கந்தர்வன் கவிதைகள் கவிஞர் கந்தர்வன் பக்கம் 232 விலை 200 பதிப்பகம் பாரதி புத்தகலாயம் மகத்தான மக்களின் பாடகர்கள் மானுடத்தின் துயர்தீர்க்க தங்கள் சொற்களையே ஆயுதமாக்குவார்கள். அப்படியோர் கவிஞன் தன் வாழ்நாள் முழுவதும் சமூகப்பிரச்சனைகளை மட்டுமே பாடிவந்துள்ளார் என்பது ஆச்சர்யத்திற்குரியது. வெற்று அலங்காரங்கள் இல்லை, இலக்கண இலக்கியமில்லை மேதமையெனும் போதைகள் இல்லை. முன் நவீனம், பின்நவீனங்கள் இல்லை இருண்மையெனும் சொற் அடர்த்தி இல்லை, அழகியல் பார்வை இல்லை, கவிதையெனும் துலாக்கோலை நீங்கள் கொண்டுவந்து நிறுத்தால் எந்த வகைப்பாட்டிற்குள்ளும் ஒரு சொல்லைக்கூட நீங்கள் நிறுத்துவிட முடியாது. போராட்ட ஊர்வலத்தின் நெடிதுயர்ந்த முழக்கங்களே சமரசமில்லாமல் பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். பாரதி பாடிய அக்கினி குஞ்சு சொற்கள் தன் கனல் குறையாமல் காலக் குளிரில் நனையாமல் இன்றும் வெப்பத்தோடிருக்கின்றன கந்தர்வன் கவிதைகள். இன்றைய கவிதைகளோடு கந்தர்வன் கவிதைகளை ஒப்பிடக்கூடாது ஒப்பிடவும் முடியாது. இத்தொகுப்பில் பெரும்பான்மையாக உரைநடை வடிவில் கவியரங்க கவிதைகளே இடம்பெற்றிருக்கின்றன. மேடைகளில் முழங்கும்போது வெளிப்படுகின்ற சுவாரசியம் வார்த்தைகளில் மௌனங்களாய் மாறிவிடுகின்றன. மக்கள் வாதைகளைப் பாடும் எந்தக் கவிதைகளும் உலகிருக்கும்வரை உயிரிருக்கும். மக்கள் விரோத அரசுக்கெதிராய் அவர் போல் பாட இன்றொரு கவிஞன் இல்லை அதிகாரங்களின் முதுகெலும்பை நொறுக்கிவிடுகின்றன இவர் வார்த்தைகள். நெருப்பில் எழுந்தாடும் தீயின் நாக்குகளாய் சுட்டெரிக்கின்றார். தொகுப்பில் பெரும்பாலான கவிதைகள் பெண்களின் பாடுகள் குறித்து துயரம் கொள்கின்றன. ஆத்மார்த்தமாக எழுதுவதால் இன்றளவும் இவர் கவிதைகள் பேசுபொருளாயிருக்கின்றன நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லைஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லைதங்களை கடிகாரச் சுற்றின் அத்தனை நொடிகளையும் சுமை மாடுகளாய் மாற்றிய சமூகம் குறித்து இந்த நிமிடம் வரை விழிப்புணர்வு இல்லாத அடிமைகளாய் வாழும் பெண்களை விழிப்பு நிலை எய்தபல கவிதைகளிலும் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கின்றார். இன்றுவரை எத்தனை வீடுகளில் பெண்களுக்கான ஒய்வு நாள் இருக்கின்றது. உழைத்து தேய்ந்தே சாகும் மகளிர்க்கு இவர் பேனா எந்நேரமும் அழுதுகொண்டிருக்கின்றது. விவசாயிகளை பற்றிய ஒரு கவிதையில் ஒவ்வொரு ஊரின் விளையும் விஷேசமான காய்களை பட்டியலிட்டு எந்த ஊரிலும் விவசாயியின் வாழ்க்கை நலமில்லை என்கின்றார் உண்மை முகத்தில் அறைகின்றது. புரட்டல் எனும் கவிதையில் நீதித்துறையின் சீர்கேடுகளை சுட்டுகிறார். இன்றளவும் அக்கவிதைக்கு உயிர் இருப்பதை சமகால சம்பவங்கள் உணர்த்துகின்றன. பல்கலைக்கழகம் எனும் கவிதையில் அர்த்தசாஸ்திரத்தையும், தர்க்க சாஸ்திரத்தையும், பள்ளி கல்லூரியில் கற்று விட்டு வீதியில் வந்து வர்க்க சாஸ்திரத்தை கற்கிறோம் என்று வகுப்பறைகளை விட சமூகமே அதிகம் கற்றுக்கொடுக்கின்றது என்ற யதார்த்தத்தை பதிவு செய்கிறார். கனவுகள் எனும் தலைப்பில் 11 பக்கத்தில் நீண்டதொரு கவிதையை எழுதியிருக்கின்றார். இந்தியாவின் அரசியல் முகத்தை கவலை தோய்ந்த பகடியோடு பதிவு செய்திருக்கின்றார். வாசிக்காதவர் வாசித்து கடக்கவும் ஒரு டீயின் விலை எனும் கவிதையை படித்துவிட்டு நீங்கள் அவ்வளவு எளிதாய் கடந்துபோய்விட முடியாது.
|