மணிமேகலை எனும் குடியுரிமைப் போராளி!
தமிழியல் ஆய்வுப் போக்கில், மரபான இலக்கியநயம் பாராட்டி விதந்தோதும் முறைக்கு எதிர்வினையாக, பகுப்பாய்வு, கட்டுடைப்பு ஆய்வுமுறைகள் வந்து சேர்ந்தன. முந்தையது கட்டமைப்பை நிகழ்த்தி முன்னேறிச் செல்கையில் கட்டவிழ்ப்பு அதனைத் தளர்த்தி அகலப்படுத்தத் தொடங்கியது. இவற்றுள் மு.ர-வின் முறையியல் பிந்தையது. ‘மணிமேகலைக் காப்பியம் வாசித்தலும் பகிர்தலும்’ என்கிற இந்நூல், பவுத்த ஆய்வின் செல்நெறியில் (Trendset) பல்வேறு கட்டுடைப்புகளை அதன் போக்கில் நிகழ்த்திக்கொண்டே போகிறது.
தான் நிலைநாட்ட விரும்புகிற கருத்தை ‘இந்த இடத்தில் இப்படி இருக்கிறது’ என்று மட்டுமே கூறியிருந்தால் இந்நூல் பத்தோடு பதினொன்றாகப் போயிருக்கலாம். ஆனால் ‘இந்த இடத்தில் இது ஏன் வருகிறது? அவ்வாறு வருவதற்கான தேவை அமைப்பு நிலையில் ஏன் ஏற்பட்டது?’ என்பதைப் பல்வேறு இருமைகளாக (Binary) விளக்கியுள்ளமையால் இந்நூல் பல்வேறு ஆய்வுப் புள்ளிகளை நமக்குள் நடவு செய்துகொண்டே போகிறது. அவற்றுள் தற்கால அரசியல் பண்பாட்டு ஆய்வோடும் கல்விப்புல ஆய்வுப்போக்கோடும் இந்நூல் எங்ஙனம் பொருந்தியும் முரண்பட்டும் நிற்கிறது என்பதைத் தொட்டுக்காட்டுவதே இந்நூல் எழுதப்பட்டதன் நோக்கத்தை நிறைவு செய்வதாக அமையும்.
எல்லீஸ், கால்டுவெல் வழியாகத் தொடங்கிவைக்கப்பட்ட தனித்தியங்கும் மொழி, இன அரசியல் மறைமலையடிகள், பாவாணர், பெருஞ்சித்திரனார் வழியாக இயக்கவடிவிலும், பெரியார், அண்ணா, கலைஞர் வழியாகச் சமூக ஜனநாயகப் போக்கிலும் வளர்ச்சி பெற்று நிற்கிறது. இன்றைய பின்காலனியச் சூழலில் மொழி, இன அரசியலுக்கு வலுசேர்க்கிற ஓர் அவைதீகத் தமிழ்ப் பவுத்த மரபை மணிமேகலைக் காப்பியத்தின் வாயிலாக வாசித்து அளித்திருக்கிறார் மு.ர.
தமிழிலக்கிய வரலாற்றில் பாட்டு, தொகை எனும் திணை இலக்கியத்தை முன்மரபாகவும் அற இலக்கியத்துடன் கூடிய முதலிரு காப்பியங்களைப் பின்மரபாகவும் கொண்டு, தனக்கான அற அடிக்கருத்துகளைப் புறநானூற்றிலிருந்தும் வள்ளுவத்திலுமிருந்தும் திரட்டி அவைதீகத் தமிழ்ப் பவுத்த மொழிபாக மணிமேகலைக் காப்பியத்தை வாசித்திருக்கிறது இந்நூல். திராவிட இயக்கத்தை உள்ளடக்கிய இடதுசாரித் தமிழ்த்தேசிய அரசியல் பண்பாட்டு ஓர்மைக்கு வலுசேர்த்து நிற்கிறது.
மகாவம்சம், இலலித்தவிஸ்தாரச் சூத்திரம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மணிமேகலை எழுதப்பட்டிருந்தாலும் அதை அப்படியே தமிழ்ப்படுத்தி, புத்தருக்குப் பதிலியாக மணிமேகலையை நிலைநிறுத்தி (முதல் 26 காதைகள்), பாலி மொழியில் புத்தர் பேசிய பன்னிரு நிதானத் தத்துவங்களைத் தமிழில் பன்னிரு சார்புத் தத்துவங்களாக்கி புத்தர் அளித்த விளக்கத்தைப் போல இங்குள்ள நிலைமைகளுக்கேற்ப மணிமேகலையும் விளக்குகிறாள் என்பதான பொருள்கோடல் புதிய அறிவு வெளிச்சத்தை நல்கக்கூடியது.
பன்மைத்துவமான பண்பாட்டு வழக்காறுகளுக்கு ஏற்பு வழங்கி, பின் ஒருங்கிணைத்துப் பொதுமைப்படுத்தும் பழந்தமிழ் நாட்டார் மரபானது, பவுத்தத்தையும் ஆசீவகத்தை உள்ளடக்கிய சமணத்தையும் அவைதீக மரபு என்ற அடிப்படையில் பொருள்முதல்வாதக் கோட்பாடுகளாக ஏற்றுக்கொண்டு, தமிழ் அறத்தையே தம்மமாக அல்லது திணை நெறியாகத் தத்துவார்த்த அடிப்படையில் மணிமேகலை விளக்குகிறது என்பதை இருமைப்படுத்தி எடுத்துக்காட்டுவது இன்றைய ஆய்வு உரையாடல்களை வலுப்படுத்த உதவுவதாகும்.
பல்வேறு நிலங்கள், மொழிக்குழுக்களின் பண்பாட்டு ஒழுகலாறுகள் பவுத்த நெறிக்குப் பன்மைத்துவமான தனித்துவப் பண்பாட்டு அடித்தளத்தை வழங்கியுள்ளன என்பதன் தமிழ்ச்சான்றாகவே மணிமேகலை திகழ்கிறது. இந்தியத் துணைக்கண்டத்திற்கே உரிய பன்மைத்துவச் சிந்தனை மரபாகத் தமிழும் பவுத்தமும் திகழ்ந்தாலும் வைதீகம் (வேத மதம்) x அவைதீகம் (தமிழ்ப் பவுத்தம்) என்கிற பொது அறிதலுக்கான வரலாற்றுத் தடத்தைச் சுட்டிக்காட்டுவதில் ஒரு தேசிய ஓர்மையை தெளிவுபடுத்த முற்படுகிறது. இதைத் தத்துவச் சொல்லாடல் களத்தில் படைப்புவாதம் x இயற்கைவாதம் என்றும், உற்பத்தியில் ஈடுபட்டோர் x ஈடுபடாதோர் என்கிற சமூக வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் நிலைக்குடித் தத்துவம் x அலைக்குடித் தத்துவம் என்று மானிடவியல் நோக்கிலும், மேய்ச்சல் தத்துவம் x வேளாண் தத்துவம் என்றும் பல்வேறு இருமைகளின் வழியாக வரலாற்றுச் சட்டகத்திற்குள் தமிழ்ப் பவுத்த அவைதீக மரபானது வேத மரபிற்கு மூத்தது; வேத மறுப்பிலிருந்து மட்டும் அவைதீக மரபு உருவாகவில்லை என்பதையும் மணிமேகலைக் காப்பியத்தின் வாயிலாக நிலைநாட்டி வரலாற்று நிலையில் இடதுசாரித் தமிழ்த்தேசிய ஓர்மைக்கு வலுசேர்க்கிறது.
கால, இட (Time, Space) பன்மைத்துவத்தாலேயே பவுத்தம் பரந்துவிரிந்து எல்லைகளைக் கடந்து சென்றது, ஆனால் ஒற்றை மையச் சிந்தனையால் பஞ்சாப் மாகாணத்திலோ அல்லது இமயமலைச் சாரலிலோ கூட வேத மதம் நிலைபெறவில்லை என்பதோடு, பாரசீகம், பாலி, பிராகிருதம், தமிழ் ஆகிய ஒருங்கிணைந்த மொழி மரபிலிருந்தே வைதீகர்கள் தங்களுடைய தத்துவப் பண்பாட்டு மொழியாகச் சமஸ்கிருத மொழியைச் செப்பம் செய்துகொண்டனர் என்றும் விளக்குகிறது.
மேலும், மணிமேகலைக் காப்பிய ஆய்வுகளையும் இந்தியத் தேசியம் x தமிழ்த்தேசியம் என்பதான இருமைக்குள் கொணர்ந்து விளக்குகிறது. அதாவது வில்லியம் ஜோன்ஸ் சமஸ்கிருதத்தையே இந்திய அடையாளமாகப் பரப்பியதையும், எல்லீஸ், கால்டுவெல் போன்றோர் தமிழ்த்தேசிய வரலாற்றைச் சுட்டுவதற்கான தமிழின் தனித்தன்மையை வெளிக்கொணர்ந்ததையும் காண்கிறோம். இத்தகைய இரு துருவ அரசியலை மணிமேகலைக் காப்பிய வாசிப்பு சார்ந்த பிற்கால உரையாடல்கள் எங்ஙனம் கையாண்டன என்பதையும் இந்நூல் ஆராய்ந்துள்ளது. வடமொழிச் சார்பிலேயே தமிழ் இயங்குகிறது என்கிற நோக்கில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் மு.ராகவையங்கார், நாராயணசாமி ஐயங்கார் போன்றோரும், மறுமுனையில் தமிழ் தனித்து இயங்கவல்லது என்கிற பார்வையில் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் ந.மு.வேங்கடசாமியார், பொ.வே.சோமசுந்தரனார் போன்றோரும் மணிமேகலைக் காப்பிய வாசிப்புகளில் துருவ நிலையில் இருந்தனர் என்பதையும் இந்நூல் எடுத்துக்காட்டுகிறது.
படைப்பு நிலையில் பாரதியாரின் பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு, கண்ணன்பாட்டு போன்றவற்றோடு, தன்னுணர்வுக் கவிதைகளிலும் வைதீக இந்துத்துவ இந்தியத் தேசியத்தை முன்வைக்க, பாரதிதாசனோ சமகாலத் தமிழ்த்தேசிய வரலாற்றிற்கேற்ப கண்ணகி புரட்சிக்காப்பியம், புரட்சிக்கவி இவற்றோடு மணிமேகலை வெண்பாவையும் படைத்துள்ளார் என்கிற ஒப்பாய்வு முடிவை முன்வைக்கிறது. அதேபோல மயிலை சீனி.வேங்கடசாமியார் ‘பெளத்தமும் தமிழும்’ என்றவாறு விளக்க, இதனைப் புரிந்துகொள்ளாத வையாபுரியார், தெ.பொ.மீ போன்றோர் மணிமேகலையை வடமொழிப் புலத்தில் வைத்து விளக்குவதையும் கவனப்படுத்துகிறது.
தலித்தியத்தின் ஒரு பகுதியினரால் பவுத்தமும் அயோத்திதாசரும் மொழி, இன அரசியலின் எதிர்முகாமாக நிறுத்தப்படும் இன்றைய நிலையில், அதே பவுத்தத்தையும், அயோத்திதாசரையும் வரலாற்று நிலையில் மொழி, இன அரசியலுக்கான ஆதரவு முகாமில் நிறுத்தி திராவிட இயக்கம் வழிவந்த இடதுசாரித் தமிழ்த்தேசிய அரசியலுக்கு வலுசேர்க்கிறது இந்நூல்.
– இரா.மோகனவசந்தன்,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
மாநிலக்கல்லூரி.


சிறப்பானதொரு விமர்சனக்
கட்டுரை வசந்த்