நூல் அறிமுகம்: எலக்ட்ரான்-ப்ரோட்டான்- நியூட்ரான்-ஜனநேசன் nool arimugam: electron-proton-newtron-jananesan
book review

நூல் அறிமுகம்: எலக்ட்ரான்-ப்ரோட்டான்- நியூட்ரான்-ஜனநேசன்

ஆதி கவியூற்றிலிருந்து கிளைக்கும்  நதி – ஜனநேசன்

அய். தமிழ்மணியின் “எலக்ட்ரான்-ப்ரோட்டான்- நியுட்ரான் “தொகுப்பு மதிப்புரை .

ஆதிமனிதரது உணர்வுகளும் , வலியும், மகிழ்வும் ஒலியாய், ஓர் ஒழுங்குக்குள்                 அமைந்த ஓசைகளாய், மொழியாய்  ,எழுத்துகளாய் பரிணாமம் கொண்ட முதல்                     கலைவடிவம் கவிதை!. அந்த ஆதிஊற்று பெருகி , பல ஊற்றுக்கண்களைத் திறந்து  சிற்றோடைகளாக  உருவாகி ,சிறுநதியாக   இணைந்து, மலை உச்சியிலிருந்து          குதித்து பெருநதியாக  பேருருவெடுத்து வறண்ட நிலங்களை எல்லாம் செழிப்பாக்கி ,                பலகிளை நதிகளாகக்  கிளைத்து மலட்டு நிலங்களையெல்லாம் தாய்மைப்படுத்தி                 கடல் சேர்வதுபோல் கவிதைக்கும்  ஒவ்வொரு மொழியிலும் வரலாறு உண்டு.

இதில்  தமிழ் கவிதைக்கு மூவாயிரமாண்டுக்கு முந்திய  வரலாறு உண்டு !.                                                                      சங்கக் காலத்திலிருந்து தொடரும் இந்தக்  கவியாற்றின் பல ஊற்றுகள் காலச்சூழல் மாற்றங்களுக்குட்பட்டு  தோன்றி  சிறுநதிகளாக உருவாகி பெருநதியாகி பெருகி  தமிழ்ச்சமூகத்தை வளப்படுத்தி வருகின்றன. அத்தகைய  சிறுநதிகளுள் ஒன்றாய்              நம்முன்  தோன்றி பிரவாகம் எடுக்கவிருக்கிறார் அய்.தமிழ்மணி எனும் கவிஞர்,           சமுதாய மாற்றம்  விரும்பும்  சிந்தனையாளர்.

ஒர் எண்ணத்தின் , சிந்தனையின் இரு முரண்பட்ட கூறுகளின் மோதலே, கவிதை         முதலான அனைத்து படைப்புகளின் தோற்றுவாயாகும் . இருமுரண்பட்ட சிந்தனை                 யிலிருந்து ஒளிபெறும் தன்மையை  உணர்ந்த ஔவை  வள்ளுவரின் குறளை திருவள்ளுவமாலையில் அணுவைப் பிளந்து எழுகடலைத் திணித்து குறுகத்தரித்த                 குறள் என்று விதந்தோதுகிறாள் !. இதை உணர்ந்துதான் கவிஞர் அய். தமிழ்மணி  இத்தொகுப்புக்கு “எலெக்ட்ரான் –புரோட்டான்-  நியூட்ரான் “ எனப் பெயரிட்டிருக்கிறார்                எனத் தோன்றுகிறது.

இன்றைய சமூகச்சூழலில் காதல் அரும்புவதே சமூக முரண்பாடுகளுக்கிடையே தான்.                ஆகவே இத்தொகுப்புகளில் பெரும் எண்ணிக்கையிலான கவிதைகளில் காதலே                பேசுபொருளானாலும் சமூகமும் விரவி இருக்கிறது. “நானே ,சத்தியமும், வழியும்,                 ஜீவனுமாய் இருக்கிறேன் “ என்ற முந்நெறிகளை காதலோடு பொருத்தியவர்,சமூகமாகவும் இருக்கிறேன்  என்று நான்காவது  அம்சமாக சமூகத்தையும் பூடகமாக  இணைத்து               இவரது கவிதைகள்  இயங்கியல்  தன்மையை சுவீகரிக்கிறது. ! ஆகவே காதல் போயின்               சாதல் என்பதை விடுத்து  தன்னை சமூக மனிதராக முன்னிறுத்துகிறார் .சமூகம் சார்ந்து                   எழுதும்போது கவிஞரின் சிறு விமர்சனமும் நறுக்கென்று மனதைக் கிள்ளுகிறது.

மேலே சொன்னபடி, நம் மூவாயிரமாண்டு கவிதை கண்ணிகளின் தொடர்ச்சியாக                     அகமும், புறமும் இணைந்தே கவியோடை சலசலக்கிறது !இக்கவிதைகளை                 மேற்கோள் காட்டி, வாங்கி வாசிக்கும் நேயருக்கு நந்தியாக  இருக்க இஷ்டமில்லை.          எனினும் நூல் மதிப்பீட்டிற்காக  இவரது கவிதை உத்திகளை சுட்ட சிலகவிதைகளைக் குறிப்பிடுவது  அவசியம். “அடைமழையிலும் / நீர் நிரம்பாத / அக்குளத்தில் / நீ                    மலர்களைத் தேடிக்கொண்டிருக்கிறாய் / நான் /வரத்து வாய்க்கால்களைத் /தூர் வாரிக் கொண்டிருக்கிறேன். ” [பக்.33]                                                                                 “என்னிடமுள்ள கத்தி / உனக்கான பழங்களை / நறுக்கிக் கொண்டிருக்கிறது /               உன்னிடமுள்ள கத்தி  / என்னையே  நறுக்குகிறது . [பக்.104] இவ்விரு கவிதைகளை                   காதல் நோக்கில் அணுகினால் காதலர் குணமுரணும்  , சமூகநோக்கில் அணுகினால்                  இரு எதிரெதிர் மனிதரிடையே நிலவும் பகைமுரணும் உணரப்படும் !. இது வாசகரின் மனோபாவத்திற்கேற்ப பொருள்கொள்ள  வாய்ப்பை வழங்குகிறது.

இப்படி இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கவிதைகள் தனித்த காதலாக                மட்டுமின்றி சமூக அக்கறையுள்ள காதலனின் பார்வையில்  நகர்கிறது.                     இத்தொகுப்பிலிலுள்ள முக்கியமான பல கவிதைகளுள் இங்கு குறிப்பிடத்தக்க ஒன்று ;    “என்னம்மா , /ஒரு புத்தகம் கொடுத்தேனே /வாசிச்சாச்சா/ இல்லண்ணே ,/சமைக்கவும் /        கழுவவும் /துடைக்கவும்னே /நேரம் சரியா இருக்கு ,./எப்படியாவது  வாசிச்சிடுறேன் . /                 இந்த வார்த்தைகளுக்குள் /கிளறிக் கொண்டிருக்கும் /அந்தக் கதைகளை / யார் வாசிப்பது? !.[பக்.107 ] என்ற வரிகள் மனதைப்  பிசைகிறது.

கவிஞர் கம்பம் பள்ளத்தாக்கு  விவசாயம் சார்ந்த பின்னணியில் உள்ளவர் என்பதால் அந்தமண் சார்ந்த புழங்குமொழியில் கவிதைகள்  மெனக்கிடாமல் மனதில் ஒட்டிக்கொள்கிறது. அப்பகுதி சார் மலையும், மரங்களும், பறவைகளும்  கவிதைக்குள் வாழ்கின்றன. தற்போதைய கவிஞர்கள் கவிதைகளுக்கு  தலைப்பு இடுவதில்ல. ஒரு படைப்புக்கு தலைப்பிடுவது , அந்த படைப்பின் முழுசாரத்திலிருந்து எடுத்த  ஒற்றை துளி தான். அத்தகைய  தலைப்பின் மைய்யக்கருவை நேரடியாகவோ, பூடகமாகவோ, எதிர்முரணாகவோ  தலைப்பிடுவது வழக்கம். இவர் இத்தொகுப்பின் உள்ளே எந்தக் கவிதைக்கும்  தலைப்பு  சூடவில்லை .வாசகர் மனோலயத்திற்கு  விட்டு விடுகிறார். அதனால்தான்  வலிய கொண்டுகூட்டிப் பொருள்கொள்ளத் தக்கவகையில் “எலெக்ட்ரான்-புரோட்டான்-நியுட்ரான் “ என்று நூலுக்கு  தலைப்பிட்டுள்ளார். சைக்ளோட்ரான் கொண்டு பிளந்து தெளிந்து கொள்ளுங்கள் என்று வாசகர் பக்கம் தள்ளிவிடுகிறார் .இதெல்லாம் கவிகுசும்புன்னு ஏற்றுக்கொள்ளாலாம் . கவிஞர் மெய்ப்பு பார்ப்பதில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் கண்ணில்படும்  இரண்டு மூன்று பிழைகளைத் தவிர்த்திருக்கலாம் .

இத்தொகுப்பில்  வாசித்து லயிக்க நிறைய கவிதைகள் இருப்பதை வாங்கி வாசிக்கும்                  வாசகர் உணருவர். இத்தொகுப்பிற்கு திரைபாடலாசிரியர் கவிஞர் ஏகாதசியும், கவிஞர்                ஸ்டாலின் சரவணனும் சுவையான வாழ்த்துரைகளும், முனைவர். மு.செந்தில்குமாரும்               சிறப்பான அணிந்துரையும் வழங்கி  பெருமை சேர்த்திருக்கின்றனர். வேரல் பதிப்பகத்தார் ஈர்ப்பான  அட்டைப் படத்தோடு  நூலைக்  கட்டமைத்துள்ளனர்.

எலக்ட்ரான்-புரோட்டான் –நியூட்ரான் “ –கவிதைகள்.

ஆசிரியர்- கவிஞர்.அய்.தமிழ்மணி .

பக்; 122 . விலை;140 /.

வேரல் புக்ஸ் .சென்னை.600093 . தொ.பே.7373073573 .          

 

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *