கிறது. அறியாமையைப் போக்க உழைத்துக் கொண்டிருக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்ற அமைப்புகள் இந்த நோபல் பரிசு நிகழ்வின் மூலமாகவும் இந்த விஞ்ஞானிகளை கொண்டாடுவதன் மூலமாகவும் தன் பணியை செவ்வனே ஆற்றி வருகிறது. இந்த நோபல் பரிசு பற்றிய ஒரு இணையவழி உரையை விரைவில் ஏற்பாடு செய்யவிருக்கிறது.
Source: https://www.nobelprize.org/prizes/medicine/2020/advanced-information/