மேடைப் பயணங்கள்
எழுத்தாளர்
முனைவர் கு.ஞானசம்பந்தன்
பக்கம் 216
விலை 120
வெளியீடு அமுதம் பதிப்பகம்
பருவமழை காலத்தில் வழிந்தோடும் குற்றால அருவியாய் தொடர்ந்து சிரிப்பு மழையில் நம்மை நனைத்துக்கொண்டிருக்கும் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்களின் மேடைப் பயணங்கள் எனும் நூலை தமது மேடைப்பேச்சின் அனுபவத் தொகுப்பை கட்டுரைகளாக்கி சிரிக்க சிரிக்கத் தந்திருக்கின்றார் பேராசிரியர்.
நல்ல பொருளுக்கு விளம்பரம் தேவையில்லை எனினும் ஒரு மூத்த நகைச்சுவை எழுத்தாளர் அப்புச்சாமி சீதாப்பாட்டி புகழ் பாக்கியம் ராமசாமி அவர்கள் மகிழ்வானதொரு அணிந்துரை வழங்கியிருக்கின்றார். இந்நூலில் மொத்தம் 50 கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. அத்தனையும் அனுபவத் திரட்டு மேடைப்பேச்சைப் போலவே எழுத்திலும் நகைச்சுவை மிளிர்கிறது. வாய்விட்டு சிரித்த இடங்கள் பல பக்கங்கள்.
ஒருவர் பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் வெற்றிபெறுவது அரிது. முனைவர் அதிலும் வெற்றிக்கொடியை நாட்டியிருக்கின்றார். உலகிலேயே அதிக மக்கள் பயப்படுவது ஒலிபெருக்கி முன்நின்று பேசுவதற்குதான். அந்த பயங்களை நீக்கி எல்லோரும் பேசலாம் வாங்க என்று தான் கற்ற வித்தையை சகலருக்கும் கற்றுதருகிறார் பேராசிரியர். இன்று அவர் அடைந்திருக்கும் புகழும் உயரமும் பெருமையும் எளிதாக கைகூடிடவில்லை என்பதற்கு அவரின் தொடக்ககால மேடை அனுபவங்களே சாட்சியாக விளங்குகின்றன.
அவரிடமுள்ள நகைச்சுவை திறனை கண்டறிந்து பட்டிமன்ற மேடையேற்றியதில் தமிழறிஞர் தொ.பரமசிவனுக்கு மிக முக்கிய பங்கு உண்டு என்பதை நன்றியுடன் நினைவுகூர்கிறார். பேராசிரியர்.தன் தகப்பனாரிடம் கற்ற தேவாரமும் திருவாசகமும் இளம் வயதிலேயே பஜனை பாடல்கள் பாடி மேடைக் கூச்சம் அகன்றதையும் தொடர்ந்து பயிற்சியும் முயற்சியும் செய்தே இந்த உயரத்தை அடைந்ததையும் சுவைபட கூறுகிறார்.
பேச்சுக்கலையில் வல்லவராக திகழ்வதற்கு ஞாபகசக்தி மிகவும் முக்கியம் முதல் மேடையில் தன் பெயரையே மறந்துபோய் நின்றதை சிரிக்கக் சிரிக்கச் சொல்கிறார். தொடக்கநிலையில் இருந்து புகழின் நிலையை எட்டும்வரை தமிழகம் முழுக்க சுற்றிச் சுழன்று பேசிவந்திருக்கின்றார். இரவுபகல் பாராது கல்லூரி பணியையும் பட்டிமன்ற மேடையையும் அலங்கரிக்க ரங்கராட்டினத்தைப் போல சுழன்றிருக்கின்றார் தேங்காய்க்கும் வாழைப்பழத்திற்கும் கூட பேசியது துவக்கநிலை பேச்சாளர்களை இந்த சமூகம் எவ்வளவு ஏமாற்றுகிறது என்பதை வலியோடு உணர்த்துகிறது.
இன்று தமிழ்நாட்டு பண்டிகையின் பிரபல தொலைக்காட்சிகளில் நட்சத்திர பட்டிமன்ற தலைவராக ஒளிவீசுகிறார். திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் மின்னுகிறார். சமூக வலையொளிக்காட்சிகளில் அதிக பார்வையாளர்களை கொண்டதாக இவரின் உரை மாறியிருக்கிறது.
நேற்றைய காலத்தில் கற்ற தமிழ் நாளைய உலகிற்கும் சோறு போடுகிறது என்றால் மிகையல்ல. பண்பாளர் கடுஞ்சொல் பேசாதார் மனச்சோர்வு மிகும் நேரங்களில் இவர் உரை கேட்டால் புத்துணர்வு பூக்கும் தொடர்ந்து வாரமலரில் எழுதிய கட்டுரைகளை தொகுத்து புத்தகமாக்கி இருக்கின்றார். தான் கற்ற கலை பிறருக்கும் பயனாகட்டும் என்று எழுத்தாக்கி இருக்கின்றார்.
வாசிப்போம் மேடைகளை கைப்பற்றுவோம். ஒலிபெருக்கி மீதான பயம் அகற்றுவோம். எழுத்தாளர் பேச்சாளர் பன்முக கலைஞர் பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தனை போற்றி மகிழ்வோம் என்றும் அன்புடன்.

