nool arimugam : ganavaabi - paavannan நூல் அறிமுகம் : ஞானவாபி - பாவண்ணன்
nool arimugam : ganavaabi - paavannan நூல் அறிமுகம் : ஞானவாபி - பாவண்ணன்

நூல் அறிமுகம் : ஞானவாபி – பாவண்ணன்

எஸ்ஸார்சியின் கதையுலகம் : ஆவணப்படுத்தும் கலை பாவண்ணன்

அரிச்சந்திரன் கதையை அறியாதவர்களே இருக்கமுடியாது. ஒரு பக்கத்தில், சத்தியத்தின் உறைவிடமாக இருக்கிறான் அரிச்சந்திரன். எதை இழந்தாலும் சத்தியத்தின் மீது தான் கொண்டிருக்கும் பற்றை அவன் துறப்பதில்லை. அதற்காக மலையளவு துன்பம் வந்தாலும் எதிர்கொள்ளும் மனநிலையில் இருக்கிறான் . இன்னொரு பக்கத்தில் முனிவர் விசுவாமித்திரர் சத்தியத்தின் வழியிலிருந்து அவனை விலகவைக்க தொடர்ந்து முயற்சி செய்தபடி இருக்கிறார். அறத்தொடு நிற்றல் என்பது அரிச்சந்திரன் இயல்பாகவே இருப்பதால் அவருடைய முயற்சிகள் அடுத்தடுத்து தோல்வியடைகின்றன. இரு விசைகளுக்குமிடையில் வெற்றி தோல்வி மோதல் இறுதிவரைக்கும் நீண்டுகொண்டே போகிறது.

இக்கதையின் மீது படிந்திருக்கும் புராணத்தன்மையையும் தெய்வீகத்தன்மையையும் விலக்கிவிட்டுப் பார்த்தால் இரு எதிரெதிர் விசைகளுக்கு இடையிலான இந்த ஆடலும் மோதலும் இன்றுவரை நீடித்திருப்பதை உணரலாம்.

அறமே வாழ்க்கைக்கான அடிப்படை என்பதை கொள்கையளவில் ஒவ்வொருவரும் ஏறுக்கொள்வார்கள். ஆனால், நடைமுறையி்ல் நேரத்துக்குத் தக்கபடி அல்லது வாய்ப்புக்குத் தக்கபடி சிற்சில சமரசங்களை ஏற்று வளைந்துகொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். இப்படி வளைந்துகொடுத்து வெற்றியைச் சாதிக்கும் அணுகுமுறையை வாழ்வியல் தந்திரம் என்றும் சாமர்த்தியம் என்றும் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையை தம்மைச் சுற்றியிருப்பவர்களின் நெஞ்சில் விதைப்பவர்களும் இருக்கிறார்கள். இதற்கு நேர்மாறாக அடிப்படை அறத்திலிருந்து கிஞ்சித்தும் பிறழ்வுகொள்ளாமல் வாழ்பவர்களும் இருக்கிறார்கள். சில இடங்களில் இந்த இருவிதமான வாழ்க்கைமுறைகள் சார்ந்த விகித அளவுகள் கூடலாம், குறையலாம். ஆனால் இந்த இரு தரப்பினருக்குமானதாகவே இந்த உலகம் விரிந்திருக்கிறது.

எஸ்ஸார்சியின் கதையுலகம் இந்த மையத்தையே சுற்றிச்சுற்றி வருகிறது. மானுட வாழ்வில் வெளிப்படும் இந்த விகிதாச்சார மாறுபாடுகளை அவர் தொடர்ந்து அலுப்பில்லாமல் பார்த்தபடி இருக்கிறார். பார்த்தது பார்த்தபடி அத்தருணங்களைச் சிறுகதைகளாகவும் எழுதி வைக்கிறார். ஆவணப்பதிவுகள் போல அவை அவருடைய கதைத்தொகுதிகளில் நிறைந்துள்ளன.

ஞானவாபி என்னும் தலைப்பில் புதிதாக வந்துள்ள எஸ்ஸார்சியின். தொகுதியில் பதினாறு சிறுகதைகள் உள்ளன. எல்லாமே இந்த நுண்ணோக்கி வழியாக அவர் கண்டெடுத்த காட்சிகள்.

மோட்டார் விற்கும் எலெக்ட்ரிக் கடைக்காரன் ஒருவன் நீண்ட காலமாக விற்பனையாகாமல், கடைக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிற புத்தம்புதிய மோட்டார்களைப் பார்த்துப்பார்த்துச் சலிப்படைகிறான். வியாபாரம் நன்றாகப் போகிறதே என்கிற நம்பிக்கையில் லாபத்துக்கு ஆசைப்பட்டு கூடுதலாக சில மோட்டார்களை வாங்கிவைத்துவிட்டான். ஒரு கட்டம் வரைக்கும் விற்பனையின் வேகம் திருப்தியாக இருக்கிறது. பிறகு மந்தமாக நின்றுவிடுகிறது. இருப்பிலிருக்கும் மோட்டார் பெட்டிகளைப் பார்க்கப்பார்க்க அவன் மனம் பதற்றமடைகிறது. பணமாக மாறாத பொருளின் தோற்றம் அவனைப் பைத்தியமாக்குகிறது. பதற்றம் முற்றிய ஒரு தினத்தில் அவன் சமநிலை அழிந்துவிடுகிறது.

தராசுமுள் ஒருபுறமாகச் சாயத் தொடங்கிய பிறகு அவன் மனம் விசைகொள்கிறது. நகருக்குள் பல இடங்களில் அங்கீகாரமற்ற முறையில் தண்ணீரை உறிஞ்சி இழுக்கும் மோட்டார்கள் பயன்படுத்தப்படுவதாகவும் பொதுக்குழாயிலிருந்து அதிகப்படியான நீரை இழுத்து அரசாங்கத்துக்கு இழப்பு ஏற்படுத்துவதாகவும் ஒரு புகார்க்கடிதம் எழுதி சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு அனுப்புகிறான். உடனே அரசாங்க அலுவலர்கள் நடவடிக்கையில் இறங்கி குடியிருப்புக்குள் புகுந்து சோதனை செய்கிறார்கள். பல வீடுகளில் மோட்டார் கண்டுபிடிக்கப்படுகிறது. ஆய்வு செய்ய வந்தவர்கள் அவற்றைக் கழற்றிக்கொண்டு போய்விடுகிறார்கள்.

அடுத்து என்ன செய்வது என்று புரியாத குடியிருப்புவாசிகள் குழ்புகிறார்கள். அரசு அலுவலகத்தில் அதிகாரியைச் சந்தித்து உரையாடி ஒரு தீர்வை எட்டுவது என்பது உடனடியாக சாத்தியமாகும் விஷயமல்ல என்பது அவர்களுக்குப் புரிந்துவிடுகிறது. அடுத்த வேறு தண்ணீருக்கு என்ன வழி என்பதுதான் பெரிய பிரச்சினை. கடைக்காரனை அணுகி ஆலோசனை கேட்கிறார்கள். அவன் இருப்பிலிருக்கும் புது மோட்டார்களை வாங்கிச் செல்லுமாறு சொல்கிறான். ஒருவேளை பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார்கள் திரும்பக் கிடைத்தாலும் ‘அது ரிப்பேரானா இது, இது ரிப்பேரானா அதுன்னு ரெண்டயும் வச்சிக்கிடலாம்’ என்று வழிமுறை சொல்லி நம்ப வைக்கிறான். அவன் தந்திரம் பலிக்கிறது. வியாபாராகாமல் கடையில் தேங்கியிருந்த மோட்டார்கள் விற்பனையாகிவிடுகின்றன. தன் அறம் சரிந்துபோவதைப்பற்றி கடைக்காரனுக்கு துளியும் கவலை இல்லை.

டூலெட் என்னும் சிறுகதையில் வீட்டை வாடகைக்குவிடும் ஒருவரைப்பற்றிய சித்திரத்தைக் காட்டுகிறார் எஸ்ஸார்சி. கொரானா சமயம். வீட்டுக்கு வெளியே அறிவிப்புப்பலகை வைத்தும் ஒரு பயனும் இல்லை. சிறு இடைவெளிக்குப் பிறகு ஓர் இளைஞன் வருகிறான். உசிலம்பட்டிக்காரன். அடுத்த மாதம் அவனுக்குத் திருமணம். மணமான கையோடு மனைவியை அழைத்துக்கொண்டு வருவான். அப்போது சேர்ந்து வாழ வீடு வேண்டும் என்பதால் வாடகைக்கு வீடு தேடுகிறான். வீடு பிடித்து விடுகிறது. முன்பணம் கொடுத்துவிட்டுச் செல்கிறான். அவன் சொன்ன கெடு காலம் முடிந்துவிடுகிறது. ஆனால் அவன் வரவில்லை. அவன் கொடுத்துவிட்டுச் சென்ற பணம் அவருக்குப் பாரமாக இருக்கிறது. இளைஞனுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை அவரால் ஊகிக்க முடியவில்லை. திருமணம்லநின்றுவிட்டதா? கொரானா என்பதால் நடக்கக்கூடாதது நடந்துவிட்டதா? தாமதம் அவரைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. அவன் கொடுத்துவிட்டுச் சென்ற கைப்பேசி எண் பதிலின்றி தொடர்பு எல்லைக்கு வெளியேயே இருக்கிறது. பத்து மாத காலம் பொறுமையாக அவனுக்காக அவர் காத்திருக்கிறார். வேறு வழி தெரியாமல் மீண்டும் அறிவிப்புப்பலகையைக் கொண்டுவந்து மாட்டுகிறார். அறம் சார்ந்த உறுத்தலை தன் காத்திருப்பின் வழியாகக் கடந்து செல்கிறார் வீட்டுக்காரர்.

ஒரு சிறுகதையில் (தோழமை) வீட்டு விற்பனையில் கமிஷன் வாங்கிக்கொண்டு உதவி செய்யும் ஒரு புரோக்கர் பற்றிய சித்திரம் இடம்பெற்றுள்ளது. விற்பவரிடம் கமிஷன் வாங்கிக்கொண்டு, அவருக்குத் தெரியாமல் வாங்குகிறவரிடமும் கமிஷன் வாங்கிக்கொண்டு போகிறார் புரோக்கர். பணம் மட்டுமே அவருக்கு முக்கியமாகத் தெரிகிறது. பணம் வரும் வழி பற்றி எந்தக் குற்ற உணர்வும் கூச்சமும் அவரிடம் இல்லை. பிறழ்வையே வாழவாகக் கொண்ட அவரிடம் எந்த அடிப்படையை எதிர்பார்க்க முடியும். பழுது நீக்கத் தெரியாத ஒருவன் (பிழை) பழுது நீக்குபவன்போல வந்து பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் செலவுவைத்துவிட்டு, இரண்டாயிரம் ரூபாய் கூலி பேசி வாங்கிக்கொண்டு செல்கிறான். தன் திறமையின்மையைப்பற்றிய எவ்விதமான குற்ற உணர்வும் அவனிடம் இல்லை. வாய்ப்பந்தல் பின்னுவது சார்ந்த கூச்சமும் இல்லை. பணம் மட்டுமே அவன் நோக்கமாக இருக்கிறது.

எல்லோரும் அப்படி இல்லை. நேர்மையான வழியில் உழைப்பவர்களும் உண்மை பேசுகிறவர்களும் இருக்கிறார்கள். தொற்றெனும் பாவி சிறுகதையில் ஒரு குடும்பத்தலைவர் அனைவராலும் கைவிடப்பட்டவராக இருக்கிறார். மகன் ஒரு மருத்துவமனையில். மனைவி இன்னொரு மருத்துவமனையில். ஓரளவு உடல்நலம் தேறி வீட்டுக்குத் திரும்பும் சமயத்தில் வீட்டுக்கதவைத் திறக்கும் சாவி அவரிடம் இல்லை. வைத்த இடம் மறந்துபோகிறது. ஒருவரும் உதவிக்கு எட்டிப் பார்க்கவில்லை. இரவு நேரத்தில் எங்கிருந்தோ ஒரு தொழிலாளி வருகிறார். ஆயிரம் ரூபாய் கூலி பேசிவிட்டுத்தான் வருகிறார். அவரோடு உரையாடிக் கொண்டிருக்கும் சமயத்தில் சாவி வைத்த இடம் நினைவுக்கு வந்துவிடுகிறது. சாவி கிடைத்துவிட்டதால் மாற்றுச்சாவி செய்யவேண்டிய தேவை ஏற்படவில்லை. ஆயினும் வீட்டுக்காரர் பேசிய பணத்தைக் கொடுக்க முன்வருகிறார். ஆனால் ‘நான் எந்த வேலையும் செய்யலை. காசி வேணாம்’ என்று சொல்லிவிட்டு கூலிக்காரர் வெளியேறிவிடுகிறார்.

இந்த உலகம் இப்படித்தான் என்றோ, இந்த மனிதர்கள் இப்படித்தான் என்றோ தன் கதையில் எங்கும் எஸ்ஸார்சி முன்வைக்கவில்லை. முன்முடிவு என்பதே இல்லாதவர் அவர். அவரைப்போலவே அவருடைய கதையுலகமும் உள்ளது. ஒரு கணக்கெடுப்பு மாதிரி வெவ்வேறு தருணங்களைக் கண்டடைந்து ஆவணப்படுத்துவதில் மட்டுமே ஆர்வமுள்ளவராக இருக்கிறார் அவர். எஸ்ஸார்சியின் கதையுலகம் ஆவணப்படுத்தும் கலையாக மலர்ந்திருக்கிறது.

(ஞானவாபி. சிறுகதைகள். சந்தியா பதிப்பகம், 77, 53வது தெரு, அசோக் நகர், சென்னை 83. விலை. ரூ.120)

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *