நான் பெங்களூருக்கு வந்து நிரந்தரவாசியாகிவிட்டதை அடுத்து என்
உள்ளூர் நண்பனொருவன், நான் அவனோடு கன்னடத்தில்
உரையாடுவதைக் கவனித்துவிட்டு “பரவாயில்லை. நல்லாதான் கன்னடம்
பேசற. ஆனா அது இந்த ஊரு பேச்சுமாதிரி இல்லை” என்றான். ஐந்து
ஆண்டுகள் கழித்து மீண்டும் அவனைச் சந்தித்தபோது என்
பேச்சுமொழியைக் கவனித்துவிட்டு “இப்ப நல்லா இருக்குது. நீ இந்த
ஊருக்கு செட் ஆயிட்டே” என்றான்.
ஆயினும், இந்தப் பெங்களூரைப்பற்றியும் இதன் சாலைகள்,
குறுக்குத்தெருக்கள், அவற்றின் டெட் என்டுகள், பேட்டைப்பகுதிகள்,
அவற்றைச் சென்றடைய பிரயாணம் செய்யவேண்டிய பேருந்துகளின்
எண்கள் ஆகியவற்றைப்பற்றியும் எதுவும் தெரியாத நிலையில்தான்
இன்னும் நான் இருக்கிறேன். அவற்றைத் தெரிந்துகொள்ளவேண்டும்
என்னும் ஆர்வம் என்னிடம் மிகக்குறைவாகவே இருக்கிறதென்பது
முக்கியமான ஒரு காரணம்.
புதிதாகச் சந்தித்து உரையாடும் ஒருவர் அடுத்தவரிடம் “சொந்த ஊர்
எது?” என்ற கேள்வியோடு தொடங்குவது வழக்கம். ஓர் ஊரில் நீண்ட
காலம் இருந்துவிட்டு, ஒரு சில காரணங்களுக்காக பிறிதொரு ஊருக்குக்
குடிபெயர்வது என்பது வேறு விஷயம். ஆனால் நவீன யுகத்தில் ‘யாதும்
ஊரே யாவரும் கேளிர்’ என்பதுதான் எதார்த்தம். இந்த எதார்த்தம் மனதில்
நிலைத்திருப்பதற்கு சிறிது காலம் பிடிக்கும். அத்தோடு சில நுட்பமான
நிகழ்வுகளும் ஏற்பட்டு உணர்வுகளை அசைத்துத் தூண்டிவிட்டு ஒரு
முடிவுக்கு வரவைக்கவேண்டும். அந்த வகையில் எனக்கு இந்த ஊர் மீது
கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பிடிப்பு உருவாகி நிலைத்துவிட்டது.
அந்தப் பிடிப்பு ஏன் நிகழ்ந்தது என்பதற்கு மூன்று முக்கியமான
காரணங்களை என்னால் சொல்லமுடியும். முதல் காரணம், என்னுடைய
ஒரே மகள் இந்த ஊரில் நிரந்தரவாசியாக இருக்கிறாள். இரண்டாவது
காரணம், நான் பெரிதும் நேசித்த என்னுடைய அன்பு மனைவி இந்த
ஊரில், இந்த வீட்டில்தான் காலமானாள். மூன்றாவது காரணம், என்
அன்புக்குரிய நண்பரும் சகோதரருமான பாவண்ணன் இந்த ஊரில்
நிரந்தரவாசியாக இருக்கிறார். அவருடைய நெருங்கிய நட்பின் காரணமாக
இந்த ஊரும் இதன் சகல பூகோள சரித்திர விஷயங்களும் எனக்கு
கொஞ்சம்கொஞ்சமாக ஏற்புடையவையாக மாறத் தொடங்கின. ஆயினும்
இந்த ஊரைப்பற்றி விரிவான அளவில் எனக்கு எதுவும் தெரியாது. ஓர்
இருண்ட கூடத்திலிருக்கும் என்னைப் போன்ற பலருக்கு
வெளியுலகத்தைக் காணவும் வெளிச்சத்தையும் நல்ல காற்றையும்பெறவும் உதவக்கூடிய ஒரு பலகனியைப்போல பாவண்ணன் எழுதிய
‘நான் கண்ட பெங்களூரு’ புத்தகம் அமைந்துவிட்டது. தொடக்கத்தில் ஒரு
வழிகாட்டி நூல்போன்ற தோற்றத்தைக் கொடுத்தாலும், வாசிக்க வாசிக்க
அதன் மதிப்பு உயர்ந்துகொண்டே செல்கிறது. மனித உறவின்
மேன்மையையும் மனிதாபிமானத்தையும் மறைமுகமாக இந்தப் புத்தகம்
உணர்த்தியபடியே செல்கிறது.
ஓரிடத்தைப் பார்ப்பது, பிறகு அதை நினைவுகூர்வது,
அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது என்பது இடம் சார்ந்தது மட்டுமல்ல.
மனிதர்கள், கட்டிடங்கள், கலைச்சின்னங்கள், வீதிகள், பூங்காக்கள் என பல
அம்சங்களையும் சார்ந்தும் அமைவதுண்டு. பாவண்ணன் தான் பணிபுரிந்த
துறையின் சக ஊழிய நண்பர்கள் வழியே பெங்களூரை அறிந்து
சொல்லும்போது வெறும் தகவல் குறிப்பாக இல்லாமல் அதனூடே
கடந்துபோன வரலாற்றுத் தருணங்களை உணர்ச்சிமிக்க நடையழகோடும்
கவித்துவத்தோடும் பகிர்ந்துகொள்கிறார். இது பாவண்ணனின்
சிறுகதைகளில் எனக்குப் பிடிபடும் விஷயங்களை நினைவுபடுத்துகின்றன.
இத்தொகுதியில் பல கட்டுரைகள் சிறந்த சிறுகதைகளின் அழகையும்
வடிவத்தையும் கொண்டிருக்கின்றன. ஒருசில கட்டுரைகள் நாவலாக
விரிவுகொள்ளும் சாத்தியத்தையும் கொண்டுள்ளன. இந்த விதமான
வாசிப்பு உணர்வுகளையும் அனுபவங்களையும் முதல் எட்டு
அத்தியாயங்களில் நாம் பெற்றுவிடுகிறோம்.
ஒன்பதாம் அத்தியாயத்தில் நம்மை சற்றே நிதானிக்கவைத்து
விடுகிறார் பாவண்ணன். ஹோலி டிரினிட்டி தேவாலயத்திலிருந்து
தொடங்கும் மகாத்மா காந்தி சாலை முடிவடைகிற இடம் கப்பன் பார்க்
என்று சொல்லி, இரு புள்ளிகளை இணைக்கும் நேர்க்கோட்டைப்போல
அந்த நீண்ட சாலை நேர்த்தியாகவும் அழகாகவும் இருந்தது என்று
குறிப்பிடுகிறார். அந்தச் சாலையை ஒரு நீண்ட ரயிலாக கற்பனை
செய்துகொண்டால் தேவாலயத்திலிருந்து மேயோ ஹால் வரைக்கும் ஒரு
பெட்டி, மேயோ ஹாலிலிருந்து பிரிகேட் ரோட் வரைக்கும் இரண்டாவது
பெட்டி, பிறகு அங்கிருந்து கப்பன் பார்க் வரைக்கும் மூன்றாவது பெட்டி
என மிக அழகாக பெங்களூரின் முக்கிய சாலையையும் அதில்
அடங்கியிருக்கும் பகுதிகளையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்
பாவண்ணன். அதன் சுற்றுவட்டாரத்தில் கிரிக்கெட் ஸ்டேடியம், ஏரி
எல்லாமே அடங்கிவிடுகின்றன.
டிரினிட்டி தேவாலயத்தின் வரலாற்றை ஓர் ஆரம்பப் பள்ளியாசிரியர்
மாணவர்களுக்கு விளக்கும் நடையில் அற்புதமாகச் சொல்கிறார்.
லண்டனிலிருந்து வடிவமைக்கப்பட்ட பிரமாண்டமான மணி அந்தத்
தேவாலயத்துக்கு வந்து சேர்ந்த கதையையும் சொல்கிறார். இந்தத்
தேவாலயத்தில் உள்ள சலவைக்கல்லால் ஆன அழகிய சிற்பங்களைபாவண்ணன் ரசித்து எழுதியிருக்கும் பகுதியைப் படிக்கும்போது, சென்னை
புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள இந்தியாவின் முதல் ஆங்கிலிகன்
சர்ச்சான புனித மேரி தேவாலயத்துக்குள் இருக்கும் அழகிய பளிங்குச்
சிற்பங்கள் நினைவுக்கு வந்தன.
பெங்களூரில் எனக்கு அறிமுகமான இரு சத்திரங்கள் சுபேதார்
சத்திரமும் தோட்டதப்பா சத்திரமும் ஆகும். அவற்றில் சுபேதார் சத்திரம்
குறித்து பாவண்ணன் எழுதியிருக்கும் விதம் அழகாக இருக்கிறது.
தமிழ்நாட்டுச் சத்திரங்களைக் குறிப்பிட்டு ஒரு வரலாற்றின் விரிவாக
இன்றைய தங்கும் விடுதிகள் – லாட்ஜுகள் பற்றி எழுதியிருப்பது
முக்கியமான ஆவணம். இங்கும் அவருடைய நண்பர் ஒருவர் அவருடைய
ஆவணச்சிந்தனைக்கு அடியெடுத்துக் கொடுக்கிறார். பாவண்ணனின் நண்பர்
வழியாக பான் பீடா மடித்து சுவைக்கும் விதம் குறித்து விரிவடையும்
சித்திரம் மிக அழகாக உள்ளது.
என் அனுபவத்தில் பெங்களூரில் இருந்த மற்றொரு முக்கியமான
சத்திரம் தோட்டதப்பா சத்திரம். 1941-44 காலகட்டத்தில் பெங்களூரில்
ரயிலேற வந்த பிரயாணிகளும் ரயிலிலிருந்து இறங்கிய பிரயாணிகளும்
இலவசமாகத் தங்கிச் செல்வதற்கு ஏதுவாக இயங்கி வந்த சத்திரம். என்
அப்பாவின் விவரிப்பிலிருந்து, 1943இல் எனக்கு ஒரு வயதாக இருந்தபோது
ஓசூரிலிருந்து பெங்களூருக்கு தசரா பார்ப்பதற்காக வந்த எங்கள் குடும்பம்
அந்தச் சத்திரத்தில்தான் தங்கியிருந்தது. இது தோட்டதப்பா என்பவரால்
தர்மசத்திரமாகக் கட்டப்பட்டது. இந்தத் தர்ம சத்திரம் இப்போது மெஜஸ்டிக்
ரயில் நிலையத்துக்கு வெளியே உள்ள காவல் நிலையத்தின்
கட்டுப்பாட்டில் உள்ளது. பெரிய ஆங்கில எழுத்துகளால் அந்தக் காலத்தில்
பொறிக்கப்பட்ட பெயரை இன்றும் காணலாம்.
பெங்களூரில் பல்வேறு பகுதியில் உள்ள இடங்களுக்கு காரிலும்
ஆட்டோவிலும் பயணம் செய்பவர்கள் அனைவரும் கடந்து செல்லும்
முக்கியமான இடம் ஆனந்தராவ் சர்க்கிள். அது நகரத்தின் நான்கு
திசைகளையும் நோக்கிப் பிரியும் முக்கியமான நான்கு சாலைகள்
சந்திக்கும் இடம். பாவண்ணன் தன் நண்பர் கூற இந்த அனந்தராவ் சர்க்கிள்
வழியாக மற்றொரு சிறு வரலாற்றுப் பாதையில் நம்மைச் சஞ்சரிக்க
விடுகிறார். அதன் தொடர்ச்சியாக திவான் அனந்தராவின் வரலாறு
இடம்பெறுகிறது. தன் நண்பர்கள் வழியாக பாவண்ணன் செவிமடுத்து,
ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் பொருத்தமாக நமக்கு எடுத்தியம்பும் அரிய
பெங்களூர் நகர வரலாற்றுக்கதைகளும் நிலக்குறிப்புகளும் அற்புதமாக
உள்ளன. ஒரு சமகால அரசியல் நிகழ்ச்சி – அதுவும் கர்நாடகத்துக்குச்
சொந்தமான அரசியல் நிகழ்ச்சியொன்றை இந்நூலில் பாவண்ணன் கோடி
காட்டியிருக்கிறார்.
மெஜஸ்டிக் பகுதியில் உள்ள கபாலி திரையரங்கம்திறக்கப்பட்ட நாள் அது. தற்செயலாக, அந்நாளில் நானும் இளம்வயதில்
அந்தத் திரையரங்கத்தின் முன்னால் நின்றிருந்தேன். புதிய இந்தித்
திரைப்படமொன்றை அரங்கத்தின் திறப்பு நாளன்று திரையிட்டு அன்றைய
இந்திய நிதியமைச்சர் மொரார்ஜி தேசாயைக் கொண்டு கபாலி
தியேட்டரைத் திறந்துவைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாட்டாள்
நாகராஜ் தலைமையில் இயங்கி வந்த கன்னட இயக்கத்தைச்
சேர்ந்தவர்கள் அங்கு கூடி கன்னடத் திரைப்படம்தான் திரையிடப்பட
வேண்டும் என்று கல்லெறிந்து திரையரங்கத்தின் கண்ணாடிகளை
உடைத்து நொறுக்கினர். நிதியமைச்சர் காரை விட்டு இறங்காமலேயே
திரும்பி ராஜ்பவனுக்குச் சென்றுவிட்டார். பிறிதொரு நாளில் கன்னடத்
திரைப்படத்தோடு கபாலி திரையரங்கம் இயங்கத் தொடங்கியது. அந்தக்
கலாட்டாவில் சிக்கி தப்பியோடியவர்களில் நானும் என் நண்பனும்
இருந்தோம்.
நண்பர்கள் வழியாக தகவல்களை அறிந்துகொண்டு பல்வேறு
திசைகளில் அலைந்து பெங்களூரில் இருக்கும் பல அரிய இடங்களுக்குச்
சென்று பார்த்திருக்கிறார் பாவண்ணன். அந்த அனுபவப்பதிவுகள் வழியாக
அந்த இடங்களைப்பற்றிய குறிப்புகளை நம்மால் பெற்றுக்கொள்ள
முடிகிறது. ஒரு நண்பரின் வழிகாட்டலில் இசைக்கச்சேரிக்குச் செல்லும்
தருணத்தில் தாம் கண்ட சிறு வரலாற்றுச் சங்கதியையும் நம்மோடு
பகிர்ந்துகொள்கிறார் பாவண்ணன். இத்தகைய கதைகேளல் – கூறல்
பாணியை பாவண்ணன் தம் சிறுகதைகளிலும் (பாக்குத்தோட்டம்,
நயனக்கொள்ளை தொகுதிகள்) கையாண்டிருக்கிறார் என்பதால் அவர்
கண்ட – கேட்ட நமக்குச் சொல்லும் பெங்களூரு விவரிப்புகள்
கதைகூறலாகவும் தோற்றமளிக்கின்றன.
பெங்களூரு வரலாற்றில் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய
முக்கியமானதொரு பள்ளிக்கூடம் 1886ஆம் ஆண்டில் அல்சூரு பகுதியில்
கட்டப்பட்ட கோவிந்தம்மாள் பெண்கள் பள்ளி ஆகும். பாவண்ணன் அதன்
உருவாக்கத்தைப்பற்றி மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளார். பள்ளிக்கூடம்
என்றால் என்னவென்றே யாருக்கு தெரியாத ஒரு காலகட்டத்தில் சமூக
அறிவோடு வாழ்க்கைக்கு – குறிப்பாக பெண்களுக்கு கல்வி மிக அவசியம்
என உணர்ந்த ஒருவர் செய்த புண்ணிய காரியமென நண்பரின்
வார்த்தைகளால் நம் பாவண்ணன் கூறுகிறார். அத்தோடு அப்பகுதியில்
ஊருக்கு ஒரு கல்விக்கூடம் அவசியமென எந்த அரசும் எந்த அமைப்பும்
நினைக்காத காலத்தில் அந்தப் பள்ளியை ஆரம்பித்த தமிழர் ஒருவரான
ஆற்காடு நாராயணசாமி முதலியார் குறித்து எழுதுகிறார். பெங்களூரின்
பல வரலாற்றுப் புகழ்பெற்ற கட்டிடங்கள், தமிழர்களின் கைவண்ணத்தால்
அழகுற நிர்மாணிக்கப்பட்டவையே என்பதை பாவண்ணனின் நூல் எடுத்துச்
சொல்கிறது. நாராயணசாமி முதலியாரையும் அவர் பெங்களூருக்கு ஆற்றியுள்ள
தொண்டையும் கோயில், நீதித்துறை வளாகம் ஆகியவற்றை அவர்
கட்டியது குறித்தும் தன் நண்பர் மூலம் கேட்டறிந்து பாவண்ணன்
விவரிப்பது பயனுள்ளது மட்டுமல்ல, தமிழ் மண்ணையும் கர்நாடக
மண்ணையும் இணைக்கும் உறவுப்பாதையை அவர் கட்டியிருப்பது
பாராட்டுக்குரியது.
தாழ்த்தப்பட்ட மக்களை காந்தியடிகள் அரிஜன் என்று
அழைப்பதற்கு முன்னரே 1993-86 காலகட்டத்தில் நாராயணசாமி முதலியார்
தம் மனைவியின் பெயரிலமைந்த கோவிந்தம்மாள்பள்ளி என்பதை
திருக்குலத்தார் பள்ளி – தாழ்த்தப்பட்டோர் பள்ளி என பெயரிட்டதை தல
வரலாறாக பாவண்ணன் அளித்திருப்பது மிக முக்கியமான பதிவாகும்.
நல்ல ஆவணமும் கூட.
ஓர் அத்தியாயம் பெங்களூரின் பல்லக்குத் திருவிழா பற்றியது.
பாவண்ணன் மிக அற்புதாக அதைப்பற்றி விவரித்திருக்கிறார். “ஒரே
இரவில் அந்த மாநகரத்தெரு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த
கிராமத்துச்சாயலுக்கு சென்று விட்டது” என்னும் பாவண்ணனின் சொற்கள்
அருமை. இதையடுத்து பாவண்ணன் மயானக்கொள்ளை குறித்து
எழுதுகிறார். மயானக்கொள்ளை தமிழ்நாட்டில் நன்கு அறியப்பட்ட ஒரு
திருவிழா. எல்லா ஊர்களிலும் நடைபெறும் விழா. பெங்களூரில்
நடப்பதுபோல கர்நாடகத்தின் பிற பகுதிகளில் நடைபெறுகிறதா என்று
தெரியவில்லை. பெங்களூரு மயானக்கொள்ளை குறித்து பாவண்ணன்
கொடுத்திருக்கும் விவரம் தமிழ்நாட்டின் ’மசானக்கொள்ளை’க்கான
விவரத்திலிருந்து வேறுபடுகிறது. தமிழ்நாட்டு மசானக்கொள்ளையின்
போது பூசாரி ஒருவர் காளி வேடம் போடுவார். கருப்புப்புடவை கட்டி
அச்சமூட்டும் விதத்தில் பயங்கரமாகத் தோன்றுவார். பெண்கள் எதிரில்
வரக்கூடாது என்னும் விதியும் உண்டு.
மயானத்தை நோக்கி காளி
ஓடுகையில் ஆட்டுக்குட்டியைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சிக் குடலை
வாயில் கவ்விச் செல்லும். நானும் பல ஊர்களில் மசாணக்கொள்ளை
பார்த்தவன்தான். பெங்களூரு மயானக்கொள்ளை குரூரமில்லாமல்
நாகரிகமாக சாந்தமாக இருப்பது பாவண்ணனின் எழுத்தில் புலப்படுகிறது.
இந்த மயானங்களில் கல்லறைகளைக் கழுவிச் சுத்தம் செய்யும்
வழக்கத்தை பாவண்ணன் சொல்வது, கிறித்துவர்கள் உலகெங்கும் செமிட்ரி
நாட்கள் என்று கல்லறை நாள் அனுஷ்டிப்பதை நினைவூட்டுகிறது. இந்த
வழக்கம் தமிழ்நாட்டுப் பகுதி மயானங்களில் இருப்பதாகத் தெரியவில்லை.
இடுகாட்டில் சடலங்களைப் புதைப்பதற்கு இடம் பிடிப்பதுகூட கிறித்துவ
வழக்கத்தை நினைவூட்டுகிறது.
பாவண்ணன் ஏராளமான கன்னட நாடகங்களையும் பாரம்பரிய
யட்சகான வெட்டவெளியாட்டங்களையும் (பயலாட்ட) கண்டு களித்தவர்.
பாக்குத்தோட்டம் என்னும் அவருடைய அரிய சிறுகதைத்தொகுதியில்உள்ள ஓரிரு சிறுகதைகளில் யட்சகானத்தை முதன்மைப்படுத்தி
அற்புதமாய் எழுதியிருக்கிறார். தான் கண்ட பெங்களூருவிலும்
யட்சகானத்துக்கு உரிய இடத்தை ஒதுக்கி ஓர் அத்தியாயமாகவே
எழுதியுள்ளார். யட்சகானத்தில் அவை நிகழ்த்தப்படும் இடம் சார்ந்து
ஏற்பட்ட இரு உட்பிரிவுகளை சுருக்கமாகவும் எளிமையாகப்
புரிந்துகொள்ளும் விதமாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இப்பகுதியில்
கர்நாடகத்தில் எழுநூறு, எண்ணூறு ஆண்டுகளாக வாழ்ந்து வரும்
திகளர்கள் என்ற சமூகத்தைப்பற்றி சுருக்கமாக ஒரு குறிப்பை அளிக்கிறார்
பாவண்ணன்.
இதற்கு மேலும் சில விளக்கங்கள் உள்ளன. தமிழ்நாட்டில்
கன்னடம் பேசும் மாத்வர்கள் தமிழ் பேசும் ஸார்த்தர்களை (ஐயர்கள்)
“திகள்ரு” என்று குறிப்பிடுவார்கள். தமிழ் பேசும் ஒரு ஸ்மார்த்தனைக்
கண்டதும் தமிழ்நாட்டுக் கன்னட மாத்வர்கள் “திகள” என்று
குறிப்பிடுவார்கள். தமிழை “திகளு” என்றும் சொல்வார்கள். கர்நாடகத்தில்
இருக்கும் இந்தத் திகளர்கள் “நாங்களும் உங்க மாதிரிதான். தமிழ்
பேசறோம். நாங்க திகளரு. தமிழ்தான்” என்று சொல்லிக்கொள்வார்கள்.
பாவண்ணன் கூற்றுப்படி மசானக்கொள்ளை கூட தமிழர்கள் பகுதியில்
தமிழர்களால்தான் கொண்டாடப்படுகிறது என்பது தெரிய வருகிறது.
சீனா மணி என்று ஒரு பகுதி. இது அந்த மணி வந்த வரலாறை ஒரு
சுவாரசியமான கதையைப்போல சித்தரித்திருக்கிறார் பாவண்ணன்.
பாவண்ணன் புத்தகங்களோடு ஒன்றிப் போனவர்.
நான் கண்ட
பெங்களூருவில் புத்தகக்கடைகளுக்காகவே இரு அத்தியாயங்களை
தனியாக எழுதியுள்ளார். பெங்களூரில் பெயர்பெற்ற புத்தகக்கடைகள்
கங்காராம், செலக்ட், ப்ளாஸம்ஸ் ஆகியவறைப்பற்றியும் அதன்
பொறுப்பாளர்களைப்பற்றியும் கதைபோல விவரிக்கிறார். ஒவ்வொரு
பகுதியையும் அங்குள்ள பெங்களூரின் முத்திரையாகக் கருதப்படும்
செய்திகளையும் நண்பர்கள் வழியாகச் சேகரித்து நமக்கு எடுத்துரைக்கும்
பாங்கு ஒரு கதைகூறல் நடையில் சுவாரசியமாக அமைந்திருக்கிறது.
கலையும் மனிதனும் என்னும் அத்தியாயத்தை நான் மிகவும்
விரும்பிப் படித்தேன். அது என் குடும்பத்தாருக்கு மிகவும் நெருக்கமானது.
இங்கு குப்பி வீரண்ணா பற்றியும் அவருடைய பாரம்பரிய நாடக
நிறுவனத்தைப்பற்றியும் ஒருவர் கூற, பாவண்ணன் அதை நம்மிடம்
பகிர்ந்துகொள்கிறார். குப்பி நாடகக் கம்பெனியில் மட்டும்
இருபத்தைந்தாண்டுகள் நடிகையாக, நாட்டிய ராணியாக, நகைச்சுவை
நடிகையாக நடித்தவர் என் மூத்த சகோதரி சாந்தம்மா. எனவே இந்த
அத்தியாயத்தைப் பாவண்ணன் எனக்காகவே எழுதியதாக நினைத்து
மகிழ்ச்சியடைகிறேன். சேஷாத்ரிபுரம் பற்றியோ, சாங்கே ஏரியைப்பற்றியோ
பெங்களூரில் வசிப்பவர்களுக்கூட அதிகமாகத் தெரிந்திருக்கவாய்ப்பில்லை. பாவண்ணன் விவரித்த பிறகு அவற்றின் – அவர்களின்
வரலாற்றையும் மகத்துவத்தையும் அறிந்துகொள்கிறோம். தஞ்சாவூரைப்
பூர்விகமாகக் கொண்ட சேஷாத்ரியின் சேவை பெங்களூருக்கு ஒரு திவான்
வழியாகக் கிடைத்ததை பாவண்ணன் அருமையாகச் சொல்கிறார்.
வரலாறும் புனைகதைத்தன்மையும் நாடக வடிவில் உரையாடல்களாலும்
ஆன ஒரு கூட்டு எழுத்துக் கலைவடிவம் பாவண்ணனின் ‘நான் கண்ட
பெங்களூரு’தொண்ணூறு வயதுடைய தீவிர காந்தியவாதி ஒருவரைச் சந்தித்து
அவரைப்பற்றி, அவர் காலத்தில் உருவான கிணற்றைப்பற்றி ,
காந்தியடிகள் அந்தக் கிணற்றிலிருந்து தண்ணீரை எடுத்து அருந்திவிட்டு,
தன் கையாலேயே பொதுமக்களுக்கு சாதி வேறுபாடின்றி பருகுமாறு நீர்
அளித்த சிலிர்ப்பான செய்தியையும் தெரிந்துகொண்ட பாவண்ணன் அந்தச்
சந்திப்பு அனுபவத்தை உணர்ச்சி ததும்ப ஒரு அத்தியாயத்தில்
பகிருந்துகொண்டிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக அக்கிணற்றை நேருக்கு
நேர் பார்க்கச் சென்றதையும் சுற்றுச்சுவர் இடிந்து புதர்மண்டி, துர்நாற்றம்
வீசும் இடமாக அந்தக் கிணறு இருந்த கோலத்தையும் துயரத்துடன் பதிவு
செய்திருக்கிறார்.
காந்தி கிணறு கழிவுக்கூடமாக மாறியிருக்கும்
கோலத்தை அறிந்துகொள்ளும்போது வேதனையாக இருக்கிறது.
விதான செளதா பற்றி பாவண்ணன் எழுதியிருக்கும் கட்டுரையும்
விக்டோரியா மகாராணி சிலையைப்பற்றி எழுதியிருக்கும் கட்டுரையும்
இந்நூலில் மிகமுக்கியமான பகுதிகள். இரண்டுமே ஆவணக்குறிப்புகள்
கொண்ட வரலாற்றுக் கீற்றுகள்.
பெங்களூர் புறநகரில் பெரியதொரு ஆலமரம் உண்டு. கன்னடத்தில்
அதை தொட்டாலதமர என்று அழைப்பார்கள். இம்மாபெரும் ஆலமரத்தை
எண்பதுகளின் தொடக்கத்தில் குடும்பத்தோடு சென்று பார்த்திருக்கிறேன்.
மரத்தடியில் அமர்ந்து இளைப்பாறி இன்புற சிமெண்ட்டால் ஆன
இருக்கைகளும் உண்டு. அந்த ஆலமரம் குறித்து ஓர் அற்புதமான
வரைபடத்தை இந்நூலில் பாவண்ணன் தனக்கே உரிய பார்வையில்
சொல்லியிருக்கிறார். இம்மரத்தின் விவரிப்பதில் பாலகனாக இருந்த
அவருடைய மைந்தன் மயனும் சேர்ந்து கேள்வி பதிலாகவே மரம் நம்
முன் வளரும் வகையில் ஆசிரியர் வளர்த்திருப்பது அருமை.
நூல் முழுக்கவே பல பகுதிகளிலும் கேள்வி பதிலாகவே சொல்லிக்
கேட்கும் வடிவில் பாவண்ணன் எழுதியிருப்பது ஓர் அரிய வரலாற்று
வடிவம். “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும். நான் காணும்
இடமெல்லாம் நீ காண வேண்டும்” என்ற பழைய திரைப்படப் பாடல்
வரிகளை ஒருமுறை நினைத்துக்கொண்டால் பாவண்ணனிடம் நான் பேசிக்
கேட்பது மாதிரியே இருக்கிறது.
ஒரு குறிப்பிட்ட விஷயத்தை முன்னிட்டு ஒரு சம்பிரதாயம்
ஏற்படுகிறது. காலப்போக்கில் அந்த விஷயம் அழிந்துபோனாலும் அதனால்
ஏற்பட்ட சம்பிரதாயம் மட்டும் சடங்குபோல தொடருவதை பாவண்ணன்
தன் நூலில் அழகாகச் சொல்கிறார். வேர்க்கடலை வியாபாரத்தை
முன்னிட்டு ஏற்பட்ட கடலைக்காய் திருவிழா பற்றி ஓர் அத்தியாயத்தில்
விவரிக்கிறார். வேறு எப்பகுதியிலும் இதுபோன்ற ஒரு திருவிழாவைக்
கேள்விப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. வேர்க்கடலை வியாபாரத்தை
முன்னிட்டு ஏற்பட்ட ஏற்பட்ட ஒன்றுதான் கடலைக்காய் திருவிழா.
வியாபாரம் மங்கினாலும் ஒவ்வொரு ஆண்டும் இன்றளவும் அத்திருவிழா
தொடர்ந்து நடைபெற்றபடியே இருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓசூர்
பெங்களூருக்கு மிக அருகில் இருப்பதால் தட்பவெப்பம், மொழி, பண்பாடு,
உணவு என சகல விதத்திலும் கர்நாடகத்தைத் தொட்டுக்கொள்ளும்
ஓசூரில் நான் சிறுவனாக இருந்த சமயத்தில் ஒவ்வொரு ஆண்டும்
நடந்துவரும் கடலைக்காய் விழாவை (செனிகாய் பரிஷ்யெ)
நினைத்துக்கொண்டேன். நூலின் ஓரிடத்தில் பிரம்மச்சாரி என்பதைக் கூட
சிறுவிளக்கம் தந்து கருத்து தெரிவிக்கிறார் பாவண்ணன்.
உகாதி என்பது கர்நாடகத்தில் வருடப்பிறப்பைக் குறிக்கும் பண்டிகை.
அன்றைய தினத்தில் வேப்பந்தளிரிலையையும் வெல்லத்தையும் சேர்த்து
அரைத்த உகாதி பச்சடியைக் கன்னடியர்கள் ‘பேவு – பெல்ல’ என்று
ஒருவருக்கொருவர் கொடுத்தும் பெற்றும் கொள்வார்கள். இதற்கான
விளக்கத்தை ஓர் அத்தியாயத்தில் குறிப்பிட்டிருக்கிறார் பாவண்ணன்.
கசப்பும் இனிப்பும் கலந்தது வாழ்க்கை என்பது உலகார்ந்த உண்மை. அதை
ஆண்டின் தொடக்கநாளில் நினைத்துக்கொள்ளும் விதத்தில் இந்த வேம்பு –
வெல்லம் பச்சடி கொடுத்து சாப்பிடச் சொல்லும் சம்பிரதாயம் இன்றும்
கடைபிடிக்கப்படுகிறது. பாவண்ணன் அதை நேர்த்தியாகப் பதிவு
செய்திருக்கிறார்.
கன்னட மொழியில் வெளிவந்த குறிப்பிடும்படியான நூல்கள்
சிலவற்றை தமிழுக்கு மொழிபெயர்த்தவர்களில் தி.சு.சதாசிவம்,
பாவண்ணன், இறையடியான், நல்லதம்பி ஆகியோர் முக்கியமானவர்கள்.
இறையடியான் தமிழில் மொழிபெயர்த்த பல கன்னட நாவல்கள் உண்டு.
எல்லாமே கன்னட மொழியில் சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றவை.
இவையல்லாது, இவற்றுக்கெல்லாம் முன்பாக ‘கருநாடக நாட்டுப்புறவியல்
– ஓர் அறிமுகம்’ என்னும் நூலை எழுதினார். நாட்டுப்புறவியல் துறையில்
இது ஒரு முக்கியமான நூல். இறையடியானைச் சந்தித்த அனுபவத்தைப்
பற்றியும் இப்புத்தகத்தைப்பற்றியுமாக ஒரு முழு அத்தியாயத்தை
பாவண்ணன் மனநெகிழ்ச்சியுடன் எழுதியிருக்கிறார். இக்கட்டுரை
காலஞ்சென்ற இறையடியானுக்கு பாவண்ணன் எழுதிய
அஞ்சலிக்கட்டுரையாகவே அமைந்துவிட்டது.
மாடியில் அமைந்த ஒரு நூலகத்துக்குச் செல்ல படியேறும் போது
பிடிமானத்துக்கு மேலே உத்தரத்திலிருந்து தடித்த கயிறொன்று
தொங்கியதென்றும் அதைப் பற்றிக்கொண்டு மேலே ஏறியதாக ஓர்
அத்தியாயத்தில் குறிப்பிட்டிருக்கிறார் பாவண்ணன். இது கர்நாடகத்துக்கே
உரிய எச்சரிக்கைக்கான ஓர் ஏற்பாடு. அரசிக்கெரெ, ஸ்ரீரங்கப்பட்டினம்,
மைசூர் ஆகிய பகுதிகளின் பழைய வீடுகளில் படியேறிச் செல்பவர்களின்
பாதுகாப்பைக் கருதி பிடித்துக்கொள்ள இப்படி கயிறு கட்டித்
தொங்கவிட்டிருப்பதைப் பார்த்ததுண்டு.
பெங்களூரில் பார்க்க நேர்ந்த நாடகங்களைப்பற்றி சுவாரசியமாக
எழுதியிருக்கிறார் பாவண்ணன். அதன் தொடர்ச்சியாக அந்த நாடக
அரங்குகள் உருவான விதத்தையும் இணைத்து விவரித்திருக்கிறார்.
சென்னை மூர்மார்க்கெட் என்றாலே ஒரு காலத்தில் பழைய பொருட்கள்
விற்பனைக்கே பேர் சொல்லும் இடமாக இருந்தது. இந்தியா முழுதும்
இப்படிப்பட்ட கடைகள் உண்டு. லண்டனில் கூட ஹான்வில் என்னும்
பகுதியில் குஜிலிகள் உண்டு. பெங்களூரில் உள்ள குஜிலிகளைப்பற்றியும்
பாவண்ணன் சுவாரசியமாக எழுதியுள்ளார்.
சூஃபிகள் பற்றிய பகுதியும் பின்னி மில் பற்றிய பகுதியும் மேயோ
ஹாலும் கெட்டில் சிலையும் உருவான விதங்களைப்பற்றிய பகுதியும்
மிகமுக்கியமானவை.
பெரும்பாலும் நமக்குச் சொந்த ஊராக இல்லாத ஒரு பெருநகரத்தில்
நாம் பிறருடன் உரையாடல் நிகழ்த்துவதன் வழியாக, அந்த ஊரைப்பற்றிய
தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். படித்து அறிவது என்பது
இரண்டாவது வழி. நாம் பிறந்து வளர்ந்த நகரமாக இருந்தால்,
அந்நகரைப்பற்றி ஓரளவுக்கு நாமாகவே ஏராளமான செய்திகளைத்
தெரிந்துவைத்திருப்போம். தொழில், வணிகம், வேலை நிமித்தமாக
ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு இடம்பெயர்ந்து வாழும் சூழலில்,
அந்நகரத்தைப்பற்றிய எல்லா விவரங்களையும் அந்நகரத்துக்கு நமக்கு
முன் குடியேறியவர்கள் வழியாகவோ அல்லது அங்கேயே வசிக்கும் அந்த
ஊர் மக்கள் வழியாகவோ மட்டுமே அறியமுடியும். மகாபாரத
குருக்ஷேத்திரப் போரில் ஒவ்வொரு நாளும் போர்க்கள நிகழ்ச்சியையும்
நடப்பையும் எடுத்துரைக்கும் சஞ்சயன் வழியாக பார்வையற்ற
திருதராட்டினன் தெரிந்துகொள்கிறான். இந்நூல் வாயிலாக நானும்,
இன்னும் பலரும் பெங்களூரைப்பற்றி அறிந்துகொள்ள உதவியாக ஒரு
சஞ்சயனாக பாவண்ணன் வாய்த்தார்.

