பிரமோத் கபூர் எழுதி தமிழில் சுப்பாராவ் மொழிபெயர்த்த ” 1946 இறுதிச் சுதந்திரப் போர்- கப்பற்படை எழுச்சியின் கதை” நூலை முன்வைத்து..
வரலாற்றினூடே நிகழ்வுகளையும் அதுசார் காரணிகளையும் ஒருங்கிணைத்துப் படிப்பதே வரலாற்றைப் படிப்பதன் முழு சுவாரஸ்யம்.
நிகழ்வுகளின் ஓட்டத்தில் அதன் பின் அதைச் சார்ந்தும் சாராமல் இருக்கும் பல பக்கவாட்டு காட்சி ஓட்டங்களை அல்லது தாக்கம் தரக்கூடிய நிகழ்தகவுகளை நாம் கவனிப்பது கிடையாது.
எதிர்பார்த்த மற்றும் எதிர்பார்ப்பை மிஞ்சிய தாக்கங்களை நிகழ்வுகளுக்குப் பின்னால் மற்ற காரணிகள் ஏற்படுத்துவதை வரலாறாகப் படிக்கும்பொழுது உணரலாம்.
உதாரணமாக சம காலத்து நிகழ்வுகளாக, மணிப்பூர் கலவரத்தின் பின்னனி அதில் பிரச்சினையைச் சார்ந்த குழுக்கள், அவர்கள் சார்ந்து இருக்கும் அரசியல் இவற்றோடு நாம் செய்திகளைப் பார்ப்பதோ வாசிப்பதோ மிகவும் குறைவு.
ஈழப்போரின் போது தமிழ் அரசியல்வாதிகளின் நிலைப்பாடு, தேசிய அரசியல் நிலைப்பாடு அது ஏற்படுத்திய தாக்கங்கள் அல்லது ஏற்படுத்த வேண்டிய தாக்கங்கள்.
ஜல்லிக்கட்டு சார் நடந்த போராட்டங்கள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் அதனுடன் பின்னிப்பிணைந்து சிக்கலாக்கிய அரசியல் காரணிகளைப் போல வரலாறு முழுக்க மக்களின் வாழ்வியலுடன் மற்றும் மக்களின் எழுச்சியுடன் விரும்பியோ விருப்பமற்றோ அரசியல் காய் நகர்வுகள் நிகழ்ந்திருக்கின்றன.
வரலாற்றில் அரசியல் தலைவர்களின் , அவர்களின் கொள்கைகளின் தாக்கங்களோடு சில நிகழ்வுகள் எந்த அளவிற்கு வரலாறாக ஆவணப்படுத்தப்படுகிறதோ, அதே நிகழ்தகவில் சில நிகழ்வுகள் வரலாறாக ஆவணப்படுத்தப்படாமலும் போகின்றன என்பதற்கு 1946 கப்பற்படை எழுச்சியும் ஓர் உதாரணம்.
“1946 இறுதிச் சுதந்திரப் போர் , கப்பற்படை எழுச்சியின் கதை” ஓர் ஆவணம்.
1946ம் ஆண்டு கப்பற்படையில் எழுச்சியை ஏற்படுத்திய, ஏற்படுத்த உதவிய , கலந்துகொண்ட மாலுமிகளைத் தேடி ஓடி, அவர்களின் சகோதரர்கள், வாரிசுகள் ,அவர்களிடமிருந்து பெற்ற குறிப்புகள், எழுதிய நூல்கள் , அன்றைய காலகட்டத்து நாளிதழ்கள், கட்டுரைகள், செய்தி குறிப்புகள் என ஒவ்வொன்றாக ஆராய்ந்து பிரமோத் கபூர் எழுதி ஆவணப்படுத்திய இந்தப் புத்தகத்தைத் தமிழில் சுப்பாராவ் மொழிபெயர்த்திருக்கிறார்.
முதலில் இது ஒரு மொழிபெயர்ப்பு புத்தகம் என்று தெரியாத அளவிற்கான நடை இருப்பதே வாசகனுக்கு அயர்ச்சியை ஏற்படுத்துவது இல்லை. இதில் சுப்பாராவ் வெற்றி பெறுகிறார்.
இரா.முருகவேள், சுப்பாராவ் போன்றவர்களது தனிப்பட்ட நூல்கள் அவர்களது திறமையைச் சொன்னாலும், மொழிபெயர்ப்பு என்பது எழுத்தாளனுக்கு வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் மட்டுமே களமாடும் விளையாட்டு. அந்த வகையில் குறிப்பிட்ட எல்லைக்குள் நின்று மொழிபெயர்ப்பதில் இந்த இருவரின் எழுத்துகளுக்கு நான் ரசிகன். அந்த வகையிலும் சுப்பாராவின் மொழிபெயர்ப்பில் ” ரசிக நோக்கு” வெற்றி பெறுகிறது.
பிரிட்டிஷ் அட்மிரல்கள் எப்படி அப்போது இருந்த ‘ராயன் இந்தியன் நேவி’ யில் இந்திய மாலுமிகளைக் கொடுமைபடுத்தினார்கள், பிரிட்டிஷ் மாலுமிகளிலிருந்து இந்திய மாலுமிகளை எப்படி வேறுபாடு காட்டி வேலை வாங்கினார்கள் என்பது பற்றி கூறும் இந்தப் புத்தகத்தில் வெளிவரும் உண்மை : அட்மிரல்களின் அராஜகப்போக்கு, நிறவெறி, வசவுச்சொல் இவற்றையெல்லாம் பொறுத்துப்பார்த்த பாம்பே மாலுமிகள் தன்னெழுச்சி பெற்று அட்மிரல்களுக்கு எதிராக வேலைநிறுத்தம் ஆரம்பிக்கின்றனர். 1946 பிப்ரவரியில் ஒரு கப்பலிலும் அலுவலகத்திலும் ஆரம்பிக்கும் இந்த வேலைநிறுத்தம் பாம்பே முழுக்கப் பரவி , கல்கத்தா, கராச்சி என எல்லா துறைமுகங்களுக்கும் பரவியிருக்கிறது. அது கடைசியில் ஆயுதம் தாங்கிய போராகவும் மாறுகிறது. இந்த எழுச்சியும் நேதாஜியின் ஐ. என். ஏ ஏற்படுத்திய தாக்கமும் என இந்தப் புத்தகம் விவரிக்கிறது.
1946 பிப்ரவரியில் நடந்த நிகழ்வுகளை மணி வாரியாக , தேதி வாரியாக இடம் வாரியாக அன்றைய செய்தித்தாள்களின் தலையங்கம் வாரியாக இந்தப் புத்தகத்தில் குறிப்பிடும்பொழுது இவ்வளவு பெரிய எழுச்சியை வேண்டுமென்றே பிரிட்டிஷ் அரசாங்கம் வரலாற்றிலிருந்து மறைத்திருக்கிறது என்பது நமக்கே தெரிகிறது.
கைக்கு எட்டும் தூரத்தில் சுதந்திரம் இருக்கும்பொழுது இந்த எழுச்சியும் பிரிட்டிஷுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய போரும் இந்திய தேசிய காங்கிரஸின் காந்தி, நேரு, சர்தார் படேல், மற்றும் ஜின்னா போன்றோருக்குப் பிடித்தம் இல்லாததனால் அவர்களை நம்பி போராட்டத்தில் இறங்கிய இந்திய கப்பற்படை மாலுமிகள் என்ன ஆனார்கள் என்று இந்தப் புத்தகம் முடிக்கிறது.
“காந்தி போராடினார் நேரு போராடினார் படேல் போராடினார்” வரலாற்றில் நமக்கு எழுதப்பட்ட வாசகங்களுப் பின் ஐந்து நாட்களுக்குள் 20000 மாலுமிகள், 78 கப்பல்கள் , 24 கரை அலுவலகங்கள் இவர்களுடன் பாம்பே பொதுமக்களும் தெருவில் இறங்கி போராட்டம் பரவ காரணமானவர்களின் பெயர் வரலாற்றில் இல்லை.
வலிக்காமல் அதிகாரம் நம் கைக்கு மாறவேண்டும் என்று விரும்பிய தேசத்தலைவர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தை முகம் சுளிக்க வைக்கவிரும்பவில்லை , இதனால் பாம்பே மாலுமிகளின் எழுச்சியை அவர்கள் ஆதரிக்கவில்லை. போராட்டம் முடக்கப்படுகிறது. பட்டேலின் வாக்குப்படி மாலுமிகள் சரணடைகிறார்கள். ஆனால் சர்தார் பட்டேல் சொன்னபடி நடவடிக்கை இருக்காது என்பதைத் தாண்டி தண்டனை கொடுக்கப்படுகிறது. சிலர் காணாமல் போகின்றனர் என்பதை இந்தப் புத்தகம் ஆவணப்படுத்துகிறது .
வேற்று மொழியில் ஒரு வலியை ஒரு போராட்டத்தை எழுதும்பொழுது உருவாகவேண்டிய பரிவு , கருணையின்மைக்கான உணர்வெழுச்சி, கோபம் தமிழில் மொழிபெயர்ப்பில் படிக்கும்பொழுதும் தன்னியல்பாய் உணர்வது புத்தகத்தை எழுத நினைத்த பிரமோத் கபூரின் நோக்கம் நிறைவேறுகிறது. அதைத் தமிழில் சாத்தியப்படுத்துகிறார் சுப்பாராவ்.
தேசம் கடந்து வந்த பாதையைப் பற்றி அறிய விரும்புபவர்கள், இந்திய போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல்வாதிகளின் இரட்டை நிலையை வாசிக்க விரும்புபவர்கள், தேச உணர்வில் மக்களின் தன்னெழுச்சி பற்றி வரலாறு படிக்க ஆர்வம் உள்ளவர்கள் இந்தப் புத்தகத்தை வாசிக்கலாம். அவர்களது வாசிப்பு ஆர்வத்திற்கு இந்தப்புத்தகத்தில் தரவுகளாக நிறைய புத்தகங்களையும் மேற்கொள் காட்டியிருக்கிறார்கள்.
“1946 இறுதிச் சுதந்திரப் போர்: கப்பற்படை எழுச்சியின் கதை” வரலாற்றில் மூழ்கடிக்கப்பட்ட வீரத்தையும் தியாகத்தையும் துரோகத்தையும் நங்கூரமிட்டு பார்வைக்கு நிலைநிறுத்துகிறது.