நூல் விமர்சனம்
மறைக்கப்பட்ட இந்தியா
எழுத்தாளர்
எஸ்.ராமகிருஷ்ணன்
விகடன் பிரசுரம்
பக்கம் 351
விலை 285
எங்கள் ஊர் கிளை நூலகத்தில் ஒரு புதையலை கண்டெடுத்தது போல் இந்நூலை தேடி கண்டுபிடித்தேன். எவரின் கைபடாமலும் விரலின் நுனி கூட தொடாமலும் ஒரு புத்தம்புதிய பெட்டகம் போல் அடுக்குகளின் வரிசையில் நின்ற நிலை புத்தனைப் போல் நின்றிருந்தது.
2013இல் வெளியிடப்பட்ட எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய மறைக்கப்பட்ட இந்தியா எனும் அற்புதமான கட்டுரைத் தொகுப்பு நூலின் தலைப்பிற்கேற்ப மறைந்தே கிடந்தது விநோதங்களில் ஒன்றுதான். ஜூனியர்விகடனில் தொடராக வந்த கட்டுரைகளை தொகுத்து புத்தகமாக்கி இருக்கின்றார்கள். நல்ல கட்டுமானம் அரிய புகைப்படங்கள் ஓவியங்கள் என எழுத்திலும் தரத்திலும் சமரசமில்லாது நிற்கிறது. இந்நூலில் 52 அத்தியாயங்கள் உள்ளன. இந்தியாவின் மறைக்கப்பட்ட 32 விதமான தகவல்களை சொல்லுகின்றன. 32 புத்தகங்களின் முன்னோட்டமாகவும் திகழ்கின்றன. 32 புத்தகங்களை படித்த மனநிறைவு முழுமையாக வாசித்த எவருக்கும் ஏற்படும். அத்தனை சுவாரசியமான தகவல்கள் மேடைகளில் பேசுவோர்க்கும் இணைய உலகில் பயன்மிகு தகவல்களை பகிர்வதற்கும் இந்நூல் நிச்சயம் உதவும்.
முதல்கட்டுரையே யுவான்சுவாங்கிலிருந்து துவங்குகிறது. வெளிநாட்டில் இருந்து கல்வி கற்க வந்த உண்மைகளை தேடிய ஒரு நிஜமான தேசாந்திரியின் பாடுகளை ரத்தினச் சுருக்கமாக தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் தருகிறார். தேசிய கீதம் உருவான தருணம் தேசிய கொடி பின்னப்பட்ட கதைகளை சொல்லுகிறார். இந்தியாவின் சாலைகள் குறித்து அதன் நோக்கங்கள் குறித்து பயணங்கள் வழியே அதன் உண்மைகளை சொல்லுகிறார். அதில் தமிழகமெங்கும் பரவிக் கிடக்கும் இராணி மங்கம்மாளின் சாலைகளும் அது உருவானவரலாற்றையும் காலத்தின் வழியே உருட்டி செல்கிறார். டாக்கா மஸ்லின் துணி அதன் மென்மையான மகத்துவம் இந்திய பருத்திச்செடிகள் அவுரி விதைகள் அதன் மருத்துவ குணங்கள் தாகூரின் சாந்திநிகேதன் கல்விக்காக அது ஆற்றிய அரும்பணி அதில் பாடம் பயின்ற பிரபலங்கள் அது பெற்ற விருதுகள் பரிசுகள் என தகவல்களின் சேகரிப்பு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
சுதந்திர போராட்டத்தில் ரகசிய ரேடியோ எனும் காங்கிரஸ் ரேடியோ
நேதாஜி பயன்படுத்திய ஆசாத் இந்திய ரேடியோ அதன் ஒளிபரப்பு அது ஆற்றிய சேவைகள் யாவும் மறைக்கப்பட்ட செய்திகளே. பார்சிகளின் இன வரலாறு அந்த மக்களின் வாழ்க்கைமுறை கழுகுகள் உண்ணுவதற்காகவே இறந்த உடல்களை மலையுச்சியில் போட்டுவிடும் மதச்சடங்குகள். இறக்கும்போது உடல்களை அவர்கள் அப்புறப்படுத்தும் விதம் ஒரு வித பயத்தை ஏற்படுத்துகிறது. தாதாபாய் நௌரோஜி டாட்டாக்களை பார்சிகளின் பிரதிநிதியாக கூறிய அவர் இந்திராகாந்தியின் கணவர் கூட பார்சிதான் எனும் தகவலை பதிவு செய்திருக்கலாம்.
ஜந்தர்மந்தர் ஆர்யபட்டா ஜெய்ப்பூர் அதில் உள்ள கணித காலக் கருவிகள் யாவும் புதியன இண்டிகோ புரட்சியும் அவுரிச் செடியின் இயற்கை சாயமும் நிறமிழந்த செய்திகள் வெளிநாட்டு மணமகன்களை தேடி இந்தியாவிற்கு வந்த மணப்பெண்களின் சுவாரசியமான கதைகளும் இருக்கின்றன. அவர்கள் ஆடிய திருமண வேட்டைகள் ருசிகரமானவை. மொகலாய மன்னர்கள் கட்டடக்கலையில் மட்டும் வித்தகர்கள் அல்ல அவர்கள் வரைந்த ஓவியங்களும் இன்றளவும் அவர்களின் புகழ்பாடிக்கொண்டிருக்கின்றன என்பதை காலம் சேகரித்து வைத்திருந்ததை கட்டுரை வாயிலாக அழுத்தமாக பதிவு செய்கிறார்.
கையளவு செல்போனை வைத்துக்கொண்டு கடலளவு காட்சிகளை பதிவு பண்ணிக்கொண்டே இருக்கும் இன்றைய இளம் தலைமுறையினர்க்கு இந்தச் செய்தி நிச்சயம் புதுமையாகவே இருக்கும் இந்தியாவிற்கு புகைப்படக்கலை வந்த கதையும் அதன் பிரமாண்டமான கருவிகளும் இங்கிலாந்து புகைப்பட நிபுணர் சாமுவேல் பெர்ன் இந்திய புகைப்பட நிபுணர் தீன்தயாள் அவர்களிடம் புகைப்படம் எடுக்க வரிசையில் நின்றபிரபலங்கள் நிச்சயம் புதிய செய்திகள்.
ஈழத்தமிழர் படுகொலை சமகாலத்தில் பார்த்த துயரம் இந்தியாவில் ஆர்மினியர்கள் என்றொரு இனம் இருந்ததையும் அது சுத்தமாக துடைக்கப்பட்ட கதையும் கண்ணீரோடு பதிவு செய்கிறார். இன்றைய இந்தியாவில் தப்பிப்பிழைத்த 100 ஆர்மினிய குடும்பங்கள் இந்தியாவில் வசிப்பதாக ஒரு புள்ளிவிபரம் தருகிறார். யவனர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளும் உள்ளன. அரிக்கமேடு அதன் அகழாய்வு தரவுகள் யாவும் இடம் பெற்றுள்ளன. ஜமீன்தார்கள் பற்றிய விரிவான குறிப்பும் உள்ளது யாவும் நாமறியாத புதுத் தகவல்கள் ஜமீன் என்ற பாரசீக சொல்லுக்கு நிலம் என்ற பொருள் அதிலிருந்து ஜமீன்தார்கள் உருவானார்கள். குட்டி அரசர்களாக அதிகாரம் செலுத்தி அழிந்துபோன கதையையும் பேசுகிறார்.
கேரளாவை சேர்ந்த நாயர் ஸான் வரலாறு மிகவும் முக்கியமானது எல்லோரும் படிக்க வேண்டியது இந்தியாவிலிருந்து ஜப்பான் சென்று சுதந்திர போராட்ட வேட்கையுடன் பாடுபட்ட வரலாற்றை பதிவு செய்கிறார். கடைசி கட்டுரையாக வீரேந்திரநாத் சட்டோபாத்யாய பற்றி விவரிக்கின்றார். கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் தம்பி ஒரு புரட்சி வீரராக உருமாறி உலகம் முழுவதும் பயணித்துள்ளார் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்த அவர் மாஸ்கோவில் வசித்தபோது தேசத்துரோகி என குற்றம்சாட்டப்பட்டு சுடப்பட்டு இறந்தார்.’ இந்திய விடுதலைக்காகவெளிநாடுகளில் சுற்றித் திரிந்த ஒரு உண்மையான தேசபக்தரின் வாழ்வு மிகவும் வருத்தத்திற்குரியது.
ஒரு 100 வருட இந்தியாவை அகழாய்வு செய்கையில் இத்தனை நிஜங்கள் தோண்டியெடுக்கப்படும்போது இன்னும் தோண்டத் தோண்ட எத்தனையெத்தனை உண்மைகள் உலா வரப்போகின்றதோ தெரியவில்லை இந்தியாவின் உண்மையான வரலாற்றை எந்தப்பக்கச்சார்புமின்றி நேர்மையாக எழுதும்போது வெளிப்படுகின்ற தரவுகள் யாவும் உலக சரித்திரத்தை நிச்சயம் ஆச்சரியப்படுத்தும் அவ்வளவு ரத்தமும் சதையுமான செய்திகள் இங்கே கொட்டிக்கிடக்கின்றன.
இளம் தலைமுறையினர்க்கு இதுவொரு முக்கியமான வரலாற்று ஆவணம் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.