மென்பொறிஞர்களின் அக –புற உலகுள் வெளிச்சமிடும் “க்ளிக்“
உலகமயமாக்கலின் சமூக பொருளாதார மாற்றங்கள் எவ்வாறு மனிதர்களின் பல அடுக்குகளின் மீது தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பதை முற்போக்கு படைப்பாளிகளான கு.சின்னப்பாரதியும் ,கந்தர்வனும் இரண்டாயிரத்தின் முற்பகுதியில் நாவல்களாக எழுத முற்பட்டனர். கு.சி.பா. மென்பொருள் துறையில் பணிபுரிபவர்கள் வாழ்வியல் பற்றியும், கந்தர்வன் கட்டிடப் +பொறியாளர்கள், விற்பனை பிரதிநிதிகள் வாழ்வியல் பற்றியும் தரவுகளை சேகரித்து தாம் எழுதிவரும் சிலபகுதிகளை சக தோழர்களிடம் பகிர்ந்தனர். ஆனால் நோய்மையும், சூழலும் அவர்களை முடக்கி , அவர்களது படைப்புகளின் தொடக்கநிலையிலே காலம் அவர்களை கவர்ந்து சென்றுவிட்டது.
இந்த முற்போக்கு படைப்பு சங்கிலித்தொடரில் இப்பேசு பொருளில் என்போன்ற சிலர் சில சிறுகதைகளையோ, குறுநாவலையோ எழுதியுள்ளோம். ஆனால் இந்தக் கண்ணியின் தொடர்ச்சியில் தோழர் மாதவராஜ் மென் பொறிஞர்களின் வாழ்வியலில் பாடுகளின் அனைத்து பகுதிகளையும் . மனிதர்களின் அகம் ,புறங்களை “க்ளிக் “ நாவலில் நேர்த்தியாக வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளார்.
மென்பொருள் துறையில் பணியாற்றுவோர் வாழ்வுச் சூழல் ,வெளியிலிருந்து பார்ப்போருக்கு வர்ணஜாலம் காட்டும் சோப்புநீர்க்குமிழ்கள் போல் கவர்ச்சியானது. உட்புகுந்து கவனித்தால் எளிதில் உடைந்துவிடும் நிலையற்ற தன்மையையே நிலையாக கொண்டிருக்கிறது. ஓர் அலகில் ஒரு குழுவில் பணியாற்றும் சக ஊழியர் களிடயே சம ஊதியமில்லை ..நிர்வாகிகளின் விருப்பப்படியே , எந்தவொரு எதிர்கேள்வியுமின்றி கணினிமுன் மற்றுமொரு மனித எந்திரமாக இயங்கவேண்டும். எப்போது தன்னை வெளியேற்றுவார்களோ என்ற அச்ச நெருப்பின் மீதமர்ந்த படியே இயங்க வேண்டும். இந்த நிலையில்லா பணிச் சூழலில் பணியரின் மனம் எங்ஙனம் பாதிக்கப்படுகிறது.? பணிச்சூழலின் நவீன கலாச்சாரத்திற்கேற்ப நடை, உடை ,பாவனைகள், நட்பு, காதல்,காமம்,கற்பு, அன்பு, அறம் போன்றவை எவ்வாறெல்லாம் மாறுகின்றன.?. நிலையில்லா இந்த பணிச்சூழலில் தம்மை நிலைநிறுத்திக்கொள்ள, ஆணும் ,பெண்ணும் ,நவீன அத்தக்கூலிகளாக எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை உயிர்ப்பான பாத்திரங்கள் மூலம் இந்நாவல் விரித்துக் காட்டுகிறது..
“இப்படியா ஒரு பெண் இருப்பாள் ?”என்ற அதிர்ச்சியான கேள்வியோடு தொடங்கும் நாவல். பூங்குழலி எனும் பாத்திரத்தின் வாழ்கையோட்டமாக , மாப்பிளை பார்த்தல், நிச்சயதார்த்தம், கல்யாணத்திற்கு முன் மணமுறிவு என்று நாற்பத்தெட்டு நாட்களில் நடக்கும் நிகழ்வுகளிடையே ஊடாடும் மனிதர்கள் வழி உயிரோட்டமாக உணர்வு ததும்ப கதையை விவரிக்கிறார் மாதவராஜ்.
காதல் கல்யாணம், பெற்றோர்கள் திணிக்கும் கட்டாயக் கல்யாணம் ,விரும்பியவரோடு விரும்பிய படி உறவு கொள்ளல் இப்படியாக வாழ நேரிட்டவர்களின் அகப், புறப போராட்டங்களில் ஊடாடும் உணர்வுகள் அசலாக பாத்திரங்கள் வழி வெளிப்படுத்தப் படுகிறது .பூங்குழலி , சித்திரா, சந்திரா, பத்மாவதி, கல்யாணி, பவித்திரா , ஆஷா, எலிசபெத், மெர்சி, சிந்து போன்ற பெண்கள் மூலம் அவரவர் மனநிலைகளை ,உணர்வோட்டத்தோடு,விரசமோ, விகற்பமோ வாசகர் உணரா இயல்பில் ஆசிரியர் எடுத்துரைக்கிறார்..
மென் பொறிஞர்கள் கணினியில் ‘ மௌஸ்’ கருவியை தம் பணி தோதுக்கேற்ப இடப்புறமாகவோ, வலப்புற மாகவோ க்ளிக்கி [சொடுக்கி] பணி தொடருவர். இந்த நுட்பத்தை இட, வல க்ளிக்கிடலில் க்யூன் திரைபட விமர்சனமாக கதாநாயகிக்கும் நாயகனுக்கும் இடையே ஏற்படும் ராணி ,ராஜா குண முரண்பாடுகளை லாவகமாக , கதைவளர்ச்சிக்குப் பயன்படுத்துகிறார் ஆசிரியர். இந்த கிளிக்கின் அர்த்த அடுக்குகளின் விரிவாக புதினத்தின் தலைப்பாகவும் சூட்டியிருக்கிறார்.
இதே போல் கதை நாயகன் , நாயகி இருவரும் சேர்ந்து பார்க்கும் முதல் படம் “காதலும் கடந்து போகும் . இப்படம் “ பார்க்கப் படாமலே பாதியிலே முரண்பட்டு வெளியேறியவர்கள் , பல மனக்கசப்புகளுக்குப் பிறகு , புரிதலோடு மீண்டும் காதலும் கடந்துபோகும் படத்தைப் பார்க்கப் போவதோடு கதையை வாசகரின் புரிதலுக்கும் விட்டு நிறைவு செய்கிறார். இளைஞர்களைப் பற்றிய கதை என்பதால் காதலும், கவித்துவமும் ,மெல்லுணர்வும் கதையில் வாசகரை ஒன்றி மிதக்கச் செய்கிறது.
முதியோருக்கும் , இளையோருக்கும் இடையே தலைமுறை இடைவெளியால் ஏற்படும் முரண்பாடுகளை நளினமாக பின்னி கதையை நகர்த்துகின்றார். இந்த முரண்பாட்டில் முதிய தலைமுறை இளையவர்களிடம் கற்கவும் , அடுத்த நகர்வுக்கு வழிவிடவும் நேர்தலை , இருதரப்பு உளவியலோடு பூமொட்டு மலர்தலைப்போல வாசக மனதை உணர்விக்கிறார்.
சிறு சிறு வாக்கியங்களில் குரல் உயர்த்தாத , மென்மையான , உணர்வோட்டமான மாதவராஜின் நடை நம்மை நாவலுக்குள் இழுத்துக் கொள்கிறது.. கதை மாந்தர்களின் உணர்வுகளோடு ஒன்றச் செய்கிறது .இதை இந்நாவலை வாசிப்பவர் உணருவர் . ’க்ளிக்” எனும் இந்நாவல் மாதவராஜுக்கு முதல் நாவல் என்றால் ., இன்னும் சிறப்பான பல புதினங்களைத் தரும் படைப்பாளுமை மாதவராஜிடம் இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. மாதவராஜ் தனது கையை ஆறப்போடாமல் அடுத்த படைப்பை தரவேண்டுகிறேன் ..இந்நூலை பாரதி புத்தகாலயத்தார் சிறப்பாக வடிவமைத்து வெளியிட்டுள்ளார்கள்.
“க்ளிக் “- நாவல்.
ஆசிரியர் ;மாதவராஜ்.[9487626719]
பக்; 248. . விலை ;ரூ250/…
வெளியீடு; பாரதி புத்தகாலயம் .சென்னை 18.[91. 8778073949].


Pingback: Ja.Mathavaraj 'S Click book