நோக்கமும் வழிகளும் – பேரா. செ. கனிமொழியின் மதிப்புரை…!

விளதீமிர் மிஹனோவ்ஸ்கியின் ‘நோக்கமும் வழிகளும்’ என்ற இந்நாவல் நவீனங்களுக்கு வழித்தடம் பதிக்கும் இக்காலகட்டத்தில் 21ஆம் நூற்றாண்டாகிய நாளையை நோக்கி நம்மை பிரமிப்போடு நகர்த்திச் செல்கிறது. இன்று மிகை புனைவாகத் தோன்றும் பல இலக்கியங்கள் நாளை இயல்பாக மாற்றமடைவது காலத்தின் சக்தியால். இவ்வாறே பல பிரமிப்புகளை நம்முள் ஏற்படுத்தும் இந்நாவலும் நாளைய நூற்றாண்டின் யதார்த்தப் பதிவாகவே தோன்றுகின்றது.
லீகோ ஸ்டேவன் என்ற கழைக்கூத்தாடியை ஆல்வார் ஜில்ட்சோனி என்ற பௌதிகவாதியும் அவனது உதவியாளர் அபார் இசாவ் என்பவனும் சேர்ந்து ஆர்னிதாப்பர் என்ற தானியங்கி விமானத்தின் உதவியால் ராக்கி மலைக்கு கடத்துவதாக கதை தொடங்குகிறது. சில வேளைகளில் ஆல்வார் என்றும் சில வேளைகளில் ஜில்ட்சோனி என்றும், சில வேளைகளில் அபார் என்றும் சில வேளைகளில் இசாவ் என்றும் மொழி பெயர்ப்பு செய்திருப்பது முழு பெயரையும் நினைவுபடுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பாக ஆசிரியர் நினைத்திருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அபார் இசாவின் கதையைப்பற்றி கூறும்போது, அபார் மார்க் நூழின் ஆய்வுக்கூடத்தில் உதவியாளனாக இருந்தபோது அங்கு இருந்த அமைப்பு வெடித்து கடுமையான கதிரியக்கத்தில் சிக்கி மருத்துவமனையில் அவனது இதயம், ஈரல் மாற்றப்பட்டு தலையில் பாசிட்ரான் மூளை பொருத்தப்பட்டு பல்வேறு எலக்ட்ரானிக் பொறிகளால் நிரப்பப்பட்டு அவற்றிற்கிடையே வானொலித் தொடர்பினை ஏற்படுத்தி அவனுக்கு உயிரூட்டப்பட்டுள்ள நிலை நாளைய உலகில் மருத்துவமும் அறிவியலும் இணைந்து மனிதர்கள் பாதி ரோபோட்களாக நடமாடக்கூடிய நிலை ஏற்படலாம் என்ற வியப்பினை ஏற்படுத்துகிறது. அல்லது மனிதன் மரணத்தை வெல்லும் வல்லமை பெறுவானோ என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

Image result for ஐன்ஸ்டீன்ஐன்ஸ்டீனுடைய கொள்கையை முழுமையடையச் செய்வதே ஆல்வாரின் நோக்கம். அந்த பொது மண்டலத் தத்துவத்திற்காக ஐன்ஸ்டீன் தனது வாழ்நாளில் பாதியைச் செலவிட்டார். ஆனால், அதனை முழுமை பெறச் செய்ய இயலாமல் சாவு அவர் வழியில் குறுக்கிட்டது. பொது மண்டலத் தத்துவம் என்பது மனித மூளையின் அபார சக்தி. அந்த நோக்கத்தை அடைவதற்கு எந்த வழியும் ஏற்றுக் கொள்ளத்தக்கதே? பொது மண்டலச் சமன்பாடுகளை நோக்கி பயணப்படும் கதையின் நாயகன் ஆல்வார் ஜில்ட்சோனி என்ற பௌதிவாதியின் கதையினை இந்நாவல் மிக அழகாக விளக்கிச் செல்கிறது. பொது மண்டலத் தத்துவம் என்பது இந்தப் பிரபஞ்சம் அதில் அடங்கியுள்ள பொருள், மற்றும் அதனுடைய மாற்றங்கள் எல்லாவற்றிற்கும் மேலான எல்லையற்ற சக்தியை மனிதனுக்குத் தருவது, விண்வெளியையும் காலத்தையும் வெல்லக்கூடிய சக்தியாகும்.

தனது திறமையின் உச்சமானது தனிமையில் மட்டுமே பெறப்படும் என கருதும் ஆல்வார் அந்நிலையை அடைய தன்னையே ராக்கி மலைகளில் உள்ள காக்கைக் கூட்டினில் தனிப்படுத்திக்கொள்வது அவனது அறிவுத் தேடலின் தீரத்தைக் காட்டுகின்றது. காக்கை கூட்டினில் பேசுவதற்கு கூட மனித இனமில்லா நிலையில் பேசுவது கூட மறந்துவிட்டது போன்ற உணர்வு நம்மால் நினைத்தும் பார்க்க முடியாத உளப்பதிவு.

தனது வாழ்வில் பதினைந்து ஆண்டுகளை காந்தத் தடுப்பு கொண்ட காக்கைக் கூட்டினில் கழித்த பின்பும் முப்பது ஆதாரத் துகள்கள் ஒரே ஓர் அடிப்படைத் துகளைச் சார்ந்ததேயன்றி வேறல்ல என்பதையும் அவை சக்தி அளவில் தான் வேறுபடுகின்றன என்பதையும் அவன் விளக்கிக் காட்டி நிறுவுவதில் வெற்றி அடைந்தானே தவிர பொது மண்டலச் சமன்பாடு குறித்து அறிய முடியாது போனது இயற்கை எண்ணற்ற அற்புதங்களின் சேர்க்கை என்பதும் அதனை மனிதன் தன் அறிவால் அறிதல் அத்தனை சுலபமல்ல என்பதையும் நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கின்றது. ஆனாலும் ஆல்வார் தன் முயற்சியை விட முடியாமல் பொது மண்டலத் தத்துவத்தில் சிறந்த அறிவு பெற்ற பௌதிகவாதிகளின் உதவியைப் பெற தரைக்கு திரும்பி வரும்போது பதினைந்து ஆண்டுகளில் பல யுகங்களை தொலைவுகளை தான் தொலைத்திருப்பதை ஆசிரியர் தன் கற்பனையால் அழகாக நகர்த்திச் செல்கின்றார். அவசரத்தில் தனது சிந்தனைகளை குறித்துக்கொள்ள பயோமெமரிக் கூடு, உணவாக உண்மையான இறைச்சித் துண்டுகளுக்குப் பதிலாக குளோரெல்லாத் துண்டுகள், பறந்து செல்லும் ஏரோபஸ் எனப்படும் பேருந்துகள், வெளியே போக வேண்டிய தேவையே இல்லாத வீடுகள், பாதாளத்தில் பல அடுக்குச் சாலைகள், பழுப்பு நிற நகரும் பாதைகள், ஒருவர் எண்ணத்தை மற்றொருவர் அறிந்து கொள்ளும் திறன், செவ்வாய்க் கோளத்தினர்கள் என அந்த பதினைந்து ஆண்டுகளில் பூமியில் ஏற்பட்ட மாற்றங்கள் நமக்கு அடுத்த நூற்றாண்டு குறித்த ஆவலைத் தூண்டுகின்றன.

Image result for விளதீமிர் மிஹனோவ்ஸ்கிஆல்வார் பிக் எக்ஸ் என்ற மிகப் பெரிய எலெட்ரானிக் புள்ளிவிவர வங்கி குறித்தும் அதன் புள்ளி விவரச் சேகரிப்பு செல்கள் வழியாகச் சென்று எந்த நாட்டில் குடியிருப்பவன். பொது மண்டலத் தத்துவத்தில் மேதைக்கான அடுத்த ஆள் என்பதைக் கண்டறிய முடியும் என்பதையும் உணர்ந்து அங்கு தனது உதவியாளனை அனுப்ப. அவனோ தன் வலி மிகுதியால் மறந்து தவறான தகவல்களைப் பெறுகின்றான். அவன் பெற்ற தகவலின்படி 1. லில்லி ஷார்லொ, வயது 22 கிழக்கத்திய பாலேயிலிருந்து 2. அண்டன் புல்வர். இளநிலை எழுத்தன் 3. குரோன் ஃபிலின் மக்களுடைய கால்பந்தாட்டக் குழுவின் சென்டர் ஃபார்வேடு. 4. லீகோ ஸ்டேவன் ஒரு கழைக்கூத்தாடி 5. ஆல்வார் ஜில்ட்சோனி என்ற ஐந்து பெயர்களைப் பெற்ற ஆல்வார் இதில் தன்னைத்தவிர மற்றவர்களிடம் பொது மண்டலச் சமன்பாடு குறித்து அறிவினைப் பெற விரும்பி ஏமாற்றடைந்து காரணம் அறியாது திகைக்கின்றான். அடைய முடியாத ஒன்றினை அடைய விரும்பிய பௌதிகவாதியாக வயதை தொலைத்தபோது தன்னுடைய உதவியாளன் பிக் எக்ஸ்சிடம் தான் விரும்பியதைக் கேட்காமல் வலியின் மிகுதியில் பிறிதொன்றை கேட்டுள்ளதை அறிந்து வருந்தி மயங்கிச் சாய்வதாக நாவல் முடிந்துள்ளது. அக்காட்சியானது வளைந்த உருவம் அசைவற்று, ஒரு கொடூரமான சிலை போல இருந்தது. அதன் நிழல் கூட உயிரற்றது போலவும் இறந்தது போலவும் காணப்பட்டது. சிட்டுக்குருவி ஒன்று திறந்த சன்னலின் வழியாக உள்ளே சென்று, சாய்வு நாற்காலியில் குதித்துக் கொண்டும், கீச் ஒலி எழுப்பிக் கொண்டும் இருந்தது என்ற வருணனையோடு முடிகிறது.

பெரிய நோக்கங்களைப் பொறுத்தமட்டில் அற்புதமான அவற்றைப் பெறுவதற்காக எல்லா வழிகளுமே சரியானவை. அந்த வழிவகைள் இழிவானதாக இருந்தாலும் நோக்கம் வழிகளை நியாயப்படுத்திவிடும் என்ற ஆல்வாரின் கருத்து இக்கதையின் கருவாக அமைந்துள்ளது. ஒருவேளை வழிகள் இழிவானவையாக இருந்தால் நோக்கங்கள் எட்டப்படாமலே போகும் என்பதை இந்நாவல் நமக்கு உணர்த்துகின்றதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. தன்னுடைய நோக்கமாகிய பூரணத்துவத்தை நோக்கிய தனது பயணத்திற்காக அவன் மேற்கண்ட வழிகள் அவனது வாழ்க்கையையே மாற்றி அமைந்தன என்பதை ஆசிரியர் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். இன்றைய நமது சுகமான வாழ்வும் பல அறிவியலாளர்களின் வாழ்க்கையே தியாகம் செய்து கண்டறிந்த கண்டுபிடிப்புகளின் மூலமாகவே என்பதை என்றும் மனத இனம் மறத்தலாகாது.