நூல் அறிமுகம் : அரண்மனை கமுக்கங்களை அவிழ்த்து விடும்.. சுளுந்தீ..!-தேனி சுந்தர் nool arimugam : aranmanai kamukkangalai avizhthuvidum sulunthee-theni suntharam
நூல் அறிமுகம் : அரண்மனை கமுக்கங்களை அவிழ்த்து விடும்.. சுளுந்தீ..!-தேனி சுந்தர் nool arimugam : aranmanai kamukkangalai avizhthuvidum sulunthee-theni suntharam

நூல் அறிமுகம் : அரண்மனை கமுக்கங்களை அவிழ்த்து விடும்.. சுளுந்தீ..!-தேனி சுந்தர்

அரண்மனை கமுக்கங்களை அவிழ்த்துக் காட்டுகிற நாவல்… சுளுந்தீ..!

இவ்வளவு விறுவிறுப்பும் பரபரப்புமான ஒரு நாவலை சமீபத்தில் நான் வாசித்ததில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பாகவே நான்கைந்து பிரதிகள் வாங்கி, நண்பர்களுக்கு பரிசாக கூட வழங்கி இருக்கிறேன். ஆனால் வாசிக்க வாய்க்கவில்லை.. விடுமுறை கிடைத்ததால் டொம்னிக் லொப்பியர், லேரி காலின்ஸ் எழுதிய “நள்ளிரவில் சுதந்திரம்” (680 பக்கங்கள்), சல்மான் ருஷ்டீயின் “நள்ளிரவின் குழந்தைகள்” ( 752 பக்கங்கள்) உள்ளிட்ட நூல்களை வாசித்ததும் அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்ட படைப்பாளர் ஒருவரின் நூலை வாசிப்போம் எனக் கருதி, “சுளுந்தீ” (480 பக்கங்கள்) நாவலை படித்தேன்..

இந்நூலாசிரியர் இரா.முத்துநாகு, தேனி மாவட்டம் வைகை அணை அருகில் உள்ள குறும்பபட்டியை பூர்வீகமாகக் கொண்டவர். தினமலர், ஜூனியர் விகடன் போன்ற இதழ்களில் பத்திரிகையாளராக பணி புரிந்தவர். ஒளிப்படக் கலைஞரும் கூட. தேனி மாவட்டத்தில் பல்வேறு விதமான இலக்கிய வகைமை எழுத்துகளுக்கு சொந்தக்காரர்கள் உள்ளனர். வரலாற்றுப் புனைவு எழுத்துக்கு ஓர் அற்புதமான அடையாளமாக, எழுத்தாளராக இந்நூலின் மூலம் முத்திரை பதித்துள்ளார் திரு.முத்துநாகு.. மானுடவியல், நாட்டார் வழக்காற்றியல், தொல்லியல், கள ஆய்வு என எனப் பல்வேறு விதமான தேடல்களின் மூலம் “சுளுந்தீ”யை பற்ற வைத்துள்ளார்.

18ஆம் நூற்றாண்டு கதை. அன்றைய சொக்கநாத நாயக்கர் ஆட்சி செய்த மதுரை நாடு, அதன் ஆட்சிக்குட்பட்ட 72 பாளையங்கள் / அரண்மனைகள்.. குறிப்பாக கன்னிவாடி அரண்மனை எல்லைக்குட்பட்ட கதை தான் நாவலாக விரிகிறது.. கன்னிவாடி அரண்மனை எல்லைக்குட்பட்ட நாவிதன் மாடன் விடுத்த சவாலை ஏற்று அவனோடு மல்யுத்தம் நடத்த உத்தப்ப நாயக்கனூர் வங்காரன் ஊர் மக்கள் ஆரவாரத்துடன் புறப்படும் இடத்தில் வேகமெடு்க்கிறது கதை..

பன்றிமலை சித்தர் பற்றிய தகவல்களை வாசிக்கும் போது அவரது மருத்துவ அறிவு மற்றும் ஏனைய திறமைகளை அறியும் போது நமக்கு பிரமிப்பாக இருக்கிறது.. அதை அடுத்து நாவிதன் இராமன் – இராம பண்டுவன், இடையிடையே அறிமுகமாகிற பட்டிவீரன், பூதகன், மருதமுத்து ஆசாரி, பலராமன் நாவலின் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் வார்ப்பும் அவர்கள் குறித்த சம்பவங்களும் வாசிக்க வாசிக்க நமது உடம்பைச் சூடேற்றுகின்றன..

சவரம் செய்வது தொடர்பாக ராமன், தன் மகன் மாடனுக்கு சொல்வதாக கூறப்படுகிற தகவல்கள்.. ஒவ்வொரு சமூக மக்களும் பின்பற்றுகிற சாஸ்திர, சம்பிரதாய நடைமுறைகள்.. அப்பப்பா, மலைப்பை ஏற்படுத்துகின்றன. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் – எதுக்காக சொல்கிறார்கள்..? வெங்கம்பய.. ஈத்தரப் பய.. என்று திட்டுவதன் பின்னுள்ள காரணம் என்ன? “வெடி மருந்து” என்று ஏன் சொல்லப்படுகிறது.. இப்படி ஏராளமான தகவல்களை போகிற போக்கில் சொல்லிச் சொல்கிறார் நூலாசிரியர்..

நெடுநல்வாடை நூலில் குளிர்கால காட்சிகள் , இயற்கை வருணனைகள் மிக அழகாக கூறப்பட்டிருக்கிறது என்று அது தொடர்பான கேள்விகள் தேர்வுகளில் அடிக்கடி இடம்பெறுவதுண்டு.. அதுபோன்ற காட்சிகள் இந்நூலில் ஏராளம் ஏராளம்  என்றே சொல்ல வேண்டும்..

சித்தர் கேட்ட ஒரு மருந்தைத் தேடி காட்டிற்குள் பெரிய பூதகனுடன் ராமன் செல்கிற ஒரு காட்சியில், “ புலயர், பளியர் குலத்தினர் ஈச்சமாறு அறுத்துக் கொண்டிருந்தனர். சிலர் சிவப்பு, மஞ்சள் வண்ணக் கற்கள் இருக்கும் இடத்தைக் கண்டு தோண்டிச் சேகரித்தனர். அவர்களைப் பார்த்த பூதகன், ‘மேல்பக்கம் அறுக்காமல் ஈச்சம் புதரு மண்டிக் கெடக்கு, நெருப்பு வச்சு விடுங்க.. அப்ப தானே கோடை மழைக்கு நல்லா தளையும். வரையாடு, காட்டு மாடுகளுக்கு நீயும் நானுமா தீவனம் போட முடியும். அடுத்த வருசம் ஈச்ச அறுக்கனுமின்னா வரைவரையாத் தேடிக்கிட்டு அலைவீங்களா’ எனச் சொல்லி ராமனைப் பார்த்து சிரித்துக் கொண்டான்..

அதே போல இன்னொரு காட்சியில் பூதகன் சொல்வான், “இந்த மூங்கில் அடுத்த வருசம் பூ பூத்திடும். பூத்தா வேர் செத்திடும். அப்புறம் தளைக்காது. இதவெட்டி விட்டா நல்லா தளைக்கும். நான் கிழவனாகும் வரைக்கும் சாகாது. வெட்டி விடாம மூங்கிலெல்லாம் செத்துப் போனா ஆனைக தீவனத்துக்கு என்ன செய்யும். அதுக பாவம் நம்மள சும்மா விடாது” எனச் சொல்லி மூங்கில் மரத் தூர்களை வெட்டி விட்டு, “இன்னொரு நாளைக்கு இந்தப் பக்கம் மெனக்கெட்டு வந்து மிச்ச மீதத்த வெட்டிக்கிறேன்.. கிளம்பு.. போவோம் ..” என ராமனைக் கூப்பிட்டு நடந்தபடி மிச்சக் கதையைத் தொடர்ந்தான் பூதகன்.. இதுபோல இயற்கையையும் அதுசார்ந்து வாழும் உயிர்களையும் புரிந்துகொண்டு நேசிக்கும் பல இடங்களை இந்த நாவலில் காண முடியும். அவற்றை வாசிக்கும் போது ஓநாய்க்குலச் சின்னம் என்கிற சீன நாவலில் வருகிற பில்ஜி எனும் வயதான கிழவன், அந்தப் பரந்து விரிந்த புல்வெளியை, காடுகளைப் பேருயிராக நினைத்துப் பேசுகிற வசனங்கள் நினைவுக்கு வந்து போகின்றன..

இன்றைய தேனி மாவட்டத்தில் போடி, கண்டமனூர், கம்பம், தேவதானப்பட்டி, வருசநாடு, ஆண்டிபட்டி பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்கள் கதையில் வருகின்றன. உருமிக் கரடு, சங்கிலிக் கரடு பற்றி சொல்லுகிற செய்திகள் வியப்பு. எங்க ஊர் பகுதியிலும் சங்கிலிக் கரடு என்ற பகுதி இருக்கிறது. அதே போல கூத்தனாட்சி, பச்சக் கூமாட்சி, ஆனைக் கெஜம், சுருளி மலை என நாம் வாழுகிற பகுதி பற்றி எல்லாம் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்கிற ஒரு கதையின் போக்கில் அங்கங்கே வருவது, நம்மை மேலும் கதையோடு ஒன்றச் செய்து விடுகிறது..

நாவிதன் இராமனுக்கு ஏதோ ஒரு ஆபத்து ஏதோ ஒரு திசையில் இருந்து வரப் போகிறது என்று படபடத்து கிடக்கும் நமக்கு அவனது முடிவு அதிர்ச்சியை அளிக்கிறது. சின்ன பூதகன், மாடனுடன் நடத்த இருக்கிற சண்டைக் காட்சியைக் காண வேகவேகமாக வாசித்து சென்றால் அங்கு நாம் முற்றிலும் எதிர்பாராத வேறொரு தாக்குதலை நாம் சந்திக்க வேண்டியிருக்கிறது..

பாண்டியர்களை வென்ற நாயக்கர்கள் (இந்தக் கதை நிகழ்கிற – சொக்கநாத நாயக்கர், இராணி மங்கம்மாள்) ஆட்சிக் காலத்தில் தமிழ்க் குடிகள் எவ்வாறெல்லாம் தங்கள் நிலங்களில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். தெலுங்கு பேசக்கூடிய நாயக்கர் இன மக்கள் எவ்வாறு குடியேற்றம் செய்யப்பட்டனர் என்பதை அறிய முடிகிறது. குடி நீக்கம், குடி விலக்கம் என அமலாக்கம் செய்யப்பட்ட, அதாவது அன்றைய குடியுரிமை சட்டத்தையும் குல நீக்கம் செய்யப்பட்ட மக்கள் அடைந்த துன்ப துயரங்களையும் அறிய முடிகிறது..

உப்புக்கு தடை, கூத்துக்கு தடை, தடிக்குத் தடை, நெருப்புக்கு தடை என குடிமக்களுக்கு எத்தனை நெருக்கடிகள்.. வரிகள்.. ஆனந்தா வருடப் பஞ்சத்துக்கு மக்கள் திண்டாடி கரையான் புற்றை தோண்டி தின்னும் மக்களிடம் இருந்த சேமிப்பையும் பிடுங்கிக் கொண்டு போகிற அரண்மனை படைகள்.. அதிகாரம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள உதவுகிற தந்திர நடவடிக்கையாக இருக்கும் சாமக் கோடாங்கி, பூம் பூம் மாட்டுகாரன் தொடங்கி விதவிதமான ஒற்றர்கள்.. ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு காவலன் என எத்தனை எத்தனை ஏற்பாடுகளை செய்கிறது என்பதை அறிய முடிகிறது.

போதாக் குறைக்கு குலகுரு, பாதிரியார் போன்றவர்கள் செய்கிற திருப்பணி வேற..! இந்த மடங்களும் ஆலயங்களும் மக்களுக்கு என்னவிதமான வேலையைச் செய்தன என்பதை அழுத்தமாகச் சொல்லுகின்ற இடங்கள் முக்கியமானவை.. பஞ்ச காலத்திலும் மக்களைக் கசக்கி பிழியும் அரண்மனைக்கு எதிராக மக்கள் அங்கங்கே கிளர்ச்சி செய்கிறார்கள்.. வேறொன்றுமில்லை, குடிப்படையினரை எதிர்த்துப் பேசுகிறார்கள், கஞ்சிக்கே வழியில்லாத நிலையில் நாங்கள் எப்படி வரி தர முடியும் என வாக்குவாதம் செய்கிறார்கள்.. அவர்களை நேரில் சென்று ஏசுசாமி ஆல்வரேசு பேசுகிறார் : நாம் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் ஜீவனம் பண்ண வேண்டும். ராஜாக்களுக்கும் அதிகாரமுள்ளவர்களுக்கும் உள்ளபடியே நாம் விசுவாசமாக இருக்க வேண்டும். ஆளும் அதிகாரம் உள்ளவர்களுக்கு எல்லாரும் பணிந்திருங்கள்.. ஏனெனில் இப்பொழுதுள்ள ஆட்சிப் பொறுப்புகளைக் கடவுளே ஏற்படுத்தினார்.

கடவுளிடமிருந்து வராத அதிகாரம் ஏதுமில்லை. ஆகையால் அதிகாரத்தை எதிர்த்து நிற்போர் கடவுளின் ஏற்பாட்டையே எதிர்த்து நிற்கின்றனர். அவ்வாறு எதிர்ப்பவர்கள் தங்கள் மீது தண்டனைத் தீர்ப்பை தாங்களே வருவித்துக் கொள்கிறார்கள். ஆள்வோர் கைகளில் தண்டிக்கும் அதிகாரம் இருக்கிறது. ஆண்டவர் அதை வீணாக அவர்களிடம் கொடுக்கவில்லை. நம்ம ஆள்பவர், தீமை செய்வோர் மீது கடவுளின் தண்டனையை நிறைவேற்ற கடவுள் ஏற்படுத்திய தொண்டர்கள்.. ஆகவே கடவுளின் சினத்தின் பொருட்டு மட்டுமல்ல, மனச்சான்றின் பொருட்டும் நீங்கள் பணிந்திருத்தல் வேண்டும். நமக்காகவும் கடவுள் ஏற்படுத்திக் கொடுத்த அரசனுக்காகவும் நீங்கள் வரி செலுத்துகிறீர்கள்.. அவர்கள் தங்கள் பணியை ஆற்றும்போது கடவுளுக்கே ஊழியம் செய்கிறார்கள். ஆகையால் அனைவருக்கும் நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுங்கள்.. ஆமென்..!”

நல்ல மழை பெய்து மக்கள் செழிப்பாக இருக்கும் காலத்திலும் பிரச்சனைகள் எழுகின்றன. ஏசுசாமி போலவே அருணகிரி எனும் குலகுரு ஆள்வோரிடம், அரண்மனையாரிடம் சொல்கிறார்: “நாட்டில நல்ல விளைச்சல் கண்டதால குடிகள் செருக்காகத் திரியுறாங்க. கிணறுப் பாசனத்தால பலருக்கு சின்ன அரண்மனையாக வலம் வர ஆசை முளைச்சிருக்கு. இந்த எண்ணத்த தடுத்தா பழையபடி விஜயநகரக் குடிகள், பாண்டிய மரபினருடன் கூட்டுச் சேர்ந்து அரண்மனைக்கு எதிராக கிளம்புவாங்க. சனங்க எண்ணத்தை திசை திருப்ப நாவிதன் மாடன் மாதிரி ஆள் திரியட்டும்.. அவன் கண்ணுக்கு குடியானவன் மட்டும் தான் எதிரியா தெரிவான்..!” – இப்போது மட்டுமல்ல. எப்போதுமே ஆளும் வர்க்கம், அதற்குச் சாதகமாக உள்ள மத ரீதியான அமைப்புகள் மக்களை திசை திருப்புகிற வேலையைத் தான் தொடர்ந்து செய்து வருகின்றன என்பதை உணர்த்துகிற இடமாக கருத முடிகிறது..

நாவிதன் இராமன் தன் மகன் மாடனை அரண்மனை படை வீரனாக மாற்ற வேண்டும் என விரும்புகிறான். விருப்பத்தை அரண்மனையாரிடமும் சொல்கிறான். அரண்மனை ஏற்கவில்லை. ஒரு கட்டத்தில் கன்னிவாடி அரண்மனை மட்டுமின்றி 72 அரண்மனை எல்லைகளுக்கும் சவால் விடும் மாவீரனாக மாறுகிறான்.. அவனது ஆசை நிறைவேறியதா இல்லையா..??

இறுதி அத்தியாயங்களில் மாடன் – வங்காரன் மோதுகிற மல்யுத்த போட்டி, யுத்தம் – நகம் கடிக்கும் அளவுக்கு விறுவிறுப்பாக செல்கிறது. இறுதியில் வென்றது யார் மாடனா? வங்காரனா? வீரமா? சதியா? அரண்மனைக்கு எதிரான கோபமா? அரண்மனைக் கமுக்கமா..? என்பதை மிக சுவாரசியமான நடையில் மிக எளிய மொழியில் எழுதி இருக்கிறார்.

அதே போல, சில குடிகள் மட்டும் ஏன் தங்களுக்கென தனியே நாவிதர்களை வைத்துக் கொள்கிறார்கள்..? ஆண்களுக்கு சவரம் செய்வது போல பெண்களுக்கு சவரம் செய்பவர்கள் யார்..? குடித்தொழில் அதுவும் சவரம் செய்த நாவிதர்களுக்கு ஏன் நஞ்சை மானியங்கள் வழங்கப் பட்டன. வெறுமனே அவர்கள் தங்கள் தொழிலைச் செய்ததற்கு மட்டுமா அவை வழங்கப் பட்டன..? பின் எதற்காக மன்னர்கள், அரண்மனையார்கள் அவர்களுக்கு நிலங்களை வழங்க வேண்டும்..? என்று நூலாசிரியருக்கு எழுந்த கேள்வி தான் இந்த நாவல் உருவாகவே அடிப்படைக் காரணம்.. சவர மாடங்கள், சவரக் கத்திகள் எப்படி சரித்திரங்களை மாற்றி எழுதி இருக்க முடியும் என்கிற அரண்மனை கமுக்கங்களை அவிழ்த்துக் காட்டுகிறது இந்த நாவல்..

இந்த நாவலை  வாசிக்க வாசிக்க உள்ளே.. உள்ளே ஆழ்ந்து போனேன். அந்த அளவிற்கு நாவலாசிரியர் உணர்ச்சியின் உச்சத்தை உள்ளே வைத்திருக்கிறார். இவருக்குள் நிலவியல் அறிஞர், நாட்டு மருத்துவர், தாவர மற்றும் விலங்கியல் வல்லுநர், வட்டார வழக்காற்றியல், மானுடவியல் அறிஞர், இவற்றை எல்லாம் விட எளிய மக்களின் பிரதிநிதியாக காட்சி அளிக்கிறார் இந்நூல் ஆசிரியர் முத்துநாகு..” என்று தனது அணிந்துரையில் வியந்து எழுதியிருக்கிறார் தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் அவர்கள்..

பல விருதுகளைப் பெற்ற நூல், பல பதிப்புகளைக் கண்ட நூல்..  இன்னும் ஏராளம் செய்திகளை அறிந்து கொள்ள அவசியம் வாசியுங்கள்

தேனி சுந்தர்

சுளுந்தீ, வெளியீடு : ஆதி பதிப்பகம்.

தொடர்புக்கு : 9443300717

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *