“இது எனது கதை . எனக்கு தெரியாமல் கதையில் சிலபகுதிகளை மட்டும் மாற்றி படமெடுத்து விட்டார்கள் . இப்படத்தினை தடை செய்யவேண்டும் “ என்று நீதிமன்றங்களின் முன்னும் , சமூக, மின்னூடகங்களிலும் அடிக்கடி குரல்கள் ஒலித்து பல பிரபலங்களின் பெயர்கள், உருளுவதை பார்க்கிறோம். உள்ளேயும்,வெளியேயும் கட்டபஞ்சாயத்துகளும் ,கொடுக்கல். வாங்கல் சமரசங்களும் நடந்து குரலடங்கிப் போவதையும் பார்க்கிறோம்.. இது போன்ற பிரச்சினைகளின் ஊற்றுகண்களையும் . இது தோன்றும் நதிமூலங்களையும். ரிசிமூலங்களையும் , இவற்றை அணுகி தீர்க்க வேண்டிய வழிமுறைகளையும் “காப்புரிமை கொத்தவால் “ எனும் நூல் ஒளி பாச்சுகிறது.!.
நாடறியும் நாடகவியல் செயற்பாட்டாளரும் நவீன நாடகக் கலை முன்னோடிகளுள் ஒருவருமான பிரளயன் ,அகில இந்திய அளவில் இயங்கும் ‘ இந்தியா தியேட்டர் பாரம் ‘ எனும் அமைப்பாளர்கள் ஒழுங்கமைத்த நூலை நமக்கு சரளமான தமிழில் வழங்கியுள்ளார்.. இந்த நூலை இந்தியா தியேட்டர் பாரம் அமைப்பு நிர்வாகிகள் உலகு தழுவிய பார்வையில் படைப்பாளியின் உரிமை எனும் காப்புரிமை என்ற சொல்லாடல் தொடங்கி சர்ச்சைகள் , சண்டைகள் ஆகி, அவற்றைத் தீர்க்க சட்டமானது பற்றியும் , இந்த சட்டத்திலிருந்து தப்பிக்கும் வழிமுறைகள் வரை உலகு தழுவிய நோக்கில் தொகுத்தும், பகுத்தும், அவற்றில் சுவையானவற்றை நிரல்படுத்தியும் எளிமையான மொழியில் காப்பிரைட் காவலர் எனும் பொருள்பட ஆங்கிலத்தில் நூலை அமைத்துள்ளார்கள். இதை இந்நூலின் சாரம் மாறாமல் .பழகு தமிழில் “காப்புரிமை கொத்தவால் “ எனும் பெயரில் தோழர் பிரளயன் தமிழாக்கியுள்ளார்.
காப்புரிமை என்றால் என்ன ? இந்த உரிமை எந்தெந்த வகைகளில் பாதுகாப்பானது . எந்தெந்த முறையில் பாதிப்பைத் தருவது ? கலை படைப்புலகில் , காப்புரிமை எந்தெந்த கோணங்களில் அணுகப்படுகிறது. இதில் என்னென்ன சிக்கல்கள் ஏற்படுகின்றன ; அவற்றிலிருந்து எவ்வாறு தப்புவது ? என்பவற்றை இரத்தினச் சுருக்கமான கருத்துப்பட மொழியில் , எளிமையான கருத்துப் படங்களோடும் விளக்குகிறது இந்நூல்.! சட்ட சிக்கலும்., நடைமுறைச் சிக்கல்களும் நிறைந்த காப்புரிமை எனும் முள் தோற்றம் கொண்ட பலாபழத்தை , பக்குவமாக உரித்து, கோது, கோட்டை நீக்கி, சுளை எடுத்து தேனில் ஊறவைத்து தின்னக் கொடுப்பதுபோல் இந்நூலை வடிவமைத்திருக்கிறார்கள் லாரன்ஸ் லியாங் ,சமீரா அய்யங்கார், சுதன்வா தேஷ்பாண்டே , மாலாஸ்ரீ ஹாஸ்மி,கே.வி.அக்சரா , பிரவின், பிரளயன் உள்ளிட்ட ஆசிரியர்குழுவினர்.
. நாடகவியலாளர்கள் இந்நூலை வடிவமைத்திருந்தாலும் ,இந்நூல் கவிஞர்கள், கதையாளர்கள், நாவலாசிரியர்கள் , பாடலாசிரியர்கள், இசைஅமைப்பாளர்கள் .ஓவியர்கள்.,ஒளிப்பதிவு கலைஞர்கள், நடன அமைப்பாளர்கள். இயக்குனர்கள். நடிகர்கள் , தயாரிப்பாளர்கள், அரங்க உரிமையாளர்கள் என கலை தொடர்பான அனைவருக்கும் வழிகாட்டும் கையொளி ! ஆகவே மேற்கண்ட அனைவரும் படித்துணரவேண்டிய நூல்.!
படைப்பை உருவாக்குதல் , அதை பக்குவமாக வடிவப்படுத்தி மக்களிடம் எடுத்துச் செல்வதுவரை,. அப்படைப்பு தொடர்பானவர்களிடையே முகிழும் முரண்களிக்கிடையில் படைப்பையும் , படைப்பு தொடர்பானவர்களையும் பாதுகாத்து அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லவேண்டும் எனும் பெருநோக்கோடு உருவாக்கப்பட்டுள்ளது. எல்லோருக்கும் பயன்படத் தக்கவகையில் இந்நூலை உருவாக்கிய ஆசிரியர்குழுவினர் இந்நூலை காப்புரிமையிளிருந்து விலக்களித்து பிரகடனம் செய்திருக்கிறார்கள். இந்த முன்னுதாரணமான அரிய செயலை செய்துள்ள இந்நூலின் ஆசிரியர் குழுவினர் பாராட்டத் தக்கவர்கள் !
ஏழு அத்தியாயங்கள் கொண்ட இந்நூலில் ,‘நாடகத்தில் சிறந்த நடைமுறைக்கான வழிகாட்டுதல்கள் , பங்களிப்போர் குறித்த வரையறைகள்., காப்புரிமைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் ,காப்புரிமை சொல்லகராதிகள் போன்ற பின்னிணைப்புகள் இந்நூலுக்கு மேலும் பொலிவூட்டுகின்றன . காப்புரிமை துறக்கப்பட்ட இந்நூலினை வாசிக்க விரும்பும் கலையார்வலர்கள் தோழர் பிரளயனை 9841013813 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம் …
“காப்புரிமை கொத்தவால் “-[நாடகச் செயல்பாடுகளில் சிறந்த நடைமுறைக்கான கையேடு.]
மொழிபெயர்ப்பாளர் ;பிரளயன் .98410 13813 .
மூல ஆசிரியர்கள் ; இந்தியா தியேட்டர் பாரம் குழுவினர்