1801
*****
டாக்டர் மு.ராஜேந்திரன். இ.ஆ.ப
பக்கம் 544
விலை.₹500
**************
அகநி வெளியீடு
அம்மையப்பட்டு
வந்தவாசி 604 408
திருவண்ணாமலை மாவட்டம்
************************
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியை அற்புதமான நாவலாகக் கொண்டு வந்துள்ள டாக்டர் மு ராஜேந்திரன்.இ.ஆ.ப. அவர்களை ஒரு மாவட்ட ஆட்சியராகத்தான் இதுவரை பார்த்ததுண்டு. அவரின் கீழ் பணியாற்றியதுண்டு. ஆனால் இந்நூல் மூலமாக அவரது எழுத்து உள்ளுளாமையை உணர முடிகிறது.
ஒரு வரலாற்று நாவலை எழுதுவதற்கு அவர் எந்த அளவிற்கு அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றியுள்ளார் என்பதை இந்நூலை வாசிக்கையில் அறிய முடிகிறது. இந்நூலில் முன்னுரையாக ‘துரோகத்தில் கருகிய சுதந்திர மலர்கள்’ எனத் தலைப்பிட்டு நூலாசிரியர் மிகச் சரியாகவே இந்நூலை அறிமுகம் செய்துள்ளார்.
இதுவரையில் நடந்த போராட்டங்கள் அனைத்தும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறு எனக் கூறியுள்ளார் காரல் மார்க்ஸ். எனினும் ஆங்கில ஏகாதிபத்தியம் கிழக்கிந்தியக் கம்பெனி என்கிற பெயரோடு இந்தியாவிற்கு வந்து இந்நாட்டினுடைய செல்வ வளங்களை எல்லாம் கொள்ளை அடித்துச் சென்று வணிகத்தை விரிவுபடுத்தி அதன் தொடர்ச்சியாக நாட்டையே ஆண்ட குயுக்தி வரலாறு இந்நூலில் படம் பிடித்துக் காட்டப்பட்டிருக்கிறது.
ஐந்து ஆண்டுகளாக இந் நூலாசிரியர் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று ஏராளமான தரவுகளைச் சேகரித்து பத்திரப்படுத்தி அவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்திய ஆட்சிப் பணி அனுமதித்த கால இடைவெளியில் சிரமம் மேற்கொண்டு இந்நூலை படைத்துள்ளது பாராட்டுத்தக்கது.
பொதுவாகவே சமூக நாவல்களை எழுதுவது எளிது. ஆனால் வரலாற்று நாவலை அப்படி எளிமையாக எழுதி விட முடியாது. அதற்கான தரவுகளைச் சேகரித்து தவறில்லாமல் உண்மையான வரலாறாக எழுத முற்படும்பொழுது மிகுந்த சிரமங்களைச் சந்திக்க வேண்டி இருக்கும். அப்படி சந்தித்த சிரமங்களுக்கு மத்தியில் இந்நூலைத் திறம்படக் கொண்டு வந்த நூலாசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இந்நூலின் பிற்பகுதியில் நூலாசிரியர் கள ஆய்வுக்குச் சென்றபோது சந்தித்த முக்கிய நபர்களின் புகைப்படங்களையும் கண்டெடுத்த போர்க் கருவிகளையும் கல்வெட்டுகளையும் புகைப்படங்களாகத் தந்துள்ளது சிறப்பு. அதோடு மட்டுமின்றி ‘வாழும் போது சரித்திரமானவர்கள்’ என்ற பகுதியில் ஆங்கிலேய உயர் அதிகாரிகளுடைய புகைப்படங்களோடு அவர்களைப் பற்றிய சுருக்கங்களையும் ‘வீழ்ந்த பிறகு சரித்திரமானவர்கள்’ என்கிற தலைப்பில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டு மறைந்த ஆளுமைகள் பற்றிய குறிப்புகளையும் கொண்டு வந்திருப்பது மிகவும் சிறப்பு.
1800 களில் கிழக்கிந்திய கம்பெனி எப்படி இந்தியாவின் பல பகுதிகளைக் குறுக்கு வழிகளில் பிடித்து ஆட்சி புரிந்தது என்பதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் நூலாசிரியர். இந்தியாவில் அப்போது ஆண்டு கொண்டு இருந்த குறுநில மன்னர்கள், பாளையக்காரர்கள், சேர்வைக்காரர்கள், சிற்றரசர்கள், பேரரசர்கள் என இவர்கள் மத்தியில் பிரித்தாள் சூழ்ச்சி செய்தும் சலுகைகளை வழங்கியும் சாதி ரீதியாக மதரீதியாகப் பிளவுவாத செயல்களைச் செய்தும் பகுதி பகுதியாகப் பிடித்து இறுதியில் இந்திய நாடு முழுவதும் ஆக்கிரமித்த ஆங்கிலேய ஆட்சியாளர்கள் எந்த நிலைக்கும் சென்றவர்களாக இருந்தார்கள் என்பதை இந்நூலின் மூலம் அறிய முடிகிறது.
இந் நூலில் ஏராளமான போர்களும் ஆங்கிலேயருடைய சித்து வேலைகளும் மனித உரிமை மீறல்களும் அப்பாவி மக்கள் தூக்கிலிடப்பட்டதும் விரவியுள்ளன.
இன்னும் நூல் நெடுக ஏராளமான சம்பவங்கள் இருந்தாலும் மருது சகோதரர்களைச் சிறைப்பிடித்து கர்னல் அக்னியூ மேற்கொண்ட விசாரணைகள் சுவாரஸ்யம் மிகுந்தவை. சின்ன மருதுவும் பெரிய மருதுவும் கரனலிடம் பேசும் வார்த்தைகள் திரைப்படக் காட்சியைப் போல விரிவதைப் பார்க்க முடிகிறது.
‘கத்தியின்றி ரத்தம் இன்றி யுத்தம் ஒன்று வருகுது’ என்ற வரிகள் எவ்வளவு பொய்யானவை என்பதற்கு இந்நூலே சான்று. ஏராளமான போராளிகளையும் சிறுவர்கள், பெண்கள் என்றுகூட பார்க்காமல் ஆங்கிலேயர்கள் தூக்கிலேற்றிய நிகழ்வுகள் இந்நூல் முழுவதும் நிறைந்துள்ளன. இந்திய நாட்டினுடைய செல்வ வளங்களைக் கொள்ளை அடித்த ஆங்கிலேயர்களின் அட்டூழியங்களும் சூழ்ச்சி மிக்க வியூகங்களும் ஆங்காங்கே வர
இருக்கின்றன.
பின் நாட்களில் நூலாசிரியர் எழுதிய ‘காலாபவனி’ எனும் நாவல் 1801 என்னும் இவ் வரலாற்று நாவலை அடிப்படையாகக் கொண்டது என அறிய முடிகிறது. இந்த அரிய நாவல் மூன்றாம் பதிப்பைக் கண்டிருக்கிறது என்பதிலிருந்தே எந்த அளவிற்கு இந்த நாவல் வெற்றி பெற்றிருக்கிறது என்பதை உணர முடிகிறது.
இந்நூலை அழகிய முறையில் அச்சிட்டு வெளியிட்ட அகநி வெளியீடு பாராட்டுக்குரியது. இந்நூல் அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய நூல்.
.. பெரணமல்லூர் சேகரன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.