நூல் அறிமுகம் : இயற்கையோடு இயைந்த அறிவியல் - முனைவர் சு.பலராமன் nool arimugam ; iyarkaiyodu iyantha ariviyal- s.balaraman
நூல் அறிமுகம் : இயற்கையோடு இயைந்த அறிவியல் - முனைவர் சு.பலராமன் nool arimugam ; iyarkaiyodu iyantha ariviyal- s.balaraman

நூல் அறிமுகம் : இயற்கையோடு இயைந்த அறிவியல் – முனைவர் சு.பலராமன்

 

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் எழுதிய இயற்கையோடு இயைந்த அறிவியல் என்னும் அபுனைவு பிரதி நூற்று எழுபத்து நான்கு பக்கங்களுடன் 2022ஆம் ஆண்டு புக்ஸ் ஃபார் சில்ரன் (பாரதி புத்தகாலயம்) வெளியிட்டுள்ளது. 

நூலாசிரியர் வானிலையாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சங்க கால வானிலை, வானிலை அறிந்தும் அறியாததும், வால் நட்சத்திரம்,  இன்று ஒரு தகவல் போன்ற பல படைப்புகளை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டத்தை முடித்துள்ளார். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மும்மொழிப் புலமை பெற்றவர். 2015ஆம் ஆண்டு ஹிந்தி மொழியில் எழுதிய கட்டுரைக்காக ஜனாதிபதியின் ‘ராஜ்பாஷா கௌரவ் புரஸ்கார் விருது’, 2022ஆம் ஆண்டு சிறந்த சிறார் சிறுகதை எழுத்தாளருக்கான ’நெல்லை சு.முத்து விருது’ போன்ற முக்கிய விருதுகளுக்குச் சொந்தக்காரர் ஆவார். அறிவியல் குறித்த மாத இதழ்களில் தொடர்ந்து தனது பங்களிப்பை அளித்து வருகிறார். மேலும் இவர் தமிழிலக்கிய உலகில் சிறார்களுக்கான அறிவியல் படைப்புகளை அளிப்பதில் முனைப்புக்காட்டி வருவது கவனிக்கத்தக்கது.

கு.வை.பாலசுப்பிரமணியன் தான் கேட்ட, படித்த இயற்கைசார் செய்திகள், கண்டுணர்ந்த இயற்கைசார் இடங்கள் இயற்கையோடு இயைந்த கட்டுரைத் தொகுப்பில் பளிச்சிடுகின்றன. இவற்றில், அவருக்கு எழுந்த ஐயம், எழுப்பிய வினாக்கள் மற்றும் அதன் மீது ஏற்பட்ட கூடுதல் ஆர்வத்தின் விளைவே இப்படைப்பு. இப்பிரதியில் உள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் தனித்தனிப் பொருண்மையைக் கொண்டுள்ளன. இயற்கை என்னும் ஒற்றைப் புள்ளியில் அறிவியல் என்னும் மையச்சரட்டில் கோர்த்துத் தொகுத்தளித்திருப்பது அறிவியல் உலகில் ஆரோக்கியமான சிந்தனையாகும். மேலும் இப்பிரதி முழுக்க பாலசுப்பிரமணியனின் அறிவியல் தாகத்தின் தேடல் உச்சத்தைத் தொட்டுச் செல்கிறது.

இயற்கையோடு இயைந்த அறிவியல் பிரதியின் உள்ளடக்கத்தில் மனம் விட்டுப் பேசுகிறேன், அனைவர்க்கும் உகந்த அறிவியல் களஞ்சியம், அற்புத அறிவியல் அறிஞர், ஆசிரியரின் பிற நூல்கள் என நீங்கலாக நீலத் தீ எரிமலை, வெந்நீரூற்றுகள், லோனார் ஏரி, சிலாதோரணம், அமேசான் ஆறு, அமேசான் காடுகள், சூயஸ் கால்வாய், வில் எறி பஞ்சியின் வெண்மழை, அதிக அளவு வெப்பநிலை, புழுதிப் புயல், ஆலமரம், தென்னை மரம், பனைமரம், பனை மரக்காடே பயன்பெறும் நாடே, நன்மை எல்லாம் தரும் பனைநுங்கு, எலுமிச்சை, பூத்ஜெலோக்கியா, தேன்வளைக்கரடி, அழுங்கு எங்கிற நல்லங்கு, பகலிரவுச் சமநாள், நாள் மாதம் ஆண்டு – நாள்காட்டிகள், சந்திர – சூரிய மற்றும் சூரிய – சந்திர நாள்காட்டிகள், நுண்ணோக்கி என இருபத்து மூன்று வெவ்வேறு உட்தலைப்புகளில் இயற்கையோடு இறைந்த அறிவியல் கட்டமைக்கப்பட்டுள்ளது.

நிலம், நீர், காற்று, வான், தீ ஆகிய ஐம்பூதம் மற்றும் உயிரினங்கள், செடிகொடி, காய் இவற்றின் இயக்கங்களையும் விளைவுகளையும் பற்றிப் பேசுகிறது இப்பிரதி. அறிமுகம், வரலாறு, தகவல்கள், பின்னணி, ஒப்பீடு, விவாதம், பயன்கள், விளைவு, மாற்றங்கள், அடிப்படையான வினாக்கள் எழுப்பி விடையளித்தல் என்பதான பன்முகக் கலவையாக இப்பிரதி வார்க்கப்பட்டுள்ளது. சிறார்கள் வாசிப்பதற்கு உகந்த மொழிநடையைப் பயன்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. 

இப்பிரதியில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள், குறிப்புகளுடன் வரைபடங்கள் கட்டுரையின் எடுத்துரைப்பிற்கு வளம் சேர்க்கின்றன. இப்படங்களுக்குக்கீழ் படம் – 1, படம் – 2 என்று குறிப்பிட்டுள்ளார். இவை கட்டுரையில் இடம்பெறும் செய்திக்கு அருகில் அடைப்புக்குறிக்குள் (படம் – 1, படம் – 2) குறிப்பிடும் போக்கும், இப்படங்களில் உள்ள ஆங்கில மொழிச் சொற்களுக்கு இணையாகத் தமிழில் ஒலிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பு, கலைச்சொல் அளிக்கும் போக்கும் உள்ளதைக் காணமுடிகிறது. இப்போக்கானது அறிவியல் படைப்புலகில் அவசியமான ஒன்று என்பதை இப்பிரதி வலியுறுத்திச் செல்வதாகவுள்ளது. மேலும், வரைபடங்களாக உள்ளவற்றை படைப்பாளியே வரைந்துள்ளார் என்பது இதன் கூடுதல் அம்சமாகும். 

குளம், ஏரி, ஊருணி, பொய்கை, கேணி, துரவு, அளக்கர், அசம்பு, அள்ளல், அயம், ஆழிக்கிணறு, இலஞ்சி, கயம், உப்பங்கழி, சுனை, மடு, கூவல், குட்டை, ஏரி, கண்மாய் ஆகிய நீர்நிலைகளின் பெயர்களை அறிமுகப்படுத்திச் செல்கிறது இப்பிரதி. மகாராஷ்டிராவிலுள்ள லோனார் ஏரி விண்கற்கள் விழுந்ததால் உருவானதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த ஏரி குறித்து கந்த புராணம், பத்ம புராணம், அயினி அக்பரி போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாகப் பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும், லோனார் ஏரி விண்கற்களால் உருவானது என்பதான அறிவியல் ஆய்வின் பதிவிற்கு இந்நூல்கள் வலுவூட்டுவதாக இல்லை. மாறாக வெறுமனே லோனார் ஏரி பற்றிக் குறிப்பு உள்ளதாகப் பதிவு செய்யும் போக்கையும் நோக்கையும் அறிவியல்சார் ஆய்வுக் கட்டுரையில் தவிர்த்து இருக்கலாம்.

இந்தோனேசியாவில் உள்ள ஓர் எரிமலை ஐஜென். இது நீல நிறத்தில் எரிவதைப் பதிவு செய்துள்ளது இப்பிரதி. இந்நிறமானது இரவு நேரத்தில் நன்றாகப் புலப்படுகிறது. இதன் தீப்பிழம்புகள் ஐந்து மீட்டர் உயரம் வரை எழுகின்றன. உணவு வேளாண்மை அமைப்பின் அறிக்கைப்படி உலகின் வனப்பகுதியில் சுமார் 50 சதவிகிதம் அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் மழைக்காடுகள் மற்ற மழைக்காடுகளைவிட இரு மடங்கு காடழிப்பை எதிர்கொள்கின்றன. அமேசான் ஆற்றில் மூவாயிரத்திற்கும் அதிகமான மீன் வகைகள் உள்ளன. மனிதர்களைத் தாக்கக்கூடிய பிரன்கா மீன் வகையினமும் அனகோண்டா வகை பாம்புகளும் வாழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நாள்காட்டியில் ஜனவரி 14 மற்றும் ஏப்ரல் 14 புது ஆண்டின் தொடக்கம் இல்லை. மாறாக மார்ச் 21 புது ஆண்டின் தொடக்கம் என்று விவாதிக்கிறார்.

சூயஸ் கால்வாய் பற்றிய பதிவில் அரசியல்சார் தகவல்களுடன் நீண்டநெடிய கட்டுரையாக உள்ளது. ஆலமரம், தென்னைமரம், பனைமரம், எலுமிச்சை, 34 வகை பனைமரத்தின் பயன்களையும் போதிய அளவில் அளித்துள்ளது இப்பிரதி. மேலும், பூத்ஜெலோக்கியா என்னும் மிளகாய் பற்றிக் கூறும் செய்திகளில் ஆழமான தேடலை நோக்கி நகர்த்துகிறது. தேன்வளைக்கரடி, அழுங்கு என்ற நல்லங்கு பற்றிக் குறிப்பிடுகிறார். இதில், அழுங்கு என்னும் விலங்கின் உடற்பகுதியின் மேற்புறம் தட்டையான ஓடுகளைக் கொண்டிருக்கிறது. இந்த ஓடுகள் மூலமாக அழுங்குத் தன்னைப் பந்துபோலச் சுருட்டிக் கொள்கிறது. இச்செய்தியும் அதன் படங்களும் வியப்பில் ஆழ்த்திச் செல்கிறது.  

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *