கைவிட்டு கை எகிறிக் கொண்டும் மாறிக் கொண்டும் பசையிருக்கும் இடத்தில் கள்ளமாய் ஒட்டிக் கொண்டும் பணத்தைப் போன்ற பல மனிதர்களும் எங்கும் பரவிக் கிடந்தாலும் அன்பான இருதயத்தை கொண்டவர்கள் பார்க்கும் இடமெல்லாம் நிறைந்து கிடக்கிறார்கள் எளிய ஏழை மக்களாகவும் என்பதை தன்னுடைய காட்சிப்பிழை என்கிற முதல் சிறுகதை தொகுப்பின் கதைகளின் வழியாக அருகில் இருக்கும் பல நல்ல மனிதர்களை நேசம் கொண்டவர்களை நம்மோடு பேச வைத்திருக்கிறார் முனைவர் நான்சி கோமகன்.
எளிய வார்த்தைகளில் குழந்தைகளுக்கு வளையாபதி குண்டலகேசி எனும் காப்பியங்களை கதைகளாக கொடுத்த நான்சி கோமகன், அன்பினை கொண்டவர்களையும் சமூகத்தை நேசிக்க தெரிந்த பல நல்லவர்களையும் கதை மாந்தர்களாக மாற்றி நிஜ அனுபவங்களை இணைத்து சிறுகதைகளாக்கிக் கொடுத்திருக்கிறார்.
விவரனைகளையும் வர்ணனைகளையும் குறைத்து கதை நடைபெறும் இடங்களை நேரிடையாக வாசகருக்கு சொல்லி புறச் சூழலை வாசகரின் அகநிலை சார்ந்த கற்பனைக்குள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றபடி வாசிக்க செய்கிறார். அவரவர் வசதி வாய்ப்புக்கு ஏற்றபடி அந்தப் பள்ளி இருக்கும், அரசு மருத்துவமனை இருக்கும், குடியிருக்கும் வீடு இருக்கும், தோட்டம் இருக்கும், மரங்கள் இருக்கும், அலுவலகங்கள் இருக்கும் இன்னும் பிற இடங்கள் இருக்கும். வாசிப்பவரின் மனசின் அனுபவத்திற்கு ஏற்றபடி அந்த இடங்கள் நம்முடைய எண்ணங்களுக்கு சிறகு விரிக்கும்.
நர்சம்மா சிறுகதையில் செவிலியர் சூரியகாந்தியின் கண்களில் நீர் வழியும் பொழுது வாசிப்பவர் விழிகளிலிருந்தும் நீர் கசியும்.. கையில் பொருள் இல்லாத சூழலில் மேற்கொண்டு மருத்துவம் பார்க்க வழியற்றவர்கள் மூட நம்பிக்கையை நாடிச் செல்வது என்பது இன்னும் கூட நம்மால் பல இடங்களில் கிராமங்களில் பார்க்க முடிகிறது. சுற்றுப்புற சூழலை நாசம் செய்யும் தனியார்கள் குறித்தும் சிறுகதைக்குள் பேசியிருக்கிறார். வலி மிகுந்த கதை.
எதிர்பாராத விபத்து ஒன்று நிகழ; குழுமி வேடிக்கை பார்ப்பதும் விபத்தினை செல்போனில் படம் பிடிப்பதும் நடைபெற்றுக் கொண்டிருக்கும், அந்தக் குழுவில் இருந்து ஒருவர் இருவர் மட்டுமே அந்த உயிரை காப்பதற்காக போராடிக் கொண்டிருப்பார்கள். காவல்துறையும், மருத்துவத் துறையாயும் சமாளித்துக் கொள்ளலாம் என நினைத்து. பாதிக்கப்பட்ட மனித உயிரோடு உயிராக இருந்து எல்லாவற்றையும் எதிர்கொள்கிறார்கள் அவர்கள் தனியாக நின்று. மனித உயிர்கள் குறித்து அக்கறையில்லாமல் செல்போனில் படம் பிடிக்கும் அசிங்கமான மனிதர்கள் பலர் நிறைந்து இருக்கும்பொழுது, நாய்க்குட்டியோ பூனை குட்டியோ ஏதோ ஒன்று காலிலும் கழுத்திலும் அடிபட்டுக் கிடக்கும் பொழுது கண்டு கொள்ளாமல் செல்லக்கூடிய பெரும் மனிதர்களே இங்கு நிறைய பேர் அன்பில்லாதவர்களாக வாழ்கிறார்கள்.. அப்படியானவர்கள் மத்தியில் அன்பெனும் நல்லாள் அடிபட்டு, பிழைப்பதற்கு வாய்ப்பற்ற நாய்க்குட்டி ஒன்றினை தன்னுடைய பெரும் முயற்சியாலும் அன்பின் மேல் உள்ள உந்துதலாலும், சுற்றி இருக்கும் மனிதர்களால் மன உளைச்சலுக்கு உள்ளானதையும் மீறி மருத்துவமனை கொண்டு சென்று காப்பாற்றி வரும் வரையிலான எதிர் கொள்ளும் பிரச்சனைகளை உள்ளடக்கி கதையாக்கி உள்ளார் நான்சி. உலகம் முழுக்க இப்படியான அன்பெனும் நல்லாள் நிறைய.. நிறைய தேவைப்படுகிறார்கள் மனிதம் மறந்து போன மனிதர்களிடையே. வாலை குழைத்து வரும் நாய் குட்டிகளாக ஏதுமற்ற மனிதர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் “அன்பெனும் நல்லாள்” அவர்களுக்கும் தேவைப்படுகிறார்.
“விதை* மிக முக்கியமான கதை.
உதவி செய்பவர்கள் எல்லோரும் மிகப்பெரிய பொருளாதாரத்தால் மேம்பட்டவர்கள் தான் என்று நினைத்து கிடக்கும் மனிதர்களுள் ஒருவராக தியாவும் இக்கதையில். ஒரே ஒரு நாளில் தன் குடும்பத்தார் அனைவரையும் இழந்து; துணை ஏதும் இல்லாமல் வீட்டு உரிமையாளரின் ஆதரவோடு தனியாக படித்து முன்னேறி விட வேண்டும் என்று ஆசையினால் தான் குடியிருக்கும் பகுதியில் இருக்கும் ஐந்து வீட்டில் முறை வைத்து ஒவ்வொரு வீடும் உணவு அளிக்க; தன்னுடைய படிப்பு செலவிற்காக முகம் அறியாத யாரோ ஒருவர் உதவி செய்துவர; அந்த உதவியினால் மேல் படிப்பை சிறப்பான முறையில் முடிக்கிறார் . தன்னுடைய படிப்பிற்கு உதவியவர் யார் என்பதை பார்ப்பதற்காக காத்து நின்று கொண்டிருக்கும் வேளையில். தன்னுடைய வீட்டின் கழிவறையை சுத்தம் செய்யக்கூடிய துப்புரவாளர் எதிரில் வர. அவரை கண்டுகொள்ளாமல் தனக்கு உதவி செய்பவருக்காக காத்திருக்கிறேன் என்று சொல்ல. உதவி செய்தவர் பொருளாதாரத்தில் மேம்பட்டு நிலையில் இருக்கக்கூடியவர் என்கிற எண்ணத்திலேயே காத்து நிற்க. அங்கு வந்த தலைமை ஆசிரியர் இதோ உன் முன்னால் நிற்கிறாரே இவர்தான் உன்னுடைய படிப்பிற்கு உதவி செய்பவர், உனக்கு மட்டுமல்ல உன்னைப் போன்ற பலருக்கும் அவர்தான் உதவி செய்து கொண்டு இருக்கிறார் என்று சொல்ல. தலை குனிந்து நிற்கிறார் திவ்யா.
காட்சிப்பிழையின் முத்தாய்ப்பு இது. படிப்பு உதவி, கல்வி உதவி, பொருளாதார உதவி என்றாலே அது பெரும் பணம் கொண்டவர்கள் தான் செய்வார்கள் என்கிற பொய்யான பிம்பம் நம் மனசுக்குள் அறிவுக்குள் கட்டமைத்து வைக்கப் பட்டு இருப்பது “விதை” வழியாக அடித்து நொறுக்கி இருக்கிறார் ஆசிரியர் நான்சி.
சிறுகதை தொகுப்பில் இருக்கக்கூடிய அனைத்து கதைகளுக்குள்ளும் எளிமையான நேர்மையான அன்பான மனிதர்களை கதாபாத்திரங்களாக மாற்றி எளிய சொற்களில் நேரடியாகவே படைத்திருக்கிறார் எழுத்தாளர் நான்சி கோமகன். இன்னும் மீத மிருக்கும் 6 கதைகளும் ஆழமான.. அர்த்தம் மிகுந்த உரையாடலை நமக்குள் நிகழ்தும். 9 கதைகளைக் கொண்ட சிறிய தொகுப்பு தான் என்றாலும் கதைகள் முழுவதும் நேசம் மிகுந்த மனிதர்களின் செயல்களால் அன்பின் வாசம் கொண்டதாக மிளிர்கிறது.
சிறப்பான முறையில் அட்டை வடிவமைத்து வெளியிட்டு இருக்கிறார்கள் பன்முக மேடை புத்தக வெளியிட்டு நிறுவனம்.
இருவருக்கும் அன்பும் வாழ்த்துக்களும்.
தொடர்ந்து எழுதுங்கள் நான்சி.
#காட்சிப்_பிழை
#நான்சி_கோமகன்.
சிறுகதைத் தொகுப்பு.
விலை ரூ.100/-
62 பக்கங்கள்.
#பன்முக_மேடை வெளியீடு.

